சாத்தியமாகுமா சர்சைக்குரிய மசோதாக்கள்…?

-சாவித்திரி கண்ணன்

நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்க அனுமதிக்கலாமா?ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆபத்தான மசோதாக்களை நிறைவேற்றவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு  ஆட்சி என்றால், அது பாஜக ஆட்சியாகத் தான் இருக்க முடியும்.நாளை ஜூலை 20 கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்  சரமாரியாக அறிமுகப்படுத்தவுள்ள சர்ச்சைக்குரிய மசோதாக்கள் ஒரு பார்வை;

தேசியப் பாடலை அவமதிப்பதைத் தண்டிக்கும் மசோதா, 2026:

‘வந்தே மாதரம்’ பாடுவதை நிர்பந்திக்கக் கூடாது என சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை நேரு, ராஜாஜி போன்ற அன்றைய தலைவர்கள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தி இந்தப் பாடலை வலியுறுத்தி நிர்பந்திக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அந்த வகையில் இது வரை விருப்பப் பாடலாக மட்டுமே இருந்த வந்தே மாதரத்தை கட்டாய தேசிய பாடல் ஆக்கும் மசோதாவை பாஜக அரசு கொண்டு வருகிறது.

அதன்படி இந்தப் பாடலை பாட மறுத்தாலோ, அல்லது இதற்கு இடையூறு செய்தாலோ மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான மசோதா ஒன்றை 1971-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வருகிறது பாஜக அரசு. இதை எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கவுள்ளன? ஆதரிக்கவுள்ளன? அல்லது இரண்டுங்கெட்டானாக வெளி நடப்பு செய்து பாஜகவிற்கு விசுவாசத்தை காட்டவுள்ளன என்பது விரைவில் தெரிந்துவிடும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, 2026: தாமதமாகப் பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான விதிகளை இச்சட்டம் மூலமாக கடுமையாக்குகிறார்கள்!  குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து  பெறாவிட்டால் இந்தக் குழந்தை இந்தியப் பிரஜை தான் என்பதை நிரூபிக்க படாதபாடுபட வேண்டியதாகிவிடும். அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பதிவாகும் பிறப்பு, இறப்புகளுக்கு முதல்-வகுப்பு மாஜிஸ்திரேட் அல்லது நிர்வாக மாஜிஸ்திரேட்டின் முன் அனுமதி கட்டாயமாக்கப் போகிறார்கள்!  மேலும் பிறப்புச் சான்றிதழுக்கு பெற்றோரின் ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 வருமான வரித் திருத்த மசோதா, 2026: இந்தத் திருத்த மசோதாவின் முதன்மை நோக்கமே ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாகும்.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) மற்றும் சர்வதேசத் தீர்வுகள் வங்கி (BIS) ஆகியவை இந்திய அரசுப் பத்திரங்களில் (Government Securities) முதலீடு செய்வதன் மூலம் பெறும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு (Capital Gains) முழுமையாக வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது இந்தியர்களுக்கு இல்லாத சலுகையை வெளிநாட்டாருக்கு தரவுள்ளனர்.

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Amendment Bill, 2026): இத்துடன் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் வெளிநாட்டு நிதி பெற்று இங்கு தொண்டு நிறுவனங்கள் நடத்தி வந்ததற்கு செக் வைக்கும் விதமாக கடந்த 2026 மார்ச் 25-ந் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்மசோதா, இந்தத் தொடரில் விவாதத்திற்கும், ஒப்புதலுக்கும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எதிர்ப்பட வேண்டிய இந்த மசோதாவை எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கும் என்பதன் மூலம் மாறிய அரசியல் சூழல்களை நாம் அறிய முடியும்.

அதே சமயம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பாஜக அரசு.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பெண்கள்  இது அறிமுகப்படுத்தப்பட்ட போது  மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் அது நிறைவேறவில்லை.

தற்போது சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிளந்து சில எம்.பிக்களை தூக்கி இருந்தாலும் கூட இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு  22 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவின் ஆதரவும் தேவையானதாக இருக்கிறது.

இது விஷயமாக பாஜக முக்கியஸ்தர்கள் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் தற்போதைய தமிழக அரசியல் சூழலில்  பாஜக ஆதரவு நிலையை திமுக உடனே எடுக்க முடியாது. தவெக அரசை பாஜகவின் செல்லப் பிள்ளை என நாங்கள் விமர்சிக்கும் நிலையில் திடீரென தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆதரித்தால்  திமுகவின் எதிர்காலமே சூனியமாகிவிடும் எனவே  தற்போது சாத்தியமில்லை எனக் கூறிவிட்டார்களாம்!

வாழ்க, ஜனநாயகம்!

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time