சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டு காலத்திற்குள்ளேயே பாராளுமன்றமும், சட்டமன்றமும் அதிகாரங்களை இழக்க ஆரம்பித்து விட்டன. இன்று சட்டமன்றம் ஒரு சடங்காக்கப்பட்டு விட்டது. அதிகாரங்கள் அனைத்தும் அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் சென்று விட்டன; நாம் செய்கின்ற பிழை என்ன? அலசுகிறார், பேராசிரியர் பழனித்துரை;
“நவீனகால மக்களாட்சி” என்ற புத்தகத்தை லார்டு பிரைஸ் எழுதும்போது “சட்டமன்ற வீழ்ச்சி” என உலகத்தில் பல நாடுகளில் சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் வீழ்ச்சியடைவதை படம் பிடித்துக் காட்டினார்.
அதேபோல் கே.சி.வியர் “சட்டமன்றம்” என்ற நூலில் ஒன்பதாவது அத்தியாயமாக “சட்டமன்ற வீழ்ச்சி’’ என்ற தலைப்பில் அன்றே ஒரு அத்தியாயத்தை எழுதி உலகக் கவனத்தை ஈர்த்தார்.
சட்டம் இயற்றுகின்ற எந்த மன்றமும் சட்டமன்றம் என்ற சொல்லுக்கு பொருந்தும். ஆகவே நாளுமன்றத்தையும் பொதுவாக சட்டமன்றம் எனச் சொல்வது உலக இயல்பாகும்.
கூட்டாட்சி செயல்படுகின்ற நாடுகளில் மாநில சட்டமன்றங்களும், தேசிய நாடாளுமன்றமும் ஒன்று போல் தான் இயங்குகிறது. அதிகாரங்களை கையாள்வதில் ஒன்று அதிகமான அதிகாரங்களைப் பெற்றிருக்கும் மற்றொன்று குறைவான அதிகாரங்களைப் பெற்றிருக்கும். அரசமைப்புச் சாசனத்தில் ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து செயல்படும் போது ஒரே சமூகத்திலிருந்து தான் இரண்டு அமைப்புக்களுக்கும் உறுப்பினர்கள் செல்கின்றனர். எனவே, அங்கு சமூகத்தில் இருக்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு ஏற்ப மன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்ற அடிப்படையில் இரண்டையும் ஒன்றாகவே ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாராளுமன்ற மக்களாட்சி முறையை உலகில் கொண்டு வர பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அறிஞர்கள் எடுத்த முயற்சி அசாதாரணமானது. அப்படி அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இன்னும் தொடர்ந்து விரிவுபட்டுக் கொண்டேயிருக்கிறது .
அந்த மக்களாட்சி என்பது மேற்கத்திய மக்களாட்சி முறை. புதிதாக இதை கடைபிடிக்க வரும் நாடுகள் வெவ்வேறு முறைகளில் அதை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளிலேயே அந்த முறை தொய்வடைந்து வருகிறது. அங்கும் மக்களாட்சி உயர்வதும், தாழ்வதும் நடந்து கொண்டுள்ளது. தாழ்கின்ற போது, அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன, மேற்கத்திய நாடுகள்.
அந்த ஆய்வுத் தன்மை அறிவுத் தன்மை, உண்மைத் தன்மையான அணுகுமுறை நம் நாட்டில் நடைபெறுவதில்லை என்பது தான் நாம் எதிர் கொள்ளும் சவால். நம்மிடம் இருந்த மக்களாட்சியை நாம் ஆய்வு செய்வதில்லை. இவற்றையும் கடந்து இயல்பாக நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. காரணம், நாம் பல நூறு ஆண்டுகாலம் அடிமையாக வாழ்ந்தது தான்.
உலகத்திற்கு வழிகாட்டும் மக்களாட்சி நம் நாட்டிலும் ஒரு காலத்தில் செயல்பட்டுள்ளது என்பதை உத்திரமேரூர் கல்வெட்டில் புரிந்துகொள்ள முடியும். இருந்த போதும் மேற்கத்திய மக்களாட்சி முறை தான் உயர்ந்தது என்ற சிந்தனையில் அனைத்தையும் பார்க்கும் உளவியலில் நாம் உள்ளோம்.
இந்த இடத்தில் தான் வெள்ளைய அறிஞர்கள் வித்தியாசப்படுகிறார்கள். நாம் எதையும் புகழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். எதிலும் இருக்கக் கூடிய நிறைகுறைகளை உண்மைத் தன்மையில் பார்க்கக்கூடிய கண்ணோட்டம் நமக்குக் கிடையாது. அதன் விளைவு தான் எதையும் அறிவுப் பின்புலத்தில் பார்ப்பதை விட அரசியல் பின்புலத்தில் பார்த்து புகழ்வதையும், இகழ்வதையும் நம் செயலாக வைத்திருக்கிறோமேயன்றி, அறிவார்ந்து கருத்துக் கூறுவதில்லை.

சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டில் சட்டமன்றங்களை உருவாக்கிய போது, மேற்கத்திய நாட்டில் சட்டமன்ற வீழ்ச்சி குறித்து விவாதித்து வந்தனர். அது ஒரு பெரும் அறிவார்ந்த வாதம். அந்த விவாதம் இன்று நமக்குப் பொருந்துவதால் இதை இங்கு எழுதுகிறேன்.
மேற்கத்திய நாடுகளில் சட்டமன்றங்கள் தன் அதிகாரத்தையும், அதன் செயல்பாட்டில் உள்ள திறனையும் இழக்கும் போது இதன் விளைவு என்ன? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதில்; எப்பொழுது சட்டமன்றங்கள் தன் அதிகாரத்தை இழக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் எதேச்சதிகாரம் மேலோங்குகிறது. அதற்கு அதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பு அமைச்சரவைக்கு கிடைக்கிறது. எனவே, அமைச்சர்களின் எதேச்சதிகாரம் மட்டுமல்ல, நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் எதேச்சதிகாரமும் மேலோங்குகிறது. இதன் விளைவாக சட்ட மன்றங்களின் செயல்பாடுகள் சடங்குகளாக மாற்றப்படுகின்றன. அப்படி அதிகாரத்தை இழந்து செயல்படுகின்றபோதும், சட்டமன்றத்திற்குள் இடம் பெற நடைபெறும் தேர்தலின் உக்கிரம் குறையவில்லை. அந்தப் பதவிகளைப் பிடிப்பதற்கு செலவிடும் நிதி பலரை வியக்க வைக்கிறது.
சட்டமன்றங்கள் தாழ்வதன் காரணங்களை ஆய்வு செய்கின்ற போது ஒன்று சட்டமன்றங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் மிகவும் நிபுணத்துவம் கொண்டதாக இருக்கின்றது. அவற்றை மன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றார்கள். ஆகையால் தான் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தப் பணிகளை நிபுணத்துவத்துடன் செய்வதை சட்டமன்றச் செயல்பாடுகளில் பார்க்க முடியவில்லை. அந்தப் பணிகளை, அதிகாரிகளும், அமைச்சர்கள் மட்டுமே பார்க்க வேண்டி இருக்கிறது. அமைச்சர்களும் கூட அதிகாரிகளையே நம்புகின்றனர்.
அதன் விளைவாக அதிகாரிகள் தயாரித்து அமைச்சர்கள் மூலம் கொண்டு வரும் கொள்கைகளை, முடிவுகளை, சட்டங்களை, திட்டங்களை, உண்மைத் தன்மையில் ஆராய்ந்து அலசி கருத்துக்களைக் கூறுவதற்குப் பதில் கட்சியின் கண்ணோட்டத்தில் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பார்த்து, உறுப்பினர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும், அதற்காக தலைவரை துதி பாடுவதும், எதிர்க்கட்சியாக இருந்தால் அதை எதிர்ப்பதும் ஆளும்கட்சியை ஏசுவதும் இயல்பாக மாறி சட்டமன்றத்தின் அடிப்படைத் தன்மையே அதன் இயல்பிலிருந்துமாற்றம் பெற்று விடுகிறது. இது உலகில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற செயல்பாடுகள்.

இந்தச் சூழலில் தான் சடங்காக சட்டமன்றங்களை நடத்துவதற்குப் பதில் நாட்களைக் குறைத்து முடிவுகளுக்கு முத்திரை குத்தும் இடமாக பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் மாற்றி விட்டனர். இதில் நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அறிவுபூர்வமாக செயல்படுவதற்குப் பதில், சட்டமன்றத்திற்கு வெளியில் நடத்த வேண்டிய நிகழ்வுகளை பாராளுமன்றத்திற்குள்ளும் சட்டமன்றத்திற்குள்ளும் நடத்தும் போது ஒட்டு மொத்த மக்களாட்சியையே கேள்விக் கூத்தாக்குவது என்ற காரணத்தால், சட்டமன்ற பாராளுமன்ற செயல்பாட்டு நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக சட்டமன்றத்தின் மீது உள்ள ஈர்ப்பு மக்களுக்கு குறைந்து விடுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பாராளுமன்ற சட்டமன்றங்களில் செயல்பாடுகளை தொலைக்காட்சி மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு வந்த போதும் மக்களுக்கு அதில் ஒருவித சலிப்பே ஏற்படுகின்றது. அதே போல் சட்டமன்ற உறுப்பினர்களின் மதிப்பும் குறைகின்றன.
இதைப் புரிந்து கொண்ட உறுப்பினர்கள், சட்டமன்றத்தை அறிவார்ந்த முறையில் அணுகாமல் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு அரசுத் துறைகள் மூலம் தீர்வு கண்டு தொகுதி மக்களை மகிழ்விக்கின்றனர். அதையும் செய்ய இயலாதவர்கள் தொகுதி மக்களின் குடும்பங்களில் நடக்கும் அனைத்து துக்க சுப காரியங்களிலும் பங்கேற்று பரிசளித்து மக்களுடன் தொடர்பில் இருந்து மறு தேர்தலுக்கு தயார் செய்து கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையும் கால ஓட்டத்தில் குறைந்து வருகின்றது.
மேற்கத்திய நாடுகளில் சட்டமன்றங்கள் வீழ்ச்சியை சந்திக்கின்ற போது அதை சரி செய்ய, அறிவியல் பூர்வமாக செயல்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு வருகின்றன. அதை நிவர்த்திக்க முயல்கின்றனர். ஆனால் நம் நாட்டில் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது என்று, ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிக்காமல் துதிபாடுவதிலும், ஏசுவதிலும் காலத்தைக் கழிக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. அறிவியல்பூர்வ அணுகுமுறையில் தவறுகளை கண்டுபிடித்து திருத்தலாம். துதிபாடுவதில் அதைச் செய்ய இயலாது. அறிவியல்பூர்வமாக செயல்படும் போது அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
முதல்வரை, பிரதமரை ஆளுங்கட்சிக்காரர்கள் புகழ்வது, அவையில் புகழ்ச்சியின் போது மேஜையைத் தட்டுவது, முதல்வரை, பிரதமரை கொச்சையாக விமர்சிப்பது, நக்கல் நய்யாண்டி செய்வது, அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுவது, ஏசுவது இன்னும் கூறப் போனால் சட்டையைக் கிழிப்பது, சேலையைக் கிழிப்பது போன்ற மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதும், அதன் காரணமாக தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கட்சிகளில் முக்கியப் பதவிகள் தருவதுமான அணுகுமுறைகள் தான் சட்டமன்றங்களை வீழ்ச்சிக்கு உள்ளாக்குகின.

ஒரு காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அரசு அலுவலகங்களில் பெரும் மரியாதை இருந்தது. அவர்களெல்லாம் மக்கள் மீது மாறா நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோல் அவர்கள் திறன் உள்ளவர்களாகவும் சமூகச் சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகம் மதிக்கும் மனிதர்களாக இருந்த காரணத்தால் அரசின் அதிகாரிகள், அலுவலர்கள் அந்தக் கருத்துக்களை உள்வாங்கி முடிவெடுத்தனர்.
அது மட்டுமல்ல, ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்சினைகளின் உணமைத் தன்மையில் பேசும் போது அரசையும் விமர்சனம் செய்வதுண்டு. அதே நேரத்தில் முடிவுகள் எடுக்கும்போது அரசுக்கு ஆதரவாக இருப்பதுண்டு. இப்படிப்பட்ட உறுப்பினர்களை அரசாங்கம் விரோதிகளாக பார்ப்பது கிடையாது. அவர்கள் விவாதத்தில் உள்ள நற்கருத்துக்களை எடுத்துக் கொள்வார்கள்.
ஒரு காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பேச்சுக்களை காத்திரமாக தரவுகளுடன் தயாரித்து அந்தக் கருத்துக்களை கண்ணியமாக பேசி தங்களின் மாண்பினை உயர்த்திக் கொண்டார்கள். இன்று அப்படிப்பட்டவர்களை காண்பதே அரிதாக ஆகிவிட்டது.
இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ வேண்டுமென்றால் போட்டி போட்டு ஒருவரையொருவர் தாழ்த்துவது அல்ல. முதலில் இதற்கு நம் சிந்தனைச் சூழலை உயர்த்த வேண்டும். நம் சிந்தனைச் சூழலில் சிறுமைக்கு இடம் கொடாது, உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்படும்போது முதலில் நாம் உயர்வோம். அந்த உயர்வில்தான் நாம் சார்ந்திருக்கின்ற கட்சி உயரும். நம் சிந்தனை மாறி, நடத்தை மாறினால் செயல்பாட்டின் தரமும் மாறிவிடும். எனவே சட்டமன்றத்தின் செயல்பாட்டைத் தரம் உயர்த்த நாம் செய்ய வேண்டிய பணி சிந்தனைச் சூழலை மாற்றுவதுதான். அதுதான் இன்றைய தேவை.
க. பழனித்துரை
பேராசிரியர்,
காந்திய களச் செயற்பாட்டாளர்























ஐயா பழனி துறைக்கு வாழ்த்துக்கள். அருமையான கட்டுரை.
வணிகம் நுழையும் இடத்தில் அரசியலும் நுழைகிறது கூட்டமும் அதிகரிக்கிறது. ஒரு காலத்தில் மயிலாப்பூரில் இருந்த கோலவிழி அம்மன் கோவில் மாலை ஐந்து மணிக்கு மேல் இருள் சூழ்ந்து விடும். அப்போதெல்லாம் மின் விளக்குகள் பரவலாக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் இல்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. அதுபோல்தான் இன்றைய பாராளுமன்றமும் நாடாளுமன்றமும் சட்டமன்றமும் ஒன்றுக்கொன்று இணையாக இருந்தாலும் பொதுவென்று வரும்போது மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
பெயருக்கு அரசியல்வாதிகள் இதற்குள் இருந்தாலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளை இறுதியில் கொண்டு செல்வது அதிகாரிகளே. நடந்து முடிந்த ஐந்து ஆண்டுகால அரசியலில் முதலமைச்சர் ஐந்து அதிகாரிகளிடமே பொறுப்பை ஒப்படைத்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் பிடித்து விட்டனர். நேர்மையை கடைப்பிடித்த அதிகாரிகளால் அவர்களுக்கு கீழ் இருந்தவர்களை சமாளிக்க முடியவில்லை. ஊழலுக்கு அரசியல்வாதிகளா அதிகாரிகளா என பார்த்தபோது போட்டியில் பல இடத்தில் அதிகாரிகளும் சில இடத்தில் அரசியல்வாதிகளும் வெற்றி பெற்றனர்
ஆனால் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை
கல்வியில் உயர்ந்து அரசியல் பக்கதுணையுடன் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு வந்தவுடன் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டனர். இது மாற வேண்டும் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கே சாதகமாக அமையும்
எந்த அரசியலும் வேண்டாம் என்று ஓட்டு போட மட்டும் நேரில் வரும் அடித்தட்டு மக்களுக்கு எந்த காலத்திலும் சட்டசபையும் சரி பாராளுமன்றமும் சரி பயன் தராது.
இவர் இப்படி பேசிப் பேசி கை தட்டல் வாங்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து மாநில அளவில் ஒரு சிந்தனையார் மாமன்றத்தை உருவாக்கி தலைமை தாங்கலாம.
அதன் மூலம் வாய்ப் பேச்சுகளை செயல் வண்ணமாக கொண்டு வரலாமே…!! ஏன் தயஙகுகிறார்.. எது தடுக்கிறது..??
நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்கிட!
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை காலத்தின் கட்டாயம்!
________________________________________________
கடந்த 23.04.2026 ம் தேதி நடந்து முடிந்த 17 – வது சட்ட மன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 5 கோடியே 67 லட்சத்து 7ஆயிரத்து 380 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். இதில் 4 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரத்து 121 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 234 தொகுதிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஒரு சுயேச்சை வேட்பாளரை சேர்த்து 234 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் (TVK) ஒரு கோடியே 72 லட்சத்து 27 ஆயிரத்து 32 வாக்குகள் (35.02 சதம்) பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
164 சட்ட மன்ற தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளை (24.19 சதம்) பெற்று 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
172 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK ) 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள் (21.21 சதம்) பெற்று 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
28 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (INCP)16 லட்சத்து 61 ஆயிரத்து 312 வாக்குகள் (3.37 சதம்) பெற்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (DMDK) 5 லட்சத்து 89 ஆயிரத்து 500 வாக்குகள் (1.20 சதம்) பெற்று 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
33 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி (BJP) 14 லட்சத்து 67 ஆயிரத்து 24 வாக்குகளை ( 2.97சதம்) பெற்று 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK) 4 லட்சத்து 25 ஆயிரத்து 345 வாக்குகள் (0.86 சதம்) பெற்று 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
18 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி (PMK) 10 லட்சத்து 70 ஆயிரத்து 745 வாக்குகள் (2.17 சதம்) பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
5 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) 2 லட்சத்து 93 ஆயிரத்து 817 வாக்குகள் (0.60 சதம்) பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
5 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 3 லட்சத்து 26 ஆயிரத்து 488 வாக்குகள் (0.6 சதம்) பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
8 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) 5 லட்சத்து 40 ஆயிரத்து 56 வாக்குகள் (1.09 சதம்) பெற்று 2 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
2 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 1 லட்சத்து 42 ஆயிரத்து 465 வாக்குகள் (0.29 சதம்) பெற்று 2 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,
234 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி (NTK) 19 லட்சத்து 72 ஆயிரத்து 537 வாக்குகள் (4.00 சதம்) பெற்று ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் இதர அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 9 லட்சத்து 66 ஆயிரத்து 709 வாக்குகள் (1.96 சதம்) பதிவாகியுள்ளது.
NOTA விற்கு (None of the above)1 லட்சத்து
99 ஆயிரத்து 801 (0.41) வாக்குகள் பதிவாகியுள்ளது.
3.37 சதவீதம் வாக்குகள் பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும்,1.20 சதவீதம் வாக்குகள் பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 1 தொகுதியிலும், 0.66 சதவீதம் வாக்குகள் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், 0.60 சதவீதம் வாக்குகள் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 தொகுதிகளிலும், 0.29 சதவீதம் வாக்குகள் பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும், 1.09 சதவீதம் வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், 2.97 சதவீதம் வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சி 1 தொகுதியிலும், 2.17 சதவீதம் வாக்குகள் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், 0.86 சதவீதம் வாக்குகள் பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 19 லட்சத்து 72 ஆயிரத்து 537 வாக்குகள் (4.00 சதவீதம்) பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றால் அது என்ன தேர்தல் ஜனநாயகம்.
இது ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்லவா? ….
வாக்காளர்கள் கட்சிகளுக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமெனில், தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் தற்போது 2026 – ம் ஆண்டு நடந்து முடிந்த 17 – வது சட்ட மன்ற தேர்தலில் 4 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரத்து 121 வாக்குகள் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு பதிவாகியுள்ளது.
பதிவான மொத்த வாக்குகளையும், மொத்தமுள்ள 234 சட்ட மன்ற உறுப்பினர்களையும், விகிதாச்சாரப்படி கட்சிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், பதிவான மொத்த வாக்குகளை ( 49324121÷234 = 2,10768.84 ) ஆல் வகுத்து வரும் ஈவு வாக்குகள் (2,10,768.84) எண்ணிக்கை அடிப்படையில் 1 , சட்ட மன்ற உறுப்பினரை தேர்வு செய்ய 2 லட்சத்து 10 ஆயிரத்து 769 வாக்குகளை பெற வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) 1 கோடியே 72 லட்சத்து 27 ஆயிரத்து 32 வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி (17227032÷210769 = 81) 81 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம் அது போக 154743 வாக்குகள் மீதமுள்ளது.
அண்ணா திமுக (AIDMK) 1 கோடியே 46 லட்சத்து 2 ஆயிரத்து 146 வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி (10462146 ÷ 210769 = 49) 49 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,34,465 வாக்குகள் மீதமுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK)1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 56 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 1,26,080 வாக்குகள் மீதமுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (DMDK) 5 லட்சத்து 89 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 2 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,67962 வாக்குகள் மீதமுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி (BJP) 14 லட்சத்து 67 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 6 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 202410 வாக்குகள் மீதமுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி (PMK) 10 லட்சத்து 70 ஆயிரத்து 745 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 5 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 16,900 வாக்குகள் மீதமுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (INCP) 16 லட்சத்து 61 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 7 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,85,929 வாக்குகள் மீதமுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (CPI) 3 லட்சத்து 26 ஆயிரத்து 488 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 சட்ட மன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,15,719 வாக்குகள் மீதமுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் ) 2 லட்சத்து 93 ஆயிரத்து 817 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதபடி 1 சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 83,048 வாக்குகள் மீதமுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) 5 லட்சத்து 40 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதபடி 2 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக1,18,518 வாக்குகள் மீதமுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK)
4 லட்சத்து 25 ஆயிரத்து 345 வாக்குகள் பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதபடி 2 சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 3,807 வாக்குகள் மீதமுள்ளது.
நாம் தமிழர் கட்சி (NTK) 19 லட்சத்து 72 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 9 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 75616 வாக்குகள் மீதமுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகள் விகிதப்படி தவெக (TVK) 81 சட்ட மன்ற உறுப்பினர்களையும், அதிமுக (AIADMK ) 49 சட்ட மன்ற உறுப்பினர்களையும், திமுக (DMK) 56 சட்ட மன்ற உறுப்பினர்களையும், தேமுதிக (DMDK) 2 சட்ட மன்ற உறுப்பினர்களையும், பாரதிய ஜனதா கட்சி(BJP) 6 சட்ட மன்ற உறுப்பினர்களையும், பாட்டாளி மக்கள் கட்சி(PMK) 5 சட்ட மன்ற உறுப்பினர்களையும், காங்கிரஸ் கட்சி(NCP) 7 சட்ட மன்ற உறுப்பினர்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( CPI) 1 சட்ட மன்ற உறுப்பினரையும்,CPI(M)1 சட்ட மன்ற உறுப்பினரையும் ,VCK 2 சட்டமன்ற உறுப்பினர்களையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK) 2 சட்டமன்ற உறுப்பினர்களையும், நாம் தமிழர் கட்சி (NTK) 9 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆக மொத்தம் 221 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மீதமுள்ள 13 சட்ட மன்ற உறுப்பினர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்ற கேள்வி எழுமானால்?….
கட்சிகள் பெற்றுள்ள மீதமுள்ள வாக்குகளின் வரிசை அடிப்படையில் அந்தந்த கட்சிகள் சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
உதாரணமாக மீதமுள்ள வாக்குகள் வரிசைப்படி நாம் தமிழர் கட்சி (NTK) 262812 ம்,பாரதிய ஜனதா கட்சி (BJP) 202410 – ம், காங்கிரஸ் கட்சிக்கு (NCP) 185929 – ம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(DMDK)167962 – ம், தமிழக வெற்றி கழகம் (TVK) 154743 ம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 14265 ம், அஇஅதிமுக வுக்கு (AIADMK) 134465 – ம், திமுக (DMK) வுக்கு 126080 ம், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) 118518 ம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 115719 என மீதமுள்ள வாக்குகள் அடிப்படையில் அந்தந்த கட்சிகளுக்கு 1 சட்டமன்ற உறுப்பினர் வீதம் 10 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
அல்லது தமிழ்நாடு முழுவதும் கட்சிகள் பெற்றுள்ள வரிசைப் படியான மீதமுள்ள வாக்குகளை காட்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றிருந்தால், அந்த சுயேச்சை வேட்பாளர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
அதற்கும் கீழாக வாக்குகள் பெற்ற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யும் தகுதியை இழந்தவர்களாக அறிவிக்கலாம்.
இது போன்று
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் நாடு முழுவதும் மாநில வாரியாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுமாயின் …….
1. இந்தியா முழுவதும் மாநிலங்கள் தோறும், ஒரே மாதிரியான வாக்களிக்கும் கணினி இயந்திரங்களில் அல்லது வாக்குச்சீட்டுகளில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களையும், சுயேட்சை வேட்பாளர்களின் பெயர்களையும் அதற்கு நேராக சின்னங்களையும் அகர வரிசையில் பொருத்தி வாக்குச்சாவடிகள் தோறும் வாக்களிக்கச் செய்யலாம்.
2. தற்போதுள்ள தேர்தல் முறையைப் போன்று சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து கோடிக்கணக்கில் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.
3. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று சாதி,மதம், இனம், மொழி, பிராந்தியம் போன்ற உணர்வுகளை வாக்காளர்கள் மத்தியில் தூண்டிவிட்டு வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறை தடுக்கப்படும்.
4. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று தனி மனிதர்களை துதி பாடுவதோ, தனிமனித விமர்சனங்களோ இல்லாமல் அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளின் கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று கொள்கையற்ற கூட்டணிகள் உருவாவது தடுக்கப்படும். அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
6. ஒரு கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தவறு செய்தாலோ, கட்சி மாறினாலோ அவரது பதவியை பறிக்கலாம்.
7. ஒரு கட்சியை சேர்ந்த சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, இறந்து போனாலோ இடைத் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேவை இருக்காது. அந்தக் கட்சியை சேர்ந்த வேறு ஒரு தகுதி வாய்ந்த சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரை அந்த கட்சிகள் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
8. தற்போதுள்ள தேர்தல் போன்று வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு அவசியம் இல்லாமல் போகும்.
9. வாக்களித்த வாக்காளர்களுக்கு கட்சிகள் பொறுப்பேற்பதும், கட்சிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பதும் படிப்படியாக கட்டாயமாகிவிடும்.
10. நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்து மக்களிடம் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள ஆக்கப் பூர்வமான போட்டிகள் உருவாகும்.
11. கோடீஸ்வரர்கள் தான் சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் என்ற நிலை மாறி மக்களுக்கு சேவை செய்யும் மனோபாவம் கொண்டவர்களை சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்தந்த கட்சிகள் தேர்வு செய்யலாம்.
12. நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை படிப்படியாக உருவாக்க முடியும்.
13. தற்போதுள்ள தேர்தல் முறையில் வெற்றி பெறும்,
வேட்பாளர்கள் பெறுகன்ற வாக்குகளை காட்டிலும், தோல்வியுறும் வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்குகளே அதிகம். அந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் கணக்கில் சேருவதை தடுக்கலாம்.
14. வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பளிக்கும் நிலை உருவாக்க முடியும்.
15. அரசியலில் ரவுடிகளும், சமூக விரோதிகளும், கோடீஸ்வரர்களும்
நுழைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை சீர்குலைப்பது தடுக்கப்பட்டு, நேர்மையான சிந்தனையாளர்கள் அரசியலில் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படும். அரசியல் வியாபாரமோ, குதிரை பேரமோ அல்ல. அது சேவை என்பது படிப்படியாக நிலைநாட்ட முடியும்.
16. தேர்தல் செலவுகளை அரசு ஏற்று நடத்த முடியும்.
17. வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும்,VVPAT ல் பதிவான வாக்குகளையும் எண்ணி சரிபார்த்த பிறகு தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்க செய்யலாம்.
17. தற்போதுள்ள தேர்தல் முறையால், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவுகளுக்கு, முதலாளிகளிடமும், பணக்காரர்களிடமும் கோடிக்கணக்கில் பணமும்,தேர்தல் பத்திரங்களும் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், ஆட்சி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்வதும் சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும். அதனையும் மீறி ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள், மக்களிடம் படிப்படியாக தனது செல்வாக்கினை இழந்து தேர்தலில் தோற்கடிக்கப்படும்.
தற்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து,கட்சிகள் பெறும் வாக்குகள் விகித அடிப்படையில், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டு வந்து சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்திட ……
நேர்மையான,கொள்கைப் பிடிப்புள்ள, ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்கிட ….
தற்போதுள்ள ஜனநாயக மற்ற தேர்தல் முறையை அகற்றிட….
ஜனநாயக முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நிலை நாட்டிட ….
மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு பலம் பெற்றிட …..
வலிமை மிக்க இந்தியாவில் வளமான மாநிலங்களை உருவாக்கிட ….
ஒன்றிய அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
வெளியீடு.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
UNITED COMMUNIST PARTY OF INDIA
(UCPI)
பதிவு: எஸ்.சுந்தரம்
மொபைல் எண்: 9443619565