ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்!
அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்!
இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்!
குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் என்ற புகழாசை, அரசியல் நுழைவை ஜவ்வாக இழுத்தடித்த தந்திரம், அரைகுறை மனசோடு அரசியல் முன்னெடுப்புகளை செய்த அவலம், தன்னலம் ஒன்றே குறிக்கோளாக அரசியல் எதிர்பார்ப்புகளை கிளறி பட வசூலை உயர்த்தி கொண்ட சாமர்த்தியம், முடிவை அறிவிக்க துணிவில்லாத தயக்கம்…ஆகியவற்றோடு வலம் வந்த ரஜினியின் அடையாளத்தை மறக்க முடியாது!
முப்பதாண்டுகளுக்கு மேல் பல பேருடைய உறக்கத்தை கலைத்து, சதாசர்வ காலமும் அரசியல் அபிலாசையை அணையா விளக்காக வைத்திருந்த பாவத்தை எத்தனை முறை கங்கையில் விழுந்து எழுந்தாலும் கரைக்க முடியாது. இமயமலை சென்று வந்தாலும் இறக்கமுடியாது, அந்த பாவமூட்டையை!
எத்தனை ரசிகர்கள் முப்பதாண்டுகளுக்கு மேலாக ’வருங்கால முதல்வரே’, ’தமிழகத்தின் எதிர்காலமே’, ’ஊழலற்ற ஆட்சியை தர வரும் நம்பிக்கை நட்சத்திரமே’…என்று போஸ்டர்கள் அடித்து,பேனர்கள் வைத்து… அவரது அரசியல் வருகை தொடர்பாக நட்பு வட்டாரத்திலும், உறவுகள் வட்டாரத்திலும்…பேசிப்,பேசி நம்பிக்கையை பல்லாண்டுகளாக வளர்த்துக் கொண்டிருந்தனர்! அவர் அழைக்கும் போதெல்லாம் நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு ஓடிவந்தது, செலவழித்தது என்ற வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லட்சம்லட்சமாக இழந்துள்ளனர்.
அரசியல் நுழைவு விவகாரத்தை முற்றுபுள்ளி வைக்காமல், இழுத்தடித்து வந்ததில் அவரும், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும் நல்ல பலனடைந்தனர்! அவரை வைத்து கதையளந்த ஊடகங்கள் பெரும் பலனடைந்தன! மக்கள் ஏமாற்றப்பட்டனர்!
நான் மட்டுமே தொடர்ச்சியாக, உறுதியாக அவரது அரசியல் நுழைவு தொடர்பான அவரது விருப்பமின்மையை பகிரங்கப்படுத்தி வந்தேன்! இன்று மட்டும் சுமார் ஐம்பது பேர் போன் போட்டு, ’’நீங்க சொன்னதெல்லாம் உண்மையாயிடுச்சு சார்’’ என்றனர்.
உண்மையைச் சொன்னால், நான் இதற்காக எந்த மெனக்கிடலிலும் இது வரை ஈடுபட்டதில்லை! உண்மைகளை, யதார்த்தங்களை கட்டமைக்கப்படும் மாயைகளில் இருந்து விலக்கி அணுகும் என்னுடைய இயல்பிலே தான் நான் இயங்கி வருகிறேன். இந்த விவகாரம் என்றில்லை- எத்தனையோ அரசியல்,சமூக விவகாரங்களிலும் இப்படித்தான் எழுதியும்,பேசியும் வருகிறேன்!
எவர் ஒருவருக்கும் ஒன்றில் ஈடுபாடு இருந்தால் அதற்கு உடல் நலம் ஒரு பொருட்டல்ல, என்பதற்கு, எவ்வளவோ உடல் பின்னடைவுகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததே உதாரணமாகும். அவர் ’அண்ணாத்தே’வில் நடிக்க சென்றதும், மீண்டும் அதில் நடித்து முடிப்பதில் காட்டும் கமிட்மெண்டுமே சாட்சியாகும்! அந்த படம் முடித்துவிட்டு மேலும் சில படங்களிலும் கூட அவர் நடிக்கலாம்! காரணம், சினிமாவை அவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்!
பெரியார் மூத்திர சட்டியை தூக்கிக் கொண்டு, ஊர், ஊராக பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டார்! அதில் அவருக்கு இருந்த கமிட்மெண்ட் தான்! எம்.ஜிஆரும் அமெரிக்க போய் பிழைத்து வந்தது ஒரு மறுபிறப்பென்ற நிலையிலும் உடல் நலன் குன்றிய நிலையில் தான் அரசியலில் கோலோச்சினார்! அதே போல கருணாநிதியும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே கடைசி சில ஆண்டுகள் அரசியலில் கோலோச்சினார்!
Also read
அது அதில் ஈடுபாடுள்ளவர்களுக்கு அது கடைசி மூச்சுவரை சாத்தியப்படும்! மீண்டும் சொல்வேன். அரசியலில் ரஜினிக்கு சபலம் இருந்தது, அவரது குடும்பத்திற்கும் இருந்தது. ஆனால், அதில் ஈடுபடும் தைரியம் இல்லை. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மையை அவரிடம் எதிர்பார்க்கமுடியாது! எப்படியோ..,தவறானவர்கள் கைகளில் அவர் சிக்கவிருந்த ஆபத்து விலகியது! ஒரு அரசியல் சூதாட்டத்திற்கு அவர் துணைபோவதிருந்து விடுபட்டன நாடும், மக்களும்! அந்தப்படிக்கு நடந்ததெல்லாம் நன்மையே!
அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்பதை அறிவித்தாலும், அவரை வைத்து பிழைப்பு நடத்த காத்திருந்த இந்துத்துவ அரசியல்வாதிகள் அவரை லேசில் விடமாட்டார்கள்! வாய்ஸ்சாவது தாருங்கள் என்று நிர்பந்திப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்! அந்த வாய்ஸ்சுக்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை! அரசியல் நாடகத்தில் இருந்து பாதியிலேயே நடிகர் விலகினாலும், ஏவ்வளவோ முதலீடு செய்தவர்கள் எப்படியாவது அவரை பயன்படுத்தாமல் விடுவார்களா என்ன?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
தராசு தட்டில் போடும் எடை கணக்கீடு கூட சற்று முன் பின் போகலாம். ஆனால் உங்கள் பார்வை மிக துல்லியமான து
அரசியல் நுழைவு விவகாரத்தை முற்றுபுள்ளி வைக்காமல், இழுத்தடித்து வந்ததில் அவரும், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும் நல்ல பலனடைந்தனர்! அவரை வைத்து கதையளந்த ஊடகங்கள் பெரும் பலனடைந்தன! மக்கள் ஏமாற்றப்பட்டனர்!
Very much appreciate your astute analysis and comments. As you say, Rajini’s heart wasnt in it. The entire serial has become a show business. Congratulations for a well analysed article.