புதிய தவெக அரசில் உயர்கல்வித் துறையின் நீண்டகால கோரிக்கைகள், கொள்கை சார்ந்த லட்சியங்கள் நிறைவேறும் சூழல் கனிந்துள்ளது. ஆனால், திமுக, அதிமுக ஆட்சிகளில் உயர்கல்வித் துறையை உச்சபட்ச ஊழல் துறையாக்கி ஆதாயம் பார்த்த அதிகாரிகளும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்களும் ஒத்துழைப்பார்களா?
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கெளரவ விரிவுரையாளர்கள் நியமித்து அடிமாட்டுச் சம்பளம் தந்து வந்தனர்.
இந்தச் சூழலில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையில், ”மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிரப்புவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்” எனச் சொல்லப்பட்டதும்,
”உண்மையான கல்வி சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அதன் கற்பித்தல் திறனையும் உயர்த்துவதில் தான் அடங்கியுள்ளது. உயர்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு செய்ய உள்ளது. இதன் வழியாக மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி உறுதிபடுத்தப்படும்…” என்றதும் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது.
இதையே உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களும், ”ஊழல் முறைகேடுகள், லஞ்சம் தவிர்த்து நேர்மையாக பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆசிரியர் பணி மாறுதல்களுக்கு கலந்தாய்வுகள் நடந்து செலவில்லாமல் மாறுதல்கள் உறுதிபடுத்தப்படும்” என்றும் சொல்லி உள்ளார்.

இந்தச் சூழலில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது கவனத்திற்கு உரியது.
அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு, பல்லாண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வந்த 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இது நீண்ட காலமாக நம்பிக்கையோடு பணியாற்றி வந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
ஆனால் பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த ஆணை செயல்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக 2022-ம் ஆண்டு அந்த அரசாணையை திமுக அரசு ரத்து செய்து, காலியாக இருந்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதை கேள்வியுற்று அதிர்ந்த கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, 2022-ம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, பழைய அரசாணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து திமுக அரசின் சார்பிலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, “பணி வரன்முறை மற்றும் போட்டித் தேர்வு இரண்டும் வேறுபட்டவை. கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது என்றாலும், அவர்களின் அனுவத்தை கருத்தில் கொண்டு கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை ‘வெயிட்டேஜ்’ வழங்கலாம் என்றும், வயது வரம்பில் தளர்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தது.
மிக முக்கியமாக, தேர்வு நடைமுறைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய நியமன உத்தரவுகள் வெளியாகும் வரை தற்போது பணியில் உள்ள கவுரவ உதவி பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதானது அரசு கல்லூரிகளில் தகுதியானவர்களை நியமிக்க உதவுவதோடு, உயர் கல்வி அமைப்பில் சீரான. நேர்மையான தேர்வு நியமனங்களை உறுதி செய்வதாகவும் பார்க்கப்பட்டது.
அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கான ஆசிரியர் தேர்வு நேர்மையாக நடந்தால் மட்டும் போதாது. அரசு உதவி பெறக்கூடிய 161 தனியார் கல்லூரிகளிலும் நேர்மையாக நடக்க வேண்டும். இவற்றில் மட்டுமே சுமார் 8,000 பேராசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. இங்கே தான் உச்சபட்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அந்த காலத்தில் கல்வியை வளர்க்க எண்ணிய பெருந்தனக்காரர்களான சான்றோர்கள் தங்கள் உன்னத நோக்கம் நிறைவேற தங்களின் நிலத்தை தந்து கட்டிடம் எழுப்பி கல்வி தந்தனர். பின்னர் வந்த காலத்தில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பளப் பொறுப்பை ஏற்றது. ஆனால், இன்றோ, அவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் இந்தக் கல்லூரிகளை வணிகமாக கருத ஆரம்பித்துவிட்டனர். இன்றைய அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பல மாலை நேர கல்லூரி என்ற வகையில் சுயநிதி கல்லூரியாக நடத்தி பணம் பார்க்கின்றன. இதில் நாம் குற்றம் காணவில்லை.
ஆனால், இவர்கள் தங்கள் ரெகுலர் கோர்ஸ்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பேராசிரியர்களிடம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சம் பெற்று அதை அதிகாரிகள், அமைச்சர்களுக்கும் பங்கு தருகின்ற நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக வலுத்து வருகிறது.
தவெகவின் கூட்டணி அரசாங்கம் லஞ்சம் இல்லாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நினைத்தாலும், அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் வாங்கி பழக்கப்பட்டு விட்டதால் கண்டிப்பாக வாங்கியே தீருவார்கள். ஆகவே, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் உரிமையை இவர்களிடம் இருந்து பறித்து, தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். இதைச் செய்யாவிட்டால், இந்த அரசின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஊழல் அதிகாரிகளை விலக்கி நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி நேர்மையாக அவர்கள் நடக்க ஒத்துழைக்காத பட்சத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக ஆக்கி விட வேண்டும். இதில் சமரசம் கூடாது.
சாவித்திரி கண்ணன்























தங்களின் கட்டுரையில் உயர்கல்வித்துறையில் உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்வதில்
நடைபெறும் ஊழலை விவரித்தும் அதற்கான தீர்வுகளை தெரிவித்தும் இருந்தீர்கள்.
இது தமிழக முதல்வர் நானும் லஞ்சம் வாங்க மாட்டேன். யாரையும் லஞ்சம்
வாங்க அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறையில் லஞ்சம் ஊழலுக்கு இடமளிக்காமல் நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் தகுதி மற்றும்
வயது மூப்பு அடிப்படையில் பணியை அரசு மற்றும் சுயநிதி
கல்லூரிகளில் நியமித்தால் இதற்கு முன்பு ஊழலில் திளைத்த
திமுக அதிமுக அம்பலப்பட்டு விடும். .
தோழமையுடன்
எஸ் சுந்தரம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.