ரஜினிகாந்த் ஒரு நிலையில்லாத மனிதர். அரசியலில் ஆர்வம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதும், பிறகு ஆர்வமற்றவராக கடந்து போவதுமாக இருந்ததால், ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்’ என துல்லியமாக கணித்த சோ அவர்கள், அஜித்தை அரசியலில் இறக்கிவிட முயற்சித்தார், ஜெயலலிதா சம்மதத்துடன்:
நடிகர் ரஜினிகாந்த் 30 வருடங்களாக அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என முடிவெடுக்க இயலாமல் தடுமாறிய வண்ணம் இருந்துவிட்டு, தற்போது விஜய் முதல்வரானவுடன் விசனப்படுகிறார்! அதே சமயம் நடிகர் அஜித் அவர்கள், தன்னைத் தேடி வலிந்து வந்த வாய்ப்பை எந்தச் சிறு சலனமும் இன்றி ஒரே நிகழ்வோடு முற்றுப் புள்ளி வைத்தார். இந்தக் கட்டுரையின் பின்பகுதியில் அதை விவரிக்கிறேன்.
ரஜினிகாந்த்தின் குரலாகத் தான் அவரது மனைவி லதா வெளிப்பட்டுள்ளார்.
ரஜினி தன்னைத் தானே பெரிய தலைவர் என்றும், வித்தியாசமான விஷனை கொண்டிருந்ததாகவும் பெருமைபடுத்தினால் அசிங்கம் என்பதால், மனைவி வழியாக தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
ஆதங்கப்படட்டும்! அதே சமயம் தன்னுடைய தயக்கம், நீண்ட காலத் தடுமாற்றம், அச்சம், 30 ஆண்டுகள் இழுத்தடித்த பிறகு இறுதியாக அரசியலுக்கு வருவேன்..என்று நம்பிக்கை தந்து எல்லோரையும் நம்ப வைத்து ஜகா வாங்கியது குறித்து குற்றவுணர்வே இல்லை. இன்னும் சொல்வதென்றால், தன் கோழைத்தனத்திற்காக மன்னிப்பு கேட்டிருக்கணும்!
சுமார் 30 ஆண்டுகாலம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக தங்களை அழித்துக் கொண்ட ரசிகர்களுக்காக துளியளவு கண்ணீரேனும் சிந்தியிருக்க வேண்டும்.
ஆனால், லதா ரஜினியின் பேச்சு என்பது ஏதோ தமிழகம் ஒரு பெரும் தலைவரை தவறவிட்டதாக சொல்கிறதே அல்லாமல், தங்கள் தரப்பு கோழைத்தனத்தை பேசவில்லை. விஜய் முதல் அமைச்சராகியதை இவர்களால் தாங்க முடியாமல் பிதற்றுகிறார்கள்!
ரஜினிகாந்த் அடிக்கடி துக்ளக் அலுவலகம் வந்து ஆசிரியர் சோவை சந்தித்து மணிக்கணக்கில் பழைய அரசியல் விவகாரங்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். சோ அவர்களும் அரசியலில் ஈடுபட விருப்பம் இருப்பதால் தான் ரஜினி தன்னை அடிக்கடி தேடி வந்து இவ்வளவு கேள்விகள் கேட்டு பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார் என பேசி வந்தார். ஆனால், வெறுமனே அரட்டை அடித்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கவே தன் நேரத்தை பாழடிக்கிறார் என்பதை விரைவில் உணர்ந்து சுதாரித்துக் கொண்டார்.

ஆனால், சோ அவர்களுக்கு அஜித் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. எம்.ஜி.ஆரைப் போன்றே வசீகரமாக இருக்கிறார். சக நடிகர்கள் மீது பொறாமை இல்லாதவர். எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஆகவே, அஜித்தை அரசியலில் ஈடுபடுத்தினால் அது ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுகவின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் என சோ அவர்கள் கணித்தார். அதாவது எதிர்கால அதிமுகவை வழி நடத்த திரைக் கவர்ச்சியுள்ள ஒருவரால் முடியும். இல்லையெனில், அதிமுக ஜெயலலிதாவிற்கு பிறகு காணாமல் கரைந்து போக வாய்ப்புள்ளது என எண்ணியே அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தார்.
ஒருவகையில் தொலை நோக்கோடு துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி யோசித்தார் என்றே நினைக்கிறேன். அவர் நினைத்தது தான் இன்று நடந்து கொண்டுள்ளது. அதிமுகவில் இருக்கும் பலர் திரைக் கவர்ச்சியுள்ள விஜய்யை தலைவராக ஏற்று கட்சி மாறிக் கொண்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் எந்தச் சலனமும் இல்லாத அஜித்தை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். ஏனென்றால், அவருக்கு வலிந்து தரப்பட்ட மாபெரும் வாய்ப்பை அவர் தான் தீர்க்கமாக மறுத்தார்.
இப்போது நினைத்துப் பார்த்தாலும், என்னால் வியப்பில் இருந்து விடுபட முடியவில்லை.
இது வரை பேசப்படாத உண்மை ஒன்றை நான் தற்போது சொல்கிறேன்.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா பிரிந்த சமயம் சோ அவர்கள் தான் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக ஒரு வருடம் இருந்தார். அப்போதே ஜெயலலிதா உடல் நிலை மோசமாகி வருவதை அறிந்து, ”உனக்கு பிறகு இந்த இயக்கத்தை கொண்டு செலுத்த ஒரு இளம் தலைமையை இப்போதில் இருந்தே அடையாளப்படுத்தி கொண்டு வர வேண்டும்” என்றார்.

”அப்படி யாரையும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த இயக்கத்தில் என்னைப் போல யாருக்கும் மக்கள் செல்வாக்கும் இல்லை” என்றார், ஜெயலலிதா.
”எம்.ஜி.ஆரும், நீயும் திரைப்படத் துறையில் பிரபலமாகி பிறகு அரசியலுக்கு வந்தீர்கள். அப்படி மக்கள் செல்வாக்குள்ள ஒரு இளம் திரைக் கலைஞர் தான் இந்த பெரும் இயக்கத்தை கொண்டு செலுத்த முடியும்” என்றார், சோ.
இந்த உரையாடலின் இறுதியாக அவரே அஜித்தை முன் மொழிந்தார்.
சற்று யோசித்துவிட்டு, ”நல்ல பையன் தான். நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவருக்கு ஆர்வம் இருக்கா? என்று தெரியணும்”
”அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் சோ.
சோ சாரின் மகன் ஸ்ரீராமும், அஜித்தும் நல்ல நண்பர்கள். ஸ்ரீராம் ஒரு சகலகலா வித்தகர்! கடுமையாக உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ் பேக்’ கொண்டிருந்தார். மலையேற்றம், காடுகளுக்குள் செல்வது, பைலட்டுகள் போல தனி ராக்கெட் விமானம் ஓட்டுவது.. நவீன விஞ்ஞான ஆய்விதழ்களை விரும்பி படித்து சில சோதனை முயற்சிகள் செய்வது.. என்று வித்தியாசமானவர். ஸ்ரீராம் மூலமாக அஜித்தை அழைத்து பேசினார் சோ.

அஜித் மென்மையான புன்னகையோடு, ”என் மீது நீங்களும், மேடமும் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. ஆனால், எனக்கு இதில் விருப்பமில்லை. அரசியலுக்கு வருவதற்கு என்று ஒரு விஷன் இருக்கணும். எனக்கு அது சுத்தமாக கிடையாது அங்கிள்” என்று மறுத்துவிட்டார்.
”யோசித்து பாருங்கள். நான் பேசிய பிறகு உங்களுக்குள் ஒரு மாற்று சிந்தனை உருவாகலாம். நீங்கள் உடனே பதில் சொல்லாமல், நேரம் எடுத்துக் கொண்டு சொல்லுங்கள்” என்றார். ”வீட்டில் யாரிடமும் பேச வேண்டும் என்றாலும் நான் வந்து பேசுகிறேன்” என்றார். அஜித்தின் பெற்றோர்களில் ஒருவர் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.
”எனக்கு விருப்பம் இல்லாவிட்டால் என் பெற்றோரும் நிர்பந்திக்க மாட்டார்கள். நான் விரும்பினால் அவர்கள் தடுக்கவும் போவதில்லை. இதில் யோசிக்க வாய்ப்பில்லை. இதுவே இறுதி முடிவு. இந்தப் பேச்சுக்கு இப்போதே முற்றுப் புள்ளி வைத்துவிடலாம். இப்படி பேசியதையே மறந்தும் விடலாம்” என்றார்.
அதிமுகவின் எதிர்காலத் தலைவராகவும், அதன் வழியே தமிழகத்தின் முதல்வராகவும் வரக் கூடிய வாய்ப்பை அன்றே திட்டவட்டமாக அஜித் மறுத்துவிட்டார். அதில் இன்று வரை அஜித்திற்கு எந்தச் சலனமும் இல்லை.
இது ஏதோ எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அல்ல. மற்ற சிலருக்கும் தெரியும்.
உண்மையில் அஜித், ‘தன்னைத் தான் நன்கு உணர்ந்திருந்தார்’ என்று நான் நம்புகிறேன்.
ஆன்மீகம் என்றும், இமயமலை என்றும் உழலும் ரஜினிக்கு தன்னுடைய விருப்பம், விருப்பமின்மை குறித்த எந்த தெளிவும் இல்லாததால் தான் 30 ஆண்டுகள் அலைபாய்ந்ததோடு மட்டுமின்றி, தற்போதும் தடுமாற்றத்திலும், ஆதங்கத்திலும் காலம் தள்ளுகிறார்.
ரஜினியோட சினிமா வசனம் ஒன்றையே அவருக்கு தற்போது நினைவுபடுத்துவது சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.
கிடைக்காம இருப்பது கிடைக்காது’
சாவித்திரி கண்ணன்























ரசினி குடும்பமே இப்போ வேறுவேறு வழிகளில் அவர்களை அவர்களாகவே இப்படியெல்லாம் பேசி சில செயல்கள் செய்து தங்களுக்குள்ளாகவே உடைத்துக்கொள்கிறார்கள் அவர்களை அப்படியே கண்டும் காணாமல் விடுவது மக்களுக்கும் / மக்களுக்கும் நல்லது