ஊழலுக்காகவே உருவாக்கப்பட்டதே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். செலவில்லாமல் கிடைக்கும் மழை நீரை கடலுக்கு தாரை வார்த்து, கடல் நீரை குடிநீராக்க 1000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் 60 ரூபாய் வரை செலவாகிறதாம். ஆக, ஒரு மாநகரத்திற்கு தண்ணீர் தர பல்லாயிரம் கோடிகள் செலவு காட்டுகிறார்கள்! கடல் நீரை சுத்திகரிப்பு செய்தாலும், உடல் நலனுக்கு மிகவும் கேடானது;
தூய்மையான மழை நீர் கொட்டித் தீர்க்கிறது. அதுவும் சென்னையில் ஆண்டுக்கு சுமார் 1,300 மில்லிமீட்டர் மழை பொழிகிறது. இவ்வளவு அதிக மழை என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்! ஆனால், இவை அனைத்தையும் அக்கறையின்றி அப்படியே கடலுக்குள் சென்று சேர விட்டு விடுவார்களாம்!
பிறகு, ‘அந்த கடல் நீரை குடி நீராக்குகிறேன்’ என பல ஆயிரம் கோடிகள் செலவழிப்பார்களாம்…!
மழை நீர் சேகரிப்புக்கு என்றே தமிழ் சமூகம் உலகப் புகழ்பெற்றது. எத்தனையெத்தனை ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள்.. உருவாக்கி தமிழ்ச் சமூகம் வரலாறு நெடுக மழை நீரை கண்மணியாக நினைத்து பாதுகாத்தது.
இன்றைக்கு சென்னையில் நிலத்தடிக்குள் மழை நீர் சென்று சேராததால், மிகப் பெரிய அளவில் சென்னை நிலத்திற்குள் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரே பாழ்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் கட்டமைப்பு என்பது மிகவும் அவசியமானது. ஆனால், ஊழலுக்கானதாகவே மாற்றி, அரைகுறையாக செய்து வைத்துள்ளனர். தற்போது மழைநீர் வடிகால்வாயில் சென்றடையும் நீர் பயனின்றி பக்கிங்கம் கால்வாய், கூவம், அடையார் ஆறுகளைச் சென்று சேர்கின்றது.
சென்னை நகரில் மழை நீர் வடிகால் பாதைகள், குழாய்கள் மற்றும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க ஆர்வமில்லாத சமூக அக்கறையற்ற அரசும், மக்களும் இருக்கும் வரை ஊழல்கள் பெருக்கெடுக்கும் தான்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில், தினமும் 110 எம்எல்டி மற்றும் 150 எம்எல்டி உற்பத்தித் திறன் கொண்ட 2 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவையும் முழுத் திறனோடு செயல்படுவதில்லை. இவற்றின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்;
முதன் முதலாக சென்னை அருமேயுள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பிப்ரவரி 2013 ஆம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா அரசால் தொடங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது 2019-ம் ஆண்டு நெம்மேலியில் 2வது திட்டமாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 15 கோடி லிட்டர் (150 மில்லியன் லிட்டர்) கொள்ளளவு கொண்ட இந்த சுத்திகரிப்பு ஆலையின் பணிகள் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதல்வராகி இதனை திறந்து வைத்தார்.
திமுக ஆட்சியில் பேரூர் பகுதியில், தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவானது. இத்திட்டப் பணிகளை ஆகஸ்ட் 2023-ல் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அந்தப் பகுதியில் குடிநீர் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமெனக் கூறி நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் திட்டமிடப்பட்டதானது உதாசீனம், ஊதாரித்தனம், ஊழல் காரணமாக ஆட்சி முடியும் தருவாயில் ரூ.5,814 கோடிக்கு எகிறியது. இதனால் 2026 மார்ச் மாதத்தில் முடிந்திருக்க வேண்டிய திட்டம் இன்னும் தொடர்கிறது.
இதைத் தான் இன்று காலையில் பார்வையிட்ட இன்றைய முதல்வர் விஜய், ’திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர’ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் முக்கிய கவனத்திற்கு;
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இயற்கைக்கும், மனித உடல் நலத்திற்கும் எதிரானது மட்டுமல்ல, கடலோரச் சுற்றுச் சூழலுக்கும் எதிரானது என்று எண்ணற்ற சூழலியல் அறிஞர் உலகம் முழுமையும் உரக்க குரல் கொடுத்து வருகின்றனர்.
கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டாலும் குடிக்கத் தகுந்தது அல்ல. அதை குடிப்பது நல்லதல்ல. ஏனெனில், கடல் நீரை சுத்திகரிக்கும் போது அதில் உள்ள கழிவுகளும், உப்பையும் மட்டும் நாம் இழக்கவில்லை. கடல் நீரை குடிநீராக்க இரும்பு குளோரைடு, பாலி அக்ரிலிக் அமிலம், அல்கலைன் அமிலம், சோடியம் சல்பைடு போன்ற ரசாயனக் கலவைகள் சேர்க்கபடுவதால் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் ஒரு உயிர்ப்பற்ற சக்கை நீராகும். இதில் இயற்கை தண்ணீருக்கேயான சக்தி கொஞ்சமும் கிடையாது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 4,000 ஏரிகள் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரிப்பது இல்லை. 2015 ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் சென்னை திணறியது. அப்போது சென்னையில் 300 டி.எம்.சி தண்ணீர் கொட்டித் தீர்த்து கடலில் சேர்ந்தது! ஆனால், அடுத்த ஆண்டே சென்னை தண்ணீர் பற்றாகுறையால் தள்ளாடியது. சென்னையின் ஆண்டுத் தேவையே அதிகபட்சம் 15 டி.எம்.சி தான். இதை ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சிறிதளவு அறுவடை செய்ய அக்கறை காட்டினாலே போதுமானது.
ஆனால், இதைச் செய்ய மறுத்து செயற்கையாக ஒரு தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கி, ‘கடல் நீரே தீர்வு’ என பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கிறார்கள். இந்த கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் என்பது ‘உச்சபட்ச ஊழல் திட்டம்’ என பலமுறை அம்பலமான பிறகும் அதையே, செயல்படுத்துவது குறித்து புதிய ஆட்சியாளர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
செலவில்லாமல் பெற வாய்ப்புள்ள தண்ணீரை அதிக செலவு செய்து மக்களுக்கு தருவது ஆரோக்கியமான ஆட்சிக்கு அழகல்ல.
சாவித்திரி கண்ணன்























கடல்நீர் சுத்தபடுத்தசேர்க்கப்படும் பொருள்கள்
மனித உயிர் கொள்ளி.கள், அதன்தன்மையை
மாற்றமுடியுமா? அதிகாரிகளுக்கும்அரசியல்வாதிகளுக்கும் ஊதியம் பெருக்கச் செய்யும் திட்டம்
துவக்கத்திலேயே இதற்கு எதிராக மக்களிடம்
விழிபாபுணர்வு அமையவேண்டும்
கடலில்வினாக கலக்கும் பெய்கிறமழைநீரை சேமிக்க குளம், கினறுகள்தோண்டி வைத்திலே நிலத்தடிநீர்சேமித்து ஊற்றாகவரும்
Eye opening information.