ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி பெண்கள், நோஞ்சான் குழந்தைகள் நிறைந்துள்ளனர்!அரசு மருத்துவமனைகளில் தரமான சுகப் பிரசவம் சவாலாகியுள்ள சூழலில், நமது முதல்வர் தங்க மோதிரம் திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்! ஆண்டுக்கு 5.50 லட்சம் குழந்தைகளுக்கு இது நடைமுறை சாத்தியமா..? எது உடனடித் தேவை? ஒரு அலசல்;
ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டப்படி ஒரு கிராம் தங்க மோதிரம் தருவது என்றும், அதை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முந்தைய அரசாங்கங்களின் சார்பில் தாய் – சேய் நலனை மேம்பட மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது என்பது உண்மை என்றாலும் நடைமுறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவியை பெறுவது, அரசு மருத்துவமனைகளில் நல்லபடியாக பிரசவம் அமைவது என்பது ஒரு சவாலாகத்தான் உள்ளது.
அதிக பிரசவங்கள் நடக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மாத்திரை , மருந்துகள் பற்றாகுறை நிலவுகிறது. பிரசவ வார்டுகள் பற்றாகுறை உள்ளது. பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு பிரசவங்கள் நடப்பதால் பல தவறுகள் அரங்கேறி மக்கள் கொந்தளிப்பும், ஆவேசமும் கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.

அத்துடன் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு சேவைகள், ஊட்டச்சத்து அளித்தல் ஆகிய அனைத்தும் தேவைப்படுவோர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதனால் கடன்பட்டேனும் தனியார் மருத்துவமனைகளை நாடும் போக்கு ஏழை குடும்பங்களிடம் பார்க்க முடிகிறது.
தங்க மோதிரம் தருவதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூடுதலாக வந்து பலனடைவார்கள் என சுகாதார அமைச்சர் அருண்ராஜ் தெரிவிக்கிறார். உண்மையில் அரசு மருத்துவமனைகள் ஏற்கனவே மக்கள் கூட்டத்தால் திணறுகின்றன.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ஒன்பது லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் மூன்றில் இரண்டு பங்கு பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 3.50 லட்சம் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நிகழ்கின்றன. எனில், ஐந்ததரை லட்சம் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் தருவது சாத்தியமா?
தங்க மோதிரம் தருவதைவிட தரமான மருத்துவம், ஆரோக்கியமான தாய்- சேய் ஆகியவற்றை உறுதிபடுத்தலாமே!
2018 ஆம் ஆண்டு தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 27 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் என அறியப்பட்டது. இந்த குழந்தைகளில் 72 சதவிகிதம் பேர் ரத்தசோகை உள்ளவர்கள் என அதாவது, உடம்பில் ரத்த ஓட்டம் குறைவாக உள்ளவர்கள் என அறியப்பட்டது.

2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,11,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டது.
அதிலும் மருத்துவ பரிசோதனையின் போது 44,000 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு, பேச முடியாமல் இருத்தல், இயன்முறை பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இக்குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான ஊட்டச்சத்துக்காக செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நடைமுறை உருவானது.
2024 ஆம் ஆண்டு பிரசவத்தின் போது தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 838 ஆக இருந்தது. இதில் 3 ஆயிரத்து 838 குழந்தைகள் இறந்துள்ளன. காரணம், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு. இந்த குழந்தைகளின் இறப்பு, சதவிகித கணக்கில் 7.8 சதவீதம் என சுகாதாரத்துறை தெரிவித்தது.

தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அரசாணை GO(Ms) 118 இன் படி 2.4.2018 முதல் தமிழக கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 18,000 மதிப்புள்ள உதவிகள் பணமாகவும் பொருளாகவும் ஐந்து தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது எனச் சொல்லப்பட்டாலும் எந்த அளவு செயல்பாட்டில் உள்ளது எனத் தெரியவில்லை.
கர்ப்பிணிப் பெண் கர்ப்பமாக இருப்பதை 12 வாரங்களுக்குள் அவரது கிராம சுகாதார அல்லது நகர்புற சுகாதார செவிலியர் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 104 எனும் இலவச எண்ணின் மூலம் பதிவு செய்து தங்கள் பெயரில் பிரத்யேகமான PICME number ஐ பெற வேண்டும். இந்த எண் அந்தப் பெண் குழந்தை பெற்றவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற உதவுகிறது.
மேலும், 2022 ஆம் ஆண்டு ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளின் மேம்பாடு திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், தமிழக அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி மையங்கள் வாயிலாக சத்து மாவு பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது.

ஆனால், கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு தாயார் வீட்டுக்கு சென்ற பின்னரும், பிரசவம் முடிந்து திரும்பி வரும் வரையிலும் சத்துமாவு கிடைக்காது என்ற சிக்கல் இருந்தது. இந்த சூழ்நிலையில், சத்துமாவு வழங்குவதற்கு,’போசான் டிரேக்கர்’ எனும் செயலியின் கீழ், சம்பந்தப்பட்ட பயனாளியின் முகத்தை புகைப்படம் எடுத்து, ஆதார் எண்ணை பதிவு செய்து, பயனாளியின் மொபைல் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி., பதிவு செய்தால் மட்டுமே சத்து மாவு வழங்க முடிவு செய்தனர். இதை பயன்படுத்த தெரியாமல் பாமர பெண்கள் பாதிப்படைந்ததனர்.
ஆனால், பெரும்பாலான கிராமப்புற பயனாளிகள், ஆதார் எடுக்கும் போது வழங்கப்பட்ட மொபைல் எண்கள் மாறிவிட்டதால் பலனடைய முடியாமல் போனது. பல ஏழை, மற்றும் பழங்குடி பெண்கள், குடும்ப தலைவரின் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளதாலும் ஓ.டி.பி., வராமல் சத்து மாவு வழங்க முடியவில்லை. இதனால், பழங்குடியின கர்ப்பிணி தாய்மார்கள்; குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு தீர்வு காண்பதில் சமூக நலத்துறையினர்; குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் போதுமான அக்கறை கொள்ளவில்லை…என்ற சூழல்கள் நிலவுகின்றன.
இந்த குழந்தை பிறப்பின் மூலமான தங்கம் என்பது ஏழை குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், இருக்கும் ஏழ்மைச் சூழலில் அது சேட்டு கடை அடமானத்திற்கு போகும். அல்லது அவசரத் தேவைக்கு விற்கப்பட்டுவிடும். அதற்கு பதிலாக அரசு மருத்துவமனைகளை தரப்படுத்தி, சுகமான இலவச பிரசவத்தை உறுதிபடுத்தினாலே கோடி புண்ணியமுண்டு. அத்துடன் குழந்தை பிறப்புக்கு முன்னும், பின்னும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து உணவுக்கு சரியான உத்திரவாதம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அதைவிட பிறந்த குழந்தைகள் நோஞ்சானாக இல்லாமல் ஆரோக்கியமாக வளர அங்கன்வாடி மையங்களை வலுப்படுத்த வேண்டும்.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply