”காவிரி நீர் கேட்டு கர்நாடகம் சென்று தமிழக முதல்வர் விஜய் பேசக் கூடாது” என்ற குரல்கள் வலுக்கின்றன. இந்த அவ நம்பிக்கை குரல்களை முதல்வர் விஜய் அலட்சியப்படுத்தி, கண்டிப்பாக கர்நாடகம் செல்ல வேண்டும். ‘சட்டப் போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை’ என்ற படிப்பினையோடு, கடந்த கால பகை அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து செய்ய வேண்டியது என்ன?
காவிரி நீரை நம்பித் தான் தமிழகத்தின் வாழ்வாதாரம் இருக்கிறது.
பேசுங்கள்! நேசத்திற்கான கதவுகளை மூடிவிட்டால், நியாயங்கள் கூட எடுபடாது!
50 ஆண்டுகளாக நீதிமன்றங்களை, நடுவர் மன்றங்களை அமைத்து தீர்ப்புகளை பெற்றாலும், அதை செயல்படுத்த வேண்டியவன் மறுக்கும் போது,
அதை மத்திய அரசும், நீதிமன்றங்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் போது,
நமக்கு பேச்சுவார்த்தையைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது…?
தமிழகத்தின் ஒரே பெரிய நீர் ஆதாரம் காவிரியே ஆனால், கர்நாடகத்திற்கோ காவிரியை விட பெரிய நதியான கிருஷ்ணா, துங்கத்திரா போன்றவை உள்ளன. கர்நாடகாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஷராவதி, காளி, வராகி, நேத்ராவதி, அகநாசினி, பெத்ததி. ஆகிய ஆறுகளின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2,000 டி.எம்.சி உபரி நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது.
தமிழ்நாடு கர்நாடகத்திடம் கேட்கும் தண்ணீர் என்பது அது கடலில் வீணடிக்கும் நீரில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. நமக்கு இறுதி தீர்ப்பாக ஒப்புக் கொள்ளப்பட்ட 177.25 டி.எம்.சியைத் தான்! அதையும் தர மறுக்கிறது.
மத்திய அரசாலோ, உச்ச நீதிமன்றத்தாலோ, காவிரி நிதி நீர் ஆணையத்தாலோ, காவிரி மேலாண்மை ஆணையத்தாலோ நமக்கான நீதியை பெற்றுத் தர முடியவில்லை.
நமது சட்டப் போராட்டங்களால் நாம் பெற்ற எந்த தீர்ப்பையும் கர்நாடகம் மதிக்கத் தயார் இல்லை.
காரணம், சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயங்களுக்காக இங்கு வளர்த்தெடுக்கப்பட்ட பகை அரசியல் தான் தமிழகத்தை பதம் பார்க்கிறது.
அந்த பகை அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் பக்குவ அரசியல் தான் இன்றைய தேவை. நாம் பேசும் பேச்சு கர்நாடக மக்களின் இதயத்தை தட்டி எழுப்புவதாக இருக்க வேண்டும். அவர்களின் மனசாட்சியை உலுக்குவதாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பின் போது பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிற்கே சென்று நம் நியாயத்தை அம் மக்களையே ஏற்கச் செய்தார் அல்லவா? அதைப் போல, தொடர்ந்து முயற்சிப்போம். 50 வருட சட்டப் போராட்டத்தால் சாதிக்க முடியாததை ஒரே பேச்சுவார்த்தையில் சாதிக்க முடியாது. ஆனால், பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.

‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்’ என்ற ஒரு சொலவடை உண்டு. நாம் காலில் விழத் தேவையில்லை. அவர்களை முதலில், ‘நீ என் எதிரியல்ல, நண்பன்’ என அன்பு கனியும் நேசத்துடன் கையாள உறுதி பேண வேண்டும். நமது முதல்வர் விஜய்க்கு கர்நாடக மாநிலத்திலும் நிறைய ரசிகர்களும், அவரை நேசிக்கும் பலதரப்பட்டவர்களும் உள்ளனர். இது மிகப் பெரிய சாதக அம்சம். காங்கிரஸ் இங்கு தோழமை கட்சியாக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளதும் ஒரு பாசிடிவ் அம்சமாகும்.
இந்த மாதம் நமக்கு தந்திருக்க வேண்டிய 27 டி.எம்.சி தண்ணீரைத் தராமல் கர்நாடகம் இழுத்தடிக்கிறது. காவிரி டெல்டா பயிர்கள் நீரின்றி வாடுகின்றன. விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்! வீராப்பு காட்டி விலகுவது பயனளிக்காது.
பல ஆண்டு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக பெற்று வந்த சுமார் 500 டி.எம்.சி தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் 177 டி.எம்சி எனத் தீர்ப்பானது.
கர்நாடகத்தில் மக்கள் தொகை அதிகமாதல் காரணமாக பயிர் வைக்கும் விவசாய நிலப்பரப்புகளும் கூடுதலாகிறது. இதன் காரணமாக அவர்கள் சற்றே கூடுதல் தண்ணீர் கேட்ட போது, பரஸ்பர புரிதலோடு அனுசரித்துப் பேசி, சட்டென்று நாம் முடிவுக்கு வந்திருந்தால் தமிழகத்திற்கு 400 டி.எம்.சிக்கு குறையாமல் தண்ணீர் பெறும் வாய்ப்பு கருணாநிதி முதல்வராக இருக்கும் போது இருந்தது.

ஏனென்றால், காவிரி ஒப்பந்தம் முடிவுக்கு வந்த போது 1974 –ல் தமிழகம் பயன்படுத்தி வந்த காவிரி நீர் 489 டி.எம்.சியாகும்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சற்றே விட்டுக் கொடுத்து காரியம் சாதிக்கும் அணுகுமுறையை முன்னெடுக்கவில்லை. ”காவிரி நீர் எங்கள் பாரம்பரிய உரிமை. தமிழன் ஒன்றும் இளிச்சவாயர்களல்ல. எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள் இழக்க தயாராக இல்லை’’ என்றார்.
கருணாநிதி அவர்கள் அன்றைய தமிழக எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு எதிரான ஓட்டரசியலாக காவிரி நீர் பிரச்சினையை அணுகினார். தமிழ் உணர்ச்சியை தூண்டிவிடும் வாய்ப்பாக கருதினார்.
காவிரி பிரச்சினையின் ஆரம்ப காலத்தில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான அரசியலோ, தமிழ் நாட்டை பகை நாடாக பார்க்கும் போக்கோ இல்லை.
கருணாநிதி அவர்கள் தான் இங்கு தமிழினத்திற்கான தானைத் தலைவராக தன்னை உருவகப்படுத்தி, தமிழர்கள் நலனை ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காத தளபதியாக கர்நாடகத்தை எதிரியாக்கி, போர் முரசறைந்தார்.
இதற்கு கருணாநிதி காவிரி பிரச்சினை குறித்து 1970 களில் பேசி வெளியான ஏராளமான பத்திரிக்கை செய்திகளே ஆதாரங்களாகும்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான போது அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மற்றும் ஆத்மார்த்த நண்பர். ஆகவே அவர் பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வை எட்ட ஆசைப்பட்டார். தமிழகம் சற்றே விட்டுத் தந்து 350 டி.எம்.சி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும் என மன்றாடினார். இது குறித்து தமிழக தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களுடம் எம்.ஜி.ஆர் கலந்து ஆலோசித்த போது நல்ல ஒப்பந்ததம் தான். ஆனால், அரசியல் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள் என்றனர். எம்,ஜி.ஆர் தனது அமைச்சரவை சகாக்களிடம் விவாதித்த போது இந்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் கருணாநிதி உங்களை காலி செய்துவிடுவார். எம்.ஜி.ஆர் தமிழரல்ல. ஆகவே, தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டார் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவார்…’’ என்றனர்.
உடனே எம்.ஜி.ஆர் பின் வாங்கிவிட்டார்.
உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க உத்திரவிட்டது. 1990 –ல் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு தர வேண்டும் என கருணாநிதி அழுத்தம் தந்தார். நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி தந்தது.
உண்மையில் இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பலத்த பின் அடைவு தான். ஆனால், அதை திமுகவிற்கு கிடைத்த வெற்றியாக இங்கு ஆர்ப்பாட்டமாக கொண்டாட்டங்கள் நடந்தன.
இது கர்நாடகத்தில் பதற்றத்தை விளைவித்தது. இதனால் தமிழகத்திடம் கர்நாடாகா தோற்றுவிட்டது என்ற உண்மைக்கு மாறான தோற்றம் உருவானதையடுத்து அவர்கள், ”இந்த குறைந்தபட்ச தண்ணீரை கூட வழங்க மாட்டோம்” என்றனர்.
கருணாநிதி உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்கும் தீர்ப்பை பெற்றார். இந்த ஆணையத்தால் இன்று வரை நமக்கு நியாயம் வழங்க முடியவில்லை. ஆனால், இந்தத் தீர்ப்பின் வெற்றிக்காக அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ‘காவிரி கொண்டான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு தமிழகமே அதகளப்பட்டது.

காவிரி பிரச்சினையில் தொடர்ந்து பின்னடைவுகளையே உருவாக்கினாலும், கருணாநிதி தன்னுடைய சாமார்த்தியமான பேச்சாலும், சுய தம்பட்ட அரசியலாலும் காவிரி பிரச்சினையில் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்தார். அதே போல, ஜெயலலிதாவும் தன் பங்கிற்கு நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது, சவடால் விடுவது என திமுக பாணியை பின்பற்றி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பாக முன்னிலும் குறைவாக 192 டி.எம்.சி என தீர்ப்பளித்த போதும், தனக்கு விழா எடுக்க வைத்து கருணாநிதிக்கு போட்டியாக பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை பெற்று மகிழ்ந்தார்.
தமிழகத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக இரு திராவிடக் கட்சிகளும் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வதில் குறியாக இருந்த சூழலின் எதிர்வினையாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழகத்திற்கு விரட்டப்பட்டனர். அத்துடன் தமிழகத்திற்கு எதிரான அரசியலை வீரியமாக செய்யும் அரசியல்வாதிகளை விரும்பும் மனநிலை கர்நாடக மக்களுக்கு உருவானது.

இதன் விளைவு தான் மேகதாது அணை. உண்மையில் இந்த அணை கட்டப்படுவது கர்நாடகத்திற்கே நல்லதல்ல. கர்நாடகத்தில் பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும். 10,000 பழங்குடி மக்கள் இடம்பெயர நேரும். அத்துடன் வன விலங்குகளின் நிலை கேள்விக்குள்ளாகும். நில நடுக்கம் ஏற்பட்டு மேகதாது அணை விரிசல்விட்டால் பெங்களூர் நகரமே நீரில் மூழ்கி பேரழிவு ஏற்படும். மேகதாது கட்டுவதன் மூலம் தமிழகத்தை வீழ்த்திய கதாநாயகனாக தன்னை காட்டிக் கொள்ளவும், இந்த பிராஜக்ட் மூலம் பல்லாயிரம் கோடிகள் உலக வங்கியில் கடன் பெற்று அதில் முறைகேடுகள் செய்து பணம் ஈட்டவும் தான் கர்நாடக அரசியல்வாதிகள் தீவிரம் காட்டுகின்றனர். மேகதாதுவின் உண்மை நிலையை கர்நாடக மக்கள் உணர்ந்தால் அவர்களே அதை எதிர்ப்பார்கள் என்பது உறுதி.
ஆக, கர்நாடக அரசியல்வாதிகள் நம் மீது வெறுப்பை உமிழ்ந்தாலும் கர்நாடக மக்களிடம் மனமாற்றம் ஏற்பட நாம் செய்ய வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு நமது பேச்சுவார்த்தையின் போது தமிழகத்தின் மிக மோசமான நிலைமைகளை அங்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பேச்சு வார்த்தைகளில் எவ்வளவு பின்னடைவுகள் உருவானாலும் எதிர் அரசியலோ, பகை அரசியலோ செய்யாமல் தொடர்ந்து முயற்சிப்போம். அகில இந்திய அளவிலும் நமக்கு ஆதரவான நிலை உருவாகும். சிறிது, சிறிதாக அவர்களிடம் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும், தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்களாவும் ஆன மனநிலையை கட்டமைக்க வேண்டும்.
”தர வேண்டியது நமது தார்மீகக் கடமை! பெற வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை” என அவர்களை உணர வைத்து, அவர்களே விரும்பி தண்ணீர் தரச் செய்யும் சூழலை உருவாக்குவோம்.
நம்புங்கள், வெற்றி நிச்சயம்!
சாவித்திரி கண்ணன்























Leave a Reply