திருமாவளவனின் திருதராஷ்டிர அரசியல்!

-சாவித்திரி கண்ணன்

அதென்ன ’திருதராஷ்டிர அரசியல்..’? மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் குருட்டு பாசத்தால் அழிவு சக்திகளுக்கு ஆதரவாக நின்றதை குறிப்பிடுவதாகும்! எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில் திருமாவளவனுக்கே தெளிவில்லை. விரோதம் பாராட்டும் திமுகவிடம் இன்னும் விசுவாசம்! அமைச்சரவையில் இடம் கொடுத்த தவெகவுக்கோ தொடர்ந்து தர்மசங்கடம். தொடருமா? தவெகவின் சகிப்புத் தன்மை;

சமீப காலமாக முரண்பாடுகளின் மொத்த குத்தகைதாரராக பேசி வரும் திருமாவளவன் அவர்களின் வலி தரும் வார்த்தை விளையாட்டை தாங்கிக் கொண்டு, பொறுமையாக அமைதி காக்கிறது தவெக!

தவெக ஆதரவு நிலைபாட்டுக்கு சென்றாலும், திமுகவின் கூட்டணியில் இருந்த எந்த ஒரு கட்சியும் திமுகவை பகை சக்தியாக பார்க்கும் மனநிலைக்கு செல்லவில்லை. தன் தோழமைகளை அப்படி பகையாக பார்த்து வசவு அரசியலுக்கு முதன்முதலாக வரவேற்பு பாடல் பாடியது திமுக தான்!

எதிர்பாராத ஒரு அரசியல் சூழல் வருகிறது. அப்போது நாட்டின் நலன் கருதியும், பொதுச் சமூகத்தின் எண்ண ஓட்டங்களுக்கு மதிப்பளித்தும் தவெக ஆதரவு நிலைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐ.யு.எம்.எல் ஆகியவை வந்தாலும், இவை எதுவுமே திமுகவை பகை சக்தியாக பார்க்கவில்லை.

ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக திமுக தான், தன் பழைய கூட்டாளிகள் மீது பழி சுமத்தி, பகை அரசியல் செய்தது…!

அப்போதும் கூட சமரசம் காட்டவும், சர்ச்சையை தவிர்க்கவுமே திமுகவின் பழைய கூட்டாளிகள் விரும்பினர். ஆனால், தோல்வி தந்த விரக்தியில் திமுகவோ ’எடுத்தேன், கவிழ்த்தேன்’ என நட்பு சக்திகள் மீது பகை அம்புகளைப் பாய்ச்சியது.

பொறுத்து, பொறுத்துப் பார்த்த காங்கிரசாரும், மார்க்சிஸ்ட்களும், ஐ.யு.எம்.எல்காரர்களும் பொங்கி எழுந்து திமுகவிற்கு பதிலடி தந்து தங்கள் சுயமரியாதையை வெளிப்படுத்திவிட்டனர். ஆனால், விசிக தலைவர் திருமா மட்டும், ’எத்தனை இழி சொற்களால் திமுக அர்சித்தாலும் பரவாயில்லை, இம்மியளவும் என் விசுவாசம் மாறாது’ என்ற அரசியல் நிலைபாட்டில் உள்ளார்.

இதன் காரணமாக திருமா இரண்டுங்கெட்டான் அரசியல் செய்து வருகிறார்…!

”தவெகவிற்கு ஆதரவு தருவோம் என்ற எண்ணம் வந்தவுடன் ஸ்டாலின் அவர்களை தேடிச் சென்று எங்கள் நிலைபாட்டை எடுத்துக் கூறி, அவரது இசைவை பெற்ற பிறகு தான் தவெகவிற்கு ஆதரவு தரலாம் என்ற முடிவிற்கு வந்தோம்…’’ என்பதை மீண்டும், மீண்டும் கூறி வருகிறார்.

ஒருமுறை சொன்னால் ஓகே! ஆனால், இதை மீண்டும், மீண்டும் பல்வேறு தருணங்களில் கூறி, நினைவுபடுத்துவதன் மூலம், திமுக தலைமையை அவர் சந்தோஷப்படுத்தலாம்.

அதே சமயம் தவெக தலைமை தர்மசங்கப்படுமே.. அதை ஏன் திருமா அவர்கள் யோசிப்பதே இல்லை…!

தவெகவினர் மனதில் திருமாவின் இந்தப் பேச்சு என்னென்ன மாதிரியான சிந்தனையோட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது..என்பதை அவர் அறிவாரா?

அப்படியானால் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் திருமா அவர்களே சுயமாக தவெக ஆதரவு நிலைக்கு வரவில்லையா?

திமுக தலைவரிடம் முறைப்படி தகவல் தெரிவித்தேன் என்று சொன்னால் புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அனுமதித்து, ”சரி, சரி போய்க்கோங்க, ஆனா என் மீதான விசுவாசம் மாறக் கூடாது” எனச் சொல்லித் தான் அனுப்பி வைத்துள்ளாரா? என்ற சந்தேகம் இவர் பேசுவதை கேட்போர்களுக்கு வராதா?

ஆக, ”திமுக தயவில் தான் உங்க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..” என ஸ்டாலினும், உதயநிதியும் சொல்லிக் கொண்டிருப்பதையே தானும் தவெகவிற்குச் சொல்ல வருகிறாரா?

தற்போது தவெக அமைச்சரவையில் விசிகவின் அமைச்சரையும் அவர்கள் சேர்த்துள்ளனர் என்ற வகையில் தங்கள் கூட்டணியில் விசிக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தானே அது நடந்தது!

அமைச்சரவை கூட்டத்தில் அரசின் ரகசிய முடிவுகள், தீர்மானங்கள் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அப்போது, ‘இன்னும் நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்’ என்ற கட்சியின் அமைச்சர் இடம் பெறும் போது, ‘இங்கு நடப்பவை எல்லாம் உடனுக்குடன் திமுக தலைமைக்கு போய் விடுமா?’ என்ற சந்தேகம் வருமா? வராதா?

மாமல்லபுரத்தில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டதே. அங்கே கூடி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிய பிறகும், ”திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம்’’ என்றும், ”நாங்கள் தமிழகக் வெற்றி கழக கூட்டணியில் இணைந்து விட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை…” என்றும் பேசுகிறார் என்றால், அது தவெக தொண்டர்களின் மனதை வருத்தப்படுத்தாதா?

முதன் முதலாக தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற முடிவை திருமா அறிவித்த போது, ”தேர்தல் பிரச்சாரத்தில் தவெக என்பது ‘ஆர்.எஸ்.எஸ் பெற்றேடுத்த கள்ளக் குழந்தை’ என்று பேசினீர்களே…?” என்று நிருபர்கள் கேட்ட போது,

”அந்த நிலைபாட்டில் மாற்றமில்லை” என்றார்!

பாஜகவை ‘கொள்கை எதிரி’ என விஜய் ஆரம்பம் முதல் இன்று வரை உறுதிபட சொல்லி வருகிறார். அதனால் தான் பாஜக ஆதரவு கட்சியான பாமகவிடம் நான்கு எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் ஆதரவு கோரவில்லை. இதையெல்லாம் உணர்ந்த பிறகும் இந்த வார்த்தையை திருமா கூறுகிறார்  என்றால், திமுகவை சந்தோஷப்படுத்த நினைக்கிறாரா?

தவெக ஆர்.எஸ்.எஸ்சின் குழந்தை என்ற நிலைபாடு இருக்குமானால், திருமா அவர்கள் தவெகவை உறுதியாக புறக்கணித்திருக்க வேண்டும். அது தான் அவரது கொள்கை உறுதிபாட்டின் அடையாளமாக இருக்க முடியும்.

அமைச்சர் பதவி பெற்ற பிறகும், ”தேர்தலில் தவெக வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சியில்லை” என்கிறார்.

”அப்படியானால், உங்களை அமைச்சரவையில் வைத்து கொள்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சி இல்லை” என தவெக கூறுவதற்கு எவ்வளவு நேரமாகும்?

ஏற்கனவே விசிகவில் இருப்பவர்களை திமுக உருவி எடுத்து கொண்டுள்ளது. இன்னும் சிலர் விசிகவில் இருந்து திமுகவிற்கு செல்ல நேரம் பார்த்து கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் திமுக உறவு குறித்து திருமா அவர்கள் திட்டவட்டமான முடிவுக்கு வராவிட்டால் பெரிய சேதாரங்களையே சந்திக்க நேரும்.

ஒரே நேரத்தில் யாரும் இரண்டு படகுகளில் பயணப்பட முடியாது. இந்த நிலை தொடருமானால், இரண்டு கூட்டணியிலும் இருக்க முடியாத ‘இரண்டுங்கெட்டான்’ நிலைக்கு தான் விசிக சென்று சேரும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time