சிறந்த ஆலோசனைகள் எதிர்கட்சிகளிடம் இருந்து வரும் போது ஏற்பது நல்லதே! ஆனால், முதல்வர், எதிர்கட்சித் தலைவர் இருவருக்குமே மேக்கேதாட்டு பிரச்சினையில் சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகிறது! மேக்கேதாட்டு அணை ஒரு போதும் வேண்டாம் என்பதற்கு தனி நடுவர் மன்றம் அமைத்தால் என்னவாகும்? ஒரு அலசல்;
”மேக்கேதாட்டுவிற்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என்கிறார் உதயநிதி. அதை விவாதமில்லாமல் ஏற்றுக் கொண்டார், முதலமைச்சர் விஜய்.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்து, உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது தான் தமிழகத்திற்கு 177 டி.எம்சி தண்ணீர் கர்நாடகம் தர வேண்டும் என்பது!
இதுவே, 30 ஆண்டுகளாகப் போராடி – நாம் பாரம்பரியமாக பெற்றுக் கொண்டிருந்த 377 டி.எம்.சியில் இருந்து 200 டி.எம்.சியைக் குறைத்து – நமக்கு நடுவர் மன்றத்தால் தரப்பட்ட தீர்ப்பு.
மேக்கேதாட்டுவில் அணைகட்டினால், நடுவர் மன்றம் தந்த தீர்ப்பே செல்லாக்காசாகிவிடும். ஆகவே, மேக்கேதாட்டுவில் அணை வேண்டுமா? வேண்டாமா? என்பதற்காக தனி நடுவர் மன்றம் அமைத்து விசாரணைக்கு உடன்பட ஒப்புக் கொள்வதைவிட ஆபத்து வேறில்லை.
அது, தமிழகம் கொலை செய்யப்படுவதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற விசாரணைக்கு உடன்படுவது போன்றதாகும். ஆகவே, உதயநிதியின் யோசனை உதவாது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் உயிரையே காவு கேட்பதற்கு வழிவகுத்துவிடும்.

காவிரி பிரச்சினையை இணக்கமான பேச்சு வார்த்தையின் மூலம் 1974 லேயே கருணாநிதி சுமூகமாக முடித்திருந்தால் அன்றைக்கு கர்நாடகம் தர முன்வந்த 350 எ.டி.எம்.சி நமக்கு கிடைத்திருக்கும். அவர் காவிரி பிரச்சினையை வைத்து தமிழ் உணர்வை கிளறினாரே அன்றி, தீர்க்க முனையவில்லை.
எம்.ஜி.ஆர் பேச்சுவார்த்தையில் சுமூகமாக தீர்க்க முனைந்தார். ஆனால், அப்போது பிரச்சினையை திசைமாற்றி நடுவர்மன்றம் கோரிக்கையை முன்னிறுத்தியது திமுக. அதற்காக அனைத்து கட்சிகள் போராட்டம், கடையடைப்பு, மனித சங்கிலி எனத் தமிழகமே போராடி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. அதையும் தாங்கள் சாதனை என்றது திமுக.
அந்த நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு தர வேண்டும் என்று அழுத்தம் தந்தது திமுக அரசு. 1991 –ல் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் என நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு தந்தது. இந்த ஏமாற்றத்தை மறைக்க இதையும் தங்கள் தங்களின் மகத்தான வெற்றி என ஆர்பரித்தது திமுக. இதையடுத்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இதனால், இறுதி தீர்ப்பில் 2007-ல் நமக்கு நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு வெறும் 177 டி.எம்.சி தான்.
இந்த குறைந்தபட்ச தண்ணீரையும் கர்நாடகம் தரமறுத்தது. அதை தர வைப்பதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற புதிய யோசனையை கோரிக்கையாக்கியது திமுக. இந்த கோரிக்கையை ஆதரிக்காதவர்கள் தமிழின விரோதிகள் ஆகிவிடுவார்கள் என்பதால் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
இதற்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க, எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கினர். தமிழகத்தில் அனைத்துக் கட்சியினர், விவசாயச் சங்கத்தினர், மாணவ அமைப்பினர், வியாபார சங்கங்கள் எனப் பலரும் போராட்டம், உண்ணாவிரதம் என ஈடுபட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை கேட்டுப் போராடினர். கடைசியாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 2018-ஆம் ஆண்டு மத்திய அரசால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority – CWMA) அமைக்கப்பட்டது.

அதற்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான எஸ்.கே.ஹல்தர் என்ற நியாய உணர்வில்லாதவரே தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு அவரே ஓய்வு பெற்ற பிறகும் பல்லண்டுகள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக தொடர்கிறார். இவர் தொடக்கம் முதல் இன்று வரை தமிழகத்திற்கு எதிராகவே செயல்படுகிறார். ”மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதே திமுகவால் வலியுறுத்தி அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, காவிரி பிரச்சினையில் திமுகவின் அணுகுமுறைகளாலும், புதுப்புது கோரிக்கைகளாலும் தமிழகத்திற்கு தீமையே விளைந்துள்ளது, மேன்மேலும் பின்னடவைவையே தந்துள்ளது. திமுக தன் சாதனையாக காட்டுவதெல்லாம் தமிழகத்திற்கு வேதனையையே பரிசளித்துள்ளன என்பதற்கு காவிரி நடுவர் மன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமுமே சாட்சியாகும்.

அந்த வகையில் தான் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுமாகும்.
காவிரியில் இதுவரை அமைக்கப்பட்ட அமைப்புகளால் நாம் எந்தப் பயனையும் பெறவில்லை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு!
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (Cauvery Water Regulation Committee – CWRC) ஆகும். இது செயல்படுவதே இல்லை. பயிர்களுக்கு தண்ணீர் என்பது தினசரி தேவையாகும். அந்த வகையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தண்ணீரை தினசரி இவ்வளவு என்பதாக திறந்துவிடுவது என்பது இது வரை சாத்தியமாகவே இல்லை. காவிரியை சிறைபிடித்து மொத்தமாக மாதம் ஒருமுறை திறந்து விடுகிறது கர்நாடகம்.
இதை எப்படித்தான் இரு திராவிட ஆட்சிகளும் ஏற்றுக் கொண்டு மெளனித்து வந்தனர் என்பதே புரியவில்லை. தினசரி தண்ணீர்வரத்து இயல்பாக நடக்க ஆவண செய்ய வேண்டும் என விவசாயத் தலைவர் செ. நல்லுசாமி தொடர்ந்து சொல்லிக் கொண்டுள்ளார்.
உதயநிதியின் ஆலோசனைப்படி மேக்கேதாட்டுக்காக தனி நடுவர் மன்றம் அமைத்தால், அது கர்நாடகத்திற்கு சாதகமாக அமையவே வாய்ப்புகள் அதிகம். கடந்தகால நமது அனுபவங்கள் இதைத் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளது.
மேக்கேதாட்டு அணைக்காக தனி நடுவர் மன்றம் அமைப்பது என்பது நம்மை கொல்வதற்கான கொலைக் கருவியை எதிரியிடம் நாமே எடுத்து தருவதாகும்.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply