திரிணாமுல்லை அழித்தொழிக்க திகைப்பூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுகிறது பாஜக! திரிணாமுல் காங்கிரஸிலிருந்து கொத்துக் கொத்தாக எம்.பி, எம்.எல்.ஏக்களை தூக்கிய பாஜக சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப சாத்தான் வேலைகளை அரங்கேற்றுகிறது! இப்படியெல்லாம் கூட நடக்குமா? என மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பாஜகவின் சித்துவேலைகள்;
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த எம்.பிக்களின் நிலைமை திரிசங்கு நிலையில் ஊசலாடுகிறது.
சிங்கத்தின் குகையில் வலம் வந்தவர்கள் இன்று சிறு சுண்டெலியின் பொந்துக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர்…!
மூன்று முறை மேற்குவங்கத்தை ஆட்சி செய்த திரிணாமூல் காங்கிரஸின் 20 எம்.பிக்கள் இன்றைக்கு ஒரு லெட்டர்பேட் கட்சியில் சேர்ந்துள்ளனர்…!
‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (npci) என்ற அந்தக் கட்சியின் பெயரை இப்போது தான் முதன் முறையாக நாங்கள் கேள்விப்படுகிறோம் என்கிறார்கள், மேற்குவங்க மக்கள்!
திரிணாமுல்லில் இருந்து பாஜக பிரித்தெடுத்த எம்.பிக்கள் தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினர். இவர்களை பாஜகவில் சேர்க்கலாம் என்றால், மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இது மம்தா பானர்ஜிக்கு மக்களிடம் அனுதாபத்தை பெற்றுத் தரலாம். சில சட்டச் சிக்கல்களும் உள்ளன.

மேலும், கட்சி மாறும் எம்.பி. எம்.எல்.ஏக்களை முற்றிலும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெரிய ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது. ஆகவே, இவர்களை பாஜகவில் சேர்க்காமல், பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும்படி வைத்துக் கொண்டால் பல எக்குத்தப்பான மசோதாக்களை எதிர்ப்புகளை மீறி நிறைவேற்ற தோதாக இருக்கும் என திட்டமிடுகிறது பாஜக தலைமை.
”நாங்கள் தான் ஒரிஜினல் திரிணாமுல்’’ என பிரிந்து வந்தவர்கள் எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் சொன்னாலும், கட்சி கட்டமைப்பு மம்தாவிடம் தானே உள்ளது. அதனால் இவர்களை ஒரிஜினல் திரிணமுல் என்பதற்கு நீதிமன்றம் வழியாக தீர்வை பெற்றுத் தர ஒரு சில மாதங்கள் ஆகும். அது வரை மக்களவையில் ஒரே கட்சிக்கு இரு பிரிவாக வைத்து இருக்கைகள் ஒதுக்க முடியாது என்பதால், இந்த எம்.பிக்களை ஒரு தனிக் கட்சியாக காட்டுவதற்கு . ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (npci) கட்சியின் எம்.பிக்களாக்கிவிட்டார்களாம்!
மலை சரிந்து மளமளவென விழுந்து நொறுங்குவது போல திரிணாமுல் காங்கிரஸ் சரிந்து கொண்டிருக்கிறது. மனம் சோர்வு கொண்டாலும் தினம் ஒரு அறிக்கை, சட்டப் போராட்டம் என சுற்றிச் சுழன்று போராடுகிறார் மம்தா பானர்ஜி. அவருக்கு பக்கபலமாக அபிஷேக் அயராது ஓடுகிறார்.

‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்ற இந்தக் கட்சி பற்றி கள ஆய்வு செய்த ஊடகங்களுக்கு பேரதிர்ச்சி. காரணம், அப்படி ஒரு கட்சியும் இல்லை. அதற்கு அலுவலகமோ, கிளைகளோ, உறுப்பினர்களோ எங்கும் இல்லை.
2023 திரிபுரா மாநிலத் தேர்தலின் போது திடீரென முளைத்த காளானைப் போல வந்த இந்தக் கட்சி தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட மனுச் செய்து அதில் நான்கு இடங்களில் நிராகரிக்கப்பட்டு, மூன்று இடங்களில் மட்டுமே நின்று மூன்று இடங்களையும் சேர்த்து மொத்தமே 1,198 வாக்குகளை மட்டுமே பெற்று, அதற்கு பிறகு காணாமல் போயிற்று.
இப்படி திரிபுராவில் போட்டியிட்ட இந்த கட்சி, பதிவு செய்து கொண்டது என்னவோ மேற்குவங்க முகவரியில்! ஆனால், மேற்குவங்கத்தில் இது உள்ளாட்சி தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. இந்தக் கட்சிக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. இதற்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரமும் கிடையாது.
அதைவிட சிறப்பம்சம் இந்தக் கட்சியில் இரண்டே உறுப்பினர்கள் தான். உட்டியா குண்டு மற்றும் ஷிவ்லி குண்டு என்ற இருவரே! இருவரும் கணவன், மனைவி உறவு கொண்டவர்கள்! கணவர் தலைவர் மனைவி பொருளாளர். தங்களுக்கு ஒரு கட்சி இருப்பதை இவர்களே மறந்துவிட்டிருந்தனராம்!
இப்ப இவங்க கட்சியில் இருபது எம்.பிக்கள் சேர்ந்திருப்பதை குறித்து அகில இந்திய ஊடகங்களின் கவனத்தை பெற்றுவிட்டனர். ‘நமக்கு இப்படி ஒரு வாழ்வா?’ என இவர்களாலேயே நம்ப முடியவில்லை. இவங்களை எல்லா மீடியாக்களும் தேடி வருவதைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திணறுகிறார்கள்!
இரண்டே உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு 20 எம்.பிக்கள்! இந்த எம்.பிக்களுக்கே இந்தக் கட்சியைப் பற்றி தற்போது தான் தெரிய வந்தது. மற்றபடி அதன் தலைவரோ, அதன் முகவரியோ கூட தெரியாது. தற்போதைக்கு தங்களை தற்காத்துக் கொள்ள இந்த கவசம் தேவைப்படுகிறது. ‘இதை எவ்வளவு சீக்கிரம் கழற்றி வீசி எறிவோம்… ஒரிஜினல் திரிணாமுல் என அங்கீகாரம் பெறுவோம்’ என்பதே இவர்கள் அனைவரின் சிந்தனையையும் ஆக்கிரமித்துள்ளது.
வெகு சீக்கிரம் இந்த எம்.பிக்களை கொண்டது தான் உண்மையான திரிணாமுல் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, இந்த சிறிய கட்சி புதைக்கப்பட்டுவிடலாம்! அப்படி வாய்ப்பில்லாமல் போனால் பாஜகவிற்குள் ஐக்கியமாகலாம்.
இன்னும் என்னென்ன மோசமான கூத்துக்களை எல்லாம் நடத்திக் காட்டுமோ, பாக்தாத் ஜகதால கட்சியான பாஜக!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
























பாஜக அரசியல் சித்து விளையாட்டு ஆடத்தான் செய்யும்.. அனுசரிப்பு அனுபவம் மிக்க ஆளுமை இண்டி கூட்டணிக்கு தலைமை ஏற்கும் வரை, பாஜகவின் மாயாவி ஆட்டத்தை தடுக்கவே முடியாது. தனது இலக்கை அடைய பாஜக , திமுக ஆம்ஆத்மி கட்சிகளையே பாஜக பயன்படுத்தலாம்
வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் தான் பாஜக கட்சி இது போன்ற தில்லுமுல்லு வேலைகளைத்தான் வேலைகளை செய்ய முடியாது.