ஆட்டம் ஆரம்பித்துவிட்டது..! அதிரத் தொடங்கியுள்ளது அதிமுக!

சாவித்திரி கண்ணன்

பாஜகவின் சடு,குடு ஆட்டம் ஆரமித்துவிட்டது!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை இன்னும் பாஜக ஏற்கவில்லை! இதை பாஜகவின் தமிழக தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் தொடங்கி புதிதாக கட்சிக்கு வந்த குஷ்பு வரை அனைவரும் மீண்டும், மீண்டும்  கூலாகச் சொல்லி வருகிறார்கள்!

‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக, தன்னை பெரிய பலமுள்ள கட்சியாக கருத்த முடியாது. நாங்கள் தான் உங்கள் ஊழல்களை மன்னித்து, தண்டிக்காமல் நான்காண்டுகளாக காப்பாற்றி வருகிறோம். ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற காரணத்தால், நீங்கள் கூட்டணியை கலந்து பேசாமல் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் அது ஏற்புடையது அல்ல.’ என்ற தன் நிலைபாட்டைத் தான் பாஜக  சூசகமாக அறிவித்துள்ளது.

அதிமுக கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது!

சி.வி.சண்முகம் கொளுத்தி போட்டார்!

அது, இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சரசரவென்று வெடித்து புகைந்தது!

சி.வி.சண்முகம் பேச்சின் முக்கிய அம்சங்கள்;

# இரட்டை இலை சின்னம் முடக்கப்படவுள்ளது!

# வரப் போகும் தேர்தல் நமக்கு வாழ்வா சாவா பிரச்சினை!

# அதிமுகவிற்கு தலைவர்கள் துரோகம் செய்யலாம்,தொண்டர்கள் செய்யமுடியாது!

# எடப்பாடி தான் முதல்வர்.

இதைத் தொடர்ந்து ராயபேட்டை பொதுக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி தொடங்கி எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் அனைவரும் எந்த தேசிய கட்சி என்றாலும் மாநில கட்சி என்றாலும் எடப்பாடி முதல்வர் என்பதை ஒத்துக் கொள்பவர்கள், அதிமுகவின் நிபந்தனைக்கு ஒத்துக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என ஆவேசம் காட்டியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. சிலர் சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர்; இதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இங்கு தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. ஆனால் இப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருங்காலிகள்,புல்லுருவி கூட்டத்தினர் தமிழகத்திற்குள் நுழைய பார்க்கிறார்கள்’’ பொங்கினார்!

அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் பாஜக பேரை நேரடியாக குறிப்பிடமுடியாமல் அதிமுகவிற்கான நெருக்கடியை மறைமுகமாக பேசினர்!

அதே சமயம் பன்னீர் செல்வம் பதட்டப்படாமல் பாஜகவுடன் கூட்டணி கண்டதால் தமிழகத்திற்கு கிடைத்த பலன்களை பட்டியலிட்டார். பன்னீர்செல்வம் தப்பித் தவறி கூட எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் எனக் கூறவில்லை என்பது கவனத்திற்குரியது. பன்னீரை கைக்குள் போட்டுக் கொண்டு தான் எடப்பாடியை பணிய வைக்க முடியும் என்ற பாஜகவின் செயல்திட்டம் ஜெயலலிதா மறைவுக்கு முன்பே, அவர் அப்பல்லோவில் இருந்த போதே ஒரே செயல்திட்டம் தான். அக்டோபர் மாதம் எடப்பாடி தான் முதல்வர் என்ற போது பன்னீர் என்ன சொன்னார்- கூட்டணி கட்சிகளை கலந்து பேசலாம்- என்றார். பாஜக இன்று  பேசுவதைத் தான் அன்றே பன்னீர் சொன்னார். அப்போது அது பன்னீர் குரலல்ல, பாஜகவின் குரல் என்பது அதிமுக தலைவர்களுக்கு தெரியவில்லை!

அடிபணிவதில் பன்னீரோடு போட்டியிட்ட பழனிச்சாமி, முதல்வர் பதவி மீதுள்ள ஆசையால் பின் தங்கிவிட்டார்! தற்போது எடப்பாடிக்கு ஆதரவாக சவடால்விடும் அமைச்சர்கள் பாஜக ’இன்காம்டாக்ஸ் ரெய்டு’ என்ற சாட்டையை கையில் எடுத்தால் சரணாகதி அடைவார்களா அல்லது சமர் புரிவார்களா என்று சொல்லமுடியாது!

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜீ பாஜக தேசிய கட்சி என்பதால், ‘’அவர்கள் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று சொல்வது சரி தான்’’ எனக் கூறியுள்ளார்!

நாம் ஏற்கனவே அறம் இதழில் அதிமுக ஒரே கட்சி தான் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆனால், அது உள்ளுக்குள் இரண்டு கட்சியாகத்தான் செயல்படுகிறது என்பதை,

அடிமை அரசியலின் அலங்கோலங்கள் என எழுதியிருந்தோம்.

இன்றைய தினம் அதிமுக என்பது பாஜகவின் பிடியில் இருந்து விலகி, சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்பவர்கள் ஒரு பிரிவாகவும், பாஜகவை அனுசரித்து செயல்பட வேண்டும் என்பவர்கள் மற்றொரு பிரிவாகவும் தீவிரமாக இரண்டுபட்டுவிட்டது! இதில் எந்த அணியில் யார் உள்ளனர் என்பதை உறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால், யார் பலமாக உள்ளனர் என்பதும் தெரியவில்லை!

ரஜினி கட்சி தொடங்கிய பிறகு பாஜகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்காக அனைவரும் பொறுத்துக் கொண்டுள்ளனர்.

அதிமுகவை இரண்டாக பிளந்து பார்க்க காத்திருப்பவர்கள், மற்ற கூட்டணி கட்சிகளையும் அந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க கேட்காமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் பாமக,தேமுதிக ஆகியவை அதிக சீட்டுகள் கேட்பதையும், கூட்டணி ஆட்சியை விரும்புவதையும் பாஜக தனக்கு சாதகமாக காய் நகர்த்த பயன்படுத்தும்!

ஆக, அதிமுக பிளவுபட்டால் எடப்பாடி அணி ஒரு பிரிவாகவும் பன்னீர் செல்வத்தின் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்பட நேர்ந்தால் இரட்டை இலை முடக்கப்படும்!

அப்படி இரட்டை இலை முடக்கப்பட்டால் அது அதிமுகவின் வெற்றியை கடுமையாக பாதிக்கும்! அப்போது கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்கும். கூட்டணி ஆட்சிக்கான நிர்பந்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஆக, பாஜக எதிர்பார்ப்பது போல கூட்டணி ஆட்சிக்கும், அதிக சீட்டுக்கும் அதிமுக இணங்கி வந்தால் கட்சி பிளவுபடாமலே இரட்டை இலையை தக்கவைத்து தேர்தலை சந்திக்கலாம். இல்லையெனில், பிளவுபட்டு அதிமுக வாக்கு வங்கி சிதறுண்டு போகலாம்! மடியில் ஏகப்பட்ட கனம் வைத்துக் கொண்டு தேர்தல் ரேசில் வேகமாக ஓடுவது சிரமம்! வழியில் பயமிருப்பதால் சுமையை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும்!

எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலான தலைவரல்ல, சுயசெல்வாக்கு உள்ளவருமல்ல, அவரை நம்பியல்ல, பணத்தை நம்பி தான் அதிமுக தேர்தல் களத்தை எதிர் கொள்ள உள்ளது! ஏற்கனவே ரெய்டு நடத்தி, எல்லா கொள்ளைகளையும், பட்டியலிட்டு எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கைக்கு பாய காத்திருக்கிறது பாஜக அரசு! ஆக, எல்லா அமைச்சர்களுக்கும் சி.வி.சண்முகம் போல துணிச்சல் வரும் என்று சொல்ல முடியாது. அடுத்து ஆட்சிக்கு வருவோமா என்பது நிச்சயமில்லாத நிலையில் சேர்த்த செல்வத்தையாவது பாதுகாத்துக் கொள்ளலாம், கண்ணுக்கு முன்னால் உள்ள வாய்ப்பை கஷ்டமில்லாமல் ஏற்கலாம் என்பதே பெரும்பாலான அமைச்சர்களின் நிலைபாடாக உள்ளது!

அதிமுகவின் எதிர்காலம் இன்றைய நிலவரப்படி பாஜகவின் கையில் தான் உள்ளது. ஏனென்றால், எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் இவர்களை அடிபணியக் கூடியவர்களாகவே நீண்டகாலம் பயிற்றுவித்துள்ளனர்!

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time