காதலுக்கும், ஜனநாயகத்திற்கும்  எதிரான பயங்கரவாத சட்டமே “லவ் ஜிகாத்”

அருண் நெடுஞ்செழியன்

இந்தியாவிலே உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டமானது,  இயற்கையான காதல் திருமணத்தை தடை செய்வதன் வழியே இயற்கையான மானுட உணர்வுக்கும், காதல் வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்துகிறது. அங்கே போலீசாருக்கு தினசரி யார்,யாரை காதலிக்கிறார்கள் என தேடியலைந்து காதலர்களை கைவிலங்கிட்டு பிடிப்பது தான் பிரதான வேலையாகிவிட்டது! ஜனநாயக குடியரசு ஆட்சியில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமையை இந்த சட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது உ.பிஅரசு.

இஸ்லாமிய மக்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, ஒடுக்க வழி செய்கிற இச்சட்டத்தின் பெயரால் இதுவரை சுமார் ஒரு டசன் இஸ்லாமியர்கள் மீது உத்திர பிரதேச போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இவை போக உத்திர பிரதேசம் இத்தா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு காதல் தம்பதி, உத்திர பிரதேசத்திலிருந்து தில்லிக்கு தப்பி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என தில்லி நீதிமன்றத்திடன்  முறையிட்டுள்ளது. எந்தவித ஆதரமும் இன்றி கண்மூடித்தனமாக இஸ்லாமிய மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு இச்சட்டம் கையாளப்பட்டு வருவதாக நீதிமன்றம் கண்டனம் செய்துள்ளது.

மொரதாபாத்தில் பஜரங் தல் அமைப்பின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட இரு இஸ்லாமிய சகோதரர்களை போதிய ஆதாரமின்றி கைது செய்ததாக கூறி உத்திர பிரதேச நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆயினும் அது போலவே முசாபர்நகர்  மாவட்டத்தைச் சேர்ந்த நதீம் மீது லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் “காதலிப்பது தனி மனித சுதந்திரம். அதை தடுக்க முடியாது. அதேபோல, மதம் மாற்றுவதற்காகவே அந்த பெண்ணை காதலித்தார் என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’’ எனக் கூறி நதீமை கைது செய்ய தடை விதித்தது.

மன்னராட்சி காலம் மற்றும் காலனிய காலத்தில்  நிலவிய கண்மூடித்தனமான மக்கள் விரோத, சமூக விரோத கறுப்புச் சட்டங்களை ஜனநாயக குடியரசு ஆட்சியின் பெயராலேயே தற்போது ஆர் எஸ் எஸ் தூண்டுதலில் பாஜக அமல்படுத்தி வருகின்றது. ஹிட்லர் ஆட்சிகாலத்தில் யூதர்களை ஒடுக்குவதற்கு  கொண்டு வரப்பட்ட “நியூரம்பெர்க் சட்டம்”போல குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பாஜக, தற்போது கறுப்பின மக்களை அமெரிக்க வெள்ளையர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை செய்த (1935 -42 ) வாஷிங்டன் மாகாணத்தின் காலவதியான சட்டத்தை (Anti-Interracial Marriage Laws)  மாற்று மத திருமண தடைச் சட்டத்தை சுமார் 85 ஆண்டுகளுக்கு பின்பாக இந்தியாவிலே கொண்டு வந்துள்ளது.

.உத்திர பிரதேச மாநிலத்தை இந்து ராஷ்டிர இந்தியாவின் பரிசோதனைக் களமாக  ஆர் எஸ் எஸ் மாற்றி வருவதையே இச்சட்டம் எடுத்துக் காட்டுக்கிறது. ஜனநாயக குடியரசு ஆட்சியில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் சட்டப்பூர்வமாக பாஜக யோகி அரசு பறிக்கிறது. உத்திரப்பிரதேசத்தை அடுத்து பாஜக ஆட்சி செய்கிற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமலாக்குவதற்கு பாஜக திட்டமிட்டுவருகிறது.

இயற்கையான காதலுக்கும் லவ் ஜிகாத்சட்டத்திற்குமான முரண்பாடு

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்,

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்,

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்,

கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்,

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!”

என்றான் மகாகவி பாரதி.

சுதந்திரக் காதலானது சாதி மத பேதத்திற்கு அப்பாற்பட்டது. நாகரீக மானுட வாழ்வின் சாரமாகவும், ஆன்மாகவும் திகழ்கிறது. மதப் பாகுபாட்டால் காதலை தடுக்கிற சட்டமானது எதார்த்த வாழ்கையிலே காதலின் இடத்தை மதத்திற்கு பின்னே வைக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களின் மதப் பித்து நிலையை மானுடக் காதல் வரலாறு தோறும் கடந்தே வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு கோரிய ஜின்னா, ரத்தன்பாய் பெட்டிட் என்ற பார்சி பெண்ணை காதலித்து மணம் புரிந்தார். ஜின்னாவின் வேண்டுகோளால் இஸ்லாம் மதம் தழுவிய ரத்தன்பாய் தனது காதலுக்காக உற்றார் உறவினரின் கடுமையான விமர்சனத்திற்குள்ளானார்.

கடும் பார்சி மதப் போக்காளர்கள், ரத்தன் குடும்பத்திற்கு பல நெருக்கடிகளை கொடுத்தனர். அது போலவே இஸ்லாமிய கடும் போக்காளர்கள், ஜின்னாவை கடுமையாக விமர்சனங்களால் தாக்கினர். ஆனாலும் இவர்களின் காதலும் வாழ்வும் விமர்சனங்களைக் கடந்து பல்லாண்டுகாலம்  தொடர்ந்தது. மற்றொரு உதாரணமாக நேருவின் செல்ல மகள் இந்திரா காந்தியைக் கூறலாம்.இந்திரா பார்சியரான பெரோஸ் காந்தியை காதலித்து மணம் புரிந்தார்.

இன்றைய பாஜக தலைவர் குடும்பங்களிலேயே சிலர் மாற்றுமதத்தில் திருமண உறவு வைத்துள்ளனர். சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட சிலர் இந்த லவ்ஜிகாத் சட்டத்திற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது!

இது போல இந்திய வரலாற்றிலிருந்து பல உதாரணங்களை கூறலாம். ஏன் தற்போது அமெரிக்க துணை அதிபராக அறிவிக்கப்பட்ட  இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்த இந்து பிராமண தாய்க்கும் ஜமைக்கிய கிருத்துவ தந்தைக்கும் பிறந்த மகளாவார்.’லவ் ஜிகாத்’ என கூப்பாடு போடுகிறவர்கள் தங்களது ஆன்மாவை  மத அடிப்படைவாதத்திடம் அடமானம் வைத்து விட்டதால் சுதந்திர காதலின் மானுடத் தன்மையை விளங்கிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளனர்.

நாடாளுமன்ற சட்டத்திற்கும் “லவ் ஜிகாத்” சட்டத்திற்குமான முரண்பாடு

இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய ஆணும், இந்து மத நம்பிக்கையுடைய பெண்ணும் காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும்,அப்பெண்ணை திட்டமிட்டு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றுகிற காரணத்திற்காகத்தான் என இந்துத்துவ  அடிப்படைவாதிகள் ஒரு மத ரீதியான கோட்பாட்டை நம்பிக்கையுடைய காதல் திருமணத்தின் மீது புனைகின்றனர்.

இந்த மதவெறி கோட்பாடே தற்போது  “லவ் ஜிகாத்” சட்டமாக அமலாக்கப்படுகிறது. இச்சட்டத்தின்படி  ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது.இவ்வாறு மணம் புரிந்த இஸ்லாமியரை  பிணையில் வெளிவர முடியாத கடும் பிரிவுகளில் கீழ்(ஆள் கடத்தல் உள்ளிட்ட) கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டமானது நேரு காலத்தில் இயற்றிய திருமண சிறப்புச் சட்டம் 1955 ஐ நேரடியாக மீறுகிறது .திருமண சிறப்புச் சட்டமானது  மாற்று மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு இடையிலான  திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து ஏற்கிறது. சிறப்பு திருமண சட்டத்தின்படி மாற்று மதக் காதலர்கள், திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னராக தங்களது விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும். இது அவசியமற்ற நடைமுறை என்றாலும் மாற்று மத காதல் திருமணத்தில்  மதத்திற்கு எந்த இடமும் இல்லை என்பதை சட்டமாக அங்கீகரித்து ஏற்கிறது.

இந்திய அரசியல் சாசனமானது இந்தியாவில் ஆறு வகையான சுதந்திரங்களை சட்டபூர்வ உரிமைகளாக வழங்குகிறது. சுதந்திர உரிமை சரத்துக்கள் 19 முதல் சரத்து 22 வரையிலும் குடிமகன்களுக்கான சுதந்திர உத்திரவாத உரிமையை வழங்குகின்றன. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21) சட்டமானது தனி நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது.

நகர்ப்புற நவீன வாழ்க்கை நிலைமையில் இவன் இஸ்லாமியனா கிருத்துவனா, இந்துவா என தேர்ந்தெடுத்து காதல் வருவதில்லை.காதலின் ஆன்மாவே நிறம் மதம் மொழி இனம் கடந்த பேரன்பில் வாழ்கிறது.மாறாக குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஆணை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண் காதலிக்கவும் கூடாது மனம் புரியவும் கூடாது என ஒரு சிவில் சமூக அரசு தடை செய்தால்,பிரச்சனையானது மதம் பற்றின அரசின் கண்ணோட்டத்தில் உள்ளதே தவிர மாற்று மத காதலர்களிடம் இல்லை.

மாற்று மதக் காதலர்களும் மாற்று சாதி காதலர்களும் தான் இந்திய சமூகத்தின் சாதி மத இறுக்கத்தை கட்டுடைக்கிற சக்திமிக்க கருவிகளாக திகழ்கின்றனர். ஆகவே தான் காதல் தொடர்பான பிரச்சனைக்கு முன்னே மத நிறுவனங்களும் சாதி நிறுவனங்களும் செய்வதறியாது திகைக்கிறது. லவ் ஜிகாத் ஒரு மதத்திற்கு எதிரான சதியை புனைவதுபோல சாதி ஜிகாத்தும் சாதிமறுப்பு காதலுக்கும் திருமணத்திற்கும் எதிராக புனையப்படுகிற கதையாடலாக உள்ளது.

லவ் ஜிகாத் சட்டம், தனிப்பட்ட நபரின் காதல் சுதந்திரத்தை இயற்கை தேர்வை சட்டபூர்வமாக பறிக்கிறது.

ஆகவே, அரசுக்கு குடிமக்களின் சுதந்திரமான காதல் மீது எந்த கட்டுப்பாடும் இருக்கக் கூடாது, இருக்க வேண்டிய அவசியமும் இல்லை!

ஆதாரம்:

https://timesofindia.indiatimes.com/india/love-jihad-11-of-family-booked-in-up-6-in-jail-reward-of-rs-25000-on-5-missing/articleshow/79847557.cms

https://www.livemint.com/opinion/online-views/love-jihad-laws-are-a-backlash-to-india-s-own-progress-11608564795399.html

https://theprint.in/pageturner/excerpt/jinnah-married-parsi-ruttie-after-her-conversion-to-islam-slander-boycott-followed/569319/

https://scroll.in/latest/982060/love-jihad-14-members-of-muslim-mans-family-arrested-under-anti-conversion-law-in-uttar-pradesh

https://indianexpress.com/article/opinion/columns/the-liberty-to-love-kerala-hadiya-love-jihad-4914406/

https://indianexpress.com/article/opinion/columns/love-jihad-women-freedom-the-love-jihad-spectre-7049722/

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time