உயிர்பலிகளை உதாசீனப்படுத்துகிறதா தமிழக அரசு?

-சாவித்திரி கண்ணன்

இன்னும் கூட  இந்த ஆட்சியாளர்களின் கவனத்தை கோரா முடியாமல் இருக்கிறது, இந்த கோர விபத்து!

இறப்பு எண்ணிக்கை 17 ஐ தொட்டுள்ளது. இன்னும் ஆபத்தான நிலையில் சுமார் 20 பேர் உள்ளனர். மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டதில் உயிர் பிழைத்தவர்கள் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ பாதி ஆரோக்கியத்தை பறி கொடுத்து பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்தருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் புனித பீட்டர்பவுல் கடல் உணவு பதப்படுத்தி, இறாள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், கடந்த மாதம் ஜுன் 21 ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து நேரிட்டது. இவை தொடர்பான கொடூர உண்மைகளை அம்பலப்படுத்தாமல் தற்போதைய அரசு அமைதி காக்கிறது.

கோடிக்கணக்கில் லாபம் தரும் கடல் உணவை ஏற்றுமதி செய்யும் இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அதி மோசமான அமோனியா வாயுவால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே!

எனவே, பாதுகாப்பான அம்சங்கள் சரியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், செய்யப்படவில்லை. அவ்வப்போது லேசான கசிவு ஏற்படும் போதே தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் புகார் கூறிய போது, உடனே அதனை கவனித்து சரி செய்யவில்லை. அவை செய்யப்பட்டுள்ளனவா? என்பதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் தங்கள் கடமையை செய்யாமல் கையூட்டு வாங்குவதிலேயே கண்ணும்,கருத்துமாக இருந்துள்ளனர்.

“பிரஷர் வால்வில் இருந்து கசிந்த அம்மோனியா வாயுவை அங்கிருந்த தொழிலாளர்கள் நுகர்ந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டது,” என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்ற போதிலும் அவர் வசதியாக ஒரு உண்மையை மறைத்துவிட்டார். அமோனியா வாயு குழாய்கள் செல்லக் கூடிய மாடிப்பகுதியில் இந்த ஏழை, எளிய அப்பாவி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் தூக்கத்தில் இந்த ரசாயன நெடி தாளாமல் எழுந்த போது, அவர்கள் வாயிலும், மூக்கிலும் ரத்தம் கொட்டி சுவாசிக்கவே திணறினர்.

இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படி தப்பிக்க வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியாததால் தான் அதிக பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்த ஆபத்தான ஆலையை நடத்தும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் இருவரும் ஈவு இரக்கமின்றி இங்கு வேலை செய்யும் அப்பாவி பெண்களிடம் 10 முதல் 12 மணி நேரம் வேலை வாங்கியுள்ளனர்.

இந்தப் பெண்களை இடைத் தரகர்கள் மூலம் மாதம் 15,000 ஊதியம் தருவதாக ஆசை காட்டி ஒடிசா, அசாம், ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இருந்து அழைத்து வந்து சொன்ன ஊதியத்தை தராமல், குறைவாக தந்து ஏமாற்றி உள்ளனர். இதில் 15 வயது சிறுமியும் இறந்துள்ளாள் என்பதில் இருந்து குழந்தை தொழிலாளர்களை சட்ட விரோதமாக வேலைக்கு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. அத்துடன் ஆபத்தான தொழிற்சாலைக்குள்ளேயே அவர்களை கொத்தடிமைகள் போல வெளியுலகே தெரியாமல் அடைத்து வைத்திருந்தனர்.

இவர்கள் தொழிற்சாலையில் இருந்து சுமார் அரை கீ. மீட்டர் தள்ளித் தான் தங்க வைக்கப்பட வேண்டும். இந்த விதிமீறல் என்பது கொலை குற்றத்திற்கு சமானமாகும். தற்போது 17 உயிர்கள் பலியானதற்கு இந்த அலட்சியமே காரணம். இதை அனுமதித்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் தோலுரிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனல், இது வரை அவர்கள் மீது சாதாரண நடவடிக்கை கூட இல்லை.

இந்த விபத்து நடந்த போது சட்ட சபை கூட்டத் தொடர் நடந்தது. ஆனால், இந்த விவகாரத்தை யாருமே பேச முடியாதபடிக்கு 110 விதியின் கீழ் அமைச்சரை மட்டுமே அறிக்கை வாசிக்க வைத்து கடந்துவிட்டனர். இது இந்த ஆட்சியாளர்கள் எதையோ ஊடி மறைக்கவே இப்படி நடந்துள்ளனர் என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இறந்து போனவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த நிறுவனம் இது வரை எந்த நஷ்ட ஈடும் தந்ததாகத் தகவல்கள் இல்லை.  தொழிற்சாலை முதலாளியையும், இடைதரகரையும், நிறுவன மேலதிகாரியையும் கைது செய்து பாதுகாப்பாக வைத்திருந்து விடுவித்து விடுவார்கள் போலும்.  தமிழக அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வெறும் இரண்டு லட்சம் தான் தந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே தரவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனவாம். உயிர்தப்பியவர்களின் எதிர்காலம் குறித்த எந்த அக்கறையும் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time