கூடா நட்பு கேடாய் முடியும் …- தமிழகத்திற்கு!

சாவித்திரி கண்ணன்

திமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகள் மக்களிடம் மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் குழம்ப வைத்துக் கொண்டுள்ளன!

தேர்தல் கூட்டணிக்கு கொள்கை ரீதியிலான இணக்கமோ, புரிதலோ அவசியமில்லை சதவிகித கணக்குகள் போதும் என்ற குறுகிய கால ஆதாய அரசியல் கூட்டணிக்குள் பொருந்தாமல் சேரும் கட்சிகளின் அடையாளத்தை காலப்போக்கில் காணாமலடித்துவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லமுடியும்!

திமுகவுக்கு தன் சுயபலம் குறித்த சந்தேகங்கள் மேலெழத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது! கொள்கை சார்ந்த பிடிமானங்கள் தளர்ந்து, சந்தர்ப்பவாத அரசியலால் ஈர்க்கப்படும் யாருக்குமே இந்த சந்தேகம் எழுவது இயற்கையே! அது தான் பிரசாந்த் கிஷோர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அங்கே கூட்டணி முடிவெடுக்கும் அதிகார மையமாக மாறி நிற்கிறார்கள்!

மக்கள் நீதி மையத்திற்கும், திமுகவிற்குமான கூட்டணியை உதயநிதி விரும்புவதாகவும்,…மற்றும் AIMIN என்ற ஓவைசி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது என்றும் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன!

கமலஹாசனின் அரசியல் என்ன? அவரது அடையாளம் என்ன? என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை! குழப்பமான பேச்சுகள், ’டிவிட்டர்’ அரசியல், பிக் பாஸ், அடுத்த படங்களுக்கான முன்னெடுப்புகள் என்று இயங்கி கொண்டிருக்கும் கமல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் முதல் ஆளாக களத்தில் குதித்துவிட்டார். நான் அவதானித்தவரை அவர் திமுக எதிர்ப்பை தான் பிரதானமாகக் கொண்டிருந்தார். திராவிட இயக்க அரசியலுக்கு மாற்றாகவும் தன்னை முன் நிறுத்திக் கொண்டிருந்தார்! பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஆதரித்தது தொடங்கி நீட்டை ஆதரித்தது வரை அவர் பாஜகவுக்கு ஆதரவான ஒரு மன நிலை கொண்டவராக அறியப்படுகிறார்! இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் சூரப்பாவை பகிரங்கமாக ஆதரித்தவர் கமல்! தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நுட்பமான இந்துத்துவ அரசியலையும் அவர் செய்தார்! ஆனபோதிலும், அவர் பாஜகவை ஏற்காதவர் போன்ற பாவனையை காட்டி அரசியல் செய்வதானது, அப்போது தான் தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என்பதற்காவே என்று தோன்றுகிறது!

அதுமட்டுமின்றி, பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஓட்டுவங்கியை பிரித்து அந்த கட்சிகளின் இடத்தை அபகரிக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்! தமிழக அரசியலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப கமலஹாசனைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அபிலாசையும் அவர் சார்ந்த அந்த சாதியினர் சிலர் மத்தியில் நிலவுவதை கண்கூடாகவே காணமுடிகிறது!

வெறும் மூன்றேமுக்கால் சதவிகிதம் ஓட்டுவங்கி கொண்ட கமலஹாசன் பற்றிய செய்திகளை ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் தந்து தருவதில் வெளிப்படுத்துவதின் பின்புள்ள அந்த லாபியை ஊடகத்துறைக்குள் உள்ளவர்களால் மட்டுமே நன்கு அறியமுடியும்! மக்கள் நீதி மையம் திமுகவுடன் கூட்டணி காண்பது என்பது திமுகவிற்கு குறுகிய கால சிறிய லாபத்தை தரலாம். ஆனால், தொலை நோக்கில் கமலஹாசன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திமுக உதவியதாகத் தான் முடியும்!

கமலஹாசன் நம்மவருமல்ல, நல்லவருமல்ல, பொது நலச் சிந்தனைக் கொண்டவருமல்ல! அரசியல் அர்ப்பணிப்புள்ளவருமல்ல, ஆனால்,தனக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் அவர்!

திமுகவின் மீதான அக்கரையால் அல்ல, தமிழகத்திற்கு நேரவுள்ள ஒரு அழிவை தடுக்க முடியுமா…? என்ற ஆதங்கத்திலேயே எழுத நேர்ந்தது!

அதே போல AIMIN எனப்படும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி காண்பதற்கான முயற்சியும் திமுகவால் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் எழுகின்றன! இது குறித்து திமுகவிற்குள் இருக்கும் இஸ்லாமிய கட்சிகளிடம் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. ஓவைசியை சந்தித்த செய்தி திமுக கூட்டணிக்குள் கொள்கை சார்ந்தும், இயல்பான நெடுங்கால பிணைப்பு சார்ந்தும் இயங்கிய இஸ்லாமிய கட்சிகளுக்குள் இடியாக இறங்கியதாகவும், அந்த காரணத்தால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது!

தமிழக இஸ்லாமியர்கள் இந்த மண் சார்ந்த அரசியலுக்கு சொந்தக்காரர்கள், திராவிட இயக்க அரசியலுக்கு இணக்கமானவர்கள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கங்களுடன் பயணிப்பவர்கள்! அவர்கள் எப்படி அன்னியரான ஒவைசி இங்கே கால்பதிப்பதை ஏற்பார்கள்! மேலும், அது தமிழக நலன்களுக்கு எந்த வகையில் உதவும்? ஒவைசி இங்கே காலூன்றுவதற்கு திமுக உதவுவதானது  தமிழக இஸ்லாமியர்களிடையே மேலும் பிளவுகள் வலுப்படவே உதவும். குறிப்பாக ஓவைசியின் வருகை தமிழக முஸ்லீகளிடையே தமிழ்பேசுபவர்கள், உருது பேசுபவர்கள் என்ற இரு பெரும் பிரிவை தோற்றுவிப்பதாகவும் முடியலாம்! இவையெல்லாம் பாஜக அரசியலுக்கு தான் வலு சேர்க்கும்! முன்யோசனையின்றி குறுகிய கால கணக்குகளுடன் எடுக்கப்பட்ட முயற்சியை திமுக வாபஸ் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது!

பொதுவாக தமிழக முஸ்லீம்கள் மத அடையாளம் கடந்து பொதுவான கட்சிகளுக்கு வாக்களிக்கும் மன நிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்! அவர்களின் நம்பிக்கையை நேர்மையாக வென்றெடுக்கும் அரசியல் செய்தாலே போதுமானது.

ஓவைசி சற்று தூக்கலாக மதவாத அரசியலை கையில் எடுப்பவராக இயங்குகிறார். அவர் தமிழக அரசியலில் காலூன்ற உதவுவது பெரும்பான்மை இந்துக்களை ஓரணியில் திரட்டி பாஜகவிடம் ஒப்படைத்துவிடவே உதவும்! பிரசாந்த் கிஷோர் நோக்கம் இதுவாகத் தான் இருக்குமோ, என்னவோ…! ஓவைசி  பீகாரில் பெற்ற வெற்றி என்பது நின்று நிலைக்குமா எனத் தெரியவில்லை! ஒவைசி மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை வணிக நோக்கில் ஹைதராபாத்தில் நடத்திக் கொண்டிருப்பவர். இந்த வகையில் அவரிடமுள்ள அபரிதமான பணப் புழக்கத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார். அபரிதமான பணப்புழக்கம் உள்ள எந்த அரசியல்வாதியும் நேர்மையான அரசியலில் ஈடுபடமுடியாது. அவர் பாஜகவின் ரெய்டு உள்ளிட்டவைகளுக்கு பயந்தே அவர்களுக்கு சாதமான ஓட்டுபிரிப்பு  அரசியலை இந்தியா முழுமையும் முன்னெடுக்கிறார் என்றும், அவர் பாஜகவின் பி டீம் என்றும் காங்கிரஸ் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது!

தன் கூட்டணியில் இல்லாத – தமிழக மக்கள் மத்தியில் உழன்று சேவை செய்து கொண்டிருக்கும் – எஸ்.டி.பி.ஐ போன்ற மேலும் சில இஸ்லாமிய இயக்கங்களை திமுக அங்கிகரிப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கமுடியும்! இஸ்லாமிய இயக்கங்களை ஒன்றுபடுத்தும் இந்த முயற்சி வெறும் ஓட்டுவங்கி ஆதாயத்திற்காக இல்லாமல், வெகுஜன மைய நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் பொறுப்புள்ள ஜனநாயக முன்னெடுப்பாக அமைந்தால் நல்லது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time