கொரானா என்பது கடவுளைப் போன்றது! அவரவர்க்கும் ஒரு அளவுகோல்!

சமீபத்தில் ரயிலில் மதுரையில் இருந்து சென்னை வந்தேன்! பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஏசி கோச் முழுக்க இடைவெளியின்றி மக்கள் உட்கார வைக்கப்படுமளவுக்கு நிரம்பியிருந்தது! வெண்டிலேசன் இல்லாத முழு இருக்கைகளும் நிரப்பட்ட ஏசிகோச்சில் தான் இரவு முழுவதும் பயணப்பட நேரிட்டது! மிக இயல்பாக மக்கள் பேசிப் பழகி, சாப்பிட்டு,உறங்கி வெளியேறினர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்!

இதே போல ஏர்போர்டிலும் கூட்டம் நிறைந்து இருந்ததைக் கண்டேன். விமான இருக்கைகளும் இடைவெளியின்றி நிரப்பட்டு மக்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்!

காய்கறி சந்தையில் மக்கள் மிக இயல்பாக நெரிசல்களுடன் காய்கறி வாங்கி செல்கின்றனர்! டாஸ்மாக் பார்களில் குடிமகன்களை கியூ வரிசை கட்டி போலீசைக் கொண்டு நிற்க வைத்த காலமெல்லாம் எப்பவோ மலையேறிவிட்டது. இப்ப ரேசன் கடையில இலவசங்களை வாங்க கூட்டம் அலை மோதுகிறது..! கொரானா பற்றி..மூச்…யாரும் இங்கேயெல்லாம் பேசப்படாது! ஓட்டு வாங்கியாகணும்! யாவற்றையும் விட அதுவே முக்கியம்!

ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமலஹாசன் ஆகியோரின் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.

நானே விவசாயிகளுக்கு ஆதரவான நான்கு கூட்டங்களில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கைகுலுக்கியும், தோளில் கைபோட்டுப் பேசியும் வந்துள்ளேன்!

இதே போல ஐந்தாறு கல்யாணங்கள் , வீட்டு விசேசங்கள், துக்க நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. சமூகத்தின் அங்கமாக வாழ நேரும் யாருக்குமே இவை யாவும் தவிர்க்க முடியாத அனுபவங்களே! டெல்லியில் ஒன்றரை கோடி விவசாயிகள் நாற்பத்தி ஐந்து நாட்களாக நடுவீதியில் அமர்ந்து போராடி வருவதை ஒப்பிடும் போது இவை ஒன்றும் பெரிதல்ல!

நல்லவேளையாக இங்கேயெல்லாம், ’’உனக்கு கொரானா இருக்குதா பார்க்கலாம்’’ என யாரும் டெஸ்ட் பண்ண வரவில்லை!  ITC சோழா நட்சத்திர ஓட்டலுக்கும், ஐ.ஐ.டி கேம்பஸ்குள்ளும் போனது போல! அப்படி டெஸ்டு பண்ணப் போயிருந்தால் பல லட்சம் பேருக்கு கொரானா வந்ததாக அறிவித்திருக்க வேண்டும்!

மக்களுக்கும் இப்ப கொரானா பயம் விட்டுப் போயிடுச்சு!

கொரானா பயம் இருக்குற வரைக்கும் தான் அரசாங்கத்தின் பூச்சாண்டி வேலைகளெல்லாம் செல்லுபடியாகும்!

எங்கடா…கொரானா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதற்குள் கொரானாவும், அது பற்றிய பயமும் காணாமல் போயிருமோன்னு ஒரு பயம் அரசாங்கங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது! அதனால், எவ்வளவு சீக்கிரமமாக கொரானாவிற்கான தடுப்பூசியை போடணுமோ போட்டுரணும்.இல்லாட்டி ஜனங்க, ’’அட இப்பத்தான் இல்லையே எதுக்கு?’’ என்றோ, அல்லது ’’கொரானாவும் உருமாறிட்டு வருதாமே..அப்ப மருந்தும் மாற்ற வேண்டுமே…’’ எனக் கேட்டுவிடக் கூடாதல்லவா?

விலங்குகளுக்கும் கொரானா வருகிறது என்பது தெரியும் தானே?

ஒவ்வொரு இறைச்சி கடையிலும்,ஆட்டையோ,கோழியையோ வெட்டுவதற்கு முன்பு கொரானா இருக்குதா என்று பார்ப்பதில்லை. பார்க்க நேர்ந்தால், எந்த இறைச்சி கடையும் இன்று நடத்த முடியாது! இதே போல காய்கறி, பழங்களையும் கொரானா டெஸ்ட்டுக்கு உட்படுத்த முடியும் அவ்வாறு செய்ய நேரிட்டால், உற்பத்தியாவதில் சரிபாதிக்கும் மேல் கீழே வீணடிக்க நேரும்! சமீபத்தில் டான்சானியா அதிபர் கேலியாக இந்த வகை டெஸ்டுகளை நிகழ்த்தி கொரானா மாயையை கிழித்து தொங்கவிட்டதை நம்மில் பலர் பார்த்தோம் தானே!

உண்மையாகவே இப்போது கொரானா எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு காரணம் டெஸ்டு எடுப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதால் தான்!

கொரானா இருக்குதா? இல்லையா? என்று கேட்டால்,

அது கடவுளைப் போன்றது!

கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லியபடி,

தெய்வம் என்றால் அது தெய்வம்!

வெறும் சிலை என்றால், வெறும் சிலை தான்!

உண்டென்றால் அது உண்டு!

இல்லையென்றால் அது இல்லை!

கடவுள் என்பது வாழ்க்கையில் சிலருக்கு ஒரு பிடிமானமாகவுள்ளது. இன்னும் சிலருக்கு பிழைப்பாக உள்ளது. இன்னும் சிலருக்கு மூட நம்பிக்கையாகத் தெரிகிறது! அவரவர் அனுபவத்திற்கு எப்படித் தெரிகிறதோ..அதுவே உண்மை!

நம்மை ஆளும் வர்க்கம் கொரானாவை வெவ்வேறு அளவுகளில் வைத்துப் பார்க்கிறது. அதிகாரவர்க்கத்து பார்வை தான் அடிமட்டம் வரை பிரதிபலிக்கும்! டாஸ்மாக்கிற்கு ஒரு அளவுகோல்! பஸ்,ரயில்களில் ஒரு அளவுகோல், தியேட்டருக்கு ஒரு அளவுகோல், பள்ளி,கல்லூரிகளுக்கு ஒரு அளவுகோல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு அளவுகோல்!

ஆகவே, நாமும் நம் தேவைகளுக்கு ஏற்ப ஒரு முடிவெடுப்போம்! பிள்ளைகள் படிக்க பள்ளிக் கூடம் செல்ல வேண்டும். வீட்டிலே இருந்து கொண்டு ஆன்லைனில் படிப்பதெல்லாம் வேலைக்காவாது. இது பீஸ் கேட்பதற்கு நியாயம் கற்பிக்கச் செய்யும் முயற்சி! பிள்ளைங்க படிப்பு வீணாப் போகுது! சீக்கிரம் பொங்கல் முடிந்ததும் பள்ளிக் கூடம் திறக்க முயற்சிக்குற வேலையைப் பாருங்க..! மற்றபடி தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைகள் நிரப்புவது பற்றி பேசுமளவுக்கு நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை…! நல்ல படம் என்றால், போகலாமா எனப் பரிசீலிக்கலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time