வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தோற்றால் ,விடிவே இல்லை நாட்டுக்கு!

ஸ்ரீ குமார்

உலகத்தின் பழமையான தொழில் விவசாயம். தற்போது விவசாயிகள் புதுதில்லியை முற்றுகை இட்டு, தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்; ஆனால் அரசு வழக்கறிஞர் ’முடியாது’ என்கிறார். உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரம் போராட்டத்திற்கு தடை விதிக்கவும் இல்லை. ஏனெனில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியாது.

காற்றில் கலந்த தேர்தல் வாக்குறுதி!

பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு தருவோம் என்று கூறவில்லை. ஆனால் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறது. இதற்காக 10,000 கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறாத ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவது ஏன் ?  தேர்தல் பிரச்சாரத்தின்போது  நரேந்திர மோடி இப்படி ஒரு சட்டம் குறித்துச்  சொல்லவில்லை; பாஜகவின் தலைவராக இருந்த அமித் ஷாவும்  சொல்லவில்லை. விவசாயிகளும் இப்படி ஒரு சட்டம் தங்களுக்கு தேவை என்று கோரவில்லை.

கேரளாவிலும்  மண்டி( அரசு கொள்முதல் நிலையம்)  இல்லை என்று பிரதம மந்திரி கூறுகிறார். கேரளாவில் விவசாயம் இல்லை எனவே மண்டியும் இல்லை. அங்கு ரப்பர், தென்னை போன்றவைதான் பயிரிடப்படுகின்றன.கோதுமை விளைச்சல் கேரளாவில் இல்லை. அரிசி இப்போதுதான் சில மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. அடிப்படையில் கேரளா ஒரு நுகர்வு மாநிலம். தனக்கு தேவையான காய்கறி, அரிசி, கோதுமை போன்ற பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து தருவித்துக் கொள்கிறது. ஆனால் போராட்டத்தை திசை திருப்புவதற்காக கேரளாவில் மண்டிகள் இல்லை என்று பிரதம மந்திரி சொல்கிறார்.

சர்வமும் தனியார் மயம்!

அரசினுடைய  மண்டிகளும் இருக்கும்; தனியார் மண்டிகளும் இருக்கும் என்று அரசு சொல்கிறது. இதனால் என்ன ஆகும் என்றால்,  அரசு மண்டிகள் இழுத்து மூடப்பட்டு, தனியார் மண்டிகள் மட்டுமே சந்தையில் இருக்கும். அரசுத் துறையில் இருந்த தொலைபேசி நிறுவனத்தை பிஎஸ்என்எல் ஆக மாற்றினார்கள். அது கார்ப்பரேஷன் ஆக மாறிய பிறகு டாட்டா, ரிலையன்ஸ், ஜியோ, ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும் வந்தன. இப்போது ஏறக்குறைய பிஎஸ்என்எல் ஐ இழுத்து மூடிவிட்டார்கள். அதே போலத்தான்  இந்த சட்டம் அமல் ஆனபிறகு அரசு கொள்முதல் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு விடும்.தனியார் நிறுவனங்கள்தான் சந்தையில் இருக்கும்.எனவேதான் விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.

உழைப்பு, இயந்திரம், விலங்கு,  குடும்ப உழைப்பு போன்றவைகளுக்கு ஆகும் செலவோடு, 50 சதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை இப்போது வழங்கி வருகிறார்கள். எம்.எஸ்.சாமிநாதன் தனது அறிக்கையில் இத்தகைய செலவில்  நிலத்தின் மதிப்பு அல்லது நிலத்திற்கான வட்டியையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியிருக்கிறார். இதனை உறுதி செய்வதற்காக ஒரு சட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரவில்லை. பாதுகாப்பு படைக்கலன்கள் நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது  என்று ஐந்து முறை பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்காமல் , இந்த அரசு 219 ஆண்டு பழமை வாய்ந்த  ஆலைகளை கார்ப்பரேஷனாக்க முயற்சிக்கிறது. எனவேதான் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வேண்டும் என்று விவசாயிகள்  கூறி வருகிறார்கள்.

எந்தவிதமான விவாதங்களும் இல்லாமல் பாராளுமன்றத்தில் மூன்று வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவை  நடவடிக்கையில் கலந்து கொள்ளாத வகையில் தற்காலிக நீக்கம் செய்து பாராளுமன்ற அராஜகத்தை மனசாட்சியின்றி அரங்கேற்றினர்.

நில உரிமை பறிபோகும்

அரசு போராடுகிற விவசாயிகளை மதிக்காமல், அவருடைய கோரிக்கையை நிறைவேற்றாமல், ஆளில்லாத சங்கங்களை வைத்து அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட வைக்கிறது. அரசு தேவையற்ற பலவித செலவினங்களை செய்கிறது. மத்திய அரசு பொறுப்பற்ற வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுகிறது.

சமையல் எரிவாயுக்கான மானியத்தை  சத்தமில்லாமல் நிறுத்திவிட்டார்கள். மன்மோகன் சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கு, சட்டரீதியான அங்கீகாரம் தர வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.இப்போது நரேந்திர மோடி பிரதம அமைச்சர். அவரது பரிந்துரையை அவரே நிறைவேற்றவில்லை. இப்படி பொய் சொல்கின்ற  பிரதமரைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். அவரை விட அதிகமாக பொய் சொல்லக் கூடிய நபர் மூலம்தான் அவரை எதிர் கொள்ள வேண்டுமோ என்னவோ ? எதிர்கட்சித் தலைவராக இருக்கிற ராகுல்காந்திக்கு பொய் சொல்லத்  தெரியவில்லை;  இந்த சட்டம் அமலானால் விவசாயிகள் தங்கள் அடையாளத்தை இழப்பார்கள். நிலம் அவர்களுக்கு சொந்தம் இல்லாமல் போகும்.

பெருநிறுவனங்கள் ஒப்பந்த முறையில் பயிரிடும் போது அவர்கள் கொடுக்கும் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.இதனால் விவசாய நிலங்கள் தமது சாரத்தை இழந்து விடும். இதனால் நிலங்கள் தரிசாகும் .பிறகு அவை ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கு  கொடுக்கப்பட்டு விடும்.

விவசாயிகள் சாப்பிடமுடியாது!

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் நாசிக் சென்றிருந்தபோது எனக்கு திராட்சை கொடுத்தார்கள் அந்த திராட்சை வாழைப்பழ அளவில் பெரிதாக இருந்தது. இதனை ஒப்பந்த முறையில் பெருநிறுவனங்கள் இப்போதும் பயிர் செய்து வருகிறார்கள். ஆனால் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காகக் கூட அதைப் பயன்படுத்த முடியாது. அதாவது உற்பத்து செய்து தமட்டுமே உரிமையுள்ளது.சாப்பிடவல்ல! அவர்கள் நிலத்திலேயே அவர்கள் கூலிகளாக வேலை செய்ய வேண்டும். அவைகள் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுகின்றன. இந்த  நிலையைத்தான் நாடு முழுவதும் சட்டபூர்வமாக கொண்டுவர இந்த சட்டம் உதவி புரிகிறது.

 அம்பானி,அதானிக்கு உதவத் தான் வேளாண் சட்டங்கள்!

இந்தச் சட்டத்தினால் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள். 40 ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நாம் வாங்கத்தான் வேண்டும். ஏனென்றால் நாம்  நுகர்வோராக இருக்கிறோம்.

சட்டங்கள் அமலானால் இனி வரும் காலங்களில் சாலையோரங்களில் விற்பனை இருக்காது. ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் கடைகளில்தான் விற்பனை இருக்கும். அம்பாணி  நிறுவனம் விவசாய பொருட்களை சேமித்து வைப்பதற்காக நாடு முழுவதும் கிட்டங்கிகளை கட்டி வைத்துள்ளது. அதேபோல அதானி குழுமமும், பெரும் உணவு கிடங்குகளை கட்டியிடுப்பதோடு, இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கிகளை நாடு முழுவதும் பல ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. சட்டம் இயற்றப்படுவதற்கு  முன்னதாகவே இப்படி ஒரு ஏற்பாட்டைச்  செய்துவிட்டுதான் இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதையெல்லாம் எதிர்த்துதான் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவை நீர்த்துப் போக கூடாது .இது நம்பிக்கை தரக் கூடிய போராட்டம் ஆகும். இவை தோற்றுப்போனால் நாம் வரலாற்றுப் பிழை செய்தவர்களாவோம். போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்கள்  நின்று  மோடி அரசாங்கத்தின் தலைக்கனத்தை  குறைக்க வேண்டும்.

போராடும் விவசாயிகளுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்கள்

இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின்  ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு  ராணுவ வீரர் இருப்பர்கள்; அல்லது காவலர் இருப்பார்கள். அப்படிப்பட்ட விவசாயிகளைப் பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்லுகிறார்கள். பாகிஸ்தானோடு  சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். எதிர்கட்சிகள் போராளிகளோடு சேர்ந்து படம் எடுத்து வெளியிட்டு விளம்பரம் தேடுகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச்  செய்வதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும் என்று ஸ்ரீ குமார் பேசினார்.

தமிழ்நாடு ஏஐடியுசி சென்னையில் 26 12 20 அன்று முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கே டி கே.தங்கமணி நினைவு கருத்தரங்கை நடத்தியது.  பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சம்மேளன (AIDEF) பொதுச் செயலாளர் ஸ்ரீ குமார் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற தலைப்பில் உரையாற்றியதன் சாராம்சம்.

எழுத்தாக்கம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time