நிர்மல்குமார் சொல்ல மறந்ததும், செந்தில் பாலாஜியின் பொய்களும்!

இன்னும் கூட நிறைய ஊழல்களை உடைத்து பேசியிருக்கலாம்!  ஷாக்கடிக்கும் உண்மைகளை சொல்லி இருக்கலாம். செந்தில் பாலாஜியின் அக்மார்க் பொய்களால் உண்மைகள் மறையாது. மின்சாரத் துறையின் நஷ்டங்களுக்கும், கடன்களுக்கும் பாஜக அரசின் உதய் மின் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தியதும் முக்கிய காரணமாகும்;

செந்தில் பாலாஜி எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்!

மிகப் பெரிய முறைகேடுகள், அதி பிரம்மாண்ட ஊழல்களை செய்தாலும் எந்த பதட்டமும் இல்லாமல் ,

எவ்வளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், குற்றவுணர்வில்லாமல்

மிக இயல்பாக பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிப்பார்.

திமுக அமைச்சர்களிலேயே ஈடு இணை சொல்ல முடியாத தில்லாலங்கடி பேர்வழி என்ற வகையில் தான் செந்தில் பாலாஜி திமுக குடும்பத்திற்கு திக்கஸ்டானார் !

தற்போதைய அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை, செந்தில் பாலாஜிக்கு தொல்லை அறிக்கையாகிவிடுமே என நான் எண்ணியது பெரும் பிழையே!

ஆனால், நம்ம செந்தில் பாலாஜியாரோ வழக்கம் போல சிம்பிளா அதற்கு எதிர்மாறான நேரேஷனை உண்டு, பண்ணி பிரமாதமாகச் சமாளித்து விட்டார்!

மின்சார வாரியத்தில் ஷாக் அடிக்கும் ஊழல்கள் என்று நான் தொடர்ந்து அறம் இதழில் பல கட்டுரைகள் எழுதி உள்ள வகையிலும், ஓய்வு பெற்ற மூத்த மின்சார வாரிய பொறியாளர் ஐயா S.காந்தி அவர்களிடமும், சி.ஐ.டி.யூ மின்சாரத் தொழிற்சங்கத்தின் துணைச் செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்களிடம் கலந்துரையாடிய வகையிலும் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

அந்த வகையில் செந்தில் பாலாஜியின் அக்மார்க் பொய்களை அம்பலபடுத்துகிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தி  திறன் 9,032  மெகாவாட் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாம்…!

தமிழக அரசு மின்வாரியத்தின் உற்பத்தி திறன் அதிகபட்சம் 1,500 ல் இருந்து 2,000 வாட் தான் அதிகரித்தது என்றால் கூட ஏற்கலாம். அவர் சொல்லும் நம்பர் மத்திய மின்வாரியத்தில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் பெறப்பட்டதாகும். தனியார் மின் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக உற்பத்தி செய்த மின்சாரத்தை  தனிப்பட்ட ஆதாயம் அடைய கூடுதல் விலை கொடுத்து வாங்கி இழப்பை ஏற்படுத்திவிட்டு  9,032 மெகாவாட் உற்பத்தி செய்துவிட்டதாக பீற்றுவதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும்.

இன்னொரு அக்மார்க் பொய்யை அடிச்சுவிடுகிறார், செந்தில் பாலாஜி!

வட சென்னை அனல் மின் நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம், கொல்லி மலை அனல் மின் நிலையம், குண்டாறு அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிவடைந்துள்ளன.

உண்மையில் வட சென்னை அனல் மின் நிலையம் அதிமுக ஆட்சியில் சுமார் எட்டாயிரம் கோடி பட்ஜெட்டில் துவங்கப்பட்டு , தவறான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டத்தில் தடைபட்டு, பிறகு திமுக ஆட்சி வந்து திறனற்ற செயல்பாடுகளால் இன்னும் முடியாமல் 20,000 கோடிக்கும் அதிகமாகிவிட்டது பிராஜக்ட். மற்றவையும் இந்த லட்சணம் தான் அரைகுறையாக நிற்கின்றன. உடன்குடியில் ஒரு பகுதி தயாராகி உள்ளது அவ்வளவே.

திமுக ஆட்சிக்கு வரும்போதே மின்சார வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. மின் துறையில் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வட்டி கட்டியுள்ளோம். அந்த தகவலை வெள்ளை அறிக்கையில் ஏன் வெளியிடவில்லை? மக்களிடம் உண்மையை மறைத்தது ஏன்? என்கிறார்.

இருந்த கடனை  2.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளீர்கள் என்பதோடு 1,82 ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளீர்கள் என்று சொல்லப்பட்டுதல்லவா? இந்த நஷ்டத்திற்குள் இந்த வட்டிப் பணமும் அடங்குகிறதே!

திமுக ஆட்சி காலத்தில் மின்வாரியத்தின் பற்றாகுறையை 34,000 ஆக குறைத்துள்ளோம். இவ்வளவு பெரிய கடன், இவ்வளவு பெரிய  நஷ்டம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல், மாநில அரசின் மக்கள் வரிப்பணத்தை  வாங்கி சமாளித்த வகையில் பற்றாக்குறையை குறைத்துக் காட்டுவதில் பெருமைப்பட என்ன உள்ளது ஐயா!

”எங்க ஆட்சி காலத்தில் தேர்வு எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 401 பேருக்கு  தான் நீங்க வேலை கொடுத்திருக்கீங்க’’ என்கிறார், செந்தில் பாலாஜி.

உண்மை தான் ஆகஸ்ட் மாதமே இவர்கள் தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.  ஏன் வேலை தராமல் நிறுத்தி வைத்தீர்கள்? வேலை தருவதற்கு முன்பு எப்படி பணம் வசூலித்துக் கொண்டு தரலாம் என்ற திட்டமிடலிலேயே காலம் தள்ளிப் போனதா? போக்குவரத்து துறையில் பணம் வாங்கிக் கொண்டு வேலை தந்த வகையில் பிடிபட்டுத் தானே சிறைக்கு போனீர்! எனில், மாட்டிக் கொள்ளாமல்  கையூட்டு வாங்குவதற்கான யோசனையிலேயே காலம் கடந்து போய்விட்டது. 65,921 பணியிடங்கள் காலியாக இருக்க, திமுக ஆட்சிக்காலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்…என்பது எவ்வளவு பெரிய அவலம்!

அதே சமயம் தவெகவினர் ஆட்சி பொறுப்பேற்ற 40 நாட்களில் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்ட பணி நியமனத்தை நடத்தியதோடு இந்த ஆண்டே 20,000 பணியிடங்களை நிரப்புவோம் என்பது உண்மையிலேயே மின்சாரத் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திடும்.

”தொழிலாளர்கள் பணிச்சுமை காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர் என்பது மட்டுமின்றி, கூடுதல் பணிச் சுமையும், அவசர அழைப்புகளை ஏற்று ஓய்வின்றி பணி செய்த வகையிலும் மின் விபத்துக்களில் கேங்க் மேன்கள் மட்டுமே 87 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் வேறு வகைகளில் மின் கம்பங்களில் ஏறி பழுது செய்ய அனுபவமில்லாத காண்டிராக்ட் ஊழியர்களை நிர்பந்தித்த வகையில் இறக்க நேரிட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. இவை தவிர இந்த விபத்துக்களில் உயிர்தப்பினாலும் கை,கால்கள் விளங்காமல் நடைபிணமானவர்கள் ஏராளம். ஆக, தவெக ஆட்சி, பணியிடங்களை நிரப்புவோம் என்பது தொழிற்சங்கத்திற்கெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது” என்கிறது, சி.ஐடி.யு தொழிற்சங்கம்.

மின்சாரத் துறையில் ஜெனரேசன் செக்‌ஷனுக்கு காண்டிராக்டர் லேபர்ஸ் அனுப்புவதில் நடக்கும் மெகா ஊழல்களை களைய வேண்டும். 300 ஊழியர்கள் அனுப்ப வேண்டும் என்றால், 200 பேரை அனுப்பிவிட்டு 300 அனுப்பியதாக கணக்கு காட்டி அடிக்கும் கொள்ளைகளை களைய வேண்டும். காண்டிராக்டர்கள் சிண்டிகேட் என்பது ரொம்ப பவர்புல்லானது. அது ஒரு மாபியா கூட்டம் என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர். தற்காலிக ஊழியர்களை மின்சார வாரியமே நேரடியாக வேலைக்கு அமர்த்தினால் உழைப்பு  சுரண்டல் முடிவுக்கு வரும்.

”மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்…’’ என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

குறுகிய கால காண்டிராக்டோ, நீண்டகால காண்டிராக்டோ வெளியில் இருந்து மின்சாரம் வாங்காமல் தவிர்த்தால், 215 கோடியல்ல, பல்லாயிரம் கோடிகள் சேமிக்கப்படும். மின்வாரியத்தின் கடனைக் குறைக்கவும், நஷடத்தை தவிர்க்கவுமான ஒரே வழிமுறை சுயமாக மின் உற்பத்தி செய்வது தான். இதற்கு தடையாக உள்ள மத்திய அரசின் மின்சார சட்டம். அது தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கு என நிர்பந்திக்கிறது. இதன்படி சோலார் மின் உற்பத்திக்காக அதானிக்கு 20,000 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்து அவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது திமுக அரசு.

”தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசின் உதய் திட்டம் நிர்பந்திக்கிறது. இதனால் ”நான் உயிரோடு இருக்கும் வரை உதய்  மின் திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன்” என்று உறுதி காட்டினார் ஜெயலலிதா.  தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் தமிழக அரசின் மின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வெறும் 20 சதவிகிதமே! ”தமிழ்நாடு அரசு இனி மின் உற்பத்தியில் ஈடுபட கூடாது” என மத்திய அரசின் உதய் மின் திட்டம் நெருக்கடி தருகிறது. தனியாரிடம் தான் மின்சாரம் கொள்முதல் செய்தாக வேண்டும் என்பதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்.

தமிழக அரசுக்கு சொந்தமான நவீன அனல் மின் நிலையங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவு ஆறு ரூபாய்க்குள் தான்! ஆனால், தனியாரிடமோ ரூபாய்  ஏழில் இருந்து 26 ரூபாய் வரை மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது, தமிழக அரசு! ஏன் இவ்வளவு அதிக விலைக்கு வாங்க வேண்டும்..? ஆறு ரூபாய் கூட ஏற்கலாம். ஆனால், 12,16,21,26  என ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு விலைக்கு ஏன் வாங்க வேண்டும் என்றால், டிமாண்டைப் பொறுத்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இஷ்டத்திற்கு விலை ஏற்றிக் கொள்ள மத்திய அரசின் சட்டம் இடம் கொடுக்கிறது.இதற்கு திமுக அரசு முழுதாக உடன்பட்டது தான் நஷ்டத்திற்கு காரணமாகும்” என்கிறார், ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர்  சா.காந்தி

மூத்த பொறியாளர் சா.காந்தி

மின் துறை செயல்பாடுகள் இனி வெளிப்படை தன்மையுடன் இருக்கும். மின்வாரியத்தை மீட்டெடுக்க வேண்டும். தற்போது கடன் வாங்காமல் நிலைமையை சமாளிக்க முடியாது.ஆயினும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. தமிழகத்தின் மின்சேமிப்பு திறனை அதிகரிப்போம். திமுக 50 ஆண்டுகளாக விஞ்ஞான ஊழல் செய்தனர். அதையும் கண்டுபிடிப்போம்.” எனச் சொல்லி உள்ளார் அமைச்சர் நிர்மல்குமார்.

டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் பொருட்கள் கொள்முதலில் 30 முதல் 40 சதவிகிதம் மார்கெட் மதிப்பைவிட அதிகம் விலை கொடுத்து வாங்கி நஷ்டம் காட்டியுள்ளதாக சொல்லி, நாங்கள் இந்த முறைகேட்டை தவிர்த்து, பணத்தை மிச்சப்படுத்துவோம் என்கிறார், அமைச்சர் நிர்மல்குமார்.

மகிழ்ச்சி. நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்கள் பலவற்றை இன்னும் நீங்கள் கண்டடைய வேண்டும். மின்சார வாரியத்தை  தடை இல்லா சேவை கொண்டதாகவும், லாபகரமானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time