இதயம் கவர்ந்த எழுத்துப் போராளி இளவேனில்!

ஒ.சுந்தரம்

பொதுவுடமைப் போராளி என்ற மிடுக்கோடும், எழுத்தாளன் என்ற ஞானச் செருக்கோடும், முன்கோபம்,முரட்டுத் தனம் ஆகிய இயல்புகளோடும், அதிரவைக்கும் நகைச்சுவை உரையாடல்களுடனும் நம்மோடு வாழ்ந்த இளவேனில், மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கமுடியாதவனாகவும், இனி அவரை பார்க்க இயலாதே என்ற ஏக்கம் கொண்டவனாகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்!

அவருடைய எழுத்து மட்டுமல்ல, பேச்சும் வசீகரமானது தான்! சாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமனிதனாக இறுதி வரை வாழ்ந்தவர் இளவேனில்! ஒரு முறை இவரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடையாளப்படுத்த சிலர் முனைந்தபோது  சொன்னார், ” எனது தாத்தா பிள்ளைமாரு, பாட்டி தேவர் சமூகம், என் தாய்  நாடார் சமுதாயம்!  அப்படியென்றால் நான் எந்த சாதி.?.சொல்லுங்கள்…’’ என்று முகத்தில் அறைவது போல் கேட்டார் இளவேனில்.

கோவில்பட்டி அருகே, பந்தநல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இளவேனிலின் குடும்பம் தீவிரமான கிறித்துவக் குடும்பம் என்பதால் இவருக்குத் தந்தையார் வைத்த பெயர்  இராபர்ட் மார்ட்டின்.    காலப்போக்கில், இவர் தனக்காகச் சூடிக் கொண்ட மதமற்ற, சாதியற்ற பெயர் தான்  “இளவேனில்”. ஒரு சமூகப் பற்றாளராக, மானுட நேயராக, பொதுவுடமைச் சிந்தனைகளைத் தாங்கி, திராவிடர் இயக்கப் பற்றாளராக, வறுமைக்கு எதிரான போரை தனியாக நின்று நடத்திய இளவேனில், புரட்சிகர சிந்தனை கொண்ட தோழர்களுக்கு எப்படி வாழ்வது? எப்படி வாழக் கூடாது? என எடுத்துக்காட்டி வாழ்ந்து மறைந்திருக்கிறார். நம் மனங்களில் நிறைந்திருக்கிறார்!  அருமைத் தோழருக்கு எனது வீர வணக்கம்!

எந்த நிலையிலும் தான் ஏற்றுக் கொண்ட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத முரட்டுப் பிடிவாதக்காரர். இளம் வயதிலேயே ‘கார்க்கி’ எனும் இதழுக்கு ஆசிரியராக இருந்து நடத்திய ஆற்றல் மிக்கவர். கம்யூனிச சித்தாந்தங்களில் ஆழ்ந்த பிடிப்பும், மண்ணுக்கேற்ற மார்க்சியம் எனும் கோட்பாட்டிலும் நம்பிக்கை கொண்ட திராவிடர் இயக்கப் பற்றாளராக இறுதிவரை விளங்கினார். வி.பி.சிந்தன் அவர்கள் தான் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் வைத்து இவரது மணவிழாவை நடத்தி வைத்துள்ளார். இவரது இணையரும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்திலே செயல்பட்டவர் என இளவேனில் தெரிவித்துள்ளார்.

‘மானுட விடுதலையின் உச்சம் என்பதே மார்க்சியத்தின் வெற்றியில் தான்!’ என்பதில், இறுதி வரை உறுதியாக இருந்தார் தோழர்.இளவேனில்.  90’களில் பெரியார் சிந்தனைத் தள இயக்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தார். இந்தக் காலக்கட்டத்தில், கோவை கு.இராமகிருஷ்ணன் அமைப்பிற்காகத் தொடங்கப் பட்ட ‘பெரியார் நாடு’ இதழுக்கு அவர் ஆசிரியர் ஆனார்; உடனிருந்து பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பும் வந்தமைந்தது. பெரியார் என்கிற அடித்தளமும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ‘மல்லிகை’யில் கடுமையான சட்ட விரோத காவல் விசாரணைக்கு நான் ஆட்பட்டு வெளி வந்த சூழலும் என்மீது அவருக்குத் தனி அன்பையும், மதிப்பையும் ஏற்படுத்தியது. ஒரு முறை அவர் புத்தக வடிவம் பெறாத- அச்சிட்ட தாள்களாக இருந்த ‘ஆத்மா என்றொரு தெருப் பாடகன்’ எனும் படைப்பின் தொகுப்பைக் கொடுத்து படிக்கச் சொன்னவர், “இதனை வெளியிட காசில்லாமல் அப்படியே கிடக்கிறது தோழா! இந்த அச்சாக்கம் கூட பாக்கெட் நாவல் ஆசிரியர், நண்பர் அசோகன் தான் அச்சிட்டுக் கொடுத்தார்..,  நீங்க படித்துப் பாருங்க. வெளியிட ஏதாவது  செய்ய முடியுமா எனப் பாருங்கள்” என்றார்.

அப்போது என் நிலையோ ராஜீவ் கொலை வழக்கு காரணமாக அரசுப் பேருந்து நடத்துநர் பணியும் பறிபோய் நிற்கதியான சூழல். “சரி..பார்க்கிறேன் கொடுங்கள் “..என வாங்கிச் சென்றவன், அந்த இரவிலேயே இடை நிறுத்த மனம் இல்லாத உணர்ச்சி வயப்பட்ட நிலையிலே முழுவதுமாகப் படித்துப் பெருமூச்சசெடுத்து நிமிர்ந்த போது அதிகாலை புலர்ந்திருந்தது. அந்தப் படைப்பில் வரும் ஒரு உண்மையான கதை நாயகன் பெயர் ஆத்மா. அவன் மிக எளிய திராவிடர் இயக்கத் தொண்டன். அவனுக்குப் பிழைப்பூதியம் என்பது தெருக்களில் டேப் அடித்துக் கொண்டே..பாடியபடி சென்று பல் பொடி விற்பது. அப்படிப் பாடும் பாடல்களில் திராவிடரியக்கக் கொள்கை அனல் வீசும். ‘குந்தக் குடிசை’ இல்லாத அத்தகைய தொண்டர்கள் அந்தக் காலத்தில் இரத்தம் சிந்திப் போட்ட உரம் தான் திராவிடர் இயக்கப் பயிர் செழிக்க, தமிழர்கள் தன்மானம் பெறக் காரணமாகியது. அந்த நாயகனைப் படிக்கும்போது ..இரவெல்லாம் பெரியார் இயக்கச் சுவர் எழுத்துகளைத் தீட்டியும், சுவரொட்டிகளை ஒட்டியும் பணியாற்றி வந்த என்னையே படிப்பதாக உணர்ந்தேன். நான் மட்டுமல்ல; இன்னும் ஆயிரமாயிரம் எளிய தோழர்களும் இதைப் படிக்கையில் இதே உணர்வைத் தான் பெறுவார்கள்.  ! அப்படியொரு படைப்பு அது.

அதே போல் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மேதை அருமைத் தலைவர் வி.பி.சிந்தன் உள்ளிட்ட பலருடன் இளவேனில் கொண்டிருந்த உறவையும், அந்தக் கதை மாந்தர்களின் மாபெரும் தியாக உணர்வையும் இரண்டறக் குழைத்துச் செய்த படைப்பாக இந்த நூலைக் கருதினேன். இதனை நூல் வடிவமாக்க யாரிடம் சென்று கேட்பது என எண்ணிய கணப்பொழுதில்  ஐயா நா.அருணாசலம்  தான் நினைவில் வந்து நின்றார். ஆனாரூனா அவர்கள் சிறந்த படிப்பாளி; புத்தகங்களை மட்டுமின்றி மனிதர்களையும் தான்! அவரை அணுகி, “இதனைப் பாருங்கள் ஐயா” எனக் கொடுத்தேன். ” நீங்க இதைப் படிச்சிட்டு சொல்லுங்கய்யா.. புத்தகமாகக் கொண்டு வரனும். நான் படிச்சிட்டேன். நல்லாருக்கு” என்றதற்கு மேல் எதுவும் நான் சொல்லவில்லை. அவர் எனக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி வலியக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனாரூனா, நல்ல மாற்று வேட்டி கூட இல்லாத எளிய நிலையிலிருந்து தனது உழைப்பால் உயர்ந்த பெருமகன். இந்த நூலின் கதை மாந்தர்களில் அவரும் ஒருவராக..என்னைப் போல் உணருவார் என உறுதியாக நம்பி, மறு நாள் சென்று பார்த்தேன்.

நான் எண்ணியபடியே,” வாப்பா வா! என்னப்பா இது? யாரு இந்த ஆளு? ராத்திரி என் தூக்கத்தக் கெடுத்துட்டான்யா. பார்த்தாகனும்; உடனே அழைச்சிட்டு வா! உன் ஓட்ட வண்டிய விட்டுட்டு..கார எடுத்துட்டுப் போ..”! கட்டளையிட்டார்.  அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தோழர் இளவேனிலைத் தேடிச் ‘சிறை பிடித்து’க் கொண்டுவந்து ஐயா முன் நிறுத்தினேன். எங்களுக்குள் நடைபெற்ற ஒருமணி நேர உரையாடலும், ‘ஜனப்பிரியா’ ஓட்டல் சாப்பாடும் ‘ஆத்மா என்றொரு தெருப் பாடகன்’ நூலை ஆனாரூனாவே அச்சிட்டு வெளியிட ஒத்துக் கொண்டார்! அது முதல் இளவேனிலை ஆனாரூனா, தத்தெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

நூலிற்கு கலைஞரின் அணிந்துரை தான் வேண்டும் என்ற இளவேனிலின் விருப்பம் தோழர் கே.எஸ்.பிரகாசம் மூலம் நிறைவேறியது. அணிந்துரையில் தலைவர் கலைஞர், ” ஆற்றோடு செல்லும் ஒரு பொருள் அதன் ஓட்டத்தோடே சென்று தானாகவே கரை ஒதுங்குவது போல, இந்த நூலைப் படிக்கத் தொடங்கி முடிக்கும் வரை நிறுத்தவில்லை” என்பதாகக் குறிப்பிட்டிருப்பார்கள். அந்தளவிற்குத் தலைவர் கலைஞரின் உள்ளதைப் பாதித்து விட்ட நூல் என்றே சொல்லலாம். அடுத்து இளவேனிலைக் காண விரும்பி கலைஞர் விடுத்த அழைப்பில் நானும் ‘ஒட்டி’க் கொண்டு சென்று சந்தித்தபோது,” நானே வெளியிடுகிறேன் யா”! என்று அவராகவே சொன்னபோது இளவேனிலுக்கு மகிழ்ச்சியில் மயக்கம் வந்து விடும் நிலை.

ஆனாரூனாவிடம் இதைச் சொன்னதும்,” நிகழ்ச்சியை கலைஞர் அரங்கில் நானே நடத்துகிறேன் ஐயா”..என்றதும் இளவேனில் கண்கள் ஈரமாகி மறைந்தன நொடிப் பொழுதில்! பேராசிரியர் சுப.வீ, ஆற்காடு நா.வீராசாமி, கே.எஸ்.பிரகாசம், வாழ்த்திட, ஆனாரூனா தலைமை தாங்கிட, அடியேன் வரவேற்புரையாற்றிட.., இளவேனில் நன்றி உரையாற்றிட, தலைவர் கலைஞர் நூலை வெளியிட்டு அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்விலே,” இளவேனில் புகைப் பழக்கம் உடையவர் என்பதை நான் அறிந்தேன். நீங்களெல்லாம் நீண்ட காலம் உடல் நலம் பேணி, வாழ்ந்து, அரிய பல படைப்புகளை தமிழ்ச் சமுதாயத்திற்குத் தரவேண்டும். எனவே, இளவேனில் இன்று முதல் புகைக்கக் கூடாது. இது என் அன்புக் கட்டளை”..என்றார்கள். அந்த நொடிப் பொழுதிலிருந்தே 40 ஆண்டுகால புகைப் பழக்கத்தை இளவேனில் கை விட்டார்.

கலைஞரோடு ஏற்பட்ட அறிமுகம் காரணமாக, அவரது ‘சாரப்பள்ளம் சாமுண்டி’ என்ற தஞ்சைப் பெருவுடையார் கோவில் சிற்பியைக் கருவாகக் கொண்ட சிறு கதையை இளவேனில் திரைக்கதையாக்கி கலைஞரிடம் காட்டி அவரது ஒப்புதலைப் பெற்றார். அதுவரை ஒரு குறும்படம் கூட எடுத்திராத இளவேனிலின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலே அவரையே படத்தின் இயக்கநராக்கிடவும் கலைஞர்  உடன்பட்டார். “உளியின் ஓசை”..எனும்  அந்தத் திரைப்படத்தின் மூலம் இளவேனில் திரைப்பட இயக்குநரானார்!

இரண்டாவது படமாக கலைஞரின்’பெண் சிங்கம்’ படத்தின் இயக்குநராகவும் இளவேனில் அறிவிக்கப்பட்டார். பின்னர் தயாரிப்பாளரோடு இளவேனிலுக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக அந்த வாய்ப்பு பறிபோனது. அதற்கு முழுக் காரணம் இவரது வாய் தான். எதையும் முகம் முறியும் வண்ணம் சில நேரங்களில் நேருக்கு நேராகச் சொல்லி, பொல்லாப்பை வாங்கிக் கட்டிக் கொள்வதில் வல்லவர். ஒருமுறை திரைப்பட இயக்குநர் ஒருவரின் படத்தை வெளியிடப்படும் முன் பார்ப்பதற்கு அழைத்திருந்தார். உடன் நானும் சென்றிருந்தேன். படத்தின் ஒரு காட்சியிலே, ‘கணவனை கூடையில் தூக்கிச் சென்ற நளாயினி’ என்பதற்குப் பதில்..சகுந்தலை என வசனத்தில் வந்திருந்ததைக் கண்டுபிடித்து இளவேனில் சொன்னதும்..அந்த இயக்குநர் ‘நன்றி’ சொல்ல முனைவதற்குள், “ம்ஹூம்..இந்தப் படம் ஓடவே ஓடாது” என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், சூழ்ந்திருந்தவர்கள் நெளியவும், இயக்குநரோ கண் கலங்கவும், அதை அபசகுனமாக எடுத்துக் கொண்டு மற்றவர்கள் கலங்கவும் அந்தச் சூழலே வேறுமாதிரியாகிவிட்டது.

பின்னர், ஆனாரூனாவோடு இளவேனில் கொண்டிருந்த நெருக்கம், ஐயா ஆனாரூனா  நடத்திவந்த ‘நந்தன்’ இதழுக்கு கடைசிகால ஆசிரியராக்கி.,.இழுத்து மூட வேண்டியதாயிற்று. சில மாத இடைவெளியில், தோழர் பழனி பாலு செலவிலே ‘குடியரசு’ எனும் இதழ் தொடங்கப்பட்டு இளவேனில் ஆசிரியர் பொறுப்பேற்றார். சிறப்பாக வந்த இதழை, தலைவர் கலைஞர் பாராட்டி அதன் ஸ்டாம்ப் செலவினச் சலுகைக்காக, டெல்லியிலே அங்கீகாரம் பெற்றிட..டி.ஆர்.பாலுவிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாகவும், இந்த இதழும் 6 மாதத்தில் ஒரு 50 ஆயிரம் நட்டத்தோடு நிறுத்தப்பட்டதாகவும் பழனி பாலு தெரிவித்துள்ளார். எவரிடமும் நீண்ட காலம் நெருக்கமும், ஆதரவும் கொண்டிட முடியாத இயல்பு கொண்டவர் இளவேனில் என அவரது நெருக்கமான நண்பர் ஜவஹர் தெரிவித்துள்ளார். அவர் அதிக காலம், ஆனாரூனா மறையும் வரை நெருக்கம் கொண்டிருந்தது பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.

இளவேனிலின் மகள் திருமணத்தை முன் நின்று நடத்தி அனைத்து வகையான சீர்களையும் வாங்கிக் கொடுத்து ஆதரித்த ஆனாரூனாவையும், இந்தத் தொடர்புக்குக் காரணமான என்னையும் தனது புத்தகங்களில் குறிப்பிட்டு தவறாமல் நன்றி சொன்னவர் இளவேனில் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிச் சிந்தனையாளர்களின் இதயங்களில் இளவேனில் எழுத்துக்கென்று எப்போதும் ஒரு இடமுண்டு!

கட்டுரையாளர்; ஒ.சுந்தரம்

 எழுத்தாளர்,பத்திரிகையாளர், கவிஞர்,

பெரியார் கொள்கை பற்றாளர்,

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

‘கோவை மு.கண்ணப்பன் வாழ்வும்,பணியும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்                                                                                                                                      

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time