வழக்குகளின் தேக்கத்திற்கு நீதிபதிகள் பற்றாகுறை காரணமல்ல!

-பீட்டர் துரைராஜ்

இந்திய  நீதிமன்றங்களில் தேங்கிய நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5.64 கோடிகளாம்! நீதிபதிகள் பற்றாக்குறையால் தான் வழக்குகள் தேங்குகின்றன என்ற பொதுக் கருத்துள்ளது. உண்மையில் வழக்குகள் நீதி பரிபாலனத்தில் அரசியல் அழுத்தங்களால் நீண்ட காலம் தேங்குகின்றன, நீதிமன்றம் எளியோருக்கு நீதி என்பதன்றி இயந்திர கதியில் செயல்படுவதாலும் வழக்குகள் தேங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன;

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34 லிருந்து 38 ஆக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அவசரச் சட்டம் மூலம் 38 ஆக உயர்த்திய அரசு, தற்போது, அந்த அவசரச் சட்டத்தை, சட்டமாக்க உள்ளது.

வருடந்தோறும், பைசலாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட, தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறது, அரசின் குறிப்பு இதனால் குடிமக்களுக்கு நீதி கிட்டுமா?

சமூக செயல்பாட்டாளர் உஷா ராமநாதன் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து  பல்லாண்டுகளாக கவனம் செலுத்தி  வருகிறார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அவர் தற்போது தில்லியில் இருக்கிறார். யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏற்பட்ட போபால் விஷ வாயு பேரழிவு, இடப்பெயர்வு, வறுமை, ஆதார் கார்டு,  மரணதண்டனை போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து  வருகிறார். நீதிமன்ற நடை முறைகளினால் தான்  வழக்குகள்  நீதிமன்றங்களில் தேங்கி வருகின்றன என்கிறார், உஷா ராமநாதன்.

சமூக ஆய்வாளர் உஷா ராமநாதன்

‘நீதிமன்ற தாமதமும், நடைமுறையும்’ ( Judicial  Delay and Pragmatism) என்ற ஆய்வுக் கட்டுரையை, உஷா ராமநாதன் எழுதியுள்ளார். பல விவரங்களை  (துணுக்குகள் என்று அவர் குறிப்பிடுகிறார்) அந்தக் கட்டுரையில், சாதாரண மனிதனுக்கும், நீதிக்கும் இடையே நிலவும்  தூரத்தை விளக்குகிறார் :

நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது,

தீர்ப்பாயங்கள் அமைப்பது,

அதிக நீதிபதிகளை ஏற்படுத்துவது,

கட்டமைப்புகளை அதிகப்படுத்துவது,

கூடுதல் நிதி ஒதுக்கீடு,

அறிவியல் பூர்வமான வழக்குகளை மேலாண்மை செய்வது,

மக்கள் நீதிமன்றங்கள் அமைப்பது,

சமரசத்தை ஊக்குவிப்பது,

நவீன தொழில்நுட்பங்களை நீதித் துறை பயன்படுத்துவது  ஆகியவை  மூலம் வழக்குகளின் எண்ணிக்கையைக்  குறைக்கலாம் என்று சொல்லப்பட்டு வருவது சரி தான் என்றாலும், நீதிமன்றங்கள், அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைந்த வகையில் செயல்படுகின்றவா? என்பதே ஆதாரமான கேள்வியாகும்.

வழக்குகளை தாமதமாக முடிவு செய்வதினால், மக்களாட்சி, சுதந்திரம், குடியுரிமை, குடிமக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆகியவை தவறாக கையாளப்படுவதலும் மக்களின் கோபம் அதிகரிக்கின்றன. சமீபகாலங்களில் நடைபெற்ற ஒரு சில வழக்குகளைப் பார்க்கலாம்.

தேர்தல் பத்திர வழக்கு:

2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் மூலம் யாரென்ற விவரம் சொல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரலாம் என்ற சூழலை உருவாக்கியது;  அரசியல் கட்சிகளுக்கு உச்சபட்சமாக இவ்வளவு தான் நன்கொடை தரமுடியும் என்று ஏற்கனவே இருந்த  தடை நீக்கப்பட்டது. வெளிநாட்டு கம்பெனிகளும் நன்கொடை தரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இந்த வழக்கை, 2018 -ல் விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தவறான வழிமுறைகளுக்கு தடை விதிக்கவில்லை. தேர்தல் ஆணையம் 2019 -ல் தனது பதிலுரையில் தேர்தல் பாத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறியது. ஆனால் தேர்தல் பாத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பை வழங்க உச்சநீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இதற்கிடையில் பாராளுமன்றத் தேர்தலும்,  28 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும் நடந்து முடிந்து விட்டன. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும்கட்சியான பாஜக பலன் அடைந்தது.

பெகாசஸ் வழக்கு;

இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த பெகாசஸ் என்ற செயலி மூலம் 50,000 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகளை மத்திய பாஜக அரசு உளவு பார்த்த வழக்கு, உச்சநீதிமன்றத்திற்கு 2021 ல் வந்தது. இதனை விசாரிக்க ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஐந்து சாதனங்களில் (device) பெகாசஸ் செயலி இருந்தது என்று கூறிய அந்தக் குழு, அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்பதால், விசாரித்த வரையிலான அரிய தகவல்களைத் தந்து முழுமையாக விசாரிக்க முடியவில்லை என்று கூறி தனது அறிக்கையை மூடிய உறையில் உச்சநீதிமன்றத்திற்கு கொடுத்தது. மூன்று ஆண்டுகள் சீண்டப்படாமல் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்தது. இதற்கிடையில் 2024 -ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெகாசஸ் செயலிகளைக்  கொடுத்த NSO  என்ற அரசுசாரா அமைப்பு குற்றவாளி என்று கூறிய போதும் கூட உச்ச நீதிமன்றம் சுதாரித்துக் கொள்ளவில்லை.

சம குடியுரிமை;

பிளவுண்ட இந்தியாவின் முதல் தேர்தல்,  மக்கள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்கும் போது தான் நடந்தது.  இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை என்று இருந்த நிலை, 1986 ஆம் ஆண்டு பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என திருத்தப்பட்டது.

2003 ஆண்டு பாஜக அரசில் வந்த சட்டம், பெற்றோரில் யாராவது ஒருவர் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் குடியுரிமை கிடையாது என்று கூறியது.

2019 ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களை முற்றாக விலக்கி வைத்தது. இதைத் தொடர்ந்து நாடெங்கிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்கள் நடந்தன. மதரீதியில்  பாகுபாடான இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசிலயமைப்புக்கு உகந்த வகையில் இந்தச் சட்டம் உள்ளதா? என்பது பற்றி அது இன்னமும் முடிவு செய்யவில்லை.

சுதந்திரம் கோரும் வழக்குகள் ;

போலீஸ் காவலில் அடிப்படையான உரிமைகள் கூட மறுக்கப்பட்டு  ஸ்டேன் சாமி இறந்து போனார்.. அவருக்கான மருத்துவச் செலவை கொடுக்கவில்லை. BK 16 என்று அறியப்படும் பீமா கோரேகான் வழக்குகளில், மனித உரிமைப் போராளிகள் 2018 முதல் பல்லாண்டுகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்தனர். 2010 முதல் சிறையில் இருக்கும் உமர் காலித் அவர்களும் பல முறை பல நீதிமன்றங்களில் பிணை கேட்டு விண்ணப்பித்தும் தராமல்  விசாரணையையும் முடிக்காமல் சிறையில் வாடுகின்றார்.

2019 க்கும் 2023 க்கும் இடையில் 2,615 ஆட்கொணர்வு மனுக்கள் தொடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. இதில் 61 சத வழக்குகள் குற்றவாளி என்று முடிவு செய்யப்படாமல், அல்லது தவறு இழைத்ததாக உறிதிபடுத்தாமல் சிறையில் பல காலம் வைத்திருந்து பின் குற்றவாளிகள் அல்ல என விடுவிக்கப்பட்டவையே!

சிறை நீதிமன்றம் (Jail Adalat) 

குற்றவியல் சட்டங்கள், வறுமையில் வாழும் மக்களை சமூகரீதியில் ஒடுக்குகின்றன. இதனை சிறை நீதிமன்ற நடைமுறைகள்  மூலம் நாம் கண்டு கொள்ள முடியும். தில்லி திகார் சிறையில், மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடந்த சிறை நீதிமன்றங்களை நான் பார்த்திருக்கிறேன். இதில் முறையிடுவோர் பிக்பாக்கெட் செய்தவர்களாகவோ, சாக்கடை மூடிகளை திருடியவர்களாகவோ, புகைவண்டி நிலையத்தில் நடைமேடை சீட்டு இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். கைநாட்டு போடுபவர்களாக இருப்பர்.  குறைந்தது இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தவர்களுக்குத் தான்  இந்தமுறையில் நிவாரணம் கிடைக்கும். குற்றம் செய்யவில்லை என்றாலும், குற்றத்தை ஒப்புக்கொண்டால் உடனடியாக வெளியே போய்விடலாம் என்று சொல்லிக் கொடுப்பார்கள். இதனால் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாத பட்சத்தில் மீண்டும் இவர்களை பிடித்து வழக்கை ஜோடித்து தண்டிக்கப்படும் பின் விளைவுகளை பாவம் இவர்கள் உணர்வதில்லை.

இவையெல்லாம் நமது நீதிமன்ற முறை எப்படி இயந்திரகதியில் மனிதாபிமானத்தை தொலைத்துள்ளது என்பதை விளக்குவதாக உள்ளன. எளியோரின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் வழக்குகளை அணுகும் போது தான் விரும்பத்தக்க மாற்றங்கள் வரும்”.

உஷா ராமநாதனின் இந்தக் கட்டுரை, தில்லி கலவரக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது உத்தரவிட்ட எஸ். முரளிதர் தொகுத்த  ‘ (In)Complete justice ?  The Supreme Court at 75’ (2025) என்ற நூலில் உள்ளது. முக்கியமான பல வழக்குகளை உயர்மட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யாமையால், கீழமை நீதிமன்றங்களில் பிணை கோரி, நிவாரணம் கோரி, தடை கோரி, இடைக்கால ஆணை கோரி தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே அதிக நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் தேங்கியுள்ளன என்பது மட்டுமே வழக்குகளின் தேக்கத்திற்கு காரணமல்ல.

-பீட்டர் துரைராஜ்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time