அரசியல் ஈடுபாட்டில் சோவுக்கும்,ரஜினிக்கும் ஒரே மன நிலை தான்!

சாவித்திரி கண்ணன்

ரஜினி ஆஸ்பீடலைஸ்டு ஆனதற்கு அவரை அரசியலுக்கு வருமாறு நிர்பந்தித்து வருவது தான் காரணமாக இருக்கலாம் என நான் யூகிக்கிறேன்!

டிசம்பர் 31 நெருங்க, நெருங்க அவரை பதற்றம் தொற்றத் தொடங்கி, அது அவரை மன உலைச்சல், ரத்த அழுத்தம் ஆகியவற்றில் தள்ளிவிட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்!

கொரானா காலகட்டம் முழுவதும் தன்னை தனிமைப்படுத்தி தற்காத்துக் கொண்டவர் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார் என்றால், அது சினிமா மீது அவருக்கு இருக்கும் அளவற்ற பற்றைத் தான் உணர்த்துகிறது! ஏனெனில், அவர் சினிமா ஒன்றைத் தான் உயிர்மூச்சாக நேசிக்கிறார். அதனால் தான் உயிருக்கு ’ரிஸ்க்’ எடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்! ஆயினும், அங்கு கொரானாவின் தாக்கம் படப்பிடிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது! எனவே, மீண்டும் எப்போது அதை ஆரம்பிப்பது, முடிப்பது என்று தெரியாத நிலையில் அரசியல் கட்சி தொடங்கியாக வேண்டிய கெடுவை நினைத்துப் பார்க்கும் போது, அது அவர் ஒரு நெருக்கடியாகத் தான் உணர்ந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்!

அவருக்கு அரசியலில் விருப்பம் இருந்திருந்தால்,அவர் இவ்வளவு காலத்தை கடத்தி இருப்பாரா..? என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ஈடுபாடு என்பதை ஒருவருக்கு நிர்பந்தித்து உருவாக்க முடியாது. அது மிகுந்த ’வில் பவர்’ உள்ளவர்களால் மட்டுமே சாதிக்க முடிந்ததாகும்! அதற்கான பெருநெருப்பு நெஞ்சில் கழன்று எரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களை தடுத்தால் கூட மீறி வந்தே தீருவார்கள்! எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோருக்கு அது இருந்ததால் தான் வந்தார்கள்!

ஒருவரை நிர்பந்தித்து அரசியலுக்கு இழுத்து வரமுடியாது என்பதற்கு சோவே ஒரு உதாரணமாகும்! சோ ஜனதா கட்சியில் இருந்த காலத்தில் அவரை தமிழக ஜனதா தலைவராக்க வேண்டும் என மொரார்ஜி விரும்பினார். அதில் சோ சாருக்கு விருப்பமில்லை. ’’அப்படியானால், அரசியல் பற்றி இவ்வளவு நியாயம் பேசுகிறாய். ஆனால், அதில் இறங்கி சேவை செய்யக் கிடைக்கும் வாய்ப்பை புறம் தள்ளுகிறாய்..’’ என்று அவரது நண்பர்கள் பலர் அவரை இடித்துரைத்தனர்.

’’அரசியல் குறித்த விமர்சனம் என்பது வேறு, அரசியலில் நேரடியாக நாளும்,பொழுதும் ஈடுபடுவது என்பது வேறு! எனக்கு அரசியலில் ஈடுபடக்கூடிய மன நிலை இல்லை.  அது பலரோடு ஒத்திசைந்து வேலை வாங்கக் கூடிய கலையாகும். எனக்கு மற்றவர்கள் டிக்டேட் செய்வதோ, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதோ முடியாதாகும். அப்புறம் கட்சி நடத்த தொழில் அதிபர்கள் சிலரிடம் பணம் வாங்க வேண்டும்.அதற்கு அவர்களுக்கு ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வேண்டும். அப்புறம் எந்த நேரமும் நம்மை சூழ்ந்து கொண்டு பத்து பேர் இருப்பான். நான் சுதந்திரமாக இருக்க முடியாது. ஆகவே, இதெல்லாம் எனக்கு ஒத்துவராது’’ என்று சொல்லிவிட்டார். ஆனால், யாரும் கேட்டால் தானே.., மீண்டும், மீண்டும் அவருக்கு நிர்பந்தம் தரப்படவே, அவரும் விருப்பமில்லாமல் ’சரி ஒத்துக் கொள்கிறேன்’ என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது.

அதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடக்க, நடக்க இவருக்கு பதற்றம் அதிகரித்தது. ஏனென்றால்,அப்போது தான், அவர் வரக்கூடாது என்பதற்காக ஒரு எதிர்கூட்டம் அவருக்கு எதிராக வன்மமாக இயங்குவது அவருக்கு தெரிய வந்தது. அதில் சமீப காலம் வரை அவரிடம் நன்கு பழகியவர்களும் இருந்தனர். அது அவருக்கு மிகுந்த மன உலைச்சலை தந்தது. அப்போது தான் அரசியல் என்பது வெளி எதிரிகளை விடவும் உள்ளுக்குள் அருகிலேயே இருக்கும் எதிரிகளை சதா சர்வகாலமும் எதிர்கொள்ள வேண்டிய மகத்தான கலை என்பது சோவுக்கு புரிய வந்தது! இதில் தன்னைப் போல ஒரு, எழுத்தாளன், கலைஞன் தாக்குபிடிப்பது சுலபமில்லை என்பதை உணர்ந்தார். ஆகவே வாக்கு கொடுத்த நாள் வரும் போது அவர் பிடிவாதமாக தன்னை அதிலிருந்து விலக்கிக் கொண்டார். இது அவருக்காக களமாடிய அரசியல் நண்பர்களை ரொம்பவுமே பாதித்தது! ஆனால், அப்படி அவர்களின் நெருக்குதலுக்காக நான் அரசியலுக்கு போயிருந்தால் அவர்களுக்கு இன்னும் கஷ்டத்தை தான் கொடுத்து நானும் மிகக் கசப்பான அனுபவங்களை பெற்று இருப்பேன். என்பதே அவர் நிலைபாடாக இருந்தது.

ரஜினியிடம் இதே மன நிலையைத் தான் சோ பார்த்தார். ஆகவே தான் ரஜினியை சோ ஒரே ஒரு முறை சொன்னதோடு சரி! அதாவது, 1996 ல் துக்ளக் சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பை அவரிடம் சொல்லி வர முடியுமா என்று கேட்டதோடு சரி! பிறகு எப்போதுமே அவரை அரசியலுக்கு நிர்பந்தித்தது இல்லை. தன்னை எப்படி யாரும் நிர்பந்திக்க கூடாது என்று விரும்பினாரோ.., அது போல ரஜினியை தானும் நிர்பந்திக்கக் கூடாது, மற்றவர்கள் நிர்பந்திக்க வலியுறுத்தினாலும் அதை செய்யக் கூடாது என்ற நிலையில் தான் அவரோடு பழகினார். அதனால் தான் ரஜினி எப்போதுமே தேடி வந்து அளவளாவி மனம்விட்டு அரட்டையடித்து செல்லும் இடமாக துக்ளக் அலுவலகம் இருந்தது. ஒளிவு மறைவற்ற – போலித்தனமில்லாத – நட்பு இருவருக்கிடையிலும் இருந்தது. ஒரு முறை ரஜினியே உணர்ச்சிவசப்பட்டு அரசியல் ஈடுபாடு காட்டிய போது கூட சோ அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்! அதை பிறிதொருமுறை சொல்கிறேன். சோ உயிரோடு இருந்திருப்பார் என்றால், ரஜினியை இந்த அரசியல் நிர்பந்தத்திலிருந்து அழகாக விடுவித்திருப்பார் என்பதே என் அனுமானம்!

ரஜினிகாந்தை வைத்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் கட்டமைக்கப்படுவதை நான் எப்போதுமே கடுமையாக எதிர்த்து வந்துள்ளேன். இதை நான் சோ அவர்களிடமும் கூறியுள்ளேன். அவரும் அப்படி ஒரு பிம்பம் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டதை விரும்பாதவர் என்பதை நடைமுறையாகவே கொண்டிருந்தார். இதையும் பிறிதொரு நேரம் சொல்வேன். இப்போதும் ரஜினியின் அரசியல் மீது நான் கடுமையான விமர்சனம் கொண்டவன் என்றபோதிலும், அவர் ஆஸ்பிடலைஸ்ட் ஆகியுள்ளது குறித்து மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை ஏற்படுகிறது என்பதை எனக்கு மறைக்கவும் விருப்பமில்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக நம்மை சந்தோஷப்படுத்திய கலைஞன் அல்லவா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time