தொண்டு நிறுவனங்களை துடைத்தெறியும் பாஜக அரசு!

ச.அருணாச்சலம்

ஏன் இத்தனை கெடுபிடிகள்? நிதி விவகாரங்களில் தவறு நடக்காமல் தடுப்பதை வரவேற்கலாம். ஆனால், நிதி உதவிகளையே தடுப்பது நியாயமாகுமா? வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவில் (FCRA) மதப் பார்வை எதற்கு? ஆர்.எஸ்.எஸுக்கு கணக்கு வழக்கில்லாமல் வெளி நாட்டு நிதி வருகிறதே..! இந்து மதம் முக்கியம், இந்திய மக்கள் முக்கியமில்லையா?

கடந்த மார்ச்சில் அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, FCRA திருத்த மசோதா!  இது பலத்த எதிர்ப்புக்களை சந்தித்த போதும், இத் திருத்தங்களை சட்டமாக்கி ஜூன் 22 ஒன்றிய அரசு அறிவித்துள்ளது .

எந்த நாட்டிலும், எந்தவொரு சமூகத்திலும் அங்கு வாழும் மக்களின் நலன்களை பேணுகின்ற செயலில் அரசு மட்டும் பங்கேற்பதில்லை. அச் சமூகங்களிலிருந்து தோன்றிய தன்னார்வ அமைப்புகளும்,சேவை மையங்களும், பலனை எதிர்நோக்கா தொண்டு நிறுவனங்களும் அப்பணியை அக்கறையுடன் நிறைவேற்றுகின்றன.

இவற்றை பொதுவாக அதிகாரம் சாரா அமைப்புகள்- சிவில் அமைப்புகள் – என அறிகிறோம். இத்தகைய சமூக அமைப்புகள் கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம், உரிமைகளை மீட்டு எடுப்பது மற்றும் அவற்றை பேணி பாதுகாப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் . இதன் மூலம் மக்களுக்கு கல்வியறிவை கொடுக்கின்றனர். பல்வேறு நிதி உதவிகளை செய்கின்றனர், மருத்துவ வசதிகளை, உதவிகளை வழங்குகின்றனர். உரிமைகளை பாதுகாக்கின்றனர். நல்லொழுக்கங்களையும் ஊட்டுகின்றனர்.

இவையாவும் அரசினால் செய்ய முடியாத சூழலில் – அரசின் உதவி பெற இயலாத மக்களுக்கு – இத்தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன! உலகெங்கிலும் உள்ள மதம் சார்ந்த தொண்டு நிறுவனங்கள், பண பலம் மிகுந்த பரோபகாரிகள், சுற்று சூழலை பேண விரும்பும் அமைப்புகள், இயற்கை சூழலை மீட்டெடுக்க விழையும் ஆர்வலர்கள் பெரும்பாலும் இத்தகைய தொண்டுகளுக்காக- கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கையை பேணுதல் ஆகிய துறைகளில்- நிதி உதவி செய்கின்றனர்.

ஆனால் ஆளும் கூட்டத்திற்கு எப்பொழுதுமே மக்களின் நலன்களை விட , தங்களின் அதிகாரத்தை பற்றிய அக்கரையே அதிகம். சேவை செய்பவர்கள் உண்மையில் மக்களின் அதிகாரபூர்வ சேவகனாக மாறி விட்டால் என்ன செய்வது? என்ற கவலை . இத்தகைய கவலை இந்த அமைப்புகளை சந்தேக கண்கொண்டு பார்க்கத் தூண்டுகிறது.

அதிகாரக் குவியல் ஒருமுனைப்படும் பொழுது இத்தகைய அச்சங்களும் ஆளும் கும்பலுக்கு அதிகமாக எழும். பிரதமர் இந்திராவின் அவசரநிலை பிரகடன காலத்தில் முதன்முதலில் இத்தகைய தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை-பங்களிப்பை- கட்டுப்படுத்த 1976_ல் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு உதவிகள் , சேவை என்ற போர்வையில் இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய அரசின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்ற “அச்ச உணர்வின்” வெளிப்பாடாக இச்சட்டம் அமலுக்கு வந்தது, ஊடகங்களுக்கு வெளிநாட்டினரின் உதவிகளையும் இச்சட்டம் கேள்விக்குள்ளாக்கியது. இச்சட்டம் எதிர்கட்சிகளை கட்டுப்படுத்தவும் , ஆட்சிக்கெதிராக பேசுபவர்களை ஒடுக்கவும் இந்திரா கொண்டுவந்த சட்டம் என அப்பொழுது அத்வானி, வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களால் கூறப்பட்டது. பல்வேறு நாளிதழ்களின் பதிப்பாளர்களும், ஆசிரியர்களும், பத்திரிக்கையாளர்களும் இதே கருத்தை கூறினர்.

இச் சட்டம் 2010-ல் முற்றிலுமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மாற்றியமைக்கப்பட்டு புதிய சட்டம் 2010 ல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தில் வெளிநாட்டு பங்களிப்பை பெறும் அமைப்புகளின் பதிவு காலத்தை ஐந்து ஆண்டுகளாக வரையறுத்தனர்! எந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு பங்களிப்பு கோரப்படுகிறது என்ற விவரத்தை அரசிடம் கூறி, அதற்கான முன் அனுமதியை அரசு சாரா நிறுவனங்கள் NGO பெற வேண்டும் என்று கூறியது! அடுத்து புதிய விதியை (section15) அறிமுகப்படுத்தி, தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆனாலோ, ரத்து செய்யப்பட்டாலோ, சரண்டர் செய்யப்பட்டாலோ, அப்பொழுது பங்களிப்பினால் ஏற்படுத்தப்பட்ட சொத்துக்கள் அரசு குறிப்பிடும் அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்பது சட்டமாக்கப்பட்டது. நிர்வாகச் செலவினங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இத்தகைய முறைப்படுத்தும் சட்டத்திற்கு அப்பொழுது மிகப்பெரிய எதிர்ப்போ கண்டனமோ எழவில்லை. காரணம், இச்சட்டம் சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை குறி வைக்கவில்லை.

ஆனால், இவை போதாது என்று பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்தை 2020-ல் கடுமையான மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மோடி அரசு . திருத்தி அமைத்தது. இதன் மூலம் அனைத்து வெளிநாட்டு பங்களிப்பையும் புது தில்லியில் உள்ள SBI ஸ்டேட் பாங்கு கிளையின் மூலமாகவே வரவு வைக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டது.

உதவி பெற்ற நிதியை பிற அமைப்புகளுக்கு – அவர்கள் சட்டபடியான FCRA அனுமதி பெற்றிருந்தாலும் – மாற்ற தடை விதிக்கப்பட்டது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் நிருவாகிகள் ஆதார் ஐடி வேண்டுமென்றும், நிர்வாகச் செலவினத்தை 50%லிருந்து 20% ஆக குறைத்தும் மாற்றப்பட்டது. இதை தற்போது இன்னும் குறைத்து 10 சதவிகிதமாக்கியுள்ளனர்.

சிறுபான்மையினரான கிறித்துவர்கள் முன்னின்று நடத்தும் கல்வி கூடங்கள், தொண்டு அமைப்புகள், அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு அமைப்புகளின் நிதி உதவிக்கு இச்சட்ட திருத்தத்தின் மூலம் தடை போடப்பட்டது

 வெளிநாட்டு நிதி உதவியை முற்றிலும் தடுக்க இதன் மூலம் பா ஜ க அரசு முயன்றது. வெளிநாட்டினரின் பங்களிப்பை சந்தேகிக்கிறார்கள் என்றால், அனைத்து வெளிநாட்டு நிதி பங்களிப்பையும் அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு கலாச்சார அமைப்பு, தொண்டு நிறுவனம் என கூறிக் கொண்டு ஏராளமான வெளிநாட்டு உதவிகளை பெறும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் RSS பற்றியோ, அவர்கள் எந்த அரசு அமைப்பிடமும் அனுமதி பெறாததை பற்றியோ, வாயை திறக்கவில்லை.

குறைந்த பட்சம் ஆர் எஸ் எஸ் அமைப்பு எந்த மாநிலத்திலும் தன்னை ஒரு அமைப்பாகவும் பதிவு செய்யாமல் , தனது வருமான கணக்கினை ஒன்றிய அரசின் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்காமல் இருப்பது சட்டத்திற்கு  புறம்பானதில்லையா? என்ற கேள்வியை இந்த அரசு கேட்காது. ஏனெனில், சிறுபான்மையினரை வெறுத்து ஓரங்கட்டி, இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்த இந்திய சட்டங்களை ஒரு ஆயுதமாக்கிக் கொள்கிறது பாஜக அரசு!

நன்றி; ஜனசக்தி

கோவிட் பெருந்தொற்று காலத்தில் எந்தவித ஆலோசனையும் விவாதமும் இல்லாமல் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட இத்தகைய ஓரவஞ்சனை மிகுந்த திருத்த சட்டத்தை சிவில் சமூகமும் எதிர்கட்சியினரும் சிறுபான்மை மக்களும் எதிர்த்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் இச்சட்ட திருத்தத்தை சட்டரீதியாக செல்லுபடியாகும் என 2022ல் ( நோயல் ஹார்ப்பர் vs இந்திய அரசு. வழக்கில்) தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவாக , “ஒரு நாட்டின் தேசீய அரசியலை , வெளி நாட்டினரின் பங்களிப்பு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது” என்ற கருத்தை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன என்பதால், அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக விதிப்பது ஏற்புடையதே என்று நீதிபதி கான்வில்கர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள 2026 வெளிநாட்டு பங்களிப்பு(ஒழுங்குமுறை) திருத்த சட்டம் மேற்கூறிய தீர்ப்பை ஒட்டியே மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை கையிலெடுத்துள்ளது.

நன்றி; OP India

ஏறத்தாழ 16,000 அமைப்புகள் (associations) FCRA சட்ட வரைவிற்குள் இந்தியாவில் இன்று இயங்குகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக பெற்ற நிதி உதவியின் அளவு சுமார் 22,000 கோடிகளாகும். இத்தகைய திருத்தங்களால் 2026 மார்ச் மாதம் வரை 21,993 அமைப்புகள் தங்களது FCRA பதிவை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ல் 40,000 NGOs வெளிநாட்டு நிதி பெறத்தகுதியாக இருந்த நிலை மாறி இப்பொழுது 16,000 அமைப்புகளே வெளிநாட்டு நிதி பெறத்தகுதி உள்ளவை என அரசு கூறுகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதற்கு அதன் நிர்வாகிகள், ஊழியர்களை மட்டும் பொறுப்பு ஆக்காமல் இந்த நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள அத்தனை பேரையும் குற்றவாளியாக்குவோம் என்கிறது சட்டம்.

இத்தகைய கடுமையான கண்காணிப்பு ஒரு தலைபட்சமாக கிறித்துவ அமைப்புகள் மீதே நடக்கிறது . இந்துக்களின் அமைப்பை இந்த மோடி அரசு கண்டு கொள்வதில்லை. கணக்கே கேட்பதில்லை!

இந்த நிலையில் 2026 -ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் III A(3 A) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி FCRA பதிவு பெற்ற ஒரு அமைப்பு தனது பதிவை புதுப்பிக்காவிட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அல்லது சரண்டர் செய்யப்பட்டாலோ அதன் சொத்துக்கள் மற்றும் உடமைகள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள தற்காலிக குழுவின் பிடிக்குள் சென்றுவிடும் . அவ்வாறு சென்றுவிட்டால் உரிய காலத்திற்குள் லைசன்ஸ் புதுப்பிக்கபடாவிட்டால் அச்சொத்துக்கள் நிரந்தரமாக அரசு வசம் ஆகிவிடும் . அரசிற்கு அதை மாற்றவோ விற்கவோ மடைமாற்றவோ முழு உரிமை பெறுகிறது.

இது தவிர, ஐந்தாண்டுக்கொருமுறை உரிமம் புதுப்பிக்க பட வேண்டும் என விதி கூறுவதால் அரசு புதுப்பிக்க அனுமதி மறுத்தாலும் இச் சொத்துக்கள் அரசின் பிடிக்குள் சென்று விடும். அனைத்த்து அமைப்புகளும் எந்தெந்த மாநிலங்களில் வேலை செய்கின்றனவோ அந்தந்த மாநிலங்களில் தனத்தனியாக உரிமமும், அனுமதியும் பெற வேண்டும். எந்த நோக்கத்திற்காக நிதி உதவி பெறப்பட்டதோ அதை தவிர பிற இனங்களுக்கு அவற்றை உபயோகிக்க கூடாது.

மேலும் உரிமங்களை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு வெளிப்படையாக செயல்படுவதில்லை. என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்படுகிறது என்ற காரணமும் தெரிவிக்கப்படுவதில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளிக்க அமைச்சகம் மறுத்துள்ளது. இத்தகைய வெளிப்படைதன்மையற்ற அரசின் செயல்பாடு தொண்டு நிறுவனங்களை மேலும் வதைக்கின்ற செயலாகும்.

இத்தகைய வழிமுறைகள் சிறுபான்மை சமூகமான கிறித்துவ மக்கள் நடத்தும் மருத்துவமனைகள்,கல்விக்கூடங்கள் ஆகிவற்றை குறி வைக்கின்றன என்பது வெறும் குற்றச்சாட்டல்ல , நூறு சதவிகிதம் உண்மை. மோடி அரசு தான் விரும்பாத, சிறுபான்மை மக்களின் அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்கள் மருத்துவ மனைகள் ஆகியவற்றிற்கு எந்த நேரத்திலும் உரிமை மறுத்து அவற்றை அரசு கையகப்படுத்தும் அபாயம் ஏராளம் உள்ளது.

எழபத்தைந்து ஆண்டுகளாக, இந்தியாவின் மூலை முடுக்குகளில் கூட கல்வியை பரப்பியதில் கிறித்தவர்களின் பங்கு – கிறித்துவ மிஷனரிகளின் பங்கு – அளப்பரியது. ஆனால் அவர்களது பங்கை மறுத்து, ’’அவர்கள் மதத்தை பரப்பியவர்கள்’’ என்றும், ’’இந்து மதத்தை ஒழிக்கிறார்கள்’’ என்றும் சங்கப்பரிவாரங்கள் வசை பாடுகின்றனர்.

இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்க வக்ஃபு வாரியச்சட்டம் , அவர்களது வாழ்முறைகளை சீர்குலைக்க ஒரே மாதிரியான சிவில் சட்டம் UCC என்ற முன்னெடுப்புகளை அடுத்து பிறிதொரு சிறுபான்மையினரான கிறித்துவர்களை அடக்கி ஒடுக்க, இந்த வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.

இது ஒருதலைபட்சமானது என்பது ஊருக்கெல்லாம் தெரிந்த இரகசியமாகும். அதற்கு எடுத்துகாட்டாக,ஆர் எஸ் எஸ் அமைப்பு இயங்கும் விதம், அதன் நடைமுறை அதனுடைய பண பலம் அதிகார பலம் , அரசு கொடுக்கும் அதீத பாதுகாப்பு மற்றும் ஆதரவு மூலம் நாமறியலாம்.

இது காழ்ப்புணர்ச்சியால் கூறப்படும் குற்றச்சாட்டு அல்ல.

இந்திய இறையாண்மைக்கு வெளிநாட்டினரின் நிதி மூலம் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று நினைப்பதில் தவறில்லை. அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டால் அச்சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்,நடைமுறைபடுத்த வேண்டும். இந்திய நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் அரசிடம் பதிவோ,உரிம்மோ,அனுமதியோ பெற்றிருக்க வேண்டும்.

அவற்றினுடைய வரவு செலவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், வருமான வரித்துறையிடம் முறையான சான்றும் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. இவை யாவும் இந்தியாவில் இயங்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு பொருந்துமா? அல்லது பொருந்தாதா?

இந்த கேள்வியை கர்நாடக உள்துறை அமைச்சர் பிரயங் கார்கே, ஆர் எஸ் எஸ் அமைப்பின் மோகன் பாகவத்தை நோக்கி கேட்டுள்ளார். கடந்த 13_ந்தேதி அவர் (ஜூன்13,2026) ஆர்ர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ’’ஆர் எஸ எஸ்., ஏன் இதுகாறும் தன்னை பதிவு செய்து கொள்ளவில்லை? அமைப்பின் வரவு செலவு கணக்கை ஏன் தாக்கல் செய்யவில்லை? எந்த மாநில அரசிடமும் ஏன் அனுமதி பெற வில்லை ? ஏன் உங்களது நிதி வருமானம் , அதன் மூலம் (source) ஆகியவை பொதுவெளியில் வைக்கப்படவில்லை? அப்படியானால் இந்திய அரசியல் சட்டவிதிகள் உங்கள் அமைப்பிற்கு பொருந்தாதா? இந்திய அரசியல் சட்டத்தின் மீது உங்களை போன்றோருக்கு பற்றில்லையா? இனிமேலும் தாமதிக்காமல் உங்கள் அமைப்பை பதிவு (register) செய்க, உரிய வரியை செலுத்துக, விதிகளையும் அரசியல் சாசன நடைமுறைகளையும் பின்பற்றுக என அக்கடிதத்தில் கேட்டுள்ளார்.

நூறாண்டுகளை கடந்ததாக பெருமை பேசிக்கொள்ளும் ஆர் எஸ் எஸ் அமைப்பு நாடு முழுவதும் 60,000 ஷகாக்களை (கிளை கூட்டங்களை) யும், கர்நாடகாவில் மட்டும் 4,127 தினசரி கிளைக்கூட்டங்களையும் வாரந்தோறும் 1,389 மிலன் கூட்டங்களையும், 60 மாதாந்திர மாநாடுகளையும் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பு 19.61 லட்சம் நபர்கள் பங்கு கொள்ளும் சமஜோட்சவாக்களை நடத்தும் வலு கொண்ட ஆர்எஸ்எஸ்,562 ரூட் மார்ச்சஸ் (தடப் பேரணிகள்) நடத்தும் உங்களது அமைப்பு சட்ட ரீதியாக உங்களது பதிவு விவரங்களை , (legal status registration, Office bearers, funding, expenses, taxation and permission for your public activities) வரவு செலவினங்களை, வரி செலுத்திய கணக்கை, பொதுவிடங்களில் நீங்கள் நடத்தும் செயல்களுக்கான அரசின் அனுமதி ஆகியவற்றை ஏன் வெளியிடவில்லை? அதை உடனடியாக வெளியிடுமாறு பிரியங் கார்கே கேட்டுள்ளார்.

இந்த கடித்ததை தான் பொருட்படுத்தவில்லை என்று கூறி இதற்கு பதிலளிக்க மோகன் பகவத் மறுத்துவிட்டார். எங்கள் அமைப்பு பற்றி இந்திய அரசுக்கு தெரியும், நாங்கள் ரகசிய கூட்டம் நடத்தவில்லை, வெளிப்படையாக அரங்குகளில்தான் கூட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் இந்து தர்மம் (மதம்) தன்னை பதிவு செய்துள்ளதா ? என்று கேட்டுள்ளார். இந்து மத்த்தையும் ஆர் எஸ் எஸ் அமைப்பையும் ஒன்றாக பாவிக்கும் மோகன் பாகவத்தின் தலைக்கனத்தை என்னவென்பது?

இரண்டாயிரத்து ஐநூறு (2,500) அமைப்புகளுக்கு மேல் தன் வளையத்திற்குள் வைத்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மத்திய கூறுகளாக இருக்கும் அமைப்புகள் பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரிஷத் VHP, வனவாசி கல்யாண் அமைப்பு,சேவா பாரதி , அகில இந்திய வித்யா பரிஷத் போன்ற அமைப்புக்கள் தான் . இவைகளை சுற்றி சுற்றி வளையங்களாக பல அமைப்புகள் பின்னப்பட்டுள்ளன. இவர்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள IDRF India Development and Relief Fund என்ற அமைப்பும் Support a Child என்ற அமைப்பும் அமெரிக்காவில் இயங்குகின்றன.

இது போன்று அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு இந்து சமய அமைப்புகள் உள்ளன. போதாக்குறைக்கு இந்தியாவில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையும் அதன் பெரும்பணமும் உள்ளன. ஆனால் எதற்குமே கணக்கு காட்டாமல் பொறுப்பு எடுக்காமல் எகத்தாளம் செய்யும் ஆர் எஸ் எஸ் அமைப்பு வெறும் கலாச்சார அமைப்பா அல்லது ஊழலின் ஊற்றுக் கண்ணா?

ச.அருணாச்சலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time