துரோகத்திற்கு மேல் துரோகம்…! துண்டிக்கப்படுமா பிஜேபி! துளிர்க்குமா ஆர்ஜேடி?

சாவித்திரி கண்ணன்

என்னவென்று யூகிக்கமுடியாத காய் நகர்த்தல்கள் பீகார் அரசியலில் அரங்கேறிக் கொண்டுள்ளது!

கூட இருந்தே முதுகில் குத்தியதோடு, தங்களுக்கு குழியும் பறிக்கிறது பாஜக என்பதை முன்னெப்போதையும் விட, தற்போது மிக ஆழமாக உணரத் தொடங்கியுள்ளது ஜனதாதளம்!

அருணாச்சல பிரதேசத்திலும் பாஜக – ஜனதாதளம் கூட்டணி கண்டுள்ளன! அங்கு ஜனதாதளம் ஆதரவுடன் தான் பாஜக ஆட்சி செய்கிறது! அதில் அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜனதாதள எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி என ஆசை காட்டி கட்சி மாற வைத்துள்ளது பாஜக! இது தேசிய அளவில் ஜனதா தளத்தை கொந்தளிப்பின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது!

இதற்கு உணர்ச்சிகரமாக எதிர் வினையாற்றுவதைவிட, தங்களை சுய பரிசீலனைக்கு உள்ளாக்கி பார்த்துக் கொண்டு இனி பயணிக்கும் திசையை மாற்றிக் கொள்வது என நிதிஸ்குமார் முடிவெடுத்துள்ளார்!

பீகாரில் தேடிப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்த பாஜகவிற்கு அடைக்கலம் தந்து அடையாளமும்,அங்கீகாரமும் பெற உதவியவர் நிதிஸ்குமார்! ஆனாக்,அதற்கு நன்றியில்லாத பாஜக நிதிஸ் அழிவதற்கே கூட இருந்து ஆதரிப்பது போல இயங்கியது. இது குறித்து ஏற்கனவே நமது அறம் இதழில்,

அனுகூல சத்ரூவாக நிதிஸை அழித்து வளரும் பாஜக என விரிவாக எழுதியுள்ளேன்!

அப்படி நிதிஸ் நிழலில் தன்னை வளர்த்துக் கொண்ட பாஜக, படிப்படியாக ஜனதாதளத்தை கூட இருந்தே அழித்து, சிறுகச் செய்து, தன்னை பெரிய கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டது!

அதுவும் இந்த தேர்தலில் ராம்விலாஸ்பாஸ்வான் மகன் சிராஜ்பாஸ்வானை கைக்குள் போட்டுக் கொண்டு,  லோக் ஜனசக்தியை ( LJP) நிதிஸ் கட்சிக்கு எதிராக களமிறக்கி, நிதிஸின் வெற்றியை கடுமையாக பாதிக்க செய்தது பாஜக! இது அறம் இதழில்,

‘பீகார் தேர்தல் தந்திரத்தால் சாதித்த வெற்றி’ என எழுதி கவனப்படுத்தபட்டது!

இதனால், முதலமைச்சர் பதவியையே ஏற்கத் தயங்கினார் நிதிஸ்! ஆனால் பாஜக வற்புறுத்தி அவரை ஏற்கச் செய்தது! இதன் சூட்சுமத்தை இப்போது புரிந்து கொண்டார் நிதிஸ்! லவ்ஜிகாத் சட்டத்தை உத்திரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் அமல்படுத்த வேண்டும் என்று பாஜக கூறியது. நிதிஸ் அதை உறுதியாக மறுத்துவிட்டார்!

ஆனால்,வெவ்வேறு விதங்களில் அதற்கு அழுத்தம் தந்து கொண்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் சட்டத்தை அதரித்ததினால் ஏற்பட்ட செல்வாக்கு இழப்பை எப்படி சரிகட்டுவது எனத் தெரியாமல் தவித்த நிதிஸ் ”லவ்ஜிகாத் சட்டம் தேவையற்றது. மனித உரிமை’’ மீறல் எனக் கூறிவிட்டார்! ஆனால், உத்திரபிரதேசத்தில் யோகி செய்ல்படுத்துபவற்றையெல்லாம் பீகாரிலும் கொண்டு வர உள்ளோம் என பாஜகவினர் தற்போது ஆங்காங்கே பேசத் தொடங்கியுள்ளது நிதிஸை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இனியும் பாஜகவுடன் இருந்தால் கடைசி காலத்தில் மக்கள் வெறுப்புக்கு ஆளாகி பெருமைகளையெல்லாம் இழந்துவிட நேரிடும் என கட்சி செயற்குழுவில் கூறியுள்ளார்!

இந்த சூழல்களை மோப்பம் பிடித்து தெரிந்து கொண்ட ஆர்ஜேடி, ”நிதிஸ்குமார் அவர்கள் தேஜஸ்வியை முதல்வராக்க உடன்பட்டால், அவரை இந்திய பிரதமருக்கு நாங்கள் முன்மொழியத் தயார்! இன்றிருக்கும் அரசியல்வாதிகளில் அதற்கான ஒரே தகுதி அவருக்குத் தான் உள்ளது. ஆகவே நிதிஸ் பாஜக கூட்டணியை தைரியமாக உதறித் தள்ள வேண்டும்’’ என ஆர்ஜேடி தலைவர்கள் பேசி வருகின்றனர்!

இதையெல்லாம் காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளாமல் கட்சியில் இருந்து வெளியேறிய  தமது பழைய சகாக்களை மீண்டும் கட்சியில் இணைத்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார் நிதிஸ்! அதுவும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்! குஷ்வாகா என்பவர் அதில் குறிப்பிடத்தக்கவர்!

இதைவிட முக்கியமாக குர்மி சமூகத்தை சேர்ந்த ஆர்.சி.பி.சிங் என்பவரை அழைத்து அவருக்கு தனக்கு அடுத்த வாரிசுவாக அடையாளம் காட்டியுள்ளார். இஸ்லாமியர்களிடம் நம்பிக்கை விதைக்க என்ன செய்யலாம் என விவாதித்து வருகிறார்! இஸ்லாமியர்களிடம் நாம் நம்பிக்கை இழந்தது தான் எங்கோ இருந்த ஓவைசி பீகாருக்குள் காலூன்ற உதவியுள்ளது. பீகார் மண்ணுக்கே சம்பந்தமில்லாத பாஜகவின் காரணமாகத் தான் நாம் சொந்த மக்களிடமிருந்தே விலக நேரிட்டது என கூறிவரும் நிதிஸ் மண்ணின் மைந்தர்கள் அரசியலை கையில் எடுக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது! இவையாவும் பாஜகவிடமிருந்து நிதிஸ் அன்னியப்பட்டு வருகிறார் என்பதற்கான அறிகுறிகளாகும். அதே சமயம் தேஜஸ்வியின் வன்முறை ரீதியிலான அணுகுமுறைகளை அவர் அங்கீகரிப்பாரா..? பீகார் அரசியலை தேஜஸ்வியை நம்பி ஒப்படைப்பாரா? என்பதும் இன்றுவரை கேள்விக்குரியதாக தான்  உள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time