சாம்ராஜ்யங்கள் சரிய வேண்டியவையே.. மக்கள் இயக்கம் மடியலாகாது!

சாவித்திரி கண்ணன்

தினமலர் தொடங்கி எல்லா அக்கிரஹார பத்திரிகைகளிலும் முதல் பக்க செய்தியாக மு.க.அழகிரியின் மதுரை கூட்ட பேச்சு வெளியாகியானது..! இனி தொடர்ந்து அழகிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய ஜனாதிபதிக்கான முக்கியத்துவத்துடன் இவர்கள் போடுவார்கள்….! ஆனால், நேற்று வரை அவரை ரவுடி என்றும், மதுரையை ஆட்டிப் படைத்த அராஜக அரசியல்வாதி என்றும் எழுதியவர்கள் இவர்களே!

கருணாநிதி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை காண வந்த குருமூர்த்தி அப்போதே அழகிரியை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தனிமையில் பேசினார். ரஜினி அரசியலுக்கு வந்தால்,அந்த இயக்கத்திற்கு போகவும்,இல்லாவிட்டால் திமுகவிற்குள் கலகம் செய்யவும் அப்போதிலிருந்தே அழகிரி தயார்படுத்தபட்டிருக்க வாய்ப்புண்டு!

இவர்கள் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்து காத்திருந்தது திமுகவின் அழிவு!

ஆனபோதிலும் நினைவுபடுத்துகிறேன். ’தீதும்,நன்றும் பிறர் தர வாரா!’

அரசியல் அதிகாரத்தில் ஆதிக்க சாதியினர் மட்டுமே கோலோச்சும் ஒரு சமூக யதார்தத்தை தகர்க்க வேண்டிய சமூகத் தேவையை காங்கிரஸ் இயக்கத்தால் அன்று செய்ய முடியவில்லை.

அதனால், திமுக என்ற இயக்கம் அன்றைய சமூகத் தேவையாக உணரப்பட்டது!

பெரியார்,வரதராஜிலு நாயுடு,கி.ஆ.பெ.விசுவநாதம்..ஆகியோரின் தன்னலமற்ற முன்னெடுப்புகள் ஆதிக்க சமூகத்தை எதிர்க்கவும் நம்மால் முடியும் என்ற துணிச்சலை இளைஞர்களுக்கு பெற்றுத் தந்தன!

இதன் விளைவாக பிறகு உருவான திராவிடர் கழகம் சமூகத் தளத்தோடு நின்றுவிடுவதில் தங்களுக்கு சம்மதம் இல்லை என அண்ணாவாலும் அவரது இளம் தோழர்களாலும் உருவானது திமுக. அப்படிப்பட்ட திமுகவை ஒரு ஜனநாயக இயக்கமாகத் தான் அண்ணா கட்டமைத்து தந்தார்!

ஒரு மிகச் சிறந்த ஜனநாயக கட்டமைப்புக்கு இலக்கணமாக அக்கட்சி திகழ்ந்ததற்கான காலம் ஒன்று இருந்தது!

அந்த இயக்கம் அந்த ஜனநாயகப் பண்பிலிருந்து தடம் புரண்டதற்கு ஆதாரமாகத் தான் முக.அழகிரியின் பேச்சு அமைந்துள்ளது.

”ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னைக் கேட்டுத்தான் கலைஞர் முடிவெடுத்தார்.

ஸ்டாலினுக்கு பொருளாளர் பொறுப்பு என்னிடம் அனுமதி பெற்றுத் தான் கலைஞர் தந்தார்!

ஆக, நான் உனக்கு வாங்கி கொடுத்தவை தான் உன் அதிகாரங்கள். நீ என்னை ஒதுக்கி வைக்கலாமா?’’ என்பதே அழகிரி பேச்சின் சாராம்சம்!

இதை அவர் கட்சிக்குள் விவாதிக்கவில்லை. பொது வெளியில் பேசியுள்ளார்.

இந்த பேச்சின் மூலம் அவர் ஸ்டாலினை இழிவுபடுத்துவதாக நினைத்து, கட்சியையும், கலைஞரையுமே ’டேமேஜ்’ செய்துள்ளார்!

”திமுகவில் எதையுமே கலைஞர் பொதுக் குழுவை, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்பதில்லை.

குடும்பத்தாருடன் பேசித் தான் முடிவெடுத்துள்ளார்’’ என்ற தோற்றத்தையே பொதுவெளிக்கு தந்துள்ளார்.

இது தான் உண்மை என்றால், இந்த இயக்கம் அதன் தொடக்க கால லட்சியப் பாதையில் பணியாற்றவும், சமுதாயத்திற்கு நீடித்த செயல்பாட்டை நல்கவும், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இஎஉந்து விடுபட வேண்டும். ஸ்டாலின் தன் அதிகாரத்தை துறந்து இளம் லட்சிவாதிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் அதிகாரத்தை தர வேண்டும். கூட்டு ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய ஒரு புனருத்தாரணம் திமுகவில் நிகழ வேண்டும். அது நடைபெறாவிட்டால், இந்த இயக்கம் ஒரு குடும்பத்தின் அதிகார சண்டையால் சிதைந்தது என்ற அவப்பெயர் தான் மிஞ்சும்.

பிரசாந்த் கிஷோர்களும், உதயநிதியும்,சபரீசனும் தான் திமுகவின் திசை காட்டிகள் என்றால், அழகிரி மட்டுமல்ல,துரை முருகன், பொன்முடி தொடங்கி அனைவரும் அங்கே தனக்கும்,தன் மகனுக்குமான இடத்தை கேட்பதற்கான நியாயம் உண்டாகிவிடுகிறது. பல முன்னோடிகளின் குடும்ப ஆதிக்கம் ஆங்காங்கே தலைதூக்கும் போது, அங்கே ஜனநாயக செயல்பாட்டுக்கான இடம் சுருங்கிவிடுகிறது.

வாரிசு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் அகில இந்திய அளவிலும், பிராந்திய அளவிலும் படிப்படியாக வலுவிழந்து வருகின்றன! அவற்றுக்கு கிடைக்கும் வெற்றிகள் தற்காலிகமானவையாகத் தான் இருக்கமுடியும்!

அதிமுகவிலும் இன்று வாரிசு அரசியல் தலைதூக்கி, அதுவும் வலுவிழந்து கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வெற்றிப் பாதையில் பயணித்த மம்தா பானர்ஜியும் தன் உறவுக்கார இளைஞனை கட்சிக்குள் நுழைத்ததால் சின்னாபின்னமாகி வருகிறது.

எவ்வளவோ குற்றங்குறைகள் இருந்தாலும் ’பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம்’ என்ற யதார்த்தமே மிக வசிகரமாக புதியவர்களை இழுத்துக் கொண்டு வளர உதவுகிறது என்ற யதார்த்ததை நாம் மறுதலிக்க முடியாது.

திமுகவிற்குள் இன்னும் கூட திராவிட லட்சியம் சார்ந்த கொள்கை வீரர்கள் நிறையவே உள்ளனர்! அந்தக் கட்சி பணபலம், அதிகார துஷ்பிரயோக அரசியல், அரசியலை பொருளீட்டும் லாபவெறிக் கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு கொண்டவர்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தொடக்க கால லட்சிய வேட்கையுன், நவீன செயல்திட்டத்துடன் இயங்க வேண்டும்.

அப்படி இயங்குவது அந்த கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு நன்மையாகும்!

சகோதர சண்டைகள் பல சாம்ராஜ்யங்களையே சரிய வைத்துள்ளன என்பது வரலாறு உணர்த்தும் உண்மை! சாம்ராஜ்யங்கள் சரிய வேண்டியவையே. ஆனால், மக்கள் இயக்கம் மடியலாகாது. திமுக சாம்ராஜ்யமாக இருப்பதும் மக்கள் இயக்கமாக தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்வதும் அதனிடம் மட்டுமே உள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time