அதிர்ச்சியாக இருக்கலாம்! புரிபடாமல் இருக்கலாம்! – விசிக தலைவர் திருமாவளன் பேசியவை! ஆட்சியில் பங்கு பெற்றாயிற்று. அதிகாரத்தில் பங்கெடுத்தாயிற்று! ஆயினும் இன்னும் அரசியல் ரீதியான உறவுகள் அரும்பவில்லை. கூட்டணியாக அரசியல் காணும் எண்ணம் கைகூடவில்லை! இது எதனால்? என்ன நடந்து கொண்டிருக்கிறது;
பேசப்பட்டவையில் இருந்து பேசப்படாத உண்மைகளை உய்த்தறிய வேண்டும்!
”நாங்க (விசிக) தவெக அமைச்சரவையில் சேருவது என ஏன் முடிவெடுத்தோம்? ஏனெனில், தவெகவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது, “இடதுசாரிகளும் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.. விசிகவும் வெளியே இருந்து ஆதரவு தருகிறது.. எந்த நேரத்திலும் திடீரென இவர்கள் அனைவரும் ஆதரவை திரும்பப் பெற்றால் என்ன செய்வது? என்பதுதான் அந்த சந்தேகம்.
தவெக ஆட்சி அமைக்க நாங்க ஆதரவு தரும்போது அதுக்கு அவங்க ரிவார்டு கொடுத்தாங்க.. அதுதான் அமைச்சர் பதவி. அவ்வளவுதான். எந்த நேரத்துலயும் நாங்க அமைச்சரவையில் இருந்து வெளியே வரலாம் இல்லையா? அப்படி எல்லாம் வர முடியாது என இருக்கிறதா?
தவெக அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதாலேயே தவெக- விசிக கூட்டணி அமைந்துவிட்டது என சொல்ல முடியாது. தவெக- விசிக இடையே கூட்டணி உருவாகவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்’’
இவ்வாறு திருமாவளவன் பேசி இருக்கிறார்.
இதே நிலையில் தான் கிட்டதட்ட இரு இடதுசாரி கட்சிகளும் உள்ளன. திமுகவுடன் தற்போது கூட்டணி இல்லை என்பதை இரு இடதுசாரி கட்சித் தலைவர்களான பெ.சண்முகமும், வீரபாண்டியனும் தெளிவுபடுத்திவிட்டனர். அதே சமயம் அவர்கள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு செல்லவும் முடியாது. ஆனாலும், தவெகவுடன் கூட்டணி அமைந்து விட்டது என சொல்ல முடியாத நிலை தான் நிலவுகிறது!
விசிக, இடதுசாரிக் கட்சிகளின் இந்த நிலைபாட்டுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
”அப்படின்னா இவங்க மீண்டும் திமுக கூட்டணிக்கு போவாங்களோ..’’ என சிலர் கோபமாகவும், நக்கலாகவும் விமர்சனம் வைக்கின்றனர்.
”இதென்ன இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்காங்களே…’’என்கிறார்கள்!
பிழை இவர்களுடையது அல்ல.
ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயுஎம்எல் ஆகியோரிடம் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தவெக தலைமைக்கும், இந்தக் கட்சிகளின் தலைமைக்கும் இடையில் எந்த பரஸ்பர உறவுகளுமற்ற நிலை நிலவுகிறது.
இதன் மூலம் அமைச்சரவையில் பங்கு பெற்று ஒரு மாதம் கடந்த நிலையிலும் கூட தவெகவிற்கும், ஆதரவு தந்த கட்சித் தலைமைகளுக்கும் இடையில் பரஸ்பர கலந்துரையாடல்கள் நடக்கவில்லை.
”அவங்க ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டதால் நாங்கள் ஆதரிக்க நேர்ந்தது…” என்ற நிலையில் இருந்து அடுத்த ஸ்டெப்புக்கு முன்னேற்றம் இல்லாத நிலைமை உள்ளது.
ஒரு திடீர் விபத்தாக இவை நடந்துள்ளது. அப்படி தற்போது உருவாகிவிட்ட உறவை கூட்டணியாக மாற்றிக் கொள்ளும் அன்பு பரிமாற்றங்கள், பரஸ்பர புரிதல்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஆதரவு தந்த கட்சிகள் தனித்துவிடப்பட்டுள்ளன.
இந்தச் சூழல் மாற தவெக தலைமை தான் சில முன்னெடுப்பை செய்ய வேண்டும். இது அவசியம் நடந்தாக வேண்டும்.
சமூக நீதி, மதச்சார்பற்றத் தன்மை ஆகியவற்றில் உறுதி காட்டுவோம் என்று விஜய் சொன்னார். அது போலவே திருப்பரங்குன்றம் விவகாரம், மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றில் தவெக ஆட்சி சரியாகவே சென்று கொண்டுள்ளது. லஞ்சம் தவிர்த்து, நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற முனைப்பு தவெக அமைச்சர்களிடம் காணப்படுகிறது. இது மாத்திரம் போதாது. தேசிய அளவில் நடக்கும் பல விவகாரங்களில், பிரச்சினைகளில் தேவைப்படும் நேரங்களில் ஒருமித்து குரல் கொடுக்கலாம்.

காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகியோர் பிறந்த நாளை தவெக தற்போது தன்னுடன் கைகோர்த்துள்ள கட்சிகளுடன் சேர்ந்து கொண்டாடலாம். இந்த பெரியோர்களின் கொள்கையை பேசும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அனைவரும் மேடையேறி பேசலாம். இந்த நிகழ்ச்சிகளின் போது கட்சிகளின் தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் இடையே பரஸ்பர உறவுகள் பலப்படும்.
மிக முக்கியமாக இந்த ஆட்சியை வழி நடத்தக் கூடிய ஒரு குறைந்தபட்ச ஒரு கொள்கை திட்டத்தை இந்த அணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து வடிவமைக்க வேண்டும். அதுவே பரஸ்பரம் நம்பிக்கைகளை பலப்படுத்தும். குறைந்தபட்ச ஒரு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் அனைவரும் சேர்ந்திசைந்து செயல்படும் முனைப்பு முன்னெடுக்கபடும் பட்சத்தில் தான், இது ஒரு கூட்டணியாக உருமாறும்..!
விஜய் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விடுபட வேண்டும். அரசியல் வெற்றி என்பது மனித மனங்களை வென்றெடுப்பதில் தான் உள்ளது. தற்செயல் வெற்றியை நிரந்தரமாக்கிட, தவெக குறித்தும், விஜய் குறித்தும் இன்னும் சரியான புரிதல்களை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர்,
அறம் இணைய இதழ்
























good advice