இந்தியாவிலேயே மருத்துவத்திலும், மருத்துவ கல்லூரியிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடே! அதே சமயம் நமது நாட்டில் கருப்பு செல்வத்தை வெள்ளையாக மாற்ற உருவாக்கப்படுவதே தனியார் மருத்துவ கல்லூரிகளும், மருத்துவமனைகளும்! கடந்த திமுக ஆட்சியில் உயர் கல்வித் துறையை உச்சபட்ச வசூல் துறையாக்கிட நடந்தவற்றையும், அதன் இன்றைய விளைவுகளையும் பார்ப்போம்;
இந்தியாவில் அதிக கருப்பு பணப் புழக்கம் உள்ள துறையாக மருத்துவதுறையை மாற்றி தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கிவிட்டார்கள் மாபியாக்கள்! உலகில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவ கல்விக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பதற்கு விடை, இங்கு மருத்துவக் கல்வியை அரசாங்கமே மாபியாக்களிடம் தூக்கி தந்து விட்டது என்பதேயாகும்.
இந்த மாபியா கூட்டம் தான் மருத்துவத் துறையை கையில் வைத்துக் கொண்டு அரசுக்கு கட்டளை போட்டு தாங்க விரும்புகிறபடி ஆட்டுவிக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல, கடந்த திமுக ஆட்சியும் விதி விலக்கல்ல!
மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்’ என்பதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களாக்கும் மசோதாவை திமுக ஆட்சி தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அக்டோபேர்-17, 2025-ல் நிறைவேற்றியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வழிகோலும் இந்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரும் என்ற உன்னதமான பொய்யை முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் அறிவித்தது மறக்க முடியாத கருப்பு நாளாகும்.

தனியார் மயத்தை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நாடகமாடி வந்த திமுக அரசு பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை அதன் பல அம்சங்களை அமல்படுத்தி வந்ததை நமது அறம் இதழில் நான் மட்டுமின்றி பல கல்வியாளர்களும் எழுதி வந்தோம்.
அந்த வகையில் தான் நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளை நிகர் நிலை பல்கலைக் கழகமாக்க குறுக்கு வழியில் துணை போயுள்ளது திமுக அரசு.
சென்ற திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவ கல்லூரியும் தோற்றுவிக்கப்படவில்லை. அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் சுமார் 13 அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தொடர்ந்து பற்றாக்குறை இருக்குமாறு பார்த்துக் கொண்டதன் விளைவாக தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பியது அன்று தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இதன் விளைவாக தனியார் மருத்துவ கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்லும் சூழலையும் திமுக அரசு உருவாக்கித் தந்தது.
இன்றைக்கு நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்து பெற்றுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி , சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகள் சார்ந்த மருத்துவமனைகள் சிறுநீரகத் திருட்டிற்கு பேர் போனது. இந்த கொடூர கிரிமினல் குற்றங்களில் இருந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ கதிரவனை காப்பாற்றிய திமுக அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் கிடைக்கவும் துணை போயுள்ளதை எப்படி புரிந்து கொள்வது?

நிகர் நிலை பல்கலை அந்தஸ்த்து என்பது நிகரற்ற கல்விக் கொள்ளைக்கான அங்கீகாரமன்றி வேறல்ல. ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு, இடஒதுக்கீடு அடிப்படையிலான சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் என அனைத்திற்கும் வேட்டு வைக்கும் நிகர் நிலை அந்தஸ்தால் மருத்துவ கல்வியில் இருக்க வேண்டிய மனித நேய அணுகுமுறையை முற்றாக அழித்துவிடுகின்றன, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள்!
அதுவும் திமுகவினர் விஞ்ஞான பூர்வமாகவும், சூட்சுமமாகவும் ஊழல் செய்வதில் உலகமகா மேதைகள்! அந்த வகையில் நிகர் நிலை அந்தஸ்து கோரி வந்த விண்ணப்பத்தை நிராகரிக்காமல் தாமதம் செய்தால், அந்த மருத்துவ கல்லூரிகளுக்கு தாமாகவே அனுமதி கிடைத்ததாக பொருள் என்ற சட்டத்தின் ஓட்டையை சிறப்பாக பயன்படுத்தி ஒத்தாசை செய்துள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் கிடைக்கும் 7.5 சதவிகித வாய்ப்புகள் பறிபோவதைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லையே இவர்கள்!
வெறுமனே இந்தி எதிர்ப்பை காட்டுவதன் மூலம் தேசிய கல்வி கொள்கையை தான் எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையில் உள்ள சனாதன பிற்போக்குத்தனங்களை துளியும் எதிர்க்கவில்லை என்பதற்கு உதாரணமாக திமுக அரசு பதவி ஏற்றதற்கு பிறகான முதல் கல்வியாண்டில் மதுரை மருத்துவ கல்லூரி உட்பட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் மகரிஷி சாரக் ஷாபாத்தின் பிற்போக்குத்தனமான சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.
மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடிக்க, அன்றைய மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபுவும், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யனும், சுகாதராத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணனும் அவர்களுக்கு இணக்கமாக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தான் காரணம்.
தேசிய மருத்துவ கல்வி கொள்கையில் ஆங்கில மருத்துவ முதலாம் ஆண்டு பயிற்சியில் அதுவரை மரபாக பின்பற்றி வந்த ‘ஹிப்போகிரேட்டஸ்’ உறுதிமொழியை நீக்கிவிட்டு ‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழியை திணிப்பதை அம்பலப்படுத்தி எதிர்த்தன் மூலம் கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டார், பி.டி.ஆர். தியாகராஜன்.
சென்னை புனித பீட்டர் மருத்துவக்கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, சீனிவாசன் மருத்துவக்கல்லூரி நிகர்நிலை பல்கலைக் கழகங்களாக மாறி விட்டன. இவற்றில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு வந்த 350 இடங்கள் இனி இல்லை. இவை மட்டுமின்றி மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறும் பட்சத்தில் இன்னும் 350 இடங்களை ஏழை எளிய மாணவர்கள் இழக்க நேரும். இப்படியாக அதிமுக ஆட்சி காலத்தில் அரும்பாடுபட்டு வாங்கிய 7.5 சதவித வாய்ப்பை குறுக்கு வழியில் குழி தோண்டி புதைத்துள்ளனர் பாவிகள்!
இனி, இந்த அசம்பாவிதம் நடக்காமல் தவெக அரசு தடுக்க வேண்டும்.
உயர்கல்வியை உச்சபட்ச வசூல் துறையாக்குவது – அதிலும் மருத்துவ கல்வியை மாபியா கூட்டத்திற்கு தாரை வார்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகளே இசைந்து செயல்படுவது என்பதற்கு இனியேனும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மக்கள் சக்தியும் மாபெரும் எழுச்சி கொள்ள வேண்டும்.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply