வேகமாக பரவிவரும் கேன்சர்..! தடுக்கும் வழிமுறைகள் என்ன?

சாவித்திரி கண்ணன்

2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 96 லட்சம் உயிர்களை புற்று நோய் களவாடிச் சென்றுள்ளது! புற்று நோயை ஒப்பிடும் போது கொரானா எல்லாம் கால்தூசாகும்!

இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ’கேன்சர்’ எனப்படும் புற்று நோய்க்கு ஆளானவர்கள் 13,92,179 பேர்!

இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் புற்று நோய் தாக்கத்தால் எட்டு லட்சம் பேர் பிறக்கவுள்ள 2021 ஆம் ஆண்டை பார்க்க வாய்ப்பில்லாதவர்களாக சென்று சேர்ந்துவிட்டனர்!

தமிழகத்தில் மட்டுமே இந்த ஆண்டு புற்று நோய்க்கு ஆளானவர்கள் 78,641.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு புற்று நோய்க்கு ஆளாகின்றவர்கள் சராசரியாக 1,300 பேர்!

மேற்படி தகவல்கள் உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தெரிவித்தவையாகும்!

கொரானா வந்தவர்களில் பெருமளவினரை காப்பாற்றிவிட முடிகிறது. ஆனால், கேன்சர் வந்தவர்களில் பெருமளவினரை நாம் இழக்க வேண்டியதாகிறது.

கேன்சரை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்தவர்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்பலாம் என்றாலும் ஆயுள் அதிகமிருக்காது!

இந்த ஆண்டு நம் கண்ணுக்கு தெரிந்த உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நடிகர் தவசி தான்! எப்படி வாட்டசாட்டமான இந்த மனிதரை நான்கே ஆண்டுகளில் புற்று நோய், அவரது தோற்றப் பொலிவையே சூறையாடிவிட்டது என்பதை நாம் பார்த்தோம்! நண்பர்களே, நம் நெருங்கிய நண்பர்களை உறவுகளை தற்போது நாளும், நாளும் புற்று நோய் களவாடி வருவதை பார்க்கிறோம்!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக அபூர்வ நோயாக பார்க்கப்பட்ட புற்று நோய் இன்று சர்வ சாதரணமாக வரக் கூடிய நோயாகிவிட்டது! புற்று நோய் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன! இதில் ஆண்களைக் காட்டிலும் சற்று அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்! மற்றும் ஒரு உண்மை என்னவென்றால், நாற்பது வயதிற்குள் உள்ளவர்களுக்கே அதிகம் வருகிறது. இது சொல்லும் செய்தி என்னவென்றால், சிறு வயதில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி, களை கொல்லி மருந்துகள் இல்லாத பாரம்பரிய உணவை உண்டவர்கள் கொஞ்சம் தாக்குப்பிடிக்கின்றனர்!

பல ஆண்டுகளாக நஞ்சில்லா இயற்கை உணவிற்காக எழுதிவருபவன் என்ற வகையில், இந்த புற்று நோய் வராமல் தடுப்பதற்கும், வந்தால் இயற்கை முறையில் அதை எதிர் கொள்வதற்குமான வழி முறைகளை, தகவல்களை அணு,அணுவாக சேகரித்ததை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக புற்று நோய்கள் ஆறு வகைகளாக சொல்லப்படுகிறது!

மார்பகம், வாய், நுரையீரல், கர்ப்பப்பை, வயிறு, பெருங்குடல்..என்றே அதிகமாக சொல்லப்படுகிறது என்றாலும், புற்று நோய் கட்டி எங்கு வேண்டுமானாலும் வருகிறது. சிறு நீரகத்தைக் கூட கேன்சர் தாக்குகின்றன! ரத்த புற்றும் வருகிறது!

என்று, நாம் பாரம்பரிய எண்ணெய் வித்துகளை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு ரீபைண்ட் ஆயில் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட நிறுவன எண்ணெய்களை பயன்படுத்த தொடங்கினோமோ..அன்று முதல் புற்று நம் மீது பற்று வைக்க ஆரம்பித்துவிட்டது!

அடுத்ததாக, நம் நிலங்களில் விளைச்சலை அதிகரிக்க நாம் கொட்டிவரும் ரசாயன உரங்களும், கொடூரமான பூச்சி கொல்லி, களை கொல்லி மருந்துகளும் நம் ஆரோக்கியத்தை வேகமாக அழித்து வருகின்றன!

இன்றைய வாழ்வியல் சூழலில் எல்லா மனிதர்களுக்குமே வாழ்நாளில் 10 முதல் 15 முறை கேன்சர் செல்கள் உடலில் தோன்ற வாய்ப்புள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன! வந்து அதிகமாகாமல் அவை தானாகவே அழிந்துவிடுவதும் உண்டு!

கேன்சருக்கான அறிகுறிகள்;

தோலில் மாற்றங்கள், தொண்டையில் வலி, உடம்பில் திடீரென ஏற்படும் கட்டி, ஆறாத புண் ,ரத்த சோகை, எது சாப்பிட்டாலும் அஜீரணம், உடல் எடை குறைவது ஆகிய அறிகுறிகள் தோன்றும் போது எச்சரிக்கை கொள்ளுங்கள்! குறிப்பாக பெண்கள் தங்கள் உடல் உபாதைகளை வெளியில் சொல்வதில்லை. ஆகவே தான் கேன்சருக்கு அதிக பெண்கள் பலியாகிறார்கள்!

புற்று நோய்க்கு எதிரான உணவுகளை இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தவர்களை புற்று நோய் தாக்குவதில்லை!

கேன்சரை தவிர்க்கும் பாரம்பரிய உணவுகள்!

சமையலில் மஞ்சள், மிளகு, இஞ்சி, லவங்கபட்டை, மல்லி, கருவேப்பிலை, முருங்கை கீரை,வெண் பூசணி, இளநீர்  ஆகியவற்றை உரிய வகையில் சேர்த்து உண்டு வருபவர்களை புற்று நோய் தாக்குவதில்லை! இதில் புற்றைத் தடுக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ் அதிகமாக உள்ளது! குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றை தடுக்கும் பேராற்றல் கொண்டது!

கரிசலாங்கன்னி கீரை ரத்த புற்றை எதிர்க்கவல்லதாகும்! இது ஒரு தெய்வீக மூலிகை என வள்ளலார் சொல்லிச் சென்றுள்ளார்! இதே போல தேங்காயும், வாழைப்பழமும் எல்லா நோய்களையும் வெல்லும் பேராற்றல் மிக்கவை! (ஆனால், தென்னையிலும், வாழையிலும் மருந்து பயன்படுத்தப்படுகிறது).

தொண்டை புற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டவர்கள் ஆரஞ்சு சாற்றை உண்டே அதை குணப்படுத்த முடியும்.

கருப்பு திராட்சை புற்றை எதிர்க்கவல்லது! ஆனால், என்ன சோதனை என்றால், இன்று திராட்சையில் தான் அதிக மருந்து தெளிக்கிறார்கள்! அதனால் கண்டிப்பாக இயற்கை முறையில் விளைந்த திராட்சையை தேடி வாங்க வேண்டும்!

கேரட், விதை நீக்கப்பட்ட தக்காளி, ஆகியவற்றுக்கு புற்றை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது உலக அளவில் இயற்கை மருத்துவ ஆராய்ச்சியில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது! ஆனால், நம் விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையினர் இன்று மூன்று நாட்களுக்கொருமுறை கேரட் பயிரில் மருந்து தெளிக்கின்றனர்! ஆகவே, இதை பரிந்துரைக்கும் போது இதையும் சொல்ல வேண்டியவனாக உள்ளேன்!

ஆக, மொத்தத்தில் நஞ்சில்லா இயற்கை உணவைத் தான் மக்களுக்கு தருவேன் என விவசாயிகளும், மருந்து போட்ட உணவுகளை உண்ண மாட்டோம் என நுகர்வோர்களும் விழிப்புணர்வு கொள்ளும் போது தான் கேன்சருக்கு தீர்வு கிடைக்கும்!

கேன்சரை பாதிக்காமலிருக்க, தவிர்க்கவேண்டியவை;

# சுட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது

# வெள்ளை சீனி, ரீபைண்ட் ஆயில், டால்டா,மைதா.

# சகலவிதமான பேக்கரி அயிட்டங்கள்

# சுவை கூட்டப் பயன்படுத்தும் அஜிணமோட்டோ

# உடல் உழைப்பின்மை

# அளவுகதிகமான உடல் பருமன்

# பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள்

# பாலீதீன் பைகளில் வைக்கப்படும் சூடான உணவுகள்!

ஆகவே, நண்பர்களே பாரம்பரிய உணவு கலாச்சாரத்தைப் பேணி, ’பாஸ்ட்புட்’ கலாச்சாரத்தை தவிர்த்து, உடல் உழைப்பை ஏதேனும் ஒரு விதத்தில் செய்து, கவலைகளை துறந்து, மனதை ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ள இந்த புத்தாண்டில் உறுதி ஏற்போமாக!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time