சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தை அடியொற்றி நடத்தப்பட்ட ஆட்சிகளில் மிக முதன்மையானது ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியே! இதற்கு எக்கச்சக்க நிகழ்வுகள், சான்றுகள் உள்ளன. திராவிடம் என்ற மாய பிம்பத்தில் அச்சு அசலான ‘சனாதன மாடல்’ ஆட்சி நடத்தி மக்களை முட்டாள்கள் ஆக்கிய கலைக்கும் அர்த்த சாஸ்திரமே வழி காட்டியானது;
சம்பிரதாய முறைப்படியான திருமணம் என்பது திமுக தலைவர்களின் இல்லங்களில் புதிதல்லவே…!
துரைமுருகனின் பேத்தி திருமணம் வைதீக பிராமணர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் ஒலிக்க செய்து விக்கப்பட்டதை இன்று விமர்சிப்பவர்கள் சமீபத்தில் கலைஞரின் மகனும், ஸ்டாலின் தம்பியுமாகிய மு.க.தமிழரசு தம்பதி சகிதமாக திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி யாகம் நடத்தியது குறித்து பேசுவதில்லை.
ஏனென்றால், இவர்கள் திமுகவின் தலைமை குடும்பத்தை மாத்திரம் தங்க பாதாம் பாளத்தில் தாங்குவார்கள்!

சில பொதுவான உண்மைகளை பார்ப்போம்.
கெளடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டு இருப்பதைத் தான் இந்தியாவில் பல மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கின்றன!
”பொது மக்களை எப்போதும் முட்டாளாக வைத்திருக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வழி பொது மக்களை மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பேற்படுத்தி தருவது தான்…! அதற்கு தோதான அந்தணர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் அதே சமயம் அரசன் கடவுள், மதம் சார்ந்தவற்றில் நம்பிக்கை வைக்கக் கூடாது. எந்த அரசன் இதை சிறப்பாக செய்கிறானோ அவனது கஜானா நிரம்பி வழியும்” என்கிறார் சாணக்கியர்.
விருப்பு, வெறுப்பில்லாமல் ஒரு யதார்த்ததை நாம் அணுக முடிந்தால், நான் அறிந்த வரை சுதந்திரத்திற்கு பிறகு தமிழ் நாட்டில் அமைந்த ஆட்சிகளில் சாணக்கியரின் இந்த அர்த்த சாஸ்த்திர அறிவுரையை மிக அதிகமாக பின்பற்றியது மு.க.ஸ்டாலின் ஆட்சி தான். இதை சிறப்பாக நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலினுக்கு வாய்த்த தளபதி தான் முன்னாள் அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.

சிலர் நீண்ட நெடிய துயிலில் இருந்து விடுபட்டவர்களாக தற்போது இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு ஆகா, திராவிட கொள்கை என்னாவது? எனக் கேட்கிறார்கள்!
இவர்கள் திமுக ஆட்சியில் நடைபெற்ற எண்ணற்ற மூட நம்பிக்கை அமலாக்கத்தின் போது கனத்த மெளனம் சாதித்தார்கள்!
அன்று ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோவிலில் பெரும் பொருட் செலவில் சத்ரு சம்ஹார யாகம் நடத்திய போது அதற்காக காலை ஆறு மணி தொடங்கி பத்து மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடாமல் வேத விற்பன்னர்கள் வேள்வி செய்த போது மெளனித்து இருந்தார்கள்!

முருகன் மாநாடு என்று மூன்று நாள் மாநாடு நடத்தி அரசாங்க பணத்தை அள்ளி இறைத்த போது, அமைதி காத்தார்கள். பள்ளிகளில் மாணவர்கள் கந்த சஷ்டி வசத்தை ஒப்புவிக்க வேண்டும் எந்த அந்த மாநாடு தீர்மானித்த போது ‘பெரியாரின் உழைப்பெல்லாம் வீணாகிறதே’ என்று வருந்தவில்லை. முருகனுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் 200 அடி உயர சிலை அமைக்க அறிவித்த போது, செவிடர்களாக நடித்தார்கள்!
முதல்வர் தலைவராக உள்ள செம்மொழி ஆய்வு மையத்தில் அகத்தியர் மாநாடு நடத்தி சதி நிறைந்த சனாதன கருத்தாக்கத்தை அரசு செலவில் செய்த போது எதிர்க்கவில்லை.
சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்ற போர்வையில் நம் மக்களை சனாதனிகள் நிரந்தர அடிமையாக்கி வைத்திருந்ததை சமீபத்திய வரலாற்றில் சமரசமின்றி எதிர்த்து சாதனை புரிந்த பெரியார் வழியில் வந்தவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டே இதனை செயல்படுத்தியது தான் ஸ்டாலின் அரசின் ஆகப் பெரிய சாதனை என்பதா? சோதனை என்பதா?
ஆனால், இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி எனது அறம் ஆன்லைன் டாட் இன்னில் ஏகப்பட்ட கட்டுரைகள் நான் எழுதியுள்ளேன்.
‘சனாதான ஆட்சி தான் இந்து அறநிலையத் துறையில்’
‘தமிழக அறநிலையத் துறை பாஜகவுக்கான போட்டிக் களமா?’
‘திராவிட மாடலா? திக்குத் தெரியாத மாடலா?’
போன்ற தலைப்பிலான கட்டுரைகளில் திமுக ஆட்சி செயல்படும் விதங்களை விவரித்துள்ளேன்;
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டிலே வேறெந்த துறைகளையும் விட இந்து சமய அறநிலையத் துறை தான் ஜெகத்ஜோதியாக பிரகாசித்தது…! பிராமண அர்ச்சகர்கள் காட்டில் அடை மழை பொழிந்தது! இங்கு 100 சதவிகித சனாதனம் சமரசமின்றி அமலானது! துர்கா ஸ்டாலின் அமையார் தான் அற நிலையத் துறையின் அறிவிக்கபடாத அமைச்சராக வலம் வந்தார். அவர் கட்டளைக்கு அடி பணிந்து சேவை செய்வது மட்டுமே சேகர்பாபு செய்த வேலையாகும்.

சுகாதாரத் துறை தொடங்கி பள்ளிக் கல்வி வரை எல்லா துறைகளிலும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், போராட்டங்கள்.. நடந்து கொண்டிருந்த நிலையில், . திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை அர்ச்சகர், ஓதுவார்,பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத் தொகையும், மாணவர்களுக்கு உயர்ந்தப்பட்ட ஊக்கத் தொகையும் ஆச்சரியப்பட வைத்தன.
அறநிலையத் துறை திராவிடமாடல் ஆட்சியில் அதிர்ஷ்டக்காரத் துறையாக உள்ளது என்பதை யார் ஏற்கிறார்களோ இல்லையோ.., பார்ப்பன அர்ச்சகர்கள் பரவசமாக ஒத்துக் கொள்கிறார்கள்…!
அர்சகர்கள், ஓதுவார்கள் போன்றோர் எந்த கோரிக்கை வைத்தாலும் திராவிட மாடல் ஆட்சியில் உடனடியாக நிறைவேற்றி தந்தார்கள்.
அதுவும் பாஜக ஆதரவு பார்ப்பன பத்திரிகையாளர்களான ரங்கராஜ் பாண்டே, துக்ளக் ரமேஷ், தினமணி வைத்தியநாதன்..ஆகியோர் அறிவிக்கப்படாத அதிகார மையமாக விளங்கினார்கள்.
நம்ம ஸ்கூல் என்ற பெரிய பிராஜக்ட்டை டி.வி.எஸ் வேணு சீனிவாச ஐயங்காரிடம் ஒப்படைத்தார்கள்.
கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்து, தமிழக அறநிலையத்துறை 2019ல் தான் அரசாணை வெளியிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் பெரிதும் அதிகரிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டே”கோவில் குடமுழுக்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இணைத்து நடத்துங்கள்” என அதிகாரபூர்வமாக தீர்ப்பு தந்த பிறகும் அதை அமல்படுத்தாமல் நூறு சதவிகிதம் சமஸ்கிருதத்தில் மட்டுமே – அதுவும் பிராமண அர்ச்சகர்களை மட்டுமே -வைத்துக் கொண்டு யாக சாலையிலும், கோவில் கோபுரத்திலும் தமிழ் ஓதுவார்களை புறக்கணித்து நடத்தியது திராவிட மாடல் அரசு. இதை எதிர்த்து பெ.மணியரசன் அவர்களின் தமிழ் தேசிய பேரியக்கம் பல போராட்டங்களை நடத்தியது.

அடிமைகள் ஆட்சி என்று விமர்சிக்கப்பட்ட சென்ற அதிமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டு நான்கு கல்லூரிகள் நடைமுறைக்கு வந்தன. இதில் பேராசிரியர் தொடங்கி அனைத்து வேலைகளுக்கும் இந்துக்கள் மட்டுமே என்ற வகையில் செயல்பட்டது. அத்துடன் இதில் சைவ சித்தாந்தம், ஆன்மீகம் போன்ற ஆறுமாத கோர்ஸ் தொடங்கி ஏராளமான மாணவர் சேர்க்கை நடந்தது.
இக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கமே பொருளாதாரத்தில் பின்தங்கிய ( கவனிக்கவும் சமூக தளத்தில் அல்ல) ஏழை எளிய மாணவர்களுக்குக் குறைந்த செலவில் தரமான கல்வி வழங்குவது தான் என அறிவித்த திராவிட மாடல் அரசு கல்வி கட்டணத்தில் இப்படியான மாணவர்களுக்கு முழு விலக்கு அளித்தது.
சனாதனம் குறித்து உதய நிதி பேசியதற்கு பரிகாரம் செய்ய தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்று (பார்ப்பன) ஜீயர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து பாதபூஜை செய்த போது இன்றைக்கு விமர்சிப்பவர்கள் ஏனோ அமைதி காத்தார்கள்!

பார்ப்பன வேத விற்பன்னர்கள் சென்ற ஆட்சி காலத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து பூஜை, பரிகாரங்கள் செய்து போன புகைப்படங்களும், காணொளியும் அன்று வெளியான போதும் பலர் அமைதி காத்தனர்.
‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டு, ‘சனாதன மாடல்’ அரசை நடத்தி மக்களை முட்டாள்களாக்க முடியுமென்றால்..,
”சமூக நீதி’ ‘செக்யூரியலிசம்’ என்று பேசிக் கொண்டு, ‘என்னால் திமுகவை விட சிறப்பான சனாதன ஆட்சி தரமுடியும்’ என்று தற்போது ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் அண்ணாமலை துணிந்துள்ளார்…!
இந்த பாசாங்கு அரசியலுக்கு பாதை போட்டுத் தந்தது திரு.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தானே!
கட்சி, தனிநபர் ஈர்ப்பு என்பதைக் கடந்து நடக்கும் யதார்த்தங்களை உள்வாங்கி உணர்ந்து அரசியலை தீர்மானிக்க மக்கள் பழக வேண்டும்.
சாவித்திரி கண்ணன்






















Leave a Reply