விவசாயிகளின் விடிவெள்ளி நம்மாழ்வார்! உழவர்களின் ஒப்பற்ற தலைவர்!

சாவித்திரி கண்ணன்

நம்மிடையே வாழ்ந்த நவீன காந்தியாகத் தான் நான் அவரை உணர்ந்தேன்! சுய நலம் துறத்தல், வேறுபாடுகளின்றி அனைவரையும் அரவணைத்தல், இடையறாத மக்கள் சேவை, எளிமை, மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்த நேர்மை, போராடுவதில் காட்டிய நெஞ்சுரம், அன்பை பொழிவதில் வெளிப்படுத்திய தாய்மை குணம் என பன்முகத் தன்மை கொண்டவர் நம்மாழ்வார்!

தான் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை தன் எண்ணங்களால், செயல்களால் உருவாக்கிச் சென்றவர் நம்மாழ்வார்!

1969 தொடங்கி அவர் களப் பணிகளுக்கு தன்னை ஒப்புவித்துக் கொண்டவர் என்றாலும், 1990 களில் சிறு விவசாயப் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் என்ற வகையில் அவர் எழுத்துகளைப் படித்து அவரால் கவரப்பட்டேன்! நம்மாழ்வாரின் எழுத்துகளும், பேச்சுகளும் படித்த சில மேதாவிகளால் விவசாயத்தில் நிகழ்ந்து வரும் அநீதிகளை நான் அறியச் செய்தன. எனவே, விவசாயத்தில் இயற்கையை மீட்பதற்காக நடக்கும் போராட்டங்களை எழுத வேண்டும் என என்னை உத்வேகப்படுத்தின!

ஆபத்தான ரசாயன உரங்களை எதிர்த்து ஆரோக்கியம் தரும் இயற்கை விவசாயத்தை நடைமுறை சாத்தியமாக்கி, தமிழகத்தில்இயற்கை வழி விவசாய  மறுமலர்சிக்கு வித்திட்ட நம்மாழ்வாரை சந்தித்து நான் துக்ளக்கிற்காக பேட்டி எடுத்த காலத்தில் அவர் வெகு ஜனதளத்தில் பிரபலமாகவில்லை! அவரை மட்டுமின்றி அவரால் அடையாளம் காட்டப்பட்ட கேளம்பாக்கம் ரங்கநாதன் மாம்பாக்கம் வீரபத்திரன், சோழங்க நல்லூர் கண்ணபிரான்…என பலரையும் நேர்காணல் செய்து ஒரு சிறுவிவசாய தொடரையே எழுதினேன்! அதன் பிறகு இன்று தமிழகத்தில் நூற்றுக்கணகான இயற்கை விவசாய முன்னோடிகளை தெரிந்து பழகவும், குமுதம் மண்வாசனையில் விவசாயம்- நேற்று,இன்று நாளை என்றும்,உழவர் குரல் என்றும் தொடர் கட்டுரைகள் எழுதுமளவுக்கும் இன்றும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஒரு விவசாயப் போராளியாகவும் நான் மாறியதற்கான தொடக்கபுள்ளி நம்மாழ்வாரேயாகும்!

அப்போது தான் தெரிந்து கொண்டேன். இவர் ஒரு அமைதி புரட்சியை தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று! தமிழகத்தில் அவர் கால்படாத கிராமங்கள் இருக்க முடியாது. அவருக்கு தமிழ் நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன பயிர்கள் விளையும், எந்தெந்த இடத்தில் ஏரி,குளங்கள் அணைக்கட்டுகள் உள்ளன..என எல்லாம் அத்துபடி!

ஒவ்வொரு கிராமத்திலும் அவரை யாரோ ஒருத்தராவது நினைவு கூர்கிறார்கள்!

1938  ல் தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்து 2013 டிசம்பர் -30 வரை  நம்மாழ்வார் வாழ்ந்த அந்த இடைப்பட்ட 75 ஆண்டுகாலம் தான் இந்தியாவின் விவசாயத் துறையில் வரலாறு காணாத விபத்துகள் அரங்கேறிய காலகட்டம்!

அதாவது பாரம்பரிய விவசாயம் ‘பாய்சன்’ விவசாயமான காலகட்டம்!

பசுமை புரட்சி ஏற்படுத்திய எதிர் வினைகளால் இந்தியாவில் சுமார் ஐந்து லட்சத்திற்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட காலகட்டம்!

ஆண்டாண்டு காலமாக அரசுகளுக்கே அட்சய பாத்திரமாக வரி கொடுத்து வாழ வைத்த வேளாண் சமூகம், பிச்சைப்பாத்திரம் ஏந்திகடன் என்றும், மானியம் என்றும் கதறிய காலகட்டம்!

இந்த இழிவான சூழலை வெறுமே வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக இருக்க நான் பிறக்கவில்லை என்று தனக்குத் தானே சூளுரைத்துக் கொண்டவர் நம்மாழ்வார்,! ஒரு தேசாந்திரியாக நாடெங்கும் பயணப்பட்டு இயற்கை வேளாண்மை பற்றிய களப்பயிற்சி, கருத்தரங்கம் ,போராட்டங்கள்…என்று சுற்றிச் சுழண்டவர் நம்மாழ்வார்.

நம்பிக்கையை விதைத்தார்!

‘’இயற்கை விவசாயம் என்பது சாத்தியமே இல்லை, அதில் விளைச்சல் கிடைக்காது, நஷ்டம் தான் ஏற்படும்…’’ என்றுவிவசாயிகளின் பொது புத்தியில் படிந்திருந்த நம்பிக்கையை  படிப்படியாக பேசி, செயல்வடிவதில் நிகழ்த்தி புரிய வைத்ததில்  நம்மாழ்வார் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டார்.  ‘’இயற்கை விவசாயம் செலவில்லாதது, பாரம்பரிய விதைகளே பாதுகாப்பானது, அதில் கிடைக்கும் உணவே சத்தானது, இயற்கை தரும் கொடைக்கு மேலாக வேறு யாரும்,எவரும் நமக்கு ஒருபோதும் தந்துவிட முடியாது! இயற்கையை அழித்துப் பெறும் எதுவுமே ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட..!’’ என இடைவிடாது பிரச்சாரம் செய்து வந்தார் நம்மாழ்வார்!

‘இந்தியாவில் ஆண்டுக்கு  500 லட்சம் இரசாயன உரங்கள் நிலத்தில் கொட்டப்படுகிறது…! இதனால்,கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது நிலத்தின் மூன்றில் ஒரு பங்கு மலடாகிவிட்டது. அதுபோல பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி என கொடிய நச்சுமருந்துகள் லட்சக்கணக்கான டன்கள் பயிர்களில்தெளிக்கப்படுகின்றன..! இதனால் நாம் உண்ணும் உணவே நஞ்சாகி விடுகிறது..இதை சாப்பிடுவதால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். ஆண்டொன்றுக்கு பூச்சி கொல்லி மருந்துகளால் இந்தியாவில் சுமார் சில கோடி பேர் புற்று நோய், ஆஸ்த்துமா, தோல்வியாதிகள், நரம்பு தளர்ச்சி,சிறு நீரக செயல் இழப்பு, கண் எரிச்சல்..போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்! அதில் ஒரு லட்சம் பேர் இஅறக்கிறார்கள்! இந்த நச்சு சூழலில் இருந்து நாம் விடுபட வழியே இல்லையா…?’ என்று தவியாய் தவித்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன நம்மாழ்வாரின் பயிற்சி வகுப்புகள்!

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அவர் பயிற்சியளித்தார். பயிற்சி பெற்றவர்கள் வெற்றிகரமான  விவசாயிகளாக வலம் வந்து, நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்தில் இருந்தும் விடுபட்டு, மிக லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிக் காட்டினார்கள். இதில் எனக்கு நேரடியாக தெரிந்த சிலர் கேளம்பாக்கம் ரங்கநாதன், அறச்சலூர்செல்வம்,மதுராந்தகம் ஜெயச்சந்திரன், திருகழுக்குன்றம் தெய்வசிகாமணி, பசுமை நாயகன் உமாநாத்..என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது! நம்மாழ்வாரின் பயிற்சியில் பங்கெடுத்த ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் தங்கள் வேலையைத் துறந்து இயற்கை விவசாயத்தில் களம்கண்டு சாதித்துக் காட்டினார்கள்! தமிழகம் முழுமையும் ஆயிரக்கணக்கில்‘ஆர்கானிக் ஷாப்’ என்ற இயற்கை அங்காடிகள் தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்குவதற்கு நம்மாழ்வாரே மூலகாரணம்!

பாரம்பரியத்தை பாதுகாத்தார்!

‘’சத்து மிகுந்த பாரம்பரிய நெல் ரகங்களை நாம் தொலைத்துவிட்டோம். அதை தேடி  சேகரித்து மீண்டும் பாரம்பரிய விவசாயத்தை தழைக்க செய்ய வேண்டும்..’’என்று திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு பயிற்சியளித்தார். அவருக்குஒரு நல்ல டீமையும் உருவாக்கித் தந்து ஆண்டுக்காண்டு நெல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஊக்கப்படுத்தினார்! இதனால் தொலைந்துபோன 168 பாரம்பரிய நெல்ரகங்கள் கிடைத்தது. இதனால்  திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு‘நெல்’ஜெயராமன் என்ற பெயர் வந்தது.

நம்மாழ்வார் கரூர் மாவட்டம் வானகம் என்றஇடத்தில் ஒரு மாதிரி பயற்சி பண்ணையை உருவாக்கி பயற்சி  தந்ததோடு  நிற்கவில்லை. சுமார் 250 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு இடையறாது களப்பணிகள் செய்தார்.

சிறுதானியங்கள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு இன்று கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் நம்மாழ்வார் தான்! பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், தேமோர் கரைசல்.. போன்ற இயற்கை  உரங்கள் குறித்த புரிதலை தமிழகம் முழுமையும் உருவாக்கியதில் ஆழ்வாருக்கு முக்கிய பங்குண்டு! இயற்கை வேளாண்மை குறித்து  15 புத்தகங்கள் எழுதியுள்ளார். நம்மாழ்வாரின்தொண்டை பாராட்டி திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அவருக்கு 2007 ல் கெளரவடாக்டர் பட்டம் தந்தது!

இயற்கை விவசாயத்தை பரப்ப,பாரம்பரிய பயிர்களின் சிறப்பை குறிப்பாக பனை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த நம்மாழ்வார் அவ்வப்போது  நீண்ட பாதயாத்திரை பயணங்கள் மேற்கொண்டார்.மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆபத்தானவை, அதில் விளையும் உணவுப் பொருட்கள் ஆபத்தானவைஎ ன்று  இடையாறாது பிரச்சாரம் செய்தார். விவசாய நிலத்தை சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க கூடாது என்று அவர் போராடினார்.

வேம்பின் உரிமையை வென்றெடுத்தார்!

பன்னாட்டு நிறுவனம் ஒன்று நமது நாட்டு வேப்பமரத்திற்கு காப்புரிமை பெற்று விட்ட செய்தி அறிந்து கொந்தளித்துப்போன நம்மாழ்வார் அதற்காக ஜெர்மன் நீதிமன்றம்சென்று வாதாடி வேம்பின் உரிமையை ( மே-9, 2000 ) இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்.சுனாமி பாதித்த நாகப்பட்டிணம் மாவட்டம்மீண்டும் புத்துயிர் பெற அரும்பாடுபட்டு உழைத்தார். தமிழகம் மட்டுமின்றி மற்ற இந்திய மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பேசியும், களப்பணிகள், பயிற்சிகள்  தந்துமுள்ளார்.

கேரளா இன்று  இயற்கை  வேளாண்மையில்  சிறந்தோங்க வித்திட்டது கேரளாவில் 2007 ஆண்டுகேரளா முதல்வர் அச்சுதானந்தன் கலந்து கொண்ட விழாவில் நம்மாழ்வார் பேசிய  பேச்சு தான். கர்நாடக, ஆந்திரா விவசாயிகளுக்கும் அங்கு சென்று பயிற்சி தந்துள்ளார். இந்தோனேசிய விவசாயிகளுக்கு பயிற்சி தந்து அங்கு 30 மாதிரி பயிற்சி  பண்ணைகள் உருவாக வித்திட்டார்.

தனது ஐம்பதாண்டுக்கும் மேலான விவசாய தொண்டின் மூலமாக நம்மாழ்வார் தற்போது தமிழக இயற்கை விவசாயத்தின் ஒரு அடையாளச் சின்னமாகவே நிலைத்துவிட்டார்! ( இந்த கட்டுரையின் சில பகுதிகள் நான் சென்ற ஆண்டு தினத்தந்தியில் எழுதியவை)

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time