ஆறாய் பெருக்கெடுத்தோடும் மது..! அம்மா வாக்குறுதி என்னாச்சு..?

-லிங்கேஷ்வரன்

டாஸ்மாக் மதுக்கடைகளால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி பறிபோனவண்ணம் உள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே அதிக விதவைகள் கொண்ட பிரதேசமாகிவிட்டது..!

பல லட்சம் தமிழக இளைஞர்கள் உடல் நலமும், உள்ள நலமும் கெட்டு வேலை செய்யத் திரானியற்று குடும்பத்திற்கு பாரமாக வாழ்ந்து வருகின்றனர்.  நாட்டுக்கு பயன்பட்டிருக்க வேண்டிய இளைய தலைமுறையின் உழைப்பாற்றல் தெருப்புழுதியில் புரள்கிறது! இதனால் தான் வட மாநில தொழிலாளர்களின் உழைப்பை தமிழகம் சார்ந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டது! தமிழகத்தின் உற்பத்தி திறனும், உழைக்கும் திறனும் ஆறாய் பெருக்கெடுத்தோடும் மதுக் கலாச்சாரத்தால் சூறையாடப்பட்டு வருகிறது! பெண்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள்..எனப் பலரும் மது பழக்கத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றனர்! எல்லா கட்சிகளும் தேர்தல் பரப்புரைக்கு தயாராகிவரும் நிலையில் மதுச் சீரழிவிற்கு எதிராக யார் பேசப் போகிறார்கள் என்ற இந்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது!

கடந்த 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் டாஸ்மாக் கடைகளால் ஏற்பட்ட சீரழிவுகள் விலாவாரியாக பேசப்பட்டது. சசிபெருமாள் உள்ளிட்ட மதுபோராட்ட தியாகிகள் உயிர் துறந்தனர்! பல மக்கள் இயக்கங்கள் மது சீரழிவுக்கு எதிராக நடத்தப்பட்டன! இதன் விளைவாக ,தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே  ’’மது விலக்கு கொண்டு வருவோம்’’ என்று வாக்குறுதி அளித்தன.

திமுக அளித்த வாக்குறுதியில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் உடனடியாக மூடப்படும் என்று தெரிவித்தது. அ‌‌.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுபானக் கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று உறுதி அளித்தார்.

அதாவது,  மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்திவிடுவோம் என்று வாக்குறுதி அளித்தார்!

’உடனடியாக மதுக்கடைகளை மூடுவோம்’ என்று திமுக அளித்த வாக்குறுதி பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. நீண்டகாலம் மது அருந்துபவர்கள் திடீரென நிறுத்தினால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும், ஏன் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

கொரோனா  ஊரடங்கு டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூட வைத்தது. பல வாரங்கள் தொடர்ந்து கடைகள் மூடிக்கிடந்தன. தொடர்ந்து குடித்து வந்தவர்களுக்கு மது கிடைக்கவில்லை. இதனால்,தமிழகத்தில் பெரிய அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லை. மாறாக, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை கொரோனா  ஊரடங்கு நிம்மதியாக வாழ வைத்தது . கள்ளச்சாராயமும் இல்லை. இது ஒரு படிப்பினையாகும்.அதன் பிறகு கொரானா ஊரடங்கு அமலில் இருக்கும் போதே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மக்கள் எதிர்ப்பையும் மீறித் திறந்தது. இதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்கு போனார்கள்! உயர் நீதிமன்றம் தடைபோட்டது. ஆனால்,தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடைகளை திறந்து,பெரிய கியூவரிசை கட்டி மதுவை விற்றது! இதன் மூலம் மக்கள் மதுவை மறக்கத் தயார் ஆனாலும், அதிமுக அரசு மதுவிற்பனையை கைவிடத் தயாரில்லை என்பது உறுதியானது!

தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதாரமாக இருப்பது மதுபான வருமானம்தான் என்பது போன்ற தவறான கருத்து நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தை விட மூன்று மடங்கு மக்களின் உடல் நலத்திற்காக அரசு செலவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

டாஸ்மாக் மதுபானம் லாபம் மட்டுமே அரசுக்கு “பளிச்சென்று” தெரிகிறது. அதன் விளைவாக ஏற்படும் விபத்துக்கள், மனித ஆற்றல் இழப்புகள், கல்லீரல் ,கிட்னி, இதயம் போன்ற உடல் உறுப்புகள் சிகிச்சைக்காக அரசு செய்யும் செலவு , சமூக மற்றும் குடும்ப வன்முறைகளால் காவல்துறையினருக்கு ஏற்படும் நேர விரயம் போன்ற பல இழப்புகளை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை!  சாலை விபத்துகள் அதிகம் நிகழ்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு டாஸ்மாக் மதுக்கடைகள் தான் முக்கிய காரணம் .

மதுவிலக்கை அமல்படுத்தினால் பெரிய அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் தடைபடும் என்று பூச்சாண்டி காட்டும் போக்கை சிலர் செய்கின்றனர். ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  மதுவிலக்கு அமலில் இருந்தது . அவர்கள் ஆட்சியில்  மது வருவாய் இல்லாமல் சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமான கல்விக்கூடங்களை காமராஜர் திறந்தார். மதுபான வருமானம் இல்லாமலேயே அரிசியை மிகக் குறைந்த விலைக்கு அண்ணா வழங்கினார்!

எனவே, திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டால் குடிப்பழக்கம் உள்ளவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தும் மது மூலம் கிடைக்கும் வருமானம் தான் ஒரு அரசை இயங்க வைக்கும் என்பது போன்ற  தப்பெண்ணமும் அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் அதை குடித்துவிட்டு ஏராளமானோர்  செத்து மிதப்பார்கள் என்ற பரப்புரையும்  பித்தலாட்டம், ஏமாற்றும் வாதங்கள் என்பதை காலம் உணர்த்தி விட்டது .

மது குடிப்பவர்களை   மூன்று வகையாக மருத்துவ நிபுணர்கள் பிரிக்கிறார்கள் .இதில் , “பிரச்சினைக்கு உரியவர்கள் ” என்ற மூன்றாவது  வகையினர் வீட்டிலும் சரி வெளியிலும் சரி சராசரி மனிதனாக வாழ முடியாது. இவர்களை லட்சக்கணக்கில் டாஸ்மாக் கடைகள் உருவாக்கியுள்ளன. வீட்டில் குடும்பத் தலைவி தனித்து சம்பாதித்து பிள்ளைகளை காப்பாற்ற முற்பட்டாலும், இந்த குடிகாரர்கள் தொல்லை கொடுப்பார்கள். ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்கள். ’’தாலியறுக்கும் டாஸ்மாக்’’ என்ற குற்றச்சாட்டை பெற்றுத் தந்தவர்கள் இவர்கள் தான் .

கடந்த  2016 –ல் ஜெயலலிதா உறுதி அளித்த போது தமிழ்நாட்டில் சுமார் 7000 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருந்தன .அதன்படி செயல்பட்டு இருந்திருந்தால் வருடத்திற்கு தலா 1400 மதுக்கடைகளை மூடி இருக்க வேண்டும்.கடந்த நான்கரை ஆண்டுகளில் 6,000  மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும்! அதன்படி ஆயிரம் கடைகள் மட்டுமே இப்போது இருந்திருக்கும். அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தற்போது 4,500 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன என்பது மட்டுமல்ல, மதுபான வருமானம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

 

மதுவிற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி ஒரு கோடி கையெழுத்து வாங்கிய காந்திய மக்கள் இயக்க தலைவர் தற்போது ரஜினி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்ல வேண்டும். மதுவிற்கு எதிராக போராடிய பாமக ராமதாஸ் அதிமுக மதுவிலக்கை அமல்படுத்த வாக்குறுதி தந்தால் தான் கூட்டணி என்று சொல்ல வேண்டும்! மதிமுக தலைவர் வைகோவும் மீண்டும் மதுவிலக்கிற்கு முக்கியத்துவம் தந்து ஸ்டாலினுக்கு அழுத்தம் தர வேண்டும்.தமிழகத்தில் மதுவுக்கு இடையறாது போராடுவது நந்தினியும்,அவர் தந்தையும் தான்!

2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை இ.பி.எஸ்சும், ஓபிஎஸ்சும் நிறைவேற்றியாக  வேண்டும். செய்வார்களா தெரியவில்லை. இதற்கு அழுத்தம் தந்திருக்க வேண்டிய எதிர்கட்சிகள்    அமைதி காக்கின்றன! எல்லா பெரிய அரசியல் கட்சிகளிலும் மதுபான உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்து ஆதாயம் அடைபவர்கள் இருக்கிறார்கள்! இது ஆட்சியாளர்களுக்கு வசதியாகிவிட்டது! ஆனால், மக்கள் விடமாட்டார்கள்! மதுவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதா  வாக்குறுதியை நிறைவேற்றாத எடப்பாடி பழனிச்சாமி, எப்படி இந்த தேர்தலை எதிர்கொள்வார்..? மதுவின் மூலமான வருமானம்,  மக்களாட்சிக்கே அவமானம்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time