மிக அதிக லாபம் தரக் கூடிய டாஸ்மாக்கின் தொழிலாளர்களை பல்லாண்டுகளாக தொகுப்பூதிய கொத்தடிமைகளாகவே வைத்திருக்கும் மன நிலையில் மாற்றம் வந்ததா…? உன்னதமான சேவை செய்யும் செவிலியர்களை தொடர்ந்து அடிமாட்டுக் கூலிகளாக தற்காலிக பணியிலேயே வைத்திருப்பீர்களா..? ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் சில காட்சிகள் மாற மறுப்பதேன்..?
59 வருட தொடர் அதிகாரம் திமுக, அதிமுக ஆட்சியாளர்களை நிலப் பிரபுத்துவ, பண்ணையார்த்தன மனநிலைக்கு கொண்டு சென்றது. சமூக நீதி, திராவிட மாடல்..என்பதெல்லாம் வெறும் சொல் அலங்காரமாகி அரசுப் பணிகளில் எல்லாம் அடி மாட்டுக் கூலியை நிர்ணயித்து தொகுப்பூதிய முறை என்பதாக காலம் காலமாக கொடூர உழைப்புச் சுரண்டலை செய்து வந்தனர்.
மிக லாபகரமாக செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்களைக் கூட 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம் என வாழஇயலாத சம்பளத்திலேயே வைத்து இருந்தனர். அடிமாட்டுச் சம்பளம் தந்தால், அங்கு வாழ்வியல் தேவைக்காக தவறு செய்யும் குறுக்கு வழிகளை அவர்களே தேடி கண்டைவார்கள். அது தான் நடந்து கொண்டிருந்தது.
தற்போதைய சூழலில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கு குறைந்தபட்சம் ரூ 30,000 தேவை. இதில் சமரசம் கூடாது. அதை தன் கடை நிலை தொழிலாளர்களுக்கு உத்திரவாதம் தரும் அரசே சிறந்த அரசாகும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை மதுபான விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதானது ஏமாற்றம் அளிக்கிறது.

இதன் மூலம் இதுவரை ரூ14,340/- ஊதியம் பெறும் உதவி விற்பனையாளர்களுக்கு இனி மாதம் ரூ.17, 925/- தான் கிடைக்கும்.
ரூ.15,530/- ஊதியம் பெற்று வந்த விற்பனையாளர்களுக்கு இனி ரூ.19,413/-கிடைக்கும்,
ரூ.17,850/- ஊதியம் பெறும் கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.22,313/-கிடைக்கும்.
இதன் மூலம் அரசுக்கு 110 கோடிகள் செலவாகும் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
மேற்படி டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுக்கு 50,000 கோடிகள் லாபம் ஈட்டுகையில், ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை நிர்ணயிக்காமல் வெறும் 25 சதவிகித உயர்வு என்பது போன ஆட்சியாளர்களைக் காட்டிலும் கொஞ்சம் பெட்டர் என்று சொல்ல முடியுமே தவிர, நியாயமான உயர்வு அல்ல.
தங்களில் வேலையை நிரந்தரப்படுத்தி கண்ணியமான ஊதியத்தை தவெக அரசு உறுதிபடுத்தும் என ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த டாஸ்மாக் தொழிலாளர்கள் குடும்பத்தினர் இந்த ஊதிய உயர்வு என்ற ஜால்ஜாப்பை ஏற்க மறுத்து போராடி கைதாகி வருகின்றனர்.

தற்போதைய படுமோசமான சம்பளத்தை அப்படியே இரட்டிப்பு ஆக்கி இருக்க வேண்டும். அதற்கு மொத்தம் சுமார் 450 கோடிகள் கூடுதலாகும். கடந்த ஆட்சியாளர்கள்; கணக்கில் காட்டாமல் விற்று பணம் ஈட்டி வீட்டுக்கு எடுத்துப் போன ரூ 30,000 ஆயிரம் கோடியை தடுத்து டாஸ்மாக்கிற்குள் கொண்டு வந்தாலே போதும். இந்த சம்பள உயர்வு துளியளவு கூட பாரமல்ல. அத்துடன் குடிக்கும் இடத்தை தூய்மையாக கழிவறை வசதிகளோடு பராமரிக்கலாம்.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் சில காட்சிகள் மீண்டும் அரங்கேறுகின்றன…!
திமுக ஆட்சியில் எத்தனையோ அடக்கு முறைகளை மீறி செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதற்கு காரணம் பல்லாண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் உயிரைக் கொடுத்து ஊனுருக வேலை பார்த்த செவியர்களை நிரந்தப்படுத்தி நியாயமான சம்பளம் தருவோம் என்ற திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை அரைகுறையாக செய்து அம்போவெனவிட்டுவிட்டது.
ஒரே வேலை தான் பணி நிரந்தரமானால் 48,000 சம்பளம்.
தற்காலிக வேலை என தொகுப்பூதியமானால் ரூ18,000 மட்டுமே.
அதிமுக ஆட்சியில் 8,000 செவிலியர்களை தொகுப்பு ஊதியத்திற்கு எடுத்து, அதில் 1,871 பேரைத் தான் நிரந்தப்படுத்தினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மேலும் கூடுதலாக நிறைய ஆட்கள் எடுத்தனர். ஆன போதிலும் 4,825 பேரைத் தான் நிரந்தப்படுத்தினார்கள்.
இப்படியாக 2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 15,300 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வழியே முறையாக தேர்வானவர்கள். இவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளில் பணி நிரந்தரப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் 6 ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே பணி நிரந்தமாக்கபட்டுள்ளனர். இன்னும் எட்டாயிரத்து சொச்சம் செவிலியர்கள் நிரந்தரமாக்கப்படவில்லை. இதற்காக அவர்கள் போராடி வருகின்றனர்.
தற்போதைய தவெக ஆட்சியாளர்களும் அதிமுக, திமுக பாணியில் தொகுப்பூதியத்திற்கே செவிலியர்களை எடுக்க துணிந்துள்ளதும், இருக்கும் செவிலியர்களை நிரந்தரப்படுத்தாமல் இருப்பதுவும் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தால் தீர்வில்லையே என்ற சோகத்தை செவிலியர்களிடம் உருவாக்கியுள்ளது.
செவிலியர் பணி என்பது உயிர்காக்கும் உன்னதப் பணி. அந்தப் பணியில் இருப்பவர்கள் தன்நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருந்தால் தான் நோயாளிகளுக்கு சிறப்புடன் பணியாற்றும் சூழல் உருவாகும். செவிலியர்களின் சேவையையும், உழைப்பையும் மதிக்க வேண்டியது ஒரு நல்லாட்சியின் கடமையாகும்.

அதனால் தற்போது தமிழகம் முழுமையும் செவிலியர்கள் நம்பிக்கை இழந்து களத்திற்கு வந்து போராடி வருவது கவலையளிக்கிறது.
தென்காசி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செவிலியர்கள் ஆர்பாட்டம் செய்துள்ளனர். நிரந்தர திறன் மேம்படுத்தப்பட்ட செவிலியர் பணியிடங்களை உருவாக்கி, நிரந்தர செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த அரசு, இன்று அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கவலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று (ஜூலை 11) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து செவிலியர்களும் தனித்தனியாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜூலை 14- ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும்,
ஜூலை 21- ஆம் தேதி ஒட்டுமொத்த அளவில் சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் போராட்டம் நடைபெறும்” என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.
ஆக, திமுக ஆட்சியின் போது பார்த்த போராட்டக் காட்சிகளே மீண்டும் இங்கே அரங்கேற ஆரம்பித்துள்ளன.
உளவியல் அறிஞர்கள் சொல்வது உண்மை தான் போலும்!
‘’ஒருவர் எதைக் குறித்து, யாரைக் குறித்து அதிகம் பேசுகிறாரோ, அதுவாகவே அல்லது பேசப்படுபவரைப் போலவே மாறிவிடுவார்…’’என்கிறார்கள், ஊளவியல் நிபுணர்கள்!
தற்போது அது தான் நடக்கவுள்ளதோ… என அதிர்ச்சியாகவுள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் திமுகவையும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் அடிக்கடி பேசுகிறார். அந்த வகையில் திமுக ஆட்சியின் சாயல் பல வகையில் இந்த ஆட்சியிலும் தொடர்வதை பார்க்க முடிகிறது.
உழைப்போருக்கு கண்ணியமான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்துவதே நல்லாட்சிக்கான இலக்கணமாகும்.
சாவித்திரி கண்ணன்






















சாயாயமே தவறு… அதை ஒரு அரசே விற்பனை செய்வதை அதை விட பெரிய தவறு….அன்று ஏதோ வேலை கிடைத்தால் போதும்… பிறகு நல்ல வேலை தேடலாம் என வந்தவர்கள் பலரை நான் நன்றாக அறிவேன்…. அதற்கு பிறகு வேறு பல நல்ல வாய்ப்புகள் வநத போதும் இதே வேலையில் தொடர்ந்ததோடு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்கள்….. இவர்கள் வாழ்க்கை தரம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை போய் ரகசிய ஆய்வு செய்யுங்கள் தெரியும்……
இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது வெட்கக்கேடு…..இதை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை…..
காட்சிகள் நிறைய மாற வேண்டி இருக்கிறது