புதிய அரசு  கனிமவளத் துறையில் செய்ய வேண்டியது என்ன?

-சாவித்திரி கண்ணன்

அதிக லாபம் தரக் கூடியது குவாரிகள்!,  ஆற்று மணல் குவாரி, தாது மணல் குவாரி, கிராவல் குவாரி, கிரானைட் குவாரி, கல் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரி.. என சுமார் 12,000 குவாரிகள் இயங்குகின்றன. இவற்றில்  யானையளவு லாபம் கிடைத்த போதிலும், பூனையளவு கூட அரசு கஜானாவுக்கு வருவதில்லை. என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு முழுக்க செயல்படும் கனிம கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் இணைந்துள்ள இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு ஜுன்13, 2026 சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது; இதில் அனைவர் சார்பாகவும்  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் இரா. சா. முகிலன் பேசியதாவது;

தமிழ்நாட்டில் தற்போது  பல்வேறு வகையான குவாரிகள் சுமார் 12,000 இருக்கிறது. இவற்றில் ஏகப்பட்டவை அனுமதிக்கப்பட்ட காலகட்டம் முடிந்த நிலையில் பல்லாண்டுகளாக திருட்டுத்தனமாக செயல்பட்டு வருகின்றன. இவர்கள் மலையளவு இயற்கை வளத்தை சூறையாடிவிட்டு, தினையளவு கணக்கு காண்பித்து வருகிறார்கள்! இவர்களை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முற்றிலும் சூறையாடப்பட்டு பாலைவனமாகிவிடும். அதே சமயம் இவர்கள் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளவற்றை மீட்டு எடுத்தாலே தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் அனுமதிக் காலம் முடிந்தும் பல குவாரிகள் இயங்கி வருகின்றன. அனுமதி பெற்றவை, அனுமதி இல்லாதவை என இரண்டு வகையிலான  அனைத்து கல் குவாரிகளையும் துல்லியமாக டிஜிட்டல் மற்றும் ட்ரோன் சர்வே மூலம் அளந்தால் பல ஆச்சரியங்கள் வெளிப்படும். இவற்றில் அதிகப்படியாக வெட்டப்பட்ட கனிமங்களுக்கு சட்டப்படி அபராதம் விதித்தாலே பல லட்சம் கோடிகள் அரசு கஜானாவிற்கு வரும்.

கனிமவள மாபியாக்கள், கடந்த கால ஆட்சியாளர்கள், பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கூட்டிணைந்து செயல்பட்டு மாபெரும் இயற்கை வளக் கொள்ளையை இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்த்தி வந்துள்ளனர். புதிய ஆட்சியாளர்களான தவெகவினர் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்பட ஆர்வம் காட்டினால் மட்டும் போதாது.  நடந்த உண்மைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு கறாராக நடந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என எங்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட ஆய்வு அறிக்கைகள்;

# 2014-ல் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு மதுரை  கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்த, உ.சகாயம் ஐ.ஏ.எஸ் ஆய்வுக் குழு 1,13,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி கொடுத்த அறிக்கையை  இது வரை இரு திராவிட கட்சி ஆட்சியாளர்களும் வெளியிடவில்லை. அதை தற்போதைய தமிழக அரசு வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியாளர் உ.சகாயம் கிரானைட் குவாரிகளை மலை ஏறிச் சென்று ஆய்வு செய்த போது.

# அதேபோல்  2013-ல் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் தாது மணல் குவாரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசால்  அமைக்கப்பட்டட ககன்தீப் பேடி ஐ.ஏ.எஸ் ஆய்வுக் குழு அறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# 2017-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 24 மணல் குவாரிகளை ஆய்வு செய்ய  அமைக்கப்பட்ட  ஆய்வுக் குழு அறிக்கையை அரசு வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# நெல்லை அடமிதிப்பான் குளம் சம்பவத்தை ஒட்டி, ஆய்வு செய்த நிபுணர் குழு, நெல்லை மாவட்டத்தில் அனுமதி பெற்ற 55 குவாரிகளில் ஒரு குவாரியை தவிர, அனைத்தும் சட்ட விரோதமாக இயங்கியது என அறிக்கை அளித்தனர்.

#  2021-அக்டோபரில், அன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்  உத்தரவில் அட்வகேட் கமிஷனர் நியமித்து ஆய்வு செய்யப்பட்ட  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மொரட்டு பாளையம் கிராமத்தில்  அனுமதி முடிந்த 64 குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கியது என அறிக்கை அளித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வு அறிக்கைகள் எவ்வளவு கனிம வளம் கொள்ளை போனது என்பதை அறியவும், அதன் மதிப்பீட்டை கணக்கிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் அதை வசூலிக்கவும் வழி வகுக்கும். இதன் மூலமாக மட்டுமே சில லட்சம் கோடிகள் அரசு கஜானாவிற்கு வந்துவிடும்.

டாஸ்மாக் போல், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரக்கூடிய, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்குவாரி, கிரானைட் குவாரி, மணல் குவாரி, உள்ளிட்ட  அனைத்து சிறு கனிம சுரங்கங்களை  அரசே ஏற்று வெளிப்படை தன்மையுடன்  நடத்த வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக கனிம வளத்துறையில் உள்ள பெரும்பாலான  உதவி இயக்குனர்கள் மற்றும்  இணை இயக்குனர்கள்  பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

கனிமவளத்துறை அதிகாரிகள், மற்றும் அவர்களது குடும்பத்தார்களான ரத்த உறவினர்களின்  அனைவரின் சொத்துக் கணக்கை ஆண்டுதோறும் சட்டப்படி வெளிப்படையாக அறிவிக்க செய்ய வேண்டும்.

இயற்கை வளத்தை முற்றிலும் சிதைத்த கல் குவாரி!

அனுமதி காலம் முடிந்து செயல்படும் கல்குவாரிகள்; புகார் தந்தால் கொலைகள்!

தமிழ்நாட்டில் சுமார் 2,000 கல்குவாரிகள் அனுமதி பெற்றும், மேலும் பல நூறு கல்குவாரிகள் அனுமதி பெறாமலும் இயங்கி வருகின்றன.

புதுக்கோட்டை கல்குவாரி அனுமதி காலம் முடிந்து இயங்கியதாகும். இதை புகார் செய்ததால்  படுகொலை செய்யப்பட்டார், ஜகுபர் அலி !

– கரூரில் அன்னை ப்ளூ மெட்டல் கல்குவாரியும் 7 ஆண்டுகள் அனுமதிக் காலம் முடிந்து இயங்கியதாகும். குப்பம் விவசாயி ஜெகநாதன் புகார் கொடுத்ததால் கொல்லப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் மல்லாக்கோட்டை மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரியும் அனுமதி காலம் முடிந்து இயங்கியதை புகார் செய்ததால் – மே’2025 கடந்த மாதம் ஆறு பேர் படுகொலையானார்கள்!

நெல்லை அடைமிதிப்பான் குளம் சேம்பர் செல்வராஜ் கல்குவாரி அனுமதிக் காலம் முடிந்து இயங்கியதாக  புகார் தந்ததில் 2022-ல் ஆறு பேர் படுகொலையானார்கள்.

2022′ ஏப்ரலில் மிகப் பெரும் விபத்தும் சரிவு ஏற்பட்டது,  குப்பம் NTC முத்துசாமி கல்குவாரியில்! இதுவும் அனுமதிக் காலம் முடிந்து இயங்கியதேயாகும்.

கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு பேர் படுகொலைக்கு காரணமான நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டி கல்குவாரியும்,

2024’ஆகஸ்டில் வெடி வைத்ததில்  2 பேர் படுகொலையான  ஈரோடு மாவட்டம் கோபி துறையம் பாளையம் ஈஸ்வரி லோகநாதன் கல்குவாரியும் அனுமதிக் காலம் முடிந்து 9 ஆண்டு சட்டவிரோதமாக இயங்கியவையாகும்.

2023’ல் மிகப்பெரும் வெடிச் சம்பவம் ஏற்பட்டு பல்வேறு கட்டிடங்கள் தகர்வதற்கு காரணமான பல்லடம் கோடங்கிபாளையம் விஜயலட்சுமி கல்குவாரியும் அனுமதி காலம் முடிந்து இயங்கியது தான்.

இயற்கை வளம் காக்கப் போராடி உயிர் இழந்த சமூக ஆர்வலர்கள் புகைப்படங்களை கையிலேந்தி அஞ்சலி.

எனவே, அனுமதி காலம் முடிந்து சட்ட விரோதமாக அதிகமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கு  முறையாக அபராதம் விதிக்க வேண்டும். இதன்  மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் தமிழ்நாட்டின் தற்போதைய சுமார் பத்து லட்சம் கோடி கடனை சுலபமாக அடைக்கலாம்.

அத்துடன், கனிம மாஃபியாக்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் சமூக செயல்பாட்டாளர்கள் பாதுகாப்புக்கு, தமிழ்நாடு  சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

டிஜிட்டல் டிரோன் சர்வேயினை  தனியார் நிறுவனங்கள் மூலம் செய்வதால், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன! ஆகவே, இதை அரசே செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இனியும் மணல் அள்ளினால் ஆறு ஊருக்குள் வந்துவிடும். ஆகவே, மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன்  வெளிநாட்டு இயற்கை ஆற்று மணல் இறக்குமதி செய்ய  வேண்டும். (தமிழ்நாட்டின் தேவையான தினசரி 21,000 லாரி லோடு )

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுக்க நடந்துள்ள தாது மணல்,  கிரானைட், ஆற்று மணல், கிராவல், சுண்ணாம்புக்கல், கல்குவாரி உள்ளிட்ட அனைத்து வகை கனிம குவாரிகளையும் டிஜிட்டல் முறையில் ட்ரோன் சர்வே துல்லியமாக செய்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகம் தனது வாழ்வாதாரத்தை இழந்து பாலைவனமாக மாறுவதை தடுக்க, இந்த கோரிக்கைகளை புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்திய இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்புகளும், நிர்வாகிகளும் கீழே தரப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர். செல்வராஜ்,

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநிலச் செயலாளர்இரா.சதீசுகுமார்,

பறம்பு மலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சொ. கர்ணன்,

சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ந. சண்முகம்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு விஜயன்.

தொகுப்பு; சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time