கட்டமைக்கப்பட்ட மாயைகளைக் களைந்து ‘காந்தியைக் கண்டுணர்தல்’

-பீட்டர் துரைராஜ்

திருமண நிகழ்விற்கு காந்தியின் வருகையை உறுதிபடுத்த வேண்டுமானால் அதில் மணமகனோ,மகளோ ஹரிஜனாக இருந்தால் போதுமானது. அப்படியான திருமணங்களுக்கு முன்னுரிமை தந்து காந்தி ஆஜராகிவிடுவார் என்பது காந்தியின் இறுதிக்காலத்தில்  எழுதப்படாத விதியாக இருந்துள்ளது. மணமகனோ, மணமகளோ ஒருவராவது ஹரிஜனாக இல்லாத திருமணங்களுக்குச் செல்வதை காந்தி நிறுத்திக் கொள்கிறார்.  போன்ற பல அபூர்வ தகவல்களை இந்த நூல் சொல்கிறது.

காந்தியின் 150 வது ஆண்டை முன்னிட்டு “காந்தியைக் கண்டுணர்தல்” என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் காந்தி குறித்த 16 கட்டுரைகள் நூலில் உள்ளன.காந்தியைப்  புதிய வெளிச்சத்தில் காட்டுகிறார்!

‘வருணாசிரமத்தில் காந்திக்கு நம்பிக்கை இருந்தது. எனவே சாதி ஒழிப்பில் காந்தி தீவிரமாக இல்லை’ என்று கருதுவோர் உண்டு.திரிபுரா பல்கலைக்கழக பேராசிரியரான நிஷிகாந்த் கோல்கே (Dr.Nishikanth Kolge) முனைவர் பட்ட ஆய்வுக்காக எழுதிய கட்டுரை ‘Gandhi against Caste’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. அதன் சாரத்தை 17 பக்கங்களில் ‘சாதிக்கு எதிராக காந்தி’ என்ற தலைப்பில் கொடுக்கிறார் நூலாசிரியர். அதில் அவர் சொல்லும்  சம்பவங்கள் காந்தியை ’சனாதனவாதி’ என்று சொல்லுபவர்களின் மனசாட்சியை உலுக்கக் கூடும்.

மதுலிமாயி எழுதிய ஐந்து சிறிய கட்டுரைகளின் சாரம் ‘அம்பேத்கர் காந்தி இணக்கம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.திறந்த மனதோடு இதைப்படிக்கும் அம்பேத்கரியவாதிகள் காந்தியை நெருக்கமாக உணர முடியும்.

1904 ல் போனிக்ஸ் ஆசிரமம், 1910 ல் டால்ஸ்டாய் பண்ணை,1915ல் சபர்மதி ஆசிரமம், 1936 வார்தா ஆசிரமம் போன்றவைகளில் பல சாதியினர், பல மதத்தினர் ஒன்றாக இருந்தனர் .’என்னை மதிப்பிட நான் உருவாக்கிய ஆசிரமங்கள் சரியான அளவுகோள்’’ என்று காந்தி கூறுகிறார். ‘ஹரிஜன்’ என்ற வார இதழை இந்தி, குஜராத்தி, தமிழ், உருது, பெங்காலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

ஹரிஜன யாத்ரா‘வை 12,500 மைல் கால் நடையாகவே கடந்து நடத்தியிருக்கிறார். காந்தியின் ஹரிஜன ஆதரவிற்கும்,அரவணைப்பிற்கும் சில இடங்களில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஹந்துத்துவாதிகளின் கோட்டையான நாக்பூரில் காந்தி மீது முட்டை வீசினர்.பனாரசில் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர். பூனாவில் யாத்திரை வருவோர் மீது குண்டு வீசினர். பீகாரில் கல்வீச்சு நடத்தப்பட்டது. பூனாவிற்கு சென்ற காந்தி பயணித்த இரயிலை கவிழக்க முயற்சி செய்யப்பட்டது. அப்படி என்றால் மேல்சாதி வெறியர்கள் எவ்வளவு உக்கிரமாக காந்தியிடம்  தமது எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்படியாக செயல்பட்ட ஒரு நபரை அந்தக் காலத்தில் காண்பதரிது.

மார்க்சியவாதிகள் விமர்சனக் கண்ணோட்டத்துடனே காந்தியை பார்த்தார்கள். புகழ்பெற்ற பாராளுமன்றவாதியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த ஹிரேன் முகர்ஜி எழுதிய ‘Gandhi A study’ என்ற நூலின் சாரம் ‘ஹிரேன் முகர்ஜியின் காந்தி’ கட்டுரையில் வருகிறது. ‘காந்தியால் சுரண்டலுக்கு எதிராக பேசமுடிந்தாலும், நடைமுறையில் சுரண்டுபவர் நலனை தடுக்க முடியவில்லை என்பது ஹிரனின் ஆய்வு முடிவாக இருந்தது என்கிறார் பட்டாபிராமன். அதேபோல ‘தோழர் இ.எம்.எஸ். பார்வையில் ’காந்தியும், அவரது இசமும்” என்ற கட்டுரை உள்ளது. ‘மார்க்சியம்- காந்தியம்-ஆசியவகைப்பட்ட ஜனநாயக சோஷலிசம்’ எனப் பேசி வந்த  ராம் மனோகர் லோகியா எழுதிய Marx Gandhi and Socialism என்ற நூலின் அடிப்படையில் ‘லோகியா பார்வையில் காந்தியும் மார்க்சும்’ என்ற கட்டுரை உள்ளது. எம்.என்.ராயின் காந்தி என்ற கட்டுரையும் உண்டு.

ஒருபக்கம் மார்க்சியம் படித்தவர்களின் பார்வையில் காந்தி பார்க்கப்படுகிறார். அதேபோல, காந்தியவாதிகள் பார்வையில் மார்க்சியம்  பார்க்கப்படுகிறது. உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவைகளில் பங்கேற்ற, ஹரிஜன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காந்தியின் சீடர் மஷ்ருவாலா பார்வையில் ‘காந்தியும் மார்க்சும்’ என்ற கட்டுரை உள்ளது. ஆகாகான் மாளிகையில் கம்யூனிஸ்ட் புத்தகங்களை காந்தி படித்ததாக மஷ்ருவாலா குறிப்பிடுகிறார். ‘துன்பப்படும் மக்களின் துயர் நீக்குதல் கம்யூனிசம்’ என்ற புரிதல் காந்தியிடம் இருந்தது என்கிறார். மார்க்சியர்களும், காந்தியவாதிகளும் இணையும் புள்ளிகளும்,வேறுபடும் இடங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ‘கம்யூனிஸ்ட் கட்சி லைன்’ என காந்தியைப்பற்றி திட்டவட்டமான வரையறை இல்லை” என சொல்லுகிறார் பட்டாபிராமன்.

நூலின் போக்கில் சொல்லத்தக்க  சம்பவங்கள், ஆளுமைகள், நூல்கள்  குறிப்புகளாக வருகின்றன.இந்த நூலை ஒரு கையேடு என்று சொல்லலாம். இவர் கையாளும் வாக்கியங்கள் வாசிப்பு அனுபவத்தை தருகின்றன. (புரட்சியின் மதிப்பைவிட, மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார்)

காந்தியின் உதவியாளராக இருந்த பியாரிலால் நூலை அடிப்படையாகக் கொண்டு ‘ஆகஸ்டு1947- கவலை தோய்ந்த காந்தி’ என்ற கட்டுரை உள்ளது.”சர்கா போட்ட மூவர்ண கொடிக்கு பதிலாக அசோக சக்கரம் ஏற்கப்பட்டு, புதிய துணிக்கொடிகள் காதி கடைகளுக்கு வந்ததால் பழைய கொடிகள் ரூ இரண்டு லட்சம் மதிப்பில் விற்கப்பட முடியாமல் போன செய்தி அவர் செவிக்கு எட்டியது. ஏழைகளின் ஸ்தாபனம் பாதிக்கப்படக் கூடாது என அவர் அறிவுறுத்தினார். ‘’பழைய கொடியை விற்காமல் புதுக்கொடிகளை விற்காதீர்’’ என காந்தி தன் கருத்தைத் தெரிவித்தார். நாட்டிற்கு விடுதலை கிடைத்தாலும் அச்சமயத்தில் இந்தியா பாகிஸ்தான்  பிரிவினையையொட்டி நடந்த கலவரங்களை  காந்தி எதிர்கொண்ட விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

‘மகாத்மாஜியின் இறுதிநாள்’ என்ற கட்டுரையில் 1948 ஜனவரி 30 ம் நாள் அதிகாலை 3.30 மணியில் இருந்தே  நாம் காந்தியுடன்  பயணிக்கிறோம்.  எவ்வளவு busy ஆக இருந்திருக்கிறார்; எத்தனை பேர் இவரது வழிகாட்டலுக்கு காத்திருந்திருக்கின்றனர் !

ஒட்டுமொத்தத்தில் காந்தியின் பன்முக ஆளுமைகளை இந்த நூல் காட்டுகிறது. காந்தி மீதுள்ள விமர்சனங்களுக்கு தர்க்கப்பூர்வமாக  பதில் சொல்லப்படுகிறது. பட்டாபிராமன் தன் கருத்தாக எதையும் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதை மற்றவர்கள் வாயிலாக பதிவு செய்கிறார். ‘ஓட்டுப்போடுதல்’ மட்டுமே ஜனநாயகம் என கருதப்படும் இக்காலகட்டத்தில் சக மனிதன், விழுமியங்கள், அறம், பேச்சிற்கும் செயலுக்குமான இடைவெளி இல்லாத வாழ்க்கை, நலிவுற்றவர் பக்கம் பரிந்து பேசுதல் என்ற காரணிகளின் அடிப்படையில் அரசியலைப் பார்த்தவர் காந்தி.” காந்தி பேசாப் பொருளில்லை; அவரைப் பேசப் பேச அவர் பெருகிக் கொண்டேயிருக்கிறார்” என்று முன்னுரையில் ஆர்.பட்டாபிராமன் சொல்லுவது உண்மைதான்.

மார்க்சியவாதியான ஆர்.பட்டாபிராமன் நெடிய தொழிற்சங்க அனுபவம் உள்ளவர். நல்ல படிப்பாளி.

ஒவ்வொரு கட்டுரையும் பல நூல்களின் சாரமாக உள்ளது. இந்த நூல் குறித்து  பேராசிரியர் சித்ரா பாலசுப்பிரமணியம் ‘பாலம் வாசகர் சந்திப்பில்’  பேசியுள்ளார்.காந்தி கல்வி நிலையமும் அதன் ‘புதன் வாசகர் வட்டத்தில்’ இடதுசாரி எண்ணவோட்டம் கொண்ட ஏ.பாஸ்கரை இந்த நூல் குறித்து பேசச் செய்தது.  மார்க்சியவாதியான ஆர்.பட்டாபிராமன் எழுதியுள்ள இந்த நூலை காந்தியவாதிகளும் சிலாகிக்கின்றனர்.

பட்டாபிராமன் தனது வலைத்தளத்தில் அவ்வப்போது  எழுதியிருந்த கட்டுரைகளைத்  தொகுத்து   freetamilebooks.com என்ற இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த நூலை ஆயிரக்கணக்கானோர்  தரவிறக்கம் செய்துள்ளதானது இதற்கான வெற்றியை உணர்த்துகிறது.

பட்டாபிராமனின் ‘நேருவின் மரபு’,  ‘நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்”  ‘அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும்’ போன்ற நூல்களும் இந்த வரிசையில் வெளிவந்திருக்கின்றன

225 பக்கங்கள் உள்ள இந்த நூல் 140 ரூபாய்க்கு காரைக்குடியில் இருக்கும் உ.வே.சா பிரிண்ட்ஸ்- சன்கிரியேசன்ஸ் மூலம் கிடைக்கிறது. தொலைபேசி; 9578078500

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time