இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் எழுச்சி!

-சாவித்திரி கண்ணன்

உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது. மத்திய பாஜக ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்குகிறது என்பதை இந்த இளைஞர்களின் உறுதி குலையாத போராட்டங்கள் உத்திரவாதப்படுத்துகிறது. இது வரை அலட்சியம் காட்டிய அரசியல் தலைவர்களும் தற்போது பேசவும்,களம் காணவும் நேர்ந்துள்ளது. இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கான வித்து விழுந்து விட்டது;

எத்தனையோ விதத் தடைகள், முட்டுக்கட்டைகள் போட்டும், ஆயிரக்கணக்கில் காவல்துறையை களத்தில் இறக்கி அச்சுறுத்தியும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியில் இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம்..ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

வெள்ளையர்களைக் காட்டிலும் அதிகமாக நம்மை சுரண்டிக் கொழுக்கும் இந்த கொள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற இரண்டாம் கட்ட சுதந்திரப் போராட்டத்தை காந்தியவாதி சோனம் வாங்சுக் தொடங்கி வைத்து விட்டார். அதற்கு அவர் கள்ளம் கபடம் இல்லாத இந்த இளைஞர் படையை நம்பியது வீண் போகவில்லை.

காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குகிறது!

மண்டை உடைகிறது, ரத்தம் கொட்டுகிறது.

ஒரு சிலரை தரதரவென்று தாறுமாறாக இழுத்துச் செல்கிறார்கள்!

உறுதி குலையாமல் நிற்கும் இளைஞர்கள் ஒரு சிலரை பல போலீசார் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள்! ஆனாலும் அவர்கள் நியாயம் கேட்பதில் பின்வாங்கவில்லை…

கண்ணீர்புகை குண்டுகளால் அவர்கள் கலங்கவில்லை!

பார்க்கப் பார்க்க நெஞ்சம் பதைக்கிறது.

இத்தனை நெஞ்சுரத்தை இவர்கள் எங்கணம் பெற்றார்கள்? எது இவர்களை இந்த அளவுக்கு தெருவில் இறங்கி அடி வாங்க துணிய வைத்தது..? என்று யோசிக்கும் வேளையில் அவர்கள் தரப்பின் நியாயம் நெஞ்சில் உரைக்கிறது.

அவர்கள் படித்தால் சமூகத்தில் உயரலாம். நமக்கொரு நல் வாழ்க்கையை உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்று நம்பி கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் படித்தான். அம்மா தாலியை அடகு வைத்து படிக்க வைத்த நிலை சிலருக்கு! அப்பன் கடன்பட்டு, பட்டினியிருந்து படிக்க வைத்த நிலை பலருக்கு. நம்பிக்கையோடு தேர்வு எழுதி வெற்றிக்கு காத்திருந்தான்!

ஆனால், பணம் கொடுத்தவர்கள் பாஸ் ஆக்கப்படுகிறார்கள். கேள்வித் தாளை விலை கொடுத்து வாங்கி சிலர் வெற்றியை பறிக்கிறார்கள். பணக்கார வீட்டு பிள்ளைகள் மிகக் குறைந்த மார்க் எடுத்தாலும் பணம் தந்து மானேஜ்மெண்ட் கோட்டாவில் வாய்ப்பு பெறுகிறார்கள்! எனில் உண்மையாக படித்து தேர்வு எழுதியவர்களுக்கு எப்போதும் வாய்ப்பில்லை என்றால், அவன் விரக்தியின் விளிம்பிற்கு செல்லத் தானே செய்வான்.

சி.பி.எஸ்.இ தேர்வைக் கூட இந்த பாவிகளால் நேர்மையாக நடத்த முடியவில்லையே! விடைத்தாள்களை திருத்துவதில் எத்தனை வில்லங்கங்கள்!

பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு பொங்கி எழுந்துவிட்டது இளைஞர் கூட்டம்.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இத்தகைய வீரஞ் செறிந்த போரட்டத்தை நடத்தும் திரானி தற்போது கிடையாது. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தில் மட்டுமே தான் குறி.

20 நாட்கள் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஆம் ஆத்மி தலைவர்கள், யோகேந்திர யாதவ், திரிணாமுல் தலைவர்கள் ஒரு சிலர், திமுக தலைவர் ஆ.ராசா போன்றோர் சென்று பார்த்தனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா உட்பட பவன் கேரேவைத் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தை 20 நாட்களாக சட்டை செய்யவில்லை.

இவ்வளவு பெரிய இளைஞர் எழுச்சியை குறித்து தமிழகத்தில் இளைஞர்கள் சக்தியால் ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் இன்று மாலை வரை அமைதி காத்தார். ஆனால் தற்போது தயங்கித் தயங்கி தமிழக முதல்வர் விஜய் பட்டும் படாமல், இந்த மோதல் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். நீட் தேர்வை நீக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யோடு வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் உண்மையான கதாநாயகனாக களத்தில் மாணவர்களோடு நின்றார். அதிகாரப்பற்று கதாநாயகர்களைக் கூட கோழைகளாக்கிவிடுகிறது.

50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவோம் என புறப்படுகிறார்கள் என்றால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் அன்று இளைஞர்கள் இடத்திற்கு வந்து தாங்களும் அவர்களோடு கலந்து அந்தப் பேரணியில் நடந்திருந்தால், மத்திய அரசுக்கு இப்படி தாக்குதல் தைரியம் வந்திருக்காது. தாக்குதல் நடத்துவதை தவிர்த்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள் பேசுவோம் என பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பார்கள். இளைஞர்களோடு களத்தில் நிற்கும் இந்த பொன்னான வாய்ப்பை எதிர்கட்சிகள் தவிர்த்துவிட்டு வழக்கம் போல பாராளுமன்றத்தில் சபாநாயகரை நோக்கி கத்தி கூச்சல் போட்டு என்ன பயன்?

ஆனால், எல்லா அரசியல் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை இன்னும் அலட்சியம் செய்ய முடியாது என தற்போது பேசத் தொடங்கியுள்ளனர்.”நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. கல்வி மற்றும் தேர்வு முறை கரையான் அரித்துவிட்டது போல் நாசமாகிவிட்டது என்பது முழு நாட்டுக்கும் தெரியும். பிரதமர் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்? மாணவர்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களைத் தாக்குவது போன்ற முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ள ராகுல்காந்தி இன்றைய தினம் பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிடுவதாக களம் கண்டு கைதாகியுள்ளார் என்பது மகிழ்ச்சியே.

பாஜக எம்பி கே. சுதாகரோ, காக்ரோச் ஜனதா கட்சியின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோத சக்திகள் உள்ளனர் என பொய் பிரச்சாரம் செய்தார். உண்மையில் பாஜகவினர் தான் சமூக விரோதிகளை இளைஞர்கள் கூட்டத்திற்குள் நுழைத்து இளைஞர்களை அடித்து நொறுக்கியுள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர்கள் எவ்வளவு ஈவு இரக்கமற்ற கொடியவர்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி.

மாணவர்களை அடித்து நொறுக்கும் போலீஸ் அல்லாத சமூக விரோதிகள்!

நேற்றைய போராட்டத்தில் மண்டை உடைந்து நூற்றுக்கு மேற்பட்டோர் தில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிரூக்கும் சூழலில் இதோ இரண்டாவது நாளும் டெல்லியில் இளைஞர்கள் போராட்டம் தொடர்கிறது. முன்பு தர்மேந்திர பிரதான் ராஜுனாமாவைத் தான் கோரினார்கள். ஆனால், இன்றோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என கோஷமிடுகிறார்கள்!

இந்தப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து தன் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்கலாம்.  காலைப் பற்றிய அட்டைப்பூச்சி போல பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஹர்மேந்திர பிரதான் இன்னும் எத்தனை நாள் அவமானச் சின்னமாக வலம் வருவார் பார்க்கலாம்! அதானி, அம்பானிகளை வாழ வைப்பதற்காகவே தன் ஆட்சியை அர்ப்பணித்து அநீதிக்கு மேல் அநீதிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மோடிஜீ இன்னும் எத்தனை நாள் தாக்குபிடிப்பார் பார்ப்போம்!

டெல்லியின் தாக்கத்தால் இங்கு தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன என்பது உள்ளபடியே உவகை அளிக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி ஆகிய வளாகங்களின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதும்,

கோவையில் சி.ஐ.டி.யு, வி.சி.க, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் த.மு.எ.க.ச உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளதும்,

சட்டக் கல்லூரி மாணவர்கள் விழுப்புரத்தில் திரண்டு விண்ணதிர முழக்கமிட்டதும்,

கோவையில் வழக்கறிஞர்கள் கோபக்கனலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியும்,

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகமான பாலன் இல்லத்தில் இளைஞர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதும், சிந்தாதிரிப்பேட்டை பழைய சித்ரா திரையரங்கம் இருந்த இடத்தில் இருந்து சிலிர்தெழுந்த பேரணி ஒன்று நடந்திருப்பதும்..

இதே போல இந்தியாவின் பல இடங்களிள் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் செய்திகளும்…,

சோனம் வாங்சுக்கும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கேவும் பற்ற வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப் பரவி, விரவி வருவதைக் காட்டுகிறது. இது மேன்மேலும் வீரியம் பெறட்டும்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time