விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்!
அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது!
அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது!
அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது,
மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை சந்தையில் நியாயமாக நிர்ணயிக்கும் கமிட்டியை கலைத்து அதிகாரமில்லாமல் ஆக்கியது எதற்காக?
”ஓய், மத்திய மாநில அரசுகளா…ஒதுங்கி போங்கள், அம்பானி வருகிற இடத்துல உங்களுக்கு என்ன வேலை? கெட் அவுட்! அவரு வக்கிறது தான் ரேட்!
எந்த பொருளுக்கும் கட்டுப்பாடு இல்லை, ஆமா, எங்க அதானி எஜமான் பல்லாயிரம் கோடியில குடோவுன கட்டி வச்சுருக்கார். அதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா? அதனால தான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எங்க வேணா, எவ்வளவு வேணா பர்சேஸ் பண்ணலாம். அப்படின்னு புது சட்டம் கொண்டு வந்திருக்கோம்.’’
இது தான் பாஜகவின் மைண்ட் வாய்ஸ்!
கடந்த சில மாதங்களுக்குள்ளாகவே அம்பானியும், அதானியும் 53 விதமான விவசாயம் சார்ந்த புதிய நிறுவனங்களை பதிவு பண்ணியிருக்காங்க. ஆக, விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அம்பானி, அதானிக்கு தாரை வார்க்கிறது தான் பாஜக அரசின் திட்டமாக தெரிகிறது!
எனில், விவசாயிகள் மைண்ட் வாய்ஸ் இப்படிப் போகுது…!
”இப்ப எல்லாம் கிளியராயிடுச்சு… இந்த அம்பானி, அதானிகள் தான் பாஜக அரசின் எஜமான்! அவங்க பேச்சை நீங்க தட்டமாட்டீங்க.. எங்க கூக்குரல் உங்க காதுல விழுவாது! ஆனா,அம்பானியோ,அதானியோ முணுமுணுத்தா கூட பதறிடுவீங்க…! அப்ப இங்க பாருங்க, அம்பானியோட செல்போன் டவரை எல்லாம் கொளுத்தி போடுறோம். இது வரை சுமார் 1,500 செல்போன் டவரை எரிச்சுருக்கோம், பாக்கி உள்ளதையும் தீர்த்துட்டு தான் ஓய்வோம்.
என்னது இது வன்முறையா? அப்படின்னா மூன்று லட்சத்து சொச்சம் பேர் வேலை பார்த்த பி.எஸ்.என்.எல்லுக்கு ஏகப்பட்ட தடங்கல்கள் கொடுத்து, திட்டமிட்டு அழித்து, அதோட சொத்துகளை யெல்லாம் அம்பானி பயன்படுத்த தூக்கி கொடுத்தீங்களே…, லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கவும், பொதுதுறை சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலும் செய்தீர்களே அதுக்கு பேர் என்ன?’’ என விவசாயிகள் கேட்கிறார்கள்!
பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ல் அதானியின் சொத்து மதிப்பு 42,280 கோடி ரூபாய்!
அது தற்போது 2,20,320 கோடியாக உயர்ந்துவிட்டது!
பாஜக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து அம்பானியின் சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டே செல்கிறது! நரேந்திரமோடி பதவியேற்கும் போது அம்பானியின் சொத்து மதிப்பு 1,64,500 கோடியாக இருந்தது!
அது தற்போது 6,58,000 கோடியாக வளர்ந்துவிட்டது!
அப்போது அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 40 வது ஆளாக இருந்தார். ஆனால், தற்போது அதில் நான்காவது இடத்தை அடைந்துவிட்டார்! இன்னும் மோடி ஆட்சி முடிவதற்குள் அமோசானையும், பில்கேட்டையும் நிச்சயமாக மிஞ்சிவிடுவார் மோடி ஆதரவில்! ஏனெனில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அம்பானி சொத்தின் மதிப்பு 100 கோடி அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆக, பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி எவ்வளவு பயபக்தியாக, அர்ப்பணிப்புடன் அம்பானி,அதானி சொத்துகள் உயர பாடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை!
அதானி வளர்வதற்காக தன்னுடைய உலக சுற்றுப் பயணத்தில் பல நாடுகளுக்கு மோடி தன்னுடனேயே அவரை அழைத்து சென்றதெல்லாம் சும்மாவா?
இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்களையெல்லாம் அதானி தன் இஷ்டத்திற்கு தோண்டி எடுத்து வளம்பெற உதவியிருக்கிறது மோடி அரசு! இந்திய உணவு கழகத்திற்கான குடோவுன்களை கட்டமைக்க ஸ்பெஷல் அனுமதி…என்று கொடுத்த வகையில் அதில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளார் அதானி!
இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்களில் எல்லாம் அம்பானி கொடி தான் பறக்கிறது. ஏற்றுமதி,இறக்குமதி லார்ஜிஸ்டிக் வேலையெல்லாம் அதானி குரூப் தான்!
இது தவிர 2018 ல் ஒரே நள்ளிரவில் இந்தியாவின் ஆறு பெரிய விமான நிலையங்களை அதானிக்கு தூக்கி கொடுத்துவிட்டது மோடி அரசு! இத்தனைக்கும் அந்த துறையில் எந்த முன் அனுபவமும் இல்லை அதானிக்கு! தற்போது இந்திய ரயில்வேயை விழுங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுள்ளார் அதானி! அதுவும் விரைவில் நிறைவேற காய் நகர்த்தப்பட்டு வருகிறது!
இது தவிர, ஏகப்பட்ட வீட்டு சமையலுக்கான எண்ணெய் தொடங்கி பல பொருட்களின் உற்பத்தி வேறு! இவை தவிர பட்டியல் போட நிறையவே உள்ளது.. நீங்களே கூகுளில் தேடி படியுங்கள்!
அம்பானியை எடுத்துக் கொண்டால் டெக்ஸ்டைல் இண்டஸ்டிரிதான் முதலில் தொடங்கினார். பிறகு தற்போது அவர் ஈடுபடாத துறையே இல்லை எனும் அளவுக்கு ரிலையன்ஸ் பிரஸ் காய்கனி அங்காடிகள், ரிலையன்ஸ் மளிகை சாமான் விற்பனை அங்காடிகள், எலக்டிரிக் பொருட்கள் விற்பனை, பெட்ரோல் நிலையங்கள், ரிலையன்ஸ் பிக் பஜார், ஆயில் கம்பெனி, கேஸ் கம்பெனி..ஜியோ செல்பேசி இணைப்புகள்.. என்று அவரது சாம்ராஜ்ஜியம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டி பறக்குமளவுக்கு மிகப் பெரியது!
இந்தியாவின் ராணுவ தளவாடங்கள்,போர்விமானங்கள் செய்வதற்கும் தற்போது பாஜக அரசால் பல எதிர்ப்புகளையும் மீறி பாதுகாப்பு துறைக்குள்ளூம் அம்பானி, அதானிகள் நுழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறம் இணைய இதழில் நான் ஏற்கனவே
இந்தியாவை ஆட்சி செய்வது அம்பானியா? அதானியா? மோடியா? என எழுதியுள்ளேன்.
ஆக, மொத்ததில் இந்திய அரசாங்கத்தை விட, வலிமை பொருந்தியவர்களாக அம்பானியும், அதானியும் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தாவிட்டால், அது இந்திய மக்களுக்கே பேராபத்தாக முடியும்.. என்பதே விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலமாக நமக்கு தந்துள்ள செய்தியாகும்! அதன் முதல் கட்டமாக, ’’அம்பானி, அதானி உற்பத்தி பொருட்களையும்,அவர்களது வியாபார நிறுவன சேவைகளையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்’’ என விவசாய சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி போராடி வருகிறர்கள்! இதை நமது ஊடகங்கள் சரியாக வெளிப்படுத்தமாட்டார்கள்! ஆகவே தான் அறம் சார்ந்த பார்வையில் நாம் இதை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
Also read
அன்று மகாத்மா காந்தி அன்னிய பொருட்களை பகிஷ்கரிக்கும் பேரியக்கத்தை நடத்தினார்.
இன்று விவசாயிகள் அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும் அறைகூவலை விடுத்துள்ளனர்!
மக்கள் ஒன்றுபட்டால் இதை சாதித்து அம்பானி, அதானிகளின் ஆக்டோபஸ் கரங்களை செயல் இழக்க செய்யலாம்! அதன் மூலம் அவர்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் செய்யலாம். இனி எந்த அரசுக்கும் இது போல தனி முதலாளிகளை வளர்க்கும் தைரியம் வராமல் இருக்க, இந்த புறக்கணிப்பின் மூலம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மோடியை நகர்த்தி அவர்கள் இருவரில் ஒருவர் நாற்காலியில் உட்காரும்போது தெரியும் பிஜேபி க்கும் அதனை இயக்குபவர்களுக்கும்.