முதலமைச்சரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு இயங்கும் காவல்துறை!

-சாவித்திரி கண்ணன்

காவல்துறையின் காட்டு தர்பார், தவெக ஆட்சியிலும் தடங்கலின்றி தொடர்கிறது. தமிழக முதல்வரின்  அதிகாரத்திற்குட்பட்ட காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம்  கட்டுப்படுத்துகிறதா? மத்திய பாஜக அரசின் வழிகாட்டுதலில்  மாணவர்கள் போராட்டங்கள் காவல்துறையால் ஒடுக்கப்படுகிறதா? உண்மை நிலை குறித்த ஒரு ஊடுருவல் பார்வை;

நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக போராடும் மாணவர்களை ஏதோ சமூக விரோதிகளைப் போல  தமிழக காவல்துறை கையாள்கிறது. தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக போராடுவது என்பது  ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமையாகும். அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள உரிமையாகும்.

போராடும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பது தான் காவல்துறையின் பணியே அன்றி, ஒடுக்குவது அல்ல.

டெல்லியில் நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தின் தாக்கமாக  தமிழகத்தில் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பலவற்றில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

மாணவர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் போராடும் சூழலில் காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதையும், தாக்குவதையும் பார்க்கும் போது, நீட் காரணமாக மரணித்த மாணவி அனிதாவின் வீடு தேடிச் சென்று ஆதரவளித்த விஜய் முதல் அமைச்சராக இருக்கும் ஆட்சியிலா இந்த நிலைமை? என தவெகவுக்கு ஓட்டளித்த மக்கள் அதிர்ந்து போகிறார்கள்!

தவெக அரசு தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி செய்கிறது. எனவே, அதற்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உள்ளுற இருக்கிறது போலும். போதாக்குறைக்கு இங்குள்ள இரு திராவிட அரசியல் கட்சிகளும் பாஜகவின் ஆதரவில் தவெக ஆட்சியை கவிழ்க்க செய்யும் முயற்சிகளால்  மத்திய பாஜக அரசை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு அரசியல் பேசாமல் விஜய் ஆட்சி நிர்வாகம் செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள  முடிகிறது.

ஆனால், சோனம் வாங்சுக்கின் 20 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, டெல்லியில் லட்சக்கணக்கான மாணவர்கள் பேரணி அறிவித்து போலீசின் கடும்  தாக்குதலுக்கு உள்ளான போது, முதலமைச்சர் விஜய்யின் உள்ளத்தை அது உலுக்கவில்லையா? ”அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு அவர்களை அழைத்து பேச வேண்டும்” என்றாவது பேசுவோம் என முதல்வர் விஜய்க்கு தோன்றவில்லையா?

‘இந்த மோதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று பட்டும்படாமலும் பதிவிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி களம் கண்டு கைதான போது கூட  சற்றுத் தயங்கி தாமதமாகவே கண்டண அறிக்கை தந்தார், முதல்வர் விஜய்.!

எந்த இளைய சக்தியால் ஆட்சிக்கு தவெக வந்ததோ, அந்த இளைஞர் படை இன்றைய முதல்வர் விஜய் அதிகாரப் பற்றின் காரணமாக கோழையாக தோற்றம் காட்டுவதை எப்படி பார்ப்பார்கள் என்று அவர் யோசிக்க வேண்டும்.

இதோ நீலம் பண்பாட்டு இயக்கம் சார்பில் திரைக்கலைஞர்கள் பா.ரஞ்சித், அமீர்,வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் தெருவில் இறங்கி போராடும் போது மக்கள், ”நிஜக் கதாநாயகன் யார்?” என யோசிக்கமாட்டார்களா?

சமீபகாலமாக தமிழ்நாட்டில் மக்கள் போராட்டங்களை முரட்டுத்தனமாக ஒடுக்குவதை காவல்துறை மாற்றமின்றி செய்து கொண்டுள்ளது.

யார் முதலமைச்சராக இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் இதே நிலை தான்!

கலைஞர், ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்த முதல் அமைச்சர் ஒருவரையும் தமிழகம் பார்க்க முடியவில்லை.

பாரபட்சமின்றி ஒரு உண்மையை பார்க்க முடிந்தால் ஜல்லிக்கட்டு போராட்ட முடிவு தொடங்கி காவல் துறையானது தமிழக முதல் அமைச்சர்களின் கண்ட்ரோலில் இருந்து விடுபட்டுவிட்டது என்ற யதார்த்ததை நாம் உணரலாம்.

ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் கண்டு பதைபதைத்துப் போன டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், இனி ஒரு போராட்டம் தமிழகத்தில் இதுபோல ஏற்பட்டுவிடக் கூடாது பல சூழ்ச்சிகளைச் செய்தனர்.

ஜல்லிக் கட்டு போராட்டத்தின் முடிவில்  டெல்லி பாணியில் குடிசை வீடுகளுக்கு காவல்துறையே தீ வைத்து  போராட்டக்காரர்கள் மீது பழிபோட முயன்ற போது அம்பலப்பட்டது.

போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் தவெக அரசின் காவல்துறை

அப்போது முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர் செல்வம் அவர்களை ஒதுங்கச் சொல்லிவிட்டு, உள்துறை அமைச்சர் தமிழக காவல்துறையை  தன் கண்ட்ரோலுக்கு கொண்டு சென்றார். அடுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமியும் அந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஒருமாதகாலமாக ஸ்டெர்லைட் பிரச்சினையில் கொந்தளித்து கொண்டிருந்த தூத்துக்குடி போராட்டங்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்க அதி கொடூரமான துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு போலீஸ் நிகழ்த்தியது. அந்த நிகழ்வை தொலைகாட்சியில் பார்த்துத் தான், தான் தெரிந்து கொண்டதாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது என்பதே, நான் அதிகாரமற்ற பதுமை தான், எல்லாமே இங்கு  டெல்லியின் முடிவு தான் என்பதற்கான வாக்குமூலமாகும்.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின்  ஆட்சி குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி எடுத்திருந்த ஆவணப்படத்தை  தமிழகத்தில் எங்கும் யாரும் மக்களுக்கு திரையிட்டுக் காட்டக் கூடாது என மூர்க்கமாக செயல்பட்டதோடு, அதை தன் சொந்த கைபேசியில் பார்த்த சி.பி.எம்.கவுன்சிலரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் தலைமையகத்தில் போராடும் மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாணவி ஆர்.எஸ்.எஸ் பள்ளி முதலாளியால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது, தமிழகத்தில் எழுந்த அறச் சீற்றத்தை அடக்குவதற்கு காவல்துறை போராடியவர்களை  படுமோசமாக வேட்டையாடியதோடு, போராடாத நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்களை காலணிகளுக்கு தேடிச் சென்று கைது செய்து வதைத்தது. மகளை இழந்த அந்த தாய் செல்விக்கு நீதி கிடைக்காதபடி திமுக ஆட்சி திடமாக பலமுனைகளிலும் தடுத்தது.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது அநீதியாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தண்டிக்கப் பரிந்துரைத்த அருணா கெகதீசன் விசாரணைக் கமிஷன். ஆனால், கொலை செய்த காவல்துறைக்கு பதவி உயர்வு தந்தது ஸ்டாலின் ஆட்சி.

வேங்கை வயலில் குடிநீர்தொட்டியில் மலம் கலந்த குற்றவாளியை கடைசி வரை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட அப்பாவி தலித்துக்களையே பலிகடாவாக்கத் துடித்தது தமிழக காவல்துறை. இப்படி தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனேகம். இதையெல்லாம் கண்டு கொந்தளித்த விசிக தலைவர் திருமாவளவன் தமிழக காவல் துறைக்கு தலைமை தாங்குவது ஸ்டாலினா? அமித்ஷாவா? என மேடை போட்டு முழங்கினார்.

தமிழகத்தில் நீட் மோசடிகளுக்கு எதிராக களம் கண்ட மாணவர்கள்

இத்தகைய காரணங்களால் தான் திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு அதனை தூக்கி எறிந்தனர். ஆனால்,  ஸ்டாலின் ஆட்சியில்  தமிழக காவல்துறை செயல்பட்ட விதத்தில் இம்மியளவும் மாற்றமின்றி, இந்த ஆட்சியிலும் நடந்து கொள்கிறது என்றால், டெல்லி புதிய ஆட்சியாளரையும் பதுமையாக வைத்துக் கொண்டு காவல்துறையை  கட்டுப்படுத்துகிறது என்று தான் பொருளாகும்.

ஆளுமைமிக்க தலைவர்கள் இன்று தமிழகத்தில் இல்லாத ஒரு சூழலில் மத்திய பாஜக அரசு மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பெருமளவு தன் கண்ட்ரோலுக்கு கொண்டு போய் விடுகிறது. அவர்களே மாநில முதல் அமைச்சர்களை வழி நடத்துகிறார்களே அன்றி, மாநில முதல்வர் அதிகாரிகளை வழி நடத்துவதில்லை.

இந்த வகையில் ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் வரிசையில் விஜய்யும் தற்போது இணைந்துள்ளார்.

மத்திய ஆட்சியாளர்கள் அதி பயங்கர அதிகார குவிப்பை கொண்டுள்ளதும், மாநில அரசுகள் சுயமாக செயல்பட முடியாத அதிகாரமற்ற நிலைமைகளையும் இணைத்து இந்த விவகாரத்தை புரிந்து கொண்டு, கட்சி சார்புகளைக் கடந்து இந்த பிரச்சினையில் ஜனநாயகத்தை நிலை நாட்ட நாம்  மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time