இந்தியாவின் அறிவாற்றலை பறைசாற்றும் புகழ்மிக்க இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த 25 சதவிகித ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்ற செய்திகள் மக்கள் மத்தியில் பேதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சிகள் முடக்கப்படும் பின்னணிகள் குறித்த அலசல்;
திறமையான விஞ்ஞானிகள் ஏன் இந்திய பொதுத்துறை நிறுவனமும், பெருமை சேர்க்கும் ஆராய்ச்சி மைய ஐஎஸ்ஆர்ஓ வில் இருந்து விலக வேண்டும்?
இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு, குறிப்பாக “ககன்யான் “ போன்ற முக்கியமான முயற்சிகளுக்கு இதனால் குந்தகம் விளையுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் விலகி புதிதாக தோன்றியுள்ள தனியார் ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் நகரத்தொடங்கியுள்ளது மூளைத் திருட்டு (brain drain) என பலர் விமர்சனம் செய்கின்றனர்.
ஐஎஸ்ஆர்ஓ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் , சந்திராயன் மற்றும் “ககன்யான்” போன்ற செயற்கை கோள்களை வடிவமைத்து இயக்கிய விஞ்ஞானிகளை், இந்திய அரசின் நிறுவனமான ISRO விலிருந்து இவ்வாறு விலகுவது ஒரு பின்னடைவு என்று கூறியுள்ளார். ஆனால் தற்போதைய தலைவரான திரு நாராயணனோ இது ஒரு சாதாரண நிகழ்வு தான், இதில் கவலைப்பட ஒன்றுமில்லை “ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், 2020ல் இவ்வாறு ஆராய்ச்சியாளர்களும் , விஞ்ஞானிகளும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதை ஊக்கப்படுத்திய மோடி அரசு அதற்காக புதிய விண்வெளி கொள்கை ( Indian Space Policy) ஒன்றை 2023ம் ஆண்டு அறிவித்தது. அதில் தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளி துறை ஆராய்ச்சியில் பங்கெடுக்க அனுமதித்தது. இதன் மூலம் 2026 ல் 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன, அவற்றின் முதலீடு 50,000 கோடிகள் என அரசு தரப்பு கூறுகிறது.

பிக்செல், ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ், துருவ் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ் ,மற்றும் பெல்லாடிக்ஸ் ஏரோ போன்ற பல்வேறு அந்நிய நிறுவனங்கள் களத்தில் உள்ளன. இத்தகைய நிறுவனங்களில் கிடைக்கும் அதிக சம்பளத்தை நோக்கி ஐஎஸ் ஆர்ஓ பணியாளர்கள் நகர்வதை முன்பு ஊக்குவித்த மோடி அரசு இப்பொழுது இதை தடுக்க புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இஸ்ரோ அறிவித்த Gaganyaan G1, SSLV-L1, GSLV-F17, PSLV-N1 உள்ளிட்ட பல உயர்மட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி தள்ளிப்போனதும் விஞ்ஞானிகளிடையே விரக்தியை விதைத்து அவர்கள் விலக காரணமானதாக சொல்லப்படுகிறது.
தனியார்மயத்திற்கு வழிவகுத்து கொள்கை மாற்றங்களை அறிவித்த மோடி அரசு கடந்த சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் விலகிச் சென்ற நிலையிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, தற்போது அத்தகைய தனியார் நிறுவனங்களை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் நகருவதை தடுப்பதாக பாவனை காட்டுவது என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் யுக்தியாகும்.
நல்ல சம்பளம், நல்ல முன்னேற்ற வசதிகள், நல்ல சூழல் ஆகியவற்றை எதிர்பார்த்து இந்த ஆராய்ச்சியாளர்கள் நகருவது அவர்களின் சுய நலத்தை காட்டுகிறதா? அல்லது இந்திய பொதுத் துறையில் (ஐஎஸ்ஆர்ஓ வில்) நிலவி வரும் அசாதாரண அல்லது விரும்பத்தகாத சூழல்களை படம் பிடித்து காட்டுகிறதா?
இந்தியாவின் அறிவுத்தேடலும்,அதற்கான அடித்தளமிடுதலும் அரசின் உரிய கவனத்தை இதுகாறும் பெற்றுள்ளதா?
அறிவுசார் பொருளாதார முன்னேற்றத்தை அடைய விரும்பும் நாடாக இந்தியா தன்னை கருதுகிறது, அதற்கான டெமாக்ரபிக் டிவிடெண்ஸ் இந்திய நாட்டில் நிரம்ப உள்ளது என்று கூறும் இந்திய ஆட்சியாளர்கள் , 5 டிரில்லியன் பெறுமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டி பிடிக்கும் என்று கூறும் ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ( R&D) இது காறும் செய்தது என்ன? எனில். இஸ்ரோவில் சுமார் 2,600-க்கும் மேற்பட்ட பணி இடங்களை நிரப்பாமல் அலட்சியம் காட்டுவது ஏன்?

மொத்த உற்பத்தி மதிப்பில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்திய அரசு செலவிட்ட தொகை மொத்த GDP யில் 0.7% மட்டுமே . இதை பிற நாடுகள் ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவான தொகையாகும். (அமெரிக்கா: 3.5% of GDP, இஸ்ரேல் : 5%, தென் கொரியா : 5%, சீனா : 2.5% செலவிடுகின்றன) உலக நாடுகள் சராசரியாக 1.8% அளவு ஆராய்ச்சிகளுக்காக செலவிடும் பொழுது இந்தியா இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செயல்படுவது வேதனை. இதனால் ஆராய்ச்சிக்கான கட்டமைப்புகள், ஆற்றலை பெருக்குதல், துணிகரமான முயற்சிகள் ஆகியவை இந்திய நாட்டில் முடக்கப்படுகின்றன.
2024-ல் வெளி வந்த குளோபல் இன்னொவேஷன் இன்டெக்ஸ் அடிப்படையில் இந்தியா 39-வது வரிசையில் உள்ளது. இந்தியா பத்து லட்சம் நபர்களில் 255 முழுநேர ஆராய்ச்சியாளர்களை (Full time Equivalent Researchers) கொண்டுள்ளது எனினும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் . எடுத்துகாட்டாக அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 4,800 ஆகவும்,ஜெர்மனியில் 5,400 ஆகவும் உள்ளது .
மற்றொரு அம்சமாக, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளில் 75% உரிமைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் தான் பதிவு செய்துள்ளன. இந்தியப் பணியாளர்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களே இந்த காப்புரிமைகளை பெற்றுள்ளன என்பது விளங்கும். ஆற்றல்கள் இந்தியரிடம் இருக்கும் பொழுது , காப்புரிமைகள் பெற தேவையான சூழல்களும் உதவிகளும் இந்தியர்களுக்கு ஏன் இன்னும் கிட்டவில்லை, அதற்கான முயற்சிகளில் மோடி அரசு ஈடுபடவில்லை என்பது வேதனையாகும்.
இத்தகைய, அக்கறையின்மை, மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பது, ஆராயச்சி மனப்போக்கை, கேள்வி கேட்கும் பக்குவத்தை வெறுத்து ஒதுக்குவதென்பது இன்றைய ஆட்சியாளர்களின் குணநலன்களாக உள்ள நிலையில், ஆராய்ச்சிக்கான சூழல் சுருங்குகிறது. இத்தகைய குறைபாடுகள் இந்திய ஆட்சியாளர்களின் மூலம் மட்டுமே விளைந்தனவா? அல்லது இந்திய சமூக அமைப்பின் குறைபாடா ?அல்லது இந்திய அரசமைப்பு இயக்கத்தில் உள்ள குறைபாடா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

# கல்வியமைப்பில் உள்ள குறைபாடுகள் – தேர்வுகளின் அடிப்படையில் கல்வி வளர்ச்சி, பல்கலைகழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் இருப்பது, அரசு அதற்கான ஊக்கங்களை அளிக்க தவறுவது.
# ஆராய்ச்சி நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டில் இயக்குவது- அதிகாரிகளின் மெத்தனமான நடவடிக்கைகள்,கட்டுப்பாடுகள் இத்துடன் சேர்த்து புதிய முயற்சிகளுக்கு தடை போடுதல் ஆகியன.
# தட்டுத் தடுமாறும் தனியார் அமைப்புகள்- தனியார் மயத்தை அரசுகள் ஊக்குவித்தாலும் தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை என்பது மிக மிக சொற்பமானது, அவர்களின் கவனமெல்லாம் லாபத்தை பெருக்குவதில் தான் உள்ளதே ஒழிய புதிய கண்டுபிடிப்புகளை ஆபத்துகளை எதிர்கொள்ள திராணியற்றவை.
தனியார் நிறுவனங்கள் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி யை கைபற்ற முயல்கிறார்களே ஒழிய அவற்றை வளர்த்தெடுப்பதில் – ஆராய்ச்சிகளில் இறங்குவதில்- தனது கவனத்தை செலுத்தவில்லை.
பாஜக அரசின் பிற்போக்குத்தனங்கள் யாவும் இந்திய ஆராய்ச்சி துறையை நோக்கி இளைய தலைமுறையினரை இழுப்பதற்கு உள்ள இடர்ப்பாடுகளாக உள்ளன. டெமாக்ரபிக் டிவிடென்ஸ் இந்தியாவிற்கு இருந்தாலும் அதை பயன்படுத்த இந்திய அரசால் இயலவில்லை.
மேற்கூறிய இடர்ப்பாடுகளை களைய அரசு முயற்சிக்க வேண்டும் . கல்வி கொள்கையில், ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில், ஆராய்ச்சி நிறுவனங்களை, அதன் நிருவாகத்தை மாற்றி அமைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை வளர்த்தல்
முயற்சியாளர்களை ஊக்குவித்தல், அவர்களுக்கு உதவுதல் என்ற முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் சூழலில், இந்த ஆண்டுக்குள் ஏழு விண்கலங்கள், ஆறு செயற்கைக் கோள்களை, இறுதி செய்யும் கட்டாயத்தில் உள்ள இஸ்ரோ, தன் இலக்கை நிறைவேற்றுவது பெரும் சவாலாகியுள்ளது.
அதைவிடுத்து “யாமே விஸ்வகுரு “ என இறுமாந்து, கேள்வி கேட்பவர் களை வேட்டையாடி நோகடித்து, வருகிறது பாஜக அரசு. தேர்வு முறைகளையே முறைகேடுகளாக்கி,ஊழல் புரையோடி மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் மோடி அரசின் முன்னுக்குபின் முரணான கொள்கைகளும், அணுகுமுறையும் இந்தியா ஆராய்ச்சிகளின் வளர்ச்சிக்கு உதவவில்லை. மாறாக, அவை மந்திரங்கள் ஓதும் சடங்குகளாக தொடங்கி , வெறும் சாம்பலாக மாறும் ஆசாட சடங்குகளாகவே முடிகின்றன.
இதில் எஞ்சியிருப்பது ஆற்றல் உட்பட எதுவும் இல்லை.
ச.அருணாச்சலம்























Leave a Reply