புதிய ஆட்சியின் முதல் ஆளுநர் உரை என்ற சடங்கு பிரச்சினையின்றி நடந்து முடிந்தாலும், இனி வரும் நாட்களில் தவெக அரசு மீது திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகியவை கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான அறிகுறி தெரிகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் உச்சபட்ச ஆக்ரோஷத்துடன் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டார்;
கடந்த நான்காண்டுகளாக போலன்றி, இன்று ஆளுநர் முரண்பட்டு முறுக்கி கொண்டு போகாமல், நடத்திக் கொடுத்தது என்பது ஒரு வகையில் பாசிடிவ் அம்சமே!
தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது மகிழ்ச்சி அளித்தது. அதற்கு அடுத்தபடியாக தேசிய கீதத்தை வலிந்து பாட வைத்துள்ளனர் ஒன்றிய ஆதிக்கவாதிகள்! பிறகு கடைசியிலும் பாட வைத்துள்ளனர். இப்படியெல்லாம் செய்தால் தான் தமிழர்கள் தேசப்பற்று உள்ளவர்கள் என்ற நிம்மதி அவர்களுக்கு வருமாக்கும்..! வலிந்து திணிக்கப்படும் எதுவும் எரிச்சலைத் தான் உருவாக்கும் என்பதை எப்போது உணர்வார்களோ!
இதற்காக கவர்னரோடு முரண்பட்டு, அவரை வெளியேற வைத்து ஒரு செயற்கையான வீராப்பை வெளிப்படுத்தாமல், சகித்துக் கொண்டே, நமக்கானதை சாதித்துக் கொள்வது தான் தற்போது நம்முன் உள்ள ஒரே வழியாகும். கவர்னர் வாயாலேயே மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகிறது என்று வாசிக்க வைத்தது சூப்பர்!
நல்லவேளையாக வந்தே மாதரம் வலியுறுத்தப்படவில்லை. பாட்டில் குறையில்லை. நமக்கு மிகப் பிடித்த பாடல் தான்! ஆனால், வற்புறுத்தி திணிப்பது தான் வருத்தம்!
38 நாட்களே ஆன ஒரு ஆட்சியை எதிர்ப்பதில் இவ்வளவு மூர்க்கத்தனமா? என்று வியக்கும் வகையில் இருந்தது திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததும், விதவிதமான எதிர்ப்பு பதாகைகளை தாங்கி நின்றதும்…!
சட்டமன்ற நிகழ்வு முடிந்ததும் வெளியே வந்த உதயநிதி தவெக ஆட்சி மீது சரமாரியான தாக்குதல்களை தொடுத்தார். அதில் வன்மம் தூக்கலாக வெளிப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சி.டி. நிர்மல்குமாரும் தகுந்த விளக்கங்கள் அளித்தார்.
இவையெல்லாம் வருகின்ற நாட்களில் சட்டமன்ற கூட்டத் தொடர் படு பரபரப்புடனும், சூடாகவும் நடக்க உள்ளது என்பதை உணர்த்துகிறது.
திமுகவிலும், அதிமுகவிலும் எந்த மாதிரியான கேள்விகள் வரும்? அவற்றுக்கு என்ன பதில்கள் தர வேண்டியதிருக்கும் என்பது குறித்து உளவுத் துறை போலீசார் தந்த தகவல்கள் அடிப்படையிலும், சபாநாயகரிடம் முன்கூட்டியே கேள்விகள் தந்துள்ள வகையிலும் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் விஜய்யும், தவெக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் துறை செயலாளர்களை அழைத்து பேசி குறிப்புகள் எடுத்துக் கொண்டு தயாராகி உள்ளனர்.
பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்பதை!
எடப்பாடி பழனிச்சாமியும் தவெக அரசு மீது விமர்சனங்கள் வைத்தாலும், அதில் திமுக அளவுக்கு வன்மங்கள் இல்லை. அதிமுகவை பொறுத்த வரை இன்று 17 எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கே வரவில்லை. சில எம்.எல்.ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்ததானது அவர்களை அதிகமாகவே காயப்படுத்தி உள்ளது. வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தும் போது கூடவே நிற்கும் வேலுமணி இன்று மிஸ்சிங்! அதே சமயம் வேலுமணியும் மற்றவர்களும் சி.வி.சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பள்ளி, கோவில் அருகில் இருந்த 717 மதுக்கடைகளை அகற்றியது,
குளம்,குட்டைகளில் விவசாயிகளை கட்டணமில்லாமல் வண்டல் மண் அள்ளிக் கொள்ளச் சொல்லியது,
சிங்கப் பெண் திட்டம்,
அரசு நிர்வாகத்தில் நேர்மையான அணுகுமுறை, வெளிப்படைத்தன்மை
போன்றவற்றை தங்கள் ஒருமாதகால ஆட்சியின் சாதனையாக கூறியுள்ளனர்.
வழக்கம் போல- அதாவது முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே சுயதம்பட்டம் இருந்தது. முதலமைச்சர் விஜய்யை கவர்னர் தான் புகழ்கிறாரா? அல்லது தவெகவின் கொள்கைபரப்பு செயலாளர் புகழ்கிறாரா? என்ற திகைப்பு ஏற்பட்டது!
எவ்வளவோ விவகாரங்களில் புதுமையை புகுத்த விரும்பும் தவெகவினர், இந்த தற்புகழ்ச்சி விவகாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து சற்று இயல்பாக கவர்னர் உரையை அமைத்திருக்கலாம்.
அடுத்ததாக இந்த உரையானது இது வரை முந்தைய தமிழக ஆட்சியாளர்கள் கடைபிடித்த சில நல்ல கொள்கைகளை அப்படியே தொடர்வதாக அமைந்ததும் சிறப்பு தான்.

குறிப்பாக இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதியாக பின்பற்றுவது, மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வருவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வித் தொகையை நிபந்தனை விதிக்காமல் ஒப்படைக்கக் கூறியது பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் வழிமுறைகளை கடைபிடிப்பதாக கூறியது…போன்ற்வை சிறப்பாகும்.
ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் செலுத்தும் வரியிலிருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிர்வினைப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதும்,
மாநில நலன்கள், தேவைகள் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பெறுவோம். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். தமிழகத்துக்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும்…என்பதும் பாஜக அரசின் பாரபட்ச அணுகுமுறைக்கு எதிராக போராடும் மனத் துணிவை நாங்கள் கொண்டுள்ளோம் என்பதை இந்த அரசு பறை சாற்றுவதாகவே பார்க்கிறேன்.
கனிமவளத்துறையில் நடக்கும் முறைகேடுகள் மூலம், வருவாய் குறைந்துள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது ஆறுதல் அளிக்கிறது.
தேசியக் கல்வி கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சொன்னபடியே செயலாற்றி காட்ட வேண்டும்.
கர்நாடகா மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுப்பதிலும், முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் பிடிவாத போக்கை எதிர்ப்பதிலும் சமரசம் இருக்காது எனக் கூறியுள்ளனர்.
’சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்…’என்றது அசல் தமிழனின் குரலாக இருந்தது.
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நிரப்பப்படும். தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்…என்பது வரவேற்கத்தக்கது.
சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்பது நல்ல கொள்கை.
எத்தனை தடைகள் வந்தாலும் அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்க உறுதிகாட்டி பொருளாதாரத்தை வளர்தெடுப்போம். ..என்று சொல்வதற்கும் ஒரு குறைந்தபட்சநேர்மை இருக்க வேண்டும். உண்மையில் இது மிகப் பெரிய சவாலாகும். நடந்தேறட்டுமே!
தமிழ்நாட்டில் சர்வதேச ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.
கீழடி போன்ற அகழாய்வுகள் சமரசமின்றி தொடரும். இந்த இடங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்துச் சென்று காண்பிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை தவெக அரசு மேற்கொள்ள உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்.
நல்லதே நடக்கட்டும். ஓரளவேனும் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியே!
சாவித்திரி கண்ணன்























Leave a Reply