தறிகெட்டு போய்க் கொண்டிருக்கும் யூ டியுபர்ஸ் உலகம்!

-இயக்குனர் சீனு ராமசாமி

இது யூ டியூப் யுகமாக இருக்கிறது. யாரையாவது வம்புக்கு இழுப்பது, அபத்தமான கேள்விகளைக் கேட்பது, மரண வீடுகளில் மைக் பிடிப்பது என ஊடக அறத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள் அல்லது செய்ய ஏவிவிடப்படுகின்றனர். தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பிரபலங்களின் பலவீனம் இவர்களுக்கு மூலதனமாகிறது; நன்மைகளும், தீமைகளும் கலந்து பெருகி வரும் இந்த ‘யூடியூபர்ஸ்’ ஊடக உலகு குறித்த ஒரு அலசல்;

சென்னைச் சாலைகளிலோ, பரபரப்பான பொது இடத்திலோ இன்று நாம் அடிக்கடி காணும் ஒரு காட்சி, கையில் ஒரு மைக்கும், தோளிலோ அல்லது கைகளிலோ கனத்த கேமராக்களுடனும் அலைபாயும் கண்கள் கொண்ட இளைஞர் கூட்டம். அவர்களின் முகங்களில் தெரிவது ஊடக உலகிற்குள் நுழைந்து விட்ட பெருமிதம் மட்டுமல்ல; மாறாக, இன்றைய ஓட்டத்தை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்கிற எளிய மனிதர்களின் பசி கலந்த பதற்றமும் கூட.

இன்றைய தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு சமூக-பொருளாதாரக் காயத்தின் மீது இக்காட்சி கை வைத்திருக்கிறது. தகளியின் கதைகளில் வரும் மனிதர்களைப் போல, இவர்களும் பெரும் கனவுகளோடு நகரத்திற்குள் வந்து, யதார்த்தத்தின் சுவர்களில் மோதி இறக்கைகள் நனையும் எளிய மனிதர்கள். ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ (Visual Communication) என்ற கவர்ச்சியான வார்த்தைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வேலை வாய்ப்பின்மையின் கொடுமையை நாம் தர்க்கப்பூர்வமாக அலச வேண்டியிருக்கிறது.

இன்றைய கல்வி நிறுவனங்கள் இவர்களுக்கு ‘திரைப்படம்’, ‘தொலைக்காட்சி’, ‘ஊடகம்’ எனப் பளபளக்கும் உலகத்தைக் காட்டி, பெருந் தொகையைக் கட்டணமாகப் பிடுங்கிக் கொள்ளும் வணிகக் கல்வியாளர்கள், அந்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. படிப்பு முடிந்து வெளியே வரும்போது, அங்கே  வேலைவாய்ப்புகள் இருப்பதில்லை. மாறாக, கையில் ஒரு கேமராவைத் தூக்கிக்கொண்டு, ‘வியூஸ்’ (Views) தேடி அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் மிஞ்சுகிறது.

முன்பெல்லாம் கல்வி என்பது அறிவைப் பெருக்குவதற்கும், அதன் மூலம் ஒரு நிலையான வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயன்பட்டது. அதைத்தான் “படித்தால் பணம்” என்ற எளிய சமன்பாடாகச் சமூகம் பார்த்தது. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகம் இந்த சமன்பாட்டைத் தலை கீழாக மாற்றிவிட்டது. இன்று “பார்த்தால் பணம்” என்றாகிவிட்டது. எவ்வளவு பார்க்க வைக்கிறோமோ அவ்வளவு பணம் என்ற விசித்திரமான நுகர்வோர் கலாச்சாரம் இது.

அன்று அச்சு இயந்திரங்களின் வழியே பத்திரிகைகளை நடத்தியவர்கள் சுதேசிகள். நாட்டின் விடுதலை, சமூக மாற்றம், இலக்கியம் என்ற அற விழுமியங்கள் அவர்களிடம் இருந்தன. லாபத்தையும் தாண்டி ஒரு சமூகப் பொறுப்பு இருந்தது. ஆனால் இன்று நாம் பார்க்கும் டிஜிட்டல் ஊடக வெளியை ஆள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட வடிவமான ‘யூடியூப்’ (YouTube) போன்ற நிறுவனங்கள். இதன் முதலாளிகள் தமிழ்நாட்டில் இல்லை; அமெரிக்காவில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை தமிழ்நாட்டு இளைஞர்களின் உழைப்பும், அதன் மூலம் வரும் உலகளாவிய விளம்பர வருவாயும் மட்டுமே.

இங்கு இயங்கும் யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் சிலர் கருப்பு பணம் வைத்திருப்போர், அரசியல் அதிகாரத்தை தேடுவோர், அரசியல் கட்சிகளால் போஷாக்கு பெறுவோர், அரசியல் கட்சிகளுக்கு அடியாள் வேலை பார்ப்போர், சுய அடையாளத்தை உருவாக்கத் துடிப்போர்,  பிழைப்பை தேடி கேமராவை தூக்கியோர்..என பல வகையினர். கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர பணத்தின் ஒரு சிறு பகுதியை யூடியூப் நிறுவனம் இந்தச் சிறு சேனல்களுக்குத் தருகிறது. அந்தச் சொற்ப வருமானத்தில், தன்னிடம் வேலை செய்யும் இளைஞர்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய்க்கு மேல் அவர்களால் மாத சம்பளம் கொடுக்க முடிவதில்லை.

வறுமையும் பசியும் தான் இந்த இளைஞர்களில் சிலரை ‘சென்சேஷன்’ (Sensational) வீடியோக்களை எடுக்கத் தூண்டுகிறது.

இருப்பினும், இந்த ஊடகங்களின் செயல்பாட்டை நாம் ஒற்றைப் படையாக முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. இன்று திரைப்படத் துறையைச் சார்ந்த ஆளுமைகள் மற்றும் பிரபலமானவர்களின் மரணங்கள் நிகழும் போது, அவர்களைப் பற்றிய செய்திகளும், அவர்களின் கலை உலகப் பங்களிப்பும், திரையுலகினரின் நினைவு அஞ்சலிகளும் மிக வேகமாக, வெகுவாகப் பொது மக்களைப் போய் அடைவதற்கு இந்த டிஜிட்டல் ஊடகங்கள் செய்யும் நன்மையை நாம் மறுப்பதற்கில்லை. இது ஒருவகையில் எளிய மனிதர்களுக்குத் தங்களின் அஞ்சலியைத் தூரத்திலிருந்தே செலுத்த உதவும் பாலமாக அமைகிறது. ஆனால், இந்த நன்மையின் மறுபக்கத்தில் தான் மனித விழுமியங்களின் ஆகப் பெரிய வீழ்ச்சி ஒளிந்திருக்கிறது. ஒரு மரண வீடு என்பது இன்று துக்கத்தை விடவும், வியூஸ்களை அள்ளும் ஒரு சந்தையாக மாற்றப்பட்டுவிட்டது.

யதார்த்தமாக உற்று கவனித்தால் அந்த மரண வீடுகளில் கேமராக்களின் பின்னால் இருக்கும் உலகத்தின் குரூரம் புரியும். கையில் கேமரா வைத்திருக்கும் ஒரு இளைஞன், அஞ்சலி செலுத்த வரும் ஒரு பிரபலத்தைச் சுட்டிக் காட்டி தன் சக தோழனிடம், “இப்ப பாரேன், டக்குனு அழுவான் பாரு…” என்று நக்கல் தொனியுடன் சொல்லி விட்டு கேமராவை நீட்டுவதும், அதற்குத் தகுந்தாற்போல அந்த நபரும் சட்டென்று அழத் தொடங்குவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

அஞ்சலி செலுத்த வருபவர்கள் கூட, கேமராக்களின் கோணங்களுக்குத் தகுந்தாற் போல, தங்களின் சோக முகத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு, மெதுவாக நடந்து வரும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். மரண வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வரும் போது கூட, கேமராக்களில் முகம் எப்படித் தெரியும் என்று ‘மேக்கப்’ போட்டுக் கொண்டு வரும் போலித்தனம் இங்கு நிலவுகிறது. ஊடகங்களை திட்டுவது போல நடித்துக் கொண்டே, தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள அவர்களையே பயன்படுத்திக் கொள்ளும் கூட்டு நாடகம் இது. எதை வேண்டுமானாலும் செய்து பணம் சம்பாதிக்கத் துணிகிற கல்வியைப் பெற்று, அதைத் தொழிலாக மாற்றிவிட்ட யதார்த்தம் இது தான்.

சில நேரங்களில் அங்கே அழுபவர்கள் நடிப்பது போலவும், நடிப்பவர்கள் உண்மையிலேயே அழுவது போலவும் தோன்றுகிறது; மிகப் பெரிய ஆபத்தும் இதில் இருக்கிறது. என் நீண்ட நாள் கவலையும் கேள்வியும் எல்லாம் ஒன்றுதான்: பிரபலமான ஒருவரின் மரணத்திற்கு வருகிறவர்கள் உண்மையில் அந்த இறந்த பிரபலத்துக்காக வருகிறார்களா, அல்லது தங்களுக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வருகிறார்களா?

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இந்த கேமராக்கள் தேடுவதெல்லாம் ‘மார்க்கெட்டில்’ இருக்கும் நடிகர்களையும், கலைஞர்களையும் மட்டும் தான். ஒரு மனிதனின் கண்ணீர் அஞ்சலி அந்த யூடியூப் சேனல்களில் ஒளிபரப்பப்படவில்லை என்றால், அவன் இன்று மார்க்கெட்டில் இல்லை என்று இந்த அல்காரிதம் மறைமுகமாகத் தீர்ப்பளிக்கிறது. மரணம் கூட இங்கு வியாபாரத் தகுதியின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகிறது.

இந்த டிஜிட்டல் கண்காணிப்பு எந்த அளவிற்கு மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சூழ்ந்திருக்கிறது என்றால், ஒரு படைப்பாளியோ அல்லது கலைஞனோ ஏதோ ஒரு சூழலால் ஒரு மரண வீட்டிற்குச் செல்லவில்லை என்பதை, அவரிடம் கேட்காமலேயே யூடியூப் காட்சிகளைப் பார்த்து மக்கள் கண்டுபிடித்து “அவர் ஏன் வரவில்லை?” என்ற கேள்விகள் பின்வூட்டங்களில் விவாதப் பொருளாகின்றன. சமூகக் கடமைகளும், மனித உறவுகளின் துக்கங்களும் கூட இன்று யூடியூப் லென்ஸுகளின் வழியே தான் சான்றளிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், இந்த இணையதள வளர்ச்சி எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? ஒரு மனிதன் இறந்த பிறகு, அவன் இறந்த அதே நாளிலேயே அவனைப் பற்றி அவதூறாக விமர்சனம் செய்கிறார்கள்; இன்னொரு பக்கம் அவனைப் போற்றுகிறார்கள். இந்த இரு துருவ மனநிலை ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

மரணம் இன்று இவ்வளவு மலிவாக எப்படி ஆனது? திரும்பவே முடியாத ஒருவரை வழியனுப்புகிற அந்த இறுதி நேரம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை துயரமானது! அதை ஒரு வணிகப் பொருளாக்குவது எவ்வளவு கொடூரமானது.

இதைச் சட்டங்களாலோ அல்லது தடைகளாலோ தடுத்துவிட முடியாது, பிடுங்கி எறியவும் முடியாது. ஏனெனில், இது உலகளாவிய சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி. இந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டவர்கள்; கல்வி நிறுவனங்களாலும், இந்த கார்ப்பரேட் அல்காரிதங்களாலும் சுரண்டப்படுபவர்கள்.

அதே நேரத்தில், திரையுலகமும், சமூகமும் இந்த போலித்தனங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அரசு மற்றும் சமூக அமைப்புகள், ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படிப்புகளின் தரத்தையும், இத் தொழிலையும் முறைப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்; சீனு ராமசாமி

எழுத்தாளர், கவிஞர், இயக்குனர்

அறம் இணைய இதழ்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time