டிரம்பின் அத்துமீறலை புறக்கணித்த அமெரிக்க ஜனநாயகம்!

- சாவித்திரி கண்ணன்

அகிலமெல்லாம் நாகரீகத்தின் உச்சத்திற்கு அடையாளமாக கருதப்பட்ட அமெரிக்கா, டிரம்ப்பின் அதிகார வெறி அத்துமீறல்களால் அநாகரீகத்தின் அடையாளமாக ஒரு கணம் தோற்றம் பெற்றது!

வெள்ளை நிறவெறி சித்தாந்த மரபின் தொடர்ச்சியே டிரம்ப்!

அந்த மரபின் உயர் அந்தஸ்த்தை நிலை நிறுத்த அவர்களால், ’’நமக்கு ஒரு இண்டர்நேஷனல் ரவுடி தேவை’’ என்ற நோக்கத்திற்காக அதிபராக்கப்பட்டவரே டிரம்ப்!

 

கறுப்பின பின்புலமும், இஸ்லாமியப் பின்புலமும் உள்ள ஒபாமாவுக்கு நவீன அமெரிக்கா அதிபர் அந்தஸ்த்து தந்து அழகு பார்த்தது! அதுவும் இரண்டு முறை தொடர்ச்சியாக அவர் நீடிக்கவும் முடிந்தது.

இது தங்கள் இனத்தின் பெருமிதத்தை மீட்டெடூக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஒருமைப்பாட்டையும் வெள்ளையினத்தவரிடையே ஏற்படுத்தியதின் விபரீத விளைவே டிரம்ப் என்பதை நாம் மறக்கக் கூடாது!

கருப்பினத்தவர்கள் நாகரீகத்தில் வளராதவர்கள், கலாச்சாரத்தில் பின்தங்கியவர்கள், முட்டாள்கள், முரடர்கள், அடிமைகளாக இருப்பதற்கே லாயக்கானவர்கள்..என்ற பொதுபுத்தி வெள்ளையினத்தவர் பலரிடமும் இன்னும் வேரூன்றியுள்ளது. அதே சமயம் அவர்கள் படித்து மேலெழுந்து வெள்ளையர் தமக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கும் மேலாகவோ முன்னேறும் போது அதை சகிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர்!

இன்றைய அமெரிக்காவின் வளர்ச்சியும், பிரம்மாண்டமும் அது பல தேசத்து அறிவாளிகளையும், திறமைசாலிகளையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்ட கலாச்சார மறுமலர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்பதை இந்த வெள்ளையினத்தவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. பன்னெடுங்கால அந்த ஆதிக்க இனவெறி மனோபாவம் அவர்கள் பிழைக்க வந்தவர்கள் மட்டுமல்ல, நமக்கு உழைக்க வந்தவர்கள் என்ற மனோபாவமே அவர்களின் ஜீனில் ஊறியுள்ளது.

பொது நலனை நினைக்காமல் யாராவது ஒரு எதிரியை கற்பிதம் செய்து கொண்டு, அரசியல் செய்பவர்கள் எப்போதுமே தவறான தலைமையைத் தான் நாடுவார்கள். கண்மூடித்தனமாகத் தான் தங்கள் கற்பிதங்களுக்கு நியாயம் கற்பிப்பார்கள்! அதைத் தான் டிரம்ப்பும் ,அவரது ஆதரவாளர்களும் செய்தனர்!

நல்லவேளையாக அமெரிக்க வெள்ளையின மக்களில் கணிசமானோர் இந்த நிறவெறி சித்தாந்த பிடிப்பிலிருந்து சிதறி வெளியேறி வந்துவிட்டனர். முற்போக்கு சித்தாந்தத்தை வளர்த்தெடுப்பதில் அவர்களில் பலரும் முன்னணியில் உள்ளனர். ஆகவே, தான் இந்த முரண் முழுக்கவே வெள்ளையினத்திற்கும் வெள்ளையினமல்லாதாருக்குமான மோதலாக வடிவம் கொள்ளவில்லை. இதுவே மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியதாகும். டிரம்பும், ஜோபைடனும் வேறு,வேறு இனத்தவரல்ல!

ஆகவே, இங்கே ’’பார்ப்பனியம் ஒழிக’’ என எழுப்பபட்ட கோஷம் போல அங்கு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான முழக்கமாக அது கரு கொள்ளவில்லை. இதுவே, அமெரிக்க ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த சிறப்பம்சம்! ஆகவே தான், இதை ஜோபைடன் மிகுந்த நாகரீகத்துடன் அணுகி பேசி வருகிறார்! வார்த்தைகளை அளந்து பேசுகிறார். ’’அமெரிக்கா என்றால், மரியாதை,ஒழுக்கம் பண்பட்ட நாகரீகம், சகிப்புத் தன்மை என்பதை நாம் உறுதிபடுத்த வேண்டிய நேரம் இது’’ எனப் பேசினார்!

எனவே, இது அமெரிக்க ஜனநாயகத்தில் பிற்போக்குவாதிகளுக்கும், முற்போக்காளர்களுக்கும் இடையிலான முரண்! இதில் பிற்போக்க்காளர்களில் பலர் தாங்களாகவே நாணிக் குறுகி, டிரம்ப்போடு இருந்த தங்கள் உறவைத் துண்டித்து வருவதைக் காணலாம்! டிரம்பிற்கு நெருக்கமான சக அமைச்சர்கள்,அதிகாரிகள் டிரம்பை எச்சரிக்க தயங்கவில்லை. வேறுபட்டு நிற்க தயங்கவில்லை. நியாயத்தின் பக்கம் இடம் மாறத் தயங்கவில்லை. பலர் தங்கள் பதவிகளையே ராஜுனாமா செய்துவிட்டனர். டிரம்பின் நெருங்கிய சகாவான துணை அதிபரே டிரம்ப்பின் அநீதிகளுக்கு உடன்பட மறுத்துவிட்டார். அவர் மட்டும் உடன்பட்டிருந்தால் கூட, இந்த நிகழ்வை மக்கள் புரட்சியாக அறிவித்து, மக்கள் தேர்தல் தில்லுமுல்லுக்கு எதிராக கொதித்து எழுந்ததினால் பாராளுமன்றத்தை நடத்த முடியாமலும், தேர்தலை அங்கீகரிக்க முடியாமலும் போய்விட்டது என டிரம்பின் திட்டத்திற்கு ஒத்து ஓதியிருப்பார்!

அவர் மட்டுமல்ல, குடியரசு கட்சியின் சகாக்களே தங்கள் தலைவரின் பிடிவாதமான வாதங்களை ஏற்கவில்லை. ஜோபைடன் வெற்றியை ஏற்கிறோம் என தெரிவித்தனர். சுயஆதாயம், கட்சித் தலைமைக்கு கண்மூடித்தனமான விசுவாசம் எல்லாம் அமெரிக்காவில் செல்லுபடியாகாது. நியாயம் என்றால், அது நியாயம் தான் என்ற வகையில் அவரவர் சுய உள்ளுணர்வுடன் நடப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஜோபைடனின் வெற்றியை செல்லாததாக்க 60 நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார் டிரம்ப்! அனைத்து நீதிமன்றங்களும் உடனுக்குடன் அதை நிராகரித்துவிட்டன! இந்தியாவில் நீதிமன்றங்கள் ஆட்சியில் உள்ளவர்களை அவ்வளவு வேகமாக புறக்கணிக்கும் துணிவை பெற இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டுமோ…? தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக திமுக எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கில் எல்லா விசாரணையும் முடிந்து தீர்ப்பை நியாயமின்றியும்,காலவரையரை இன்றியும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதை என்னவென்பது?

டிவிட்டர் நிறுவனம் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்,வழக்கறிஞர் கணக்குகளை பொது நலன் கருதி முடக்குகிறது என்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூக வலைதள நிறுவனங்களும் பொது அமைதி கருதி இவர்களின் பேஸ்புக் உள்ளிட்டவற்றை முடக்கியுள்ளதை பார்க்கும் போது வலுத்தவன் வைத்ததெல்லாம் அமெரிக்காவில் சட்டமாகிவிடுவதில்லை!

இரு பக்கமும் நியாயம் பேசி கடைசியில் அநீதிக்கு துணைபோகும் அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் அங்கு மிகக்குறைவு! அமெரிக்க பத்திரிகைகள் அனைத்துமே ஏறத்தாழ ஒருமித்து தேசத்தின் நலன் கருதி உண்மைக்கு உறுதியாக நின்றதை பார்க்கும் போது, இந்தியா இவற்றில் எல்லாம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என நினைக்கத் தோன்றுகிறது!

பொதுவாக அமெரிக்க ஜனநாயகம் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் தலைவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும், வெளிப்படைத் தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தியல் கொண்டது! ஒரு அமெரிக்க ஜனாதிபதி தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்பதை அது முக்கிய அளவுகோலாகக் கொண்டது! தனி மனித ரீதியாகவும்,குடும்ப ரீதியாகவும் ஒருவனை எடைபோட்ட பின்னரே,அவனை பொது வாழ்க்கைக்குள் அனுமதிக்கிறது! இது சரியானதாகவே எனக்கும் தோன்றுகிறது. இந்த நிலை நம்மிடையே இருந்திருந்தால் இந்த நாடு பல முதல்வர்களாலும், ஒரு சில பிரதமர்களாலும் அடைந்த அளப்பறிய துன்பங்களில் இருந்து தப்பித்து இருக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time