தடுப்பூசி அரசியல் விபரீதமானது மோடி ஜீ…!

சாவித்திரி கண்ணன்

எதைத் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையில்லாமல் தற்போது தடுப்பூசியை வைத்து மத்திய மாநில ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறார்கள்!

தடுப்பூசிகள் குறித்தும் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீதும் பொய்யான பிம்பங்களை கட்டமைத்து அமைச்சர்களும், முக்கிய அரசுப் பதவிகளில் இருப்போரும், மூட நம்பிக்கைகளைப் பரப்பி வருவது கவலையளிக்கிறது!

அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அவர்களின் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசிகளை அவசரக் கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்ற ஐயம் மருத்துவ நிபுணர்கள் பலரிடமும் உள்ளது.

பொதுவாக தடுப்பு மருந்து என்பவை நோய் ஏற்படுத்தும் கிருமிகளை செயல் இழந்த நிலையில் உடலுக்குள் செலுத்தும். ஒரு அணுகுமுறை தான்!  இந்த செயல் இழந்த நோய் கிருமிகள் நம் உடலுக்குள் நுழைந்ததும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். இந்த பாதிப்பானது கஅவரவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த கிருமிகள் செல்களில் தங்கிவிடும். மலம், சிறுநீர் என்று எந்த வகை கழிவுகளாகவும் வெளியேறாது. மேலும், போட்டுக் கொண்டவர்களுக்கு தடுப்பூசி போட்ட உடன் எந்தப் பாதிப்பு இல்லாவிட்டாலும், சில வருடங்கள் கழித்து பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அது இந்த தடுப்பு மருந்தினால்தான் ஏற்பட்டதா என்பதுகூடத் தெரியாது.

நம் உடல் உணவை மட்டுமே ஜீரணிக்கும். போடப்படும் எந்த ஒரு தடுப்பு மருந்தையும் நமது உடலால் ஜீரணம் செய்ய ஒரு போதும் இயலாது என்பதே மருத்துவம் கூறும் உண்மையாகும்!

தடுப்பூசிகள் தொடர்பான பரிசோதனைகள் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகள் நடத்தபட்ட பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இதுவரையிலும் கடைபிடித்துவரும் விதியாகும்!

நமது அரசு கொண்டு வரவுள்ள கொரானா தடுப்பூசி தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்களின் கூற்றை அப்படியே கீழே தருகிறேன்;

# இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் ( Clinical Trials) முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிடவில்லை. அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும், உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதுவும் செய்யவில்லை.

# கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவநம்பிக்கைகளையே உருவாக்கும்.

# இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காததும்,அவசரமாக, பதட்டத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதும் சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.

# ஏற்கெனவே மத்திய அரசு சென்ற ஜூலை மாதமே, இரண்டாம் கட்டப் பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தது. முழுமையான சோதனைகள் முடியாமல் இதுபோன்று அவசரக் கோலத்தில் அறிவியலுக்குப் புறம்பாகத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது எனக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த அறிவிப்பை மத்திய அரசு கைவிட்டது. அதே போன்ற முயற்சியை தற்பொழுதும் மேற்கொள்வது சரியல்ல.

# கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதன் திறன் குறித்த எந்தவிதமான குறைந்தபட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சரியல்ல. சோதனைகள் முழுமை பெற்று, முடிவுகளை வெளிப்படையாக அறிவித்த பிறகே அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

இதை நாம் கவனத்தில் கொண்டு தடுப்பூசி விவகாரத்தை தள்ளிவைத்துவிட்டு மக்கள் வாழ்க்கை குறித்த ஆக்கபூர்வமான செயல்களில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்!

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் முதலில் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என உறுதி மொழி கொடுக்க முடியுமா? என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும், மதுரை கம்யூனிஸ்டு எம்.பி. சு.வெங்கடேசனும் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தம் பொருந்தியவை!. காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் சொல்கிறார்கள் என்பதால் அல்ல, மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அரசுகள் அவசரம் காட்டக் கூடாது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time