முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பார்த்துப், பேசி, பழகி வருகிறேன்!
அப்பவெல்லாம் கட்டுமஸ்தானாக இருப்பார் நல்லகண்ணு!
பேச்சுல கிண்டல்,கேலி, எள்ளல் தெரித்து விழும்! அச்சு அசல் கிராமத்து வெள்ளந்தி குணம் நிறைந்திருக்கும்! அப்ப இவரைவிட ,பெரிய தியாகிகள்,வயது முதிர்ந்த போராளிகள் கட்சியில் இருந்த காலம்!
கே.டி.கே.தங்கமணி, முருகேசன், எம்.வி.சுந்தரம், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயிருடன் இருந்தனர். அப்ப கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் தான் இவரை அதிகமாக பார்க்க முடியும்!
அந்த காலத்தில் ஜனசக்தி பத்திரிகையின்,
நிருபராக நல்லகண்ணுவும், போட்டோகிராபராக நானும்
செயல்பட்ட ஒரு அனுபவத்தை ஏற்கனவே நமது அறம் இணைய இதழில் எழுதியுள்ளேன்.
தன்னை எப்போதும் யாரும் அணுகக் கூடிய வகையில் என்றுமே அவர் வைத்திருக்கிறார்! தன்னை குறித்த எந்த மாயைகளையும்,பிம்பங்களையும் உருவாக்கி கொள்ள அவர் அனுமதிப்பதில்லை! யார் எங்கு அழைத்தாலும் அங்கு சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். நான் அழைத்து அவர் வர மறுத்தார் என ஒரு நிகழ்வைக் கூட சொல்லமுடியாது. யாரிடமும், எந்த பிரதிபலனும் பாராது பழகும் அவரது பாசாங்கற்றத் தன்மை அவரை மக்களுக்கு நெருக்கமானவராக மாற்றிவிட்டது என்று தான் சொல்வேன்.
சசிபெருமாள் மதுவிலக்கை வலியுறுத்தி உண்ண நோன்பு இருந்த போது நல்லகண்ணுவை சந்தித்து அவரை வரும்படி அழைத்தேன். ”கட்சிக்கு பூரண மதுவிலக்கில் சம்மதமில்லை சாத்தியமும் இல்லையே. அத்துடன் டாஸ்மாக்கில் பணியாற்றும் நமது தோழர்கள் வேலையுமல்லவா போய்விடும். கட்சியிடம் கலந்து பேசி சொல்கிறேன்’’ என்றார். எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ”தோழர், தமிழ் நாட்டுல மதுவால ஆயிரகணக்கான பெண்கள் தாலியறுத்துகிட்டு இருக்காங்க..பல குடும்பங்கள் நடுத்தெருவுல நிக்குது. மது கலாச்சாரம் அடித்தட்டு மக்கள் வாழ்க்கையை அதீதமாக சீரழித்து வருவது கண்கூடாகத் தெரிகின்ற நிலையில்.. நீங்க என்னடான்னா கட்சி கொள்கை..அது, இதுன்னு வியாக்கியானம் பேசுறீங்க.. நீங்க காந்தியகொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றால், இந்த நேரம் சரியான எதிர்வினையாற்றுங்க, இந்த மது கலாச்சாரத்தை கட்டுபடுத்தாவிட்டால் ஏழை,எளிய தமிழக மக்களுக்கு விமோச்சனமே இல்லை. டாஸ்மாக் வேலை போனா இன்னொரு வேலைக்கு அரசாங்கத்த நிர்பந்தம் கொடுங்க..ஒரு மனுசன் 25 நாளா உண்ணாவிரதம் இருக்கிறார் அன்ன, ஆகாரமில்லாமல்! நீங்க வரத்தான் வேண்டும். எனக்கு தெரியாது நான் சொல்லிட்டேன். உங்களுக்கு மனசாட்சி இருக்குங்குற நம்பிக்கையில தான் வேண்டுகோள் வைக்கிறேன்’’ என்றேன். அடுத்த ஒரு மணி நேரத்துல அவரே எனக்கு போன் போட்டு, ”நானும்,தோழர் தா.பாண்டியனும் சேர்ந்து புறப்பட்டு சசிபெருமாளை பார்க்க வருகிறோம்’’ என்றார்! சொன்னபடியே வந்தார்!
அவரது வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்தவர்,தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் கொடுமை,பசி,பஞ்சம்,பட்டினி, ஏழாண்டு கால சிறைவாசம், 25 ஆண்டுகாலம் விவசாயத் தொழிலாளர் சங்கம்..13 ஆண்டுகாலம் கட்சியின் தமிழக செயலாளர் என பல பொறுப்புகள்!
கடும் உழைப்பாளி, விவசாய சங்கத்திற்கு பொறுப்பேற்று இருந்த காலத்தில் சுற்றிச் சுழன்று ஓடிக் கொண்டே இருப்பதை பார்த்துள்ளேன்! பஸ் வசதியில்லாத கிராமம்க்களுக்கு நடந்தே சென்று விவசாய சங்கத்தை கட்டமைத்தவர்! விவசாயத் தொழிலாளர்கள் எனும் போது அதில் அதிகம் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்பதால் அவர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்தவர். குறிப்பாக தாழ்த்தப்பட்டர்களின் கோயில் நுழைவு போராட்டம், நில உரிமை போராட்டம், அவர்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்தார்!
இத்தனை வயது வாழ்வதே பெரிது!
அதிலும் தன்னை புத்துணர்வுள்ள மனிதனாக வைத்துக் கொள்வது அரிதினும் அரிது!
ஆசை,அகம்பாவம் இரண்டையும் துறக்க முடிந்தால் நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம் என்பதற்கு நல்லகண்ணுவே உதாரணமாவார்!
அதைப் போல குற்றமே இழைத்திருந்தாலும்,துரோகமே செய்திருந்தாலும் யாரிடமும், வெறுப்பு,கோபம் கொள்ளமட்டார். அயோக்கிய சிகாமணி என்று அறியப்பட்டவனிடமும் கூட அவருக்கு கோபமோ, வெறுப்போ வராது!
வாசிப்பை நேசிப்பவர். புத்தம்புதிகாக எழுத வந்திருப்பவர்களைக் கூட தெரிந்து வைத்திருப்பார்! பத்திரிகைகள், புத்தகங்களை வாசிப்பதில் சலிப்படையாதவர்!
வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளத் தயங்காதவர். ஒரு சமயம் கூட்டம் ஒன்றில் பேசி முடித்து புறப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரமாகிவிட்டதால் பேருந்து எதுவும் கிடைக்கவில்லை. அவர் பேருந்து நிறுத்ததில் இருந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார். தற்செயலாளாக அந்த பக்கம் காரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் யாரோ ஒரு வயதான கருத்த உருவத்திலானவர் சிகப்பு துண்டால் போர்த்தியவண்ணம் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருக்கிறார், ஆனால் அது மிகவும் பரிச்சியமான உருவமாகத் தெரிகிறதே…என அருகில் சென்று பார்த்தபோது தான் அவர் நல்லகண்ணு என தெரிய வந்தது. ”ஐயா என்னங்க நீங்களா இப்படி..? எங்க போகணும் வாங்க’’ என்ற போது, ”அதெல்லாம் ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்தவுடன் பஸ் வந்துரும் போயிடுவேன்.. நீங்க போங்க’’ என கூறிவிட்டார்!
அவருடைய 80 வது பிறந்த நாள் பரிசாக கார் வழங்கபட்ட போது அதை கட்சிக்கே தந்துவிட்டார். அதே சமயம் கட்சி அலுவலகத்தில் இருந்து அம்பத்தூர் திருமுல்லை வாயிலில் இருந்த தன் வீட்டிற்கு ரயிலில் சென்று வந்தார். என் ஒருவனுக்காக இவ்வளவு தூரம் பெட்ரோல் போட்டு கார் என்றால் வீண் செலவல்லவா? என்பார். ஆனால், இவ்வளவு பெரிய மனிதர் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது பலரும் அவரைப் பார்த்து காலைத் தொட்டு வணங்குவது என்றெல்லாம் செய்த போது தான் வேறு வழியில்லாமல் அவற்றை தவிர்க்க கார் பயன்பாட்டை ஏற்றார்!
பார்க்க பாமரன் போல காட்சியளிப்பவர் ஆர்.என்.கே. ஆனால், உண்மையில் அறிவுக் கடல். ஏனென்றால், அவ்வளவு புத்தகங்கள், பத்திரிகைகள் வாசித்து அறிவு செல்வத்தை அளவின்றி வைத்திருப்பவர். பாரதியார் தான் அவருக்கு ஆதர்ஷ்மானவர். அடுத்ததாக காந்தி மிகவும் நேசத்துக்குரியவர். ஆயினும் அம்பேத்கார் மீது அளவற்ற ஈர்ப்பு உள்ளவர். அதனால் அம்பேத்கார் தொடர்பாக மட்டுமே மூன்று நூல்கள் எழுதியுள்ளார்.
Also read
தமிழ் நாட்டை பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நுட்பமாக தெரிந்து வைத்டிருக்கு ஒரு சில அபூர்வமான தலைவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர்! அதற்கான ஆதாரமாக அவருடைய தமிழ் நாட்டின் நீர்வள ஆதாரங்கள், தொழில்வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு ஆகிய நூல்களையும், அவர் ஜனசக்தியில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் சொல்லாம்!
முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இந்த எளிய தலைவருக்கு இன்று 96 ஆவது அகவை தினம்! அவரை மக்கள் எப்படி நேசிக்கிறார்கள் என்பதற்கு தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாமிருந்து சாரி,சாரியாக வந்து அவருக்கு மாலையிட்டு பழம்,ஸ்வீட் கொடுத்து வாழ்த்தி வணங்கி செல்லும் பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தின் காட்சிகளே சாட்சியாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply