தவெக அரசு ஊழலை ஒழிப்பதாகச் சொல்வது உண்மையா?

சென்ற ஆட்சியில் தலைமைப் பொறியாளர் கே.ஜி.சத்தியப்பிரகாஷ் ஊழல் செய்து ரூ 2,000 கோடிகளுக்கு ஆதாயம் அடைந்துள்ளார் என்ற ஆதாரபூர்வமான புகாரை முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி ஒரு மாதம் கடந்தும் ஒரு சின்ன அசைவு கூட இல்லை என்கிறார், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பாலாஜி. ஊழல் புரிந்தவர் உல்லாசமாக இருக்கிறார் என்றால், என்ன நடந்தது?;

நாங்கள் ஊழல் செய்யமாட்டோம், செய்தவர்களையும் விடமாட்டோம். ஊழல் புகாருக்கு உடனே நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதல்வர் விஜய் கூறினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அடிக்கடி கூறுகிறார். ஆனால், கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் அன்றைய அமைச்சர் எ.வ.வேலு வரைமுறையின்றி கொள்ளையடிப்பதற்கு வலது கரமாக செயல்பட்டவர் எனக் கூறப்படும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் தலைமைப் பொறியாளர் கே.ஜி.சத்தியப்பிரகாஷ் குறித்த புகார் ஏன் சிறிதளவும் பொருட்படுத்தப்படவில்லை எனத் தெரியவில்லை என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஜி.பாலாஜி.

தகவல் அறியும் சட்ட ஆர்வலர் பாலாஜி முதல்வர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு கடந்த ஜூன் -22 அனுப்பிய புகாரின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது;

புகார் கடிதம் எண்  04/C/HW/2026                                                            22.06.2026

பெறுநர்

திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள்,

மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600 009

ஐயா

பொருள் :நெடுஞ்சாலைத்துறை – முறைகேடாக  அரசு நிதியை

செலவழித்து  2 ஆண்டுகளில் ரூ.2000 கோடி கொள்ளை – புகார்

நான் ஒரு சமூக ஆர்வலர்; சமூகத்தில் நிலவும் அனைத்துத் தீமைகளுக்கும் ஊழலே அடிப்படை என்று உறுதியாக நம்புகிறேன். அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்த தகவல்களைப் பெற, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005’-ஐ பயன்படுத்தி வருகிறேன். ஊழல் மனிதநேயத்திற்கு எதிரானது என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதால், முறைகேடுகள் குறித்த தகவல்களைப் பெற்றவுடன், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அவற்றை அரசின்  கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்.

தகவல் அறியும் சட்ட ஆர்வலர் ஜி.பாலாஜி

நெடுஞ்சாலைத் துறையில் அதிக முறைகேடுகள் நடப்பதாக தொடர்ச்சியாக பத்திரிக்கைகளில் வெளியானதையடுத்து பொது நலன் கருதி, அத்தகைய செய்திகள் குறித்து நான் விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்தன; அதாவது, பல அதிகாரிகள் பண ஆதாயங்களுக்காகப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதும், அவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைக் குவிப்பதும் தெரியவந்தது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் போது, ​​கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் தலைமைப் பொறியாளர் திரு.கே.ஜி.சத்தியப்பிரகாஷ் அவர்கள் அரசு நிதியான பெரும் தொகையை கொள்ளையடித்திருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

சென்ற ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவிற்கு தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே ஒரு தலைமைப் பொறியாளர் பதவிக்கு வருவதற்கு கடும் போட்டி நிலவிய நிலையில் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று கே.ஜி.சத்தியப்பிரகாஷ் தலைமை பொறியாளராக ஜூலை 2024-ல்  பொறுப்பேற்றார்.

பொறியாளர் கே.ஜி.சத்தியப்பிரகாஷ்

 

நெடுஞ்சாலைத்துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் ஏறக்குறைய 80 சதவிகித நிதியை இந்த ஒரு பிரிவிற்கு மட்டும் அரசு  வழங்கி வருகிறது. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு ஒதுக்கீடு 2024-2025  ஆண்டில் 15,095 கோடி ரூபாய், 2025-2026 ஆண்டில் 17,146 கோடி ரூபாய். இது 2026-2027  இடைக்கால பட்ஜெட்டில் 16,475 கோடி ரூபாய்.

நிதியினைச் செலவு செய்யும் போது யார் யாருக்கு எவ்வளவு போய்ச் சேர வேண்டும் என்று பார்த்துக் கொள்வது மட்டும் அல்லாமல் தனக்கு வேண்டிய மட்டும் அந்த ஒரு தலைமைப்  பொறியாளர் எடுத்துக் கொள்வார். எனவே பெரிய அதிகார மையங்களுக்கு நெருக்கமாவதுடன், பெரிய அளவில் சொத்துக்கள் சேகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் இருந்ததால் அந்தத் தலைமை பொறியாளர் பதவியை பிடிப்பதற்கு எல்லோரும் பல கோடிகளைச் செலவு செய்தார்கள்.

ஒப்பந்தக்காரர்கள் கொடுக்கிற கமிஷன் தொகை ஒரு பக்கம்; சாலை பராமரிப்புக்கான பல கோடி ரூபாயை எந்த பராமரிப்பும் செய்யாமலேயே கணக்கு மட்டும் காட்டி அப்படியே பிரித்துக் கொள்வது இன்னொரு பக்கம்;

இது தவிர பெரிய பெரிய மதிப்பீடுகளில் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கிய இனங்கள் போக ஒப்பந்தத்தில் கட்டுப்படாத தொகைகளை எந்த நெறிமுறையும் இன்றி கமுக்கமாக பில் தயாரித்து எடுத்துக் கொள்வது இன்னொரு பக்கம்;

மின்வாரியம், குடிநீர் வாரியம் போன்ற மக்களுக்கு அவசியமானவற்றை தரும் துறைகள் சாலைகளை வெட்டிய பிறகு அந்தப் பகுதிகளை சீர் செய்வதற்காக அந்தந்த  துறைகள் வழங்கிய இழப்பீட்டு தொகையினையும் தவறாக கணக்கு காட்டி, பல நூறு கோடிகளை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வது  இன்னொரு பக்கம்.

இப்படி எத்தனையோ வழிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு அரசு பணத்தை முறைகேடாக எடுத்துக் கொள்வதற்கு வழி இருக்கிற காரணத்தால் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர்  பதவிக்கு ஆளாளுக்கு முட்டி மோதுகிறார்கள்!

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரு.சத்தியப்பிரகாஷ் தலைமை பொறியாளர் பதவிக்கு வந்ததற்குப் பிறகு இந்த வழிகள் தவிர வேறு  எத்தனையோ வழிகளையும் கண்டுபிடித்து அவற்றில் இதற்கு மேல் தவறுகளே செய்ய முடியாது என்கிற அளவிற்கு பல நூறு கோடிகளை அவர் சூறையாடி இருக்கிறார் என்பது துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

எந்த அளவிற்கு அரசு நிதியினை அவர் சூறையாடினார் என்பதற்கு சென்ற ஆண்டு நவம்பர் 23,24-ல் நடந்த அவர் மகளின் பாடாடோப ஆடம்பரத் திருமணம் ஒன்றே சாட்சியாகும். திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ மற்றும் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தாலே நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று தெரியும்.

சாலை பாதுகாப்பு, குழாய்கள் மாற்றம், மரம் நடுதல், விலை ஏற்றத்தை ஈடு செய்யும் செலவுகள், தொழிலாளர் நல நிதி, தரக்கட்டுப்பாடு செலவுகள், எதிர்பாராத செலவுகள், மேற்பார்வைச் செலவுகள்  போன்ற எதிலுமே ஊழலை விட்டு வைக்கவில்லை சத்யபிரகாஷ். 10 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்படும் மதிப்பீட்டில் ஏறக்குறைய ஒரு கோடிக்கு இந்த வகைகளில் நிதி ஒதுக்கப்படும். எனவே, ஆண்டுக்கு தோராயமாக 10,000 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டால், ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய்  இதுபோன்று  தனியாக வைக்கப்படும். இதுவே இரண்டு  ஆண்டுகளுக்கு 2,000 கோடி ரூபாய் என்றால் இவ்வளவு பெரும் தொகையும் சத்தியப்பிரகாஷ் என்ற தலைமைப் பொறியாளர் ஒருவரால் சூறையாடப்பட்டது.

எந்த இனங்களுக்கு  மதிப்பீடுகளில் Lump Sum தொகை சேர்க்கப்பட்டதோ அந்த இனங்களில்,  கொள்ளை அடிக்கும் பணம் முழுவதும்  பல வழிகளில் செலவழிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்த மதிப்பீட்டில் எஞ்சியிருக்கும் தொகையையும் கூட, வேறெதற்கோ  செலவழித்த மாதிரி கணக்கு காண்பித்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களிலும் இதுவேதான் நடந்துள்ளது. தற்காலிக முன்பண கணக்கு, கொட்டேஷன், வேலைக்கு ஆட்களை வைப்பது போன்று பல வழிகளில் இந்த பணம் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

மதிப்பீடுகளில் எதிர்பாராத செலவுகள், மேற்பார்வைச் செலவுகள் என்று 2.5 சதவிகிதம்  தனியாக வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு தோராயமாக 500 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை தற்காலிக முன்பண கணக்கு (temporary Imprest) மூலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு எல்லா கோட்டங்களிலும் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக டெண்டர் விட்டு (ஒவ்வொரு கோட்டத்திலும் ஆண்டுக்கு  500 டெண்டருக்கு குறைவில்லாமல்) வேலை செய்வதாக ஆவணங்களை தயார் செய்து,  அந்த தொகையை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு,  இதில் 2,000 கோடி ரூபாய் தங்கள் சுய லாபத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விதி மீறல்களுக்கு வாய்மொழியாக ஆணை வழங்கி,  அந்தப் பணத்தை எல்லாம் தாங்களே  எடுத்துக் கொண்டதற்கு தற்காலிக முன்பண கணக்கு ஆவணங்கள் தான் ஆதாரம். 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக டெண்டர் விட்டு  சென்ற ஆண்டில் வேலை செய்ததாகக் கூறப்பட்டுள்ள வேலைகளை ஆய்வு செய்தாலே தெரிய வரும், அது மாதிரி  வேலைகளே நடைபெறவில்லை என்பது.

இந்த இரண்டு  ஆண்டுகளும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறெல்லாம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று மாதிரிக்காக ஒரு ஐந்து கோட்டங்களை மட்டும் உடனடியாக தீவிர தணிக்கை செய்தால் எல்லா ஊழலும் வெளிவரும்.

இந்த கோட்டங்களில் தணிக்கை முடிந்த பிறகு அக்கவுண்டண்ட் ஜெனரலை கேட்டு எல்லா கோட்டங்களிலும் மீண்டும் தணிக்கை மேற்கொண்டால் அரசு நிதி எவ்வளவு கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிய வரும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுத்து அவர்களை சிறைக்கு அனுப்பினால் தான் மற்றவர்களுக்கும் அச்சம் வரும். அதன் பிறகு ஒழுங்காக நடப்பார்கள்.

தற்போது சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தில் செயல்படும் ஊழல் பேர்வழி கே.ஜி.சத்ய பிரகாஷ் தண்டிக்கப்படப் போவது எப்போது?

தங்கள் உண்மையுள்ள

கோ.பாலாஜி

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time