”ஐயா சாமி, வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்…” என்று பல்லாண்டுகளாக கதறுகிறோம்.
”எல்லா ஆட்சியாளர்களும் செவிடர்கள் தானா? இன்சூரன்ஸ் நிறுவனங்களை மிஞ்சிய கொடியவர்கள் யாரும் இல்லை’’ என தமிழக அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற பென்ஷனர்களும் உரத்துச் சொல்கிறார்கள். ஆனாலும், அதே இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம்! பின்னணி என்ன?
”எங்களிடம் உங்களுக்கு விருப்பமா? இல்லையா ? என்ற ‘ஆப்சனே’ இல்லாமல் வம்படியாக எங்கள் பணத்தை மாதா மாதம் லம்பாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூக்கித் தருகிறார்கள்!”
”இது சுத்த ஹம்பக்! இந்த இன்சூரன்ஸ் கார்டை வைத்துக் கொண்டு மருத்துவனையில் சிகிச்சை பெறுவது அரிதினும், அரிதாகவே உள்ளது.”
”இதுக்கு பொருந்தாது”, ”அதுக்கு பொருந்தாது..” ”இந்தாங்க பில்” என்று கையில் திணித்து, எங்கள் கண்களை குளமாக்குகிறார்கள், தனியார் மருத்துவமனைகள்.
”இன்சூரன்ஸ் இருக்கிறது. அப்பாடா? இனி நோய் வந்தால் பணப் பிரச்சினையில்லை” என்று நினைப்பதைப் போல அறியாமை வேறில்லை..என்பது தான் 99 சதமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் நிலை.
ஆனாலும் கூட, அதே நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனே மீண்டும், மீண்டும் ஒப்பந்தம் போடுகிறார்கள்…!
அதுவும் முன்பு ஓய்வூதியர்களுக்கு மாதாந்திரப் பிடித்தம் ரூ 497 ஆக இருந்தது. தற்போது ஜூலை 2026 முதல் ரூ.644 . அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ரூ390 ஆகும். ஆனால், நிபந்தனைகள் மூலம் திரும்ப வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை மொத்த பில் பணத்தில் 10 சதவிதத்தில் இருந்து 25 சதவிக்தம் தான். அதுவும் சண்டையிட்டு போராடினால் தான் உண்டு. அப்பாவிகள் நிலை ‘அம்பேல்’ தான்.
Base manage rate மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பெயர் குறிப்பிட்டு Base manage rate நிர்ணயிக்கபடாதததில் இருக்கிறது சூட்சுமம். இது மருத்துவமனைகள் அவரவர் விருப்பம் போல கட்டணங்களை ஹைக் பண்ணி பிடுங்க தோதாகிறது.
“கட்டணமில்லா சிகிச்சை” என்பதில் எந்தத் தெளிவுமில்லை. அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தும்” விருப்புரிமைத் திட்டம்” தற்போது வரை ஏற்கப்படவே இல்லை. வழக்கம் போல் ஓய்வூதியர்களுக்குத் கட்டாயமாம். எங்களையெல்லாம் மனிதர்களாகத் தான் மதிக்கிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது’’ என்கிறார்கள் அரசு உழியர்களும், ஓய்வூதியர்களும்!
ஆதுவும், தொடர்ந்து பல புகார்களுக்கு உள்ளான United India Insurance Company மூலம் தான் மீண்டும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை?
Assistance என்று காப்பீட்டுப் பலன் பெறும்போது குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் செலவுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான் கிடைக்கும் என்று சூட்சுமமாக உணர்த்தப்படுகிறது.
காப்பீட்டுத் தொகையை மறுக்கப் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. Not – Payable பட்டியல் மிக நீளமாக உள்ளது. அவற்றில் பலவற்றை மருத்துவமனைகள் அவரவர் விருப்பத்திற்கு சேர்க்கவும், காப்பீட்டு நிறுவனம் மறுக்கவும் நிறைய வாய்ப்புகள் தந்துள்ளனர்.
மொத்தத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பாதிப்புகள் ஏராளமாகவுள்ளன. இதை அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் என்பதற்குப் பதிலாக,
“காப்பீட்டு நிறுவனத்திற்கு ‘ஜாக்பாட்’ பணம்.
அதிகாரத்தில் உள்ளோருக்கான கிம்பளம்”
எனச் சொல்வதே சரியானது’’ என்கிறார்கள்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மொத்தம் 15 லட்சம்.
ஓய்வூதியம் பெறுவோர் 11 லட்சம்.
2009-ல் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது ரூ 25 அரசு ஊழியர்களிடம் பிடித்தார்கள். அடுத்து அதை 180 அக உயர்த்தினார்கள். பிறகு அடுத்தகட்ட புதுப்பித்தலில் 300 ஆக்கினார்கள். தற்போது 390- க்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஓய்வூதியர்கள் முதியோர் என்பதால் 644 பணத்தை பென்ஷனில் பிடித்தம் செய்து தொடர்ந்து அரசு ஊழியர்களையும், ஓய்வூதியர்களையும் வஞ்சித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தருகிறது அதிகார வர்க்கம்
ஆக, மாதாமாதம் எவ்வளவு ஆயிரம் கோடிகள் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு போகிறது..!
அவ்வளவு பணத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும் சுளையாக வாங்கிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்!
இந்தப் பெரும் தொகையை அரசு மருத்துவமனைகள் பக்கம் திருப்பினால் இன்னும் அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நல்ல சம்பளம் தந்து, கூடுதல் மருத்துவமனைகளையும், அதில் நல்ல வசதிகளையும் உருவாக்கி, அரசே நல்ல சிகிச்சை வழங்கலாமே..!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்























Leave a Reply