ஆத்திரத்தில் உதயநிதி! அதிர்ந்த சபாநாயகர்! சாதித்த விஜய்!

-சாவித்திரி கண்ணன்

தவெகவின் ஆட்சியை கவிழ்த்தே தீருவது என்று தலைகீழாக முயற்சிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதற்கான சதித் திட்டங்கள் சபாநாயகரை மையப்படுத்தி தீட்டப்பட்டு, கரூர் சகோதரர்கள் களத்தில் இறக்கப்பட்டனராம்…! அதை முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளார். இவையாவும் தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகளில் பிரதிபலித்தன;

திமுக எதிர்கட்சியாக இருந்தால் ஆள்வோரை நிம்மதியாக செயல்பட அனுமதிக்கமாட்டார்கள். எடுத்தற்கெல்லாம் குற்றம்,குறை காண்பார்கள். அதைவிட அந்த ஆட்சிக்கு தலைமை தாங்கும் முதல்வரைப் பற்றிய தரக்குறைவான ஒரு நேரேசனை மக்கள் மைண்ட் செட்டாக மாற்றுவார்கள்.

எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதவிற்கும் எப்படி ஒரு மோசமான பிம்பத்தை கட்டமைத்தார்களோ, அதே போலத் தான் விஜய்யையும் கட்டமைத்து காலியாக்கப் பார்க்கிறார்கள்!

இதில் இன்றைய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி மிகத் தீவீரம் காட்டி அவசரப்படுகிறார். ‘அதிகாரத்திலே அமர முடியவில்லையே’ என்ற வருத்தம் இளவரசருக்கு நாளுக்கு நாள் உச்சத்தில் போய் கொண்டுள்ளது போலும்!

தவெக ஆட்சிக்கு வந்ததையும், விஜய் முதல்வரானதையும் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாதவராக நாளும், பொழுதுமாக குமுறிக் கொண்டுள்ளார் உதயநிதி. ”எப்படி இந்த ஆட்சி தொடரும் என்று பார்த்துக் கொள்கிறேன். ..” என்று நட்பு வட்டாரத்தில் ஓயாமல் முழங்குவதோடு, கட்சித் தலைவர்களையும் முடுக்கி விடுகிறார்.

”இப்பத் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து கடும் தாக்குதல்களையோ, ஆட்சி கவிழ்ப்பையோ வைத்துக் கொள்ளலாம்” என்ற மூத்த தலைவர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து உதயநிதியின் விருப்பத்தை நிறைவேற்றித் தரும் பொறுப்பை செந்தில் பாலாஜிக்கு தந்துள்ளது தலைமைக் குடும்பம். அவரும், ”தம்பி நினைப்பது சரி தான். தற்போதைய தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்க அனுமதித்தால், திமுகவுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும். பத்து, பதினைந்து வருடத்திற்கு விஜய்யை அசைக்க முடியாது. ஆகவே, ஏதாவது ஒரு ஆபரேஷன் செய்தால் தான் உண்டு…” என்று சொல்ல எல்லாருமே அதை ஆமோதித்து உள்ளனர்.

‘மே 13-ந் தேதிதான் தவெக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதனால் அடுத்த 6 மாசத்துக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது.ஆனா, அது வரைக்கும் பொறுமையாக இருக்கவும் முடியாது. தவெக அரசுக்கு நெருக்கடி தருகிற மற்றொரு திட்டமாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். அந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் அதை வைச்சு தவெக ஆட்சியை கவிழ்க்கும் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகும்’ என திட்டமிட்டுள்ளனர்.

இந்த ‘அசைன்மெண்ட்டை’ செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளனர். கரூர் சகோதரர்கள் களமிறங்கி அதகளம் செய்து காங்கிரஸ், கம்யுனிஸ்டுகள் தவிர்த்த, தவெகவை ஆதரிக்கும் கட்சிகளிடம் பெரிய டீல் ஒன்றை பேசியுள்ளனர்.

அத்துடன் தவெகவில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அடைய முடியாமல் போன சிலரையும் தூக்கி, வாயை பிளக்கும் அளவுக்கு அட்வான்ஸ் பணமும் தந்திருக்கு கரூர் கம்பெனி. சென்ற ஆட்சியில் இவர்கள் டாஸ்மாக் கஜானாவையே கபளிகரம் செய்தவர்கள் ஆயிற்றே.

காவல் துறையை கைவசம் வைத்துக் கொண்டு, தினமும் உளவுத் துறை ரிப்போர்ட்களை உன்னிப்பாக அவதானித்து வருகிறபடியால், முதலமைச்சர் விஜய்க்கு இந்த சதித் திட்டம் உளவுத் துறை ஐ.ஜி அஸ்ரா கார்க் மூலம் தெரிந்தவுடன், ”சூட்கேசுடன் திரியும் கரூர் சின்னத் தம்பியை தூக்குங்க” எனச் சொல்லவும் சின்னத்தம்பி உடனே சீனில் இருந்து ‘எஸ்கேப்’ ஆகவும் ‘கப் சிப்’ ஆகிவிட்டதாம் கரூர் கோஷ்டி!

இதையடுத்து, ”பாரபட்சமில்லாமல் நடுநிலைமையுடன் நீங்கள் அவையை வழக்கம் போல நடத்துங்கள்” என சபாநாயகருக்கு நம்பிக்கை தந்துள்ளார் முதல்வர் விஜய்!

ஆனால், தன்னை மையமாக வைத்து நடக்கவிருந்த சம்பவத்தை கேட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் ஆடிப் போய்விட்டாராம்…! ‘அதையடுத்து சொந்தக் கட்சிக்காரர்களை விடவும் எதிர்கட்சியினருக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கிவிட்டார்’ என்கிறார்கள்.

அந்த வகையில் அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் “உங்க ஆட்சியில மரபை நீங்க கடைபிடிச்சீங்களா?” என செங்கோட்டையன் திமுகவினரை நோக்கி கேட்ட போது, பதறிப் போன சபாநாயகர், “சபையில் முன்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றி நீங்கள் சொல்லி, மீண்டும் மீண்டும் இந்த அவையினுடைய மாண்பைக் குலைக்க வேண்டாம்” என செங்கோட்டையனுக்கு தடை போட்டார்.

அதே போல மோடியின் 12 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தது குறித்து தமிழக சட்டமன்றம் பாராட்டி தனது மாண்பை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர் போஜன் ராஜன் கூறியதற்கு எதிராக, விசிக அமைச்சர் வன்னியரசு,

“நம்முடைய மரியாதைக்குரிய பா.ஜ.க உறுப்பினர் பேசும்பொழுது, 12 ஆண்டுகள் இந்தியாவை ஆளுகின்ற பா.ஜ.க தலைமை அமைச்சர் மோடி அவர்கள் குறித்து,  பேசும்பொழுது பெருமிதம் கொண்டு இந்த அவை அவரைப் பாராட்டி மாண்பை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றதன் மூலமாக, மாண்பு இந்த அவையில் குறைவாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் பேசவிடாமல் வன்னியரசுவை தடுத்தார், சபாநாயகர். இதன் மூலம், ‘பாஜக அரசின் மீதான லேசான விமர்சனத்தைக் கூட தான் அனுமதிக்க முடியாது’ எனக் காட்டிக் கொண்டார்.

இதே போல ஆதவ் அர்ஜூனா திமுகவை விமர்சித்த போது, ”ஆதாரமில்லாமல் பேசாதீர்கள்” என்று சொல்லி அமர வைத்தார்.

அதே சமயம் உதயநிதியை தாரளமாக, ஏராளமான கடும் குற்றச்சாட்டுகளை சொல்ல அனுமதித்தார். இது தவெகவினரையே தர்மசங்கடப்படுத்தியது.

ஆனால், மற்ற உறுப்பினர்கள் பேசமுடியாமல் போனதற்கும் சேர்த்தே விஜய் நன்றாகப் பேசினார். ‘பேசத் தெரியாதவர்’ என முத்திரை குத்த பார்த்தவர்களை விலாசித் தள்ளினார்!

”சட்ட ஒழுங்கைப் பற்றி, மக்கள் நலனுக்காக யாருக்கு என்ன யோசனை இருந்தாலும், அதை தாராளமாக சொல்லலாம். நம்ம அரசு அதற்கு காதுகொடுத்து கேட்கும். ஆனா, நம்ம அரசினுடைய நிர்வாகத் திறன் பற்றி பேசுறவங்களுக்கு, இந்த ஊரடிச்சு உலையில போட்டு ஊழல் மேல ஊழலா செஞ்சுகிட்டு, அதிலிருந்து தப்பிக்கிறதுக்கு பேருதான் நிர்வாகத் திறன் அப்படின்னு சொன்னா, அப்படிப்பட்ட ஒரு ஊழல் செய்யுற நிர்வாகத்திறனை நம்ம அரசு ஒரு நாளும் செய்யாது.

பெட்டி பெட்டியா பணத்தை வெச்சிக்கிட்டு பெட்டியை வெச்சு எல்லாம் செஞ்சுகிட்டு, போதைப்பொருள் பாதுகாப்பு கழகம் மாடல் அரசாங்கம் செஞ்ச ஒவ்வொரு ஊழலா வெளியில வந்துக்கிட்டு இருக்கு. டாஸ்மாக்ல, அது என்னப்பா அது பேரு? ஆ, பார்ட்டி ஃபண்ட், கட்சி நிதி அப்படின்ற பேர்ல அடிச்ச கொள்ளையெல்லாம் ஒன்னு ஒன்னா இப்போ கவர்மெண்ட்டோட கஜானாவுக்குள்ள கொண்டு சேர்த்துகிட்டே இருக்கிறோம்” இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

இப்படி பார்டி பண்ட் பற்றி பேசியவுடன், திமுகவினர் பதறி எழுந்து ஆவேசமாயினர். சபாநாயகர் எவ்வளவோ சமாதானம் செய்து, ”அவர் பேசி முடிந்ததும் நீங்க பேசலாம்” என எதிர்கட்சித் தலைவரிடம் மன்றாடியும், கேட்காமல் திமுகவினர் மொத்தமாக வெளியேறினர்.

டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் இந்த பார்ட்டி பண்டுக்கு அத்தாட்சியாவார்கள். இது குறித்து டாஸ்மாக் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் டிஜிபியையும், அன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்து, பார்டி பண்ட் கேட்டு தாங்கள் துன்புறுத்தப்படுவதாக’ புகார் கூறியது குறித்து, நாமும் அறம் இதழில்,

சாராய ஊழலில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி  என விரிவாக எழுதியுள்ளோம்.

கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்து டாஸ்மாக் ஊழியர்களை ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் மிரட்டி ‘பார்டி பண்ட்’ கேட்கப்படுவது பற்றி புகார் தந்தும் கூட, ஸ்டாலின் மெளனத்தையே பதிலாக்கினார்.

இப்போது என்னடாவென்றால், இவர்கள் உத்தமபுத்திரர்களாக வேடம் போடுகிறார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் விதவிதமான திட்டங்களை அமர்க்களமாக அறிவிப்பார்கள். ஆனால், அவை விளம்பரத்திற்கும், சம்பாதிப்பதற்கும் என்றே தீட்டப்பட்டவையாக இருக்கும்!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 12 வயது தொடங்கி தினப் பத்திரிக்கைகள், வார இதழ்கள் வாசிப்பில் தீவீரம் காட்டினேன். அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு செல்வேன். அதில் திமுக கூட்டங்களே அதிகம். அப்போது எம்.ஜி.ஆர் குறித்த திமுக வைத்த விமர்சனங்கள். எம்.ஜி.ஆர், லதாவோடு டூயட் பாடத் தான் லாயக்கு. முதலமைச்சராக அருகதையற்றவர். அவர் ஒரு முட்டாள். அது மட்டுமில்லை. அரசியல் அரிச்சுவடியே தெரியாத கோமாளி. அவருக்கு பைல் பார்க்கவே தெரியாது. அவர் தமிழரல்ல, மலையாளி. ஆகவே, தமிழருக்கு துரோகம் செய்பவர். டெல்லி ஆட்சியாளர்களின் கொத்தடிமை” என்றெல்லாம் பேசுவார்கள்!

திமுகவின் விமர்சனங்கள் யாவும் உண்மை என படித்த வர்க்கத்தினரில் கணிசமானோர் நம்பினர். நானும் பத்திரிகையாளர் ஆவது வரை நம்பினேன். பிறகு எம்.ஜி.ஆர் காலத்தில் அதிகாரிகளாக இருந்தவர்கள், அரசாங்கத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர்களிடம் பேசிய போது தான் எம்.ஜி.ஆரின் அறிவு கூர்மையையும், அரசு நிர்வாக ஆற்றலையும், எதிரில் பேசுவோரின் உள்ளத்தை ஊடுருவி எந்த நோக்கத்தில் பேசுகிறார்கள் என்பதை ஷார்ப்பாக அறியும் ஆற்றலையும் பெற்று இருந்தார் என அறிந்து வியந்தேன்.

நான் சொல்வதில் நம்பிக்கையில்லாதவர்கள் எம்.ஜீரிடம் தனி உதவியாளராக பணியாற்றிய த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் என்ற நூலை வாசித்தால் எம்.ஜி.ஆரின் நிர்வாக ஆற்றலை உணரலாம்.

இதைப் போலத் தான் ஜெயலலிதா குறித்த மிக மோசமான பிம்பங்களை திமுக கட்டமைத்தது. அதில் ஒன்று ஜெயலலிதா பாப்பாத்தி என்பதால் தமிழர் நலனை காவு கொடுப்பார். சமூக நீதிக்கு எதிராக செயல்படுவார் என்பது. இந்த விவகாரத்தில் திமுக கட்டமைத்த பிம்பத்தை எம்.ஜி.ஆரைப் போலவே ஜெயலலிதாவும் சுக்கு நூறாக உடைத்தெறிந்தார். சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை பெரியார்  இயக்கத்தின் மூலமே பெற்றார்.

இதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன் என்பதல்ல. இந்த இருவர் ஆட்சி குறித்தும் நான் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால், இவர்கள் இருவரையும் மிஞ்சிய நல்லாட்சியை  தந்தார்< கருணாநிதி என்று சொல்ல முடியவில்லை.

ஆனால், இந்த கட்டமைக்கப்பட்ட பிம்பங்களைக் கடந்து இந்த இருவரையும் தமிழக மக்கள் மீண்டும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள். 1980 -ல் இந்திராகாந்தியைக் கொண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கவிழ்த்தார், அவசரக் குடுக்கையாக கருணாநிதி. அதன் பிறகு மெஜாரிட்டியுடன் மீண்டும் வெற்றி பெற்று அசைக்க முடியாதவரானார். அதே போலத் தான் உதய நிதியின் ஆத்திரமும், அவசரக் குடுக்கைத்தனமும் விஜய்யை வலுப்படுத்தவே உதவும் என்று தோன்றுகிறது.

மக்கள் தீர்ப்பை மதித்து ஆட்சி செய்ய அனுமதித்து எதிர்கட்சி பாத்திரத்தை சிறப்பாக செய்தால், அடுத்து ஆட்சிக்கு வரலாம். இவ்வளவு வன்மத்துடன் செயல்படும் உதய நிதிக்கு மாற்றாக நிதானமாகவும், அறிவுபூர்மாகவும் செயல்படும் தங்கம் தென்னரசுவை திமுக தலைமை எதிர்கட்சித் தலைவராக்கினால், அது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time