வாக்குச் சந்தையில் உருவாகுமா மக்களாட்சி? இன்னும் மக்களாட்சியின் மாண்புகளையே உணராத வாக்காளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நிறைந்துள்ளனர். இன்னும் அரசியல் கட்சிகளே ஜனநாயகப்படவில்லை. எஜமானத்துவமும், அடிமைத்தனமும் ஓங்கி உள்ளன. குடிமைப் பண்பை வளர்க்கும் கல்வியை எப்போது பயிற்றுவிப்போம்; அலசுகிறார், பேராசிரியர் க.பழனிதுரை;
மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஓர் அரசாங்கத்தை அமைக்கின்றனர். தங்களுக்கு யார் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற உரிமை பெற்றவர்கள் குடிமக்கள். அறிவுபூர்வமாக அந்த முடிவை எடுக்க அவர்களுக்குத் செய்திகள் உதவுகின்றன.
தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? அவரின் பின்புலம் என்ன? அவர் தரும் வாக்குறுதிகள் என்னென்ன? அவர் சார்ந்துள்ள கட்சியின் பின்புலம் என்ன? அவருடன் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் பின்புலம், அவர்கள் கட்சியின் பின்புலம்..இவையெல்லாம் ஒரு வாக்காளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தக் கட்சிகளில், வேட்பாளர்களில் எந்தக் கட்சி, எந்த வேட்பாளர் நாம் தேடும் மனிதர், அமைப்பு என்று அந்த வாக்காளர் உரிமையானது உச்சபட்ச அதிகாரமும் கொண்டதாகும். அவர் எடுக்கின்ற முடிவு அவர் குடும்பத்தை மட்டுமல்ல அவரின் சொந்த தொகுதியை மட்டுமல்ல இந்த ஒட்டு மொத்த நாட்டையும் பாதுகாக்க வேண்டும். முதலில் நாடு, அடுத்தது தான் வீடு. நாட்டு மேம்பாட்டில்தான் வீட்டு மேம்பாடு உள்ளது. அந்தப் புரிதல் குடிமக்களுக்கு அறிவுலகம் தந்திட வேண்டும்.
அதே போல் மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதானமாக இரண்டு பணிகள் பொறுப்புக்கள் உள்ளன. ஒன்று அந்த மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பது, அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி மக்களின் பிரதிநிதியாய் இருப்பது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, மேம்பாட்டிற்கு முக்கியம் தந்து செயல்பட வேண்டியதாகும். அதே நேரத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கும் சமரசமற்று தீர்வு காண வேண்டும். தான் ஒரு தொகுதிக்கான பிரதிநிதி மட்டுமல்ல, ஒரு மாநிலத்திற்குமானவன் என்ற விரிவான புரிதல் முக்கியம்.
நாம் சந்தையில் பொருள் வாங்குகிறோம், அப்பொழுது அதன் தரம், விலை, அந்தப் பொருளை உருவாக்கிய கம்பெனியின் தரம் ஆகியவற்றை பார்க்கின்றோம், நம் கையில் இருக்கும் நிதிக்குத்தக்க ஒரு முடிவு செய்கின்றோம். சில சமயம் கடைக்காரரிடம் விவாதம் செய்து விலையைக் குறைக்க முயற்சிக்கிறோம். இதற்காக நேரத்தை ஒதுக்கி சிந்திக்க முடிந்த நமக்கு நாட்டின் எதிர்காலம் எவ்வளவு முக்கியம்? அதில் தானே நம் எதிர்காலம் அடங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து, அறிந்து செயல்பட அடிப்படைக் கல்வி ஒன்று தேவைப்படுகிறது. அதை வாக்காளர் விழிப்புணர்வுக் கல்வி என்றோ, குடிமக்களுக்கான குடிமைப் பயிற்சி என்றோ வகைப்படுத்தலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராக இருந்த சேஷன் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு முகாமை காத்திரமாக நடத்திக் காட்டியவர். நான் அரசாங்கத்தின் பணியாளர் அல்ல. நான் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவன் அல்ல. நான் அரசமைப்புச் சாசனத்திற்கும், பாராளுமன்றத்திற்கு மட்டும் தான் கட்டுப்பட்டவன். நான் வகிக்கின்ற பதவி, அரசமைப்புச் சாசனத்தால் சுதந்திரமாக செயல்பட்டு, மக்களாட்சியைக் காப்பதாகும் என்று ஆணித்தரமாக கூறினார்.
அத்துடன் இந்த நாட்டில் நடந்து வரும் தேர்தல்கள் எவ்வளவு தவறுகளோடு நடந்து வருகின்றன என்பதை விளக்கினார். இந்த நாட்டில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் மக்களாட்சிக்கு எவ்வளவு முரண்பட்டு செயல்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அனைத்தையும் முறைப்படுத்த மாபெரும் முன்னெடுப்பைச் செய்து முன்னுதாரணமாக விளங்கியவர் சேஷன்.
ஒரு நாட்டில் தேர்தல் நடத்துவது பெரிதல்ல. அது எப்படி நடத்தப்படுகிறது என்பது தான் அந்த நாட்டு மக்களாட்சியின் தரத்தை வெளிப்படுத்துவதாகும் என்றார்.
மக்களாட்சியை உருவாக்குவது தேர்தல் தான். அந்த நிகழ்வு நியாயமாக, தூய்மையாக, கண்ணியமாக அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு உருவாக்கப்பட்டால் தான் அந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கம். அது கட்சி அரசாங்கம் அல்ல, கட்சிக்கான அரசாங்கமும் அல்ல.
தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்கும் போது, அது அனைவரையும் நோக்கி செயல்பட வேண்டிய அரசு. அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமான அரசாங்கமல்ல, அந்த அரசாங்கம். தங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்து செயல்படுவதே மக்களாட்சி!

எனவே, வாக்காளரின் உரிமைகள், கடமைகள், பொறுப்புக்கள் என்னென்ன?, அவற்றை அவர்கள் எப்படி நிறை வேற்ற வேண்டும் என்பதை குடிமக்களுக்கு புரிய வைப்பது மிக முக்கியமான பணி. அந்தப் பணியினை கல்விச் சாலைகளும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், பொதுக் கருத்தாளர்களும் காத்திரமாகச் செய்திட வேண்டும். ஆனால் இன்றுவரை அப்படிப்பட்ட செயல்பாடுகள் நடைபெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த அடிப்படைப் புரிதலை ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வியின் மூலம் புகட்ட வேண்டியது கட்டாயமாகும்.
இந்தக் கல்வியை அதாவது குடிமக்களாக எப்படி பொறுப்புடன் ஒரு நாட்டில் சமூகமாக வாழ்வது என்பதற்கு பள்ளியில் ஆரம்பித்து உயர் கல்வி வரை மாணவர்களின் மனங்களிலே ஆழமாக பதியும் வகையில் விதைத்திட வேண்டும். இது ஒரு காலத்தின் விதைப்பாக கட்டாயமாகச் செய்திடல் வேண்டும். இதை முறையாக காலத்தில் கட்டாயமாகச் செய்யாததன் விளைவு தான் இன்றைய அலங்கோலமாக மக்களாட்சிக்கு காரணமாகும்.
இன்றைய மக்களாட்சிக்கு சவாலாக இருப்பது நம் சமூகத்தில் உள்ள படிநிலை சாதிய அமைப்புக்கள். இந்த சமூக படிநிலை அமைப்புக்கள் தான் மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் காரணிகள். மேற்கத்திய நாடுகளில் முதலில் சமூகச் சீர்திருத்தம் வந்து விட்டது. அதன் பிறகே மக்களாட்சி உருவானது. எனவே, மக்களாட்சி காலூன்ற எளிதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் அது நடைபெறாத நிலையில் மக்களாட்சி உருவாக்கப்பட்டது.
மக்களாட்சியில் அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள், செயல்பாடுகள் மூலம் சமூக சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணித் தான் அரசமைப்புச் சாசனத்தில் எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்றித் தந்தார்கள்.
ஆனால், அந்த சட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தயார் செய்யப்படவில்லை. இதன் விளைவாக அரசு ஏழைகளுக்கு உருவாக்கித் தருகின்ற திட்டங்களையும், பதவிகளையும் திட்டமிட்டு மேல் தட்டு மக்கள் பறித்துக் கொள்கின்றனர்.
சமூகத்திற்குள் மக்களாட்சிக்கு எதிரான காரணிகள் அனைத்தும் அரசியலைப் பற்றிக் கொண்டன. இதன் தொடர்ச்சி தான் நடைபெறும் மக்களாட்சிக்கு முரணான செயல்பாடுகளாகும். அரசமைப்புச் சாசனம், விளிம்பு நிலை மக்களை பாதுகாக்கும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும், அரசு அலுவலர்களுக்கு உண்டு. இருந்தும் இதை அவர்கள் செய்வதில்லை. இதனை அமுல்படுத்த நீதிமன்றம் வரை செல்ல வேண்டி உள்ளது. இது சாதாரண மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்.?
இந்திய மக்களாட்சியின் வெற்றிச் சின்னங்கள் இரண்டு மட்டும் தான்.
ஒன்று ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது.
இரண்டு, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பது.
இவற்றைக் கடந்து மக்களாட்சியின் எந்த அடிப்படைக் கூறுகளையும் நாம் இந்திய சமூகத்திலும், இந்திய அரசியலிலும் பார்க்க இயலாது. இன்னும் அரசியல் கட்சிகளே ஜனநாயகப்படவில்லை என்பது தான் இன்றைய மக்களாட்சியின் சோகமான நிதர்சனம். எனவே இந்தியாவில் நடப்பது குறைந்தபட்ச மக்களாட்சியாகவும், பற்றாக்குறை மக்களாட்சியாகவும் அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.
மக்களாட்சி ஆழப்பட்டும், அகலப்பட்டும் விரிவடையும் போது அனைவருக்குமானதாக மக்களாட்சி மாறும்.
அதன் பலன்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைத்திடும். அதற்கான புரிதலும், தெளிவும், செயலும், உறுதியும் மக்களுக்கு வேண்டும். அவை தானாக உருவாவதில்லை. வலிந்து முயற்சி செய்து மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசும் அதற்கு ஆவண செய்ய வேண்டும்.
குறிப்பாக மக்கள் தொகை அதிகரித்த நாட்டில், ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு மிக்க நாட்டில் அரசாங்கத்தைப் பிடிப்போர், அரசாங்கத்தை தங்களுக்கானதான மாற்றிக் கொண்டு விடுவர். அரசாங்கத்தை யார் பிடித்தாலும் அவர்களுக்கு அது பணி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
எங்கு அரசியல் அறியாமை நிறைந்துள்ளதோ, அங்கு சுரண்டல் செயல்பாடு என்பது சாதாரணமாக நடந்தேறிவிடும். அங்கு எல்லா ஒழுங்கீனங்களும், முறையற்ற செயல்பாடுகளும் நடைபெறும். அப்படித் தான் மக்களின் உரிமையாகிய வாக்கினை கடையில் வாங்கும் பொருளைப்போல வாங்கி மொத்த வணிகம், சில்லறை வணிகமாக்கியுள்ளனர். இந்த முறைகேடுகளைக் களையாமல் விளிம்புநிலை மக்களுக்கோ ஏழைகளுக்கோ எந்த விமோசனமும் கிடைக்காது.
விலை இல்லா மடிக்கணினி கிடைக்கலாம், கலப்பான் கிடைக்கலாம், மிதிவண்டி கிடைக்கலாம், கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் நடத்தலாம், விலை இல்லா அரிசி, கோதுமை கிடைக்கலாம்.
ஆனால் அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதிகள், வாழ்வாதாரப் பாதுகாப்பு, சத்தான உணவு, நோயற்று வாழ சூழல் பாதுகாப்பு போன்றவையே அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும்.
அவற்றை கிடைக்காமலாக்கி, தன் வாழ்வுக்குத் தேவையான அடிப்படைகள் என்னென்பதையே அறிய முடியாதவர்களாக்கி வைத்துள்ளதால் தான் இலவசங்களுக்கு ஏழைகள் அலைகின்றனர். இலவசங்களால் அடிப்படை மாற்றம் ஒரு போதும் வராது என்பது அனைவரும் அறிந்து உள்ளனர்.
என் அடிப்படைத்தேவை இது தான் என்றுணரும் மக்களிடம் இலவசங்களைக் கொடுத்து மயக்க இயலாது. எந்தப் பொருளும் போராடிப் பெற்றால் அதற்கு மரியாதை உயரும். இலவசமாகப் பெறும் எதுவும் மரியாதையைக் கூட்டாது. உண்மையிலேயே ஏழைகளுக்குத் தரும் பொருள்கள் இலவசங்களே அல்ல, அப்படி பெயரைக் கொடுத்து மக்களின் உளவியலில் அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் மக்கள் எஜமானனாகவே பார்க்கப் பழக்கி விடுகின்றனர். இந்த அடிமை உளவியலில் மக்கள் ஊறிப்போய் அதிலிருந்து விடுதலை பெற இயலாமல் சிக்குண்டு கிடக்கின்றனர். இதனை மாற்றிட என்ன தேவை?
இதற்கு ஒரு புது அரசியலைக் கட்டமைக்க வேண்டும். அது தான் மாற்றத்திற்கான மேம்பாட்டு அரசியல். அது தான் மக்கள் அரசியல். பாராளுமன்றத்திற்கு நிகரான கிராம சபை அரசமைப்புச் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றம் ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்துவதின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
க. பழனித்துரை
பேராசிரியர்,
காந்திய செயற்பாட்டாளர்























Leave a Reply