‘கனவு தொழிற்சாலை’ என சினிமா இண்டஸ்டிரியைச் சொல்வார்கள்!
கிரியேட்டிவான சிந்தனைகள் இந்த இண்டஸ்ரியின் முக்கிய மூலதனம்!
கற்பனைகளை காசாக்கும் தொழிற்சாலை இது!
ஆகவே, இதற்கு இவ்வளவு தான் விலை என்று நிர்ணயிக்க முடியாது!
புத்திசாலிகள் மட்டுமே பிழைக்க முடிந்த துறையாகவும் உள்ளது!
தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த ஆண்டைப் போல ஒரு சோதனையான ஆண்டை அது பார்த்திருக்காது! கொரானா சமூகத்தையே மொத்தமாக முடக்கிய நிலையில் தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல!
மார்ச் 16 தொடங்கி, கிட்டதட்ட பத்துமாதகாலம் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்க்கை சோகத்தில் தான் சென்று கொண்டுள்ளது!
ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வெளிவரக் கூடிய நிலையில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை 48 படங்கள் ரிலீசானதோடு அதன் வசந்த கால வாசல் மூடப்பட்டுவிட்டது!
இதிலும் நல்ல வசுல் தந்த படங்கள் என்றால், தர்பார், பட்டாஸ், கண்ணும்,கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே உள்ளிட்ட ஏழெட்டு படங்கள் தாம்!
ஏப்ரல்,மே, ஜீன் மாதங்கள் கடும் ஊரடங்கு அமலில் இருந்த காலம்! சட்டம் போட்டு ஊரை அடக்கமுடியும், ஆனால்,வேளா,வேளைக்கு பசி எடுக்கும் வயிற்று பசியை அடக்க முடியுமா? சினிமா தொழில் நுட்ப தொழிலாளர்கள், லைட்பாய், துணை நடிகர்கள், டான்ஸர்கள், உதவி இயக்குனர்கள்…உள்ளிட்ட இண்டஸ்டிரியை நம்பி இருந்த பல்லாயிரம் குடும்பங்கள் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! மனசாட்சியுள்ள திரைக் கலைஞர்கள் சிலர் செய்த உதவிகள், சிலரை ஆற்றுபடுத்தியது.
ஏப்ரல்,மே,ஜீன் மாதங்களில் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட ஐந்து படங்கள் ஓ.டி.டியில் வெளியாயின! பொன் மகள் வந்தாள் படம் ஒரு திரைத் துறைக்கு திசை காட்டிய திருப்பு முனையானது!
அதே போல அடுத்த மூன்று மாதங்களும் கடும் ஊரடங்கு நிலவிய நிலையில் காக்டெயில் ஹவாலா உள்ளிட்ட ஆறு படங்கள் ஓடிடியில் வெளியாயின! ஆனால், அதற்கடுத்த மூன்று மாதங்களில் சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட 48 படங்கள் ஓடிடியிலும், தியேட்டரிலுமாக வெளியாயின! பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளிவந்தன! கடும் விமர்சனங்களுக்கு அஞ்சி, சில மாதங்கள் தாமதித்த சூர்யா, தானே தயாரிப்பாளர் என்பதால் துணிச்சலாக முடிவெடுத்தார்! பலருக்கு தியேட்டரில் வாய்ப்பில்லை எனில், ஒடிடியில் வெளியிடலாம் என்ற துணிச்சலை இது பெற்றுத் தந்தது!தன்னுடைய சூரரைப் போற்று ரிலீசான போது ஐந்து கோடி ரூபாயை திரைப் பட தொழிலாளர்கள் நிவாரணத்திற்கு தந்தார் சூர்யா!
இதில் தியேட்டரில் வெளியான படங்களுக்கு பாதி இருக்கைகள் மட்டுமே நிரப்படபட வேண்டும் உள்ளிட்ட கட்டுபாடுகளால் நஷ்டமே ஏற்பட்டது! இத்தனைக்கும் படங்களை திரையிடுவதற்கான கியூப் கட்டணங்கள் பாதியாக குறைத்துக் கொள்ளப்பட்டும் பயனில்லை. மக்களுக்கும் கொரானா பயம் விலகவில்லை! இதனால் தயாரிக்கப்பட்ட நிலையில், நூறு படங்களுக்கும் அதிகமாக காத்துக் கொண்டுள்ளன! எடப்பாடியை விஜய் சந்தித்து இது குறித்து பேசிப் பார்த்தும் பயனில்லை!
டெல்லியில் திறந்த வெளியில் ஒன்றரை கோடி விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து போராடி வருகின்றனர்! அவர்களை கொரானா பயம் நெருங்கவில்லை. கொரானாவும் நெருங்கவில்லை! ஆகவே, திறந்த வெளி திரை அரங்குகள் அமைத்தால் ஒரளவு தைரியமாக மக்கள் வரவாய்ப்புண்டு! இன்னும் இந்த கொரானா கட்டுப்பாடுகள் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. திடீரென்று சில நட்சத்திர ஓட்டலுக்குள் சோதனை நடத்தி, ’’சமையல் கலைஞர்கள் இத்தனை பேருக்கு கொரானா! ஆகவே இழுத்து மூடுங்கள்’’ என அரசாங்கம் அராஜகம் செய்கிறது! கொரானா என்று அறியப்படாத வரை சம்பந்தபட்டவர்கள் சகஜமாகவே இயங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீன் தொடங்கி தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகர், நடிகைகள், திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டுகோள் விடுத்தனர்! வேலை கிடைக்காதா என்று தவித்த அன்றாடம் காய்ச்சிகளான தொழிலாளர்களிடம் பாதிச் சம்பளத்திற்கு தற்காலிகமாக வேலை செய்ய எந்த ஆட்சேபனையும் பெரிதாக எழவில்லை. ஆனால், பெரிய சம்பளம் வாங்கும் ஸ்டார் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களிடம் இந்த கோரிக்கை எடுபடவில்லை போலும்! பாரதிராஜா போன்றவர்கள் மீண்டும், மீண்டும் இந்த கோரிக்கையை வைத்தனர்!
மாஸ்டர் படம் ஏப்ரலில் ரிலிசாகி இருக்க வேண்டியது! ஆனால் இன்று வரை ரிலீசாகவில்லை. முதல் போட்ட தயாரிப்பாளருக்கு எத்தனை கோடி நஷ்டமோ…! ஆனால் தன்னுடைய 80 கோடி சம்பளத்தில் எந்த குறைப்புக்கும் இடமில்லை’ என கறாராக விஜய் கூறிவிட்டார்! ஆகவே எல்லா நஷ்டங்கள்,கஷ்டங்கள் அனைத்தும் தயாரிப்பாளர் ஒருவரையே சாரும்! அதே போல அண்ணாத்தே படத்திற்கு சுமார் 120 கோடி சம்பளம் பேசிய ரஜினிகாந்த்தும் எள்ளளவும் குறைக்க வாய்ப்பில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது! சன் பிக்சர்ஸ்க்கு இந்த பணம் ஒன்றும் பெரிதல்ல! அவர்களின் 33 சேனல்களில் இந்தப் படத்தை மீண்டும், மீண்டும் போட்டே, போட்ட பணத்திற்கு மேலாக அள்ளிவிடுவார்கள்! போதாக்குறைக்கு 45 எப்.எம் ரேடியோ வேறு!
ஆனால், ஹைதராபாத்தில் சூட்டிங் பல கோடி செலவில் நடந்த போது நான்கு பேருக்கு கொரானா வந்ததால் பயந்து சூட்டிங்கை கேன்சல் செய்தார் ரஜினி. இதில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரது சம்பளத்தில் அட்ஜஸ் செய்யமாட்டார். ஒரு படத்தின் மொத்த செலவில் இந்த சூப்பர் இமேஜ் உள்ள நடிகர்கள் இருவரும் வாங்கும் சம்பளம் மூன்றில் இரண்டு பங்காகும்! மீதமுள்ள ஒரு பங்கில் தான் மற்ற அனைவர் சம்பளமும், ஒட்டுமொத்த தயாரிப்பு செலவுகளும் அடங்குகின்றன!
Also read
தங்களை வாழவைக்கும் தயாரிப்பாளரின் துன்பங்களில், இழப்புகளில் கூட பங்கெடுக்க தயார் இல்லாத விஜய்யும் ,ரஜினியும் மக்கள் கஷ்டங்களிலா பங்கெடுக்கப் போகிறார்கள்?
இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் பெரும் முறைகேடுகளுடனும், அதீத பணப் புழக்கத்துடனும் நடந்தேறியது! இது குறித்து நமது அறம் இணைய இதழில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் தகிடு தத்தங்கள் என எழுதியுள்ளேன்!
விரைவில் கலைத்துறை மீண்டெழ வேண்டும். ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் இதனை நம்பி உள்ளது. அந்த வகையில், கனவை விற்பவர்களின் நிஜ வாழ்க்கை நிலையற்றது என்ற நெருப்பை எதிர் கொண்டதாகவே உள்ளது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
சார் சினிமா தொழிலின் பரிதாபமான நிலையை பற்றி இன்னும் விபரமாக ஒரு கட்டுரை எழுதலாம் நிறைய தகவல்கள் உள்ளன