மத்திய அரசின் அழைப்பு! தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு!

- பீட்டர் துரைராஜ்

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன !

பெங்களூருவில், விஸ்ரான் தொழிற்சாலையில்  சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஆலை அடித்து நொறுக்கப்பட்டது.வாகனங்கள் எரிக்கப்பட்டன.148 பேர் கைது செய்யப்பட்டனர்.அதற்கு காரணம் அங்கு தொழிலாளர்களின் பிரச்சினையைப் பேச சங்கம் இல்லாததுதான். நிரந்தரத் தொழிலாளர்களை விட ஆறு மடங்கு ஒப்பந்த தொழிலாளர் இருந்தால் அங்கு எப்படி தொழில்  அமைதி நிலவும் ? இந்தக்  கலவரமான சூழலைத்தான்  நாடு முழுவதும் உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு இயற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டம்.

அரசு ஏற்கனவே இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுக்குப்  பதிலாக  நான்கு புதிய சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாகவும்,தொழிலாளர்கள் உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளன என்று  தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் மாதம் 26 ம் நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடந்தது. இதில் 25 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

புதிய தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டுமானால்,  அதற்கான விதிகளை மத்திய அரசு  உருவாக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை  இதற்கான ஆலோசனைக்  கூட்டத்தை, கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி காணொலி மூலம் நடத்தியது. மத்திய தொழிற்சங்கங்கள்  அனைத்துமே இந்த ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தன.

ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், தொமுச   உள்ளிட்ட பத்து முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. “தொழிற்சங்கங்களோடு விவாதிக்காமல், பாராளுமன்றத்தில் விவாதிக்காமல், தொழிலாளர் நிலைக் குழுவில் பேசாமல், மாநில அரசுகளோடு விவாதிக்காமல்  நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருவது உங்களுக்கு தெரியும். நான்கு  சட்டங்களுக்கும் கூட்டங்களை தனித்தனியாக நடத்த வேண்டும். காணொலி மூலமாக அல்லாமல் நேரடியாகக் கூட்டத்தை நடத்த வேண்டும் ” என்று கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. டிசம்பர்-24  அன்று நடந்த கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சார்ந்த பிஎம்எஸ் தொழிற்சங்கம் மட்டுமே கலந்து கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை ஒரு  மத்திய தொழிற்சங்கமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் மு. சண்முகம்; திமுக பாராளுமன்ற உறுப்பினர். “தொழிலாளர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் தொழிற்சங்கங்களோடு விவாதித்து பல நல்ல பரிந்துரைகளை தொழிலாளர் சட்டம் தொடர்பாக அரசுக்கு ஏற்கனவே அளித்துள்ளோம். அந்தப் பரிந்துரைகளில் ஒன்றைக் கூட அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய தொழிலாளர் சட்டங்களை அப்படியே படிப்பது என்பது  வேறு. ஏற்கனவே இருந்த சட்டங்களைப் படித்து, அவைகளோடு ஒப்பிட்டு, அனுபவத்தோடு பார்ப்பது என்பது வேறு. அப்படிப் பார்க்கையில் இந்தப் புதிய சட்டம் மிக மோசமாக உள்ளது. உதாரணமாக ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தில் 10 வது பிரிவில் உள்ள நான்கு அம்சங்களும்  புதிய சட்டத்தில் இல்லை. அதாவது நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில்  ஒப்பந்த முறை கூடாது என்று அந்தப் பிரிவு கூறுகிறது. அந்த வேலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்த  உரிமம் ( labour license)  தரக்கூடாது என்று ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் உள்ளது. இது புதிய சட்டத்திலும் இல்லை. அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிகளிலும் இல்லை. இப்படி எத்தனை மாற்றங்கள் நடந்துள்ளன என்பது தெரியவில்லை. ஏற்கனவே இருந்த 44 சட்டங்களில் 29 சட்டங்கள்தான் புதிய சட்டத் தொகுப்பில் உள்ளன. மீதமுள்ள 15 சட்டங்களை அரசு நீக்கிவிட்டது. இது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் எழுப்பலாம் என இருக்கிறேன். அரசு செவிசாய்க்கவில்லை என்றால் விவசாயிகளைப் போல தொழிலாளர்களும் போராட வேண்டியதுதான்”  என்றார் தொமுசவின் பொதுச் செயலாளர் மு. சண்முகம்.

அனைத்து தொழிலாளர்களுக்கும்  ஒரே  சங்கம்  இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஏஐடியுசி சங்கத்தைச் சேர்ந்த அமர்ஜித் கௌர் அவர்களிடம் இது குறித்து கேட்டபோது ” இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference) என்பது ஒரு முத்தரப்பு அமைப்பு. இதில் வேலை அளிப்போர், தொழிலாளர்கள், அரசுப் பிரதிநிதிகள் இருப்பர். கடந்த காலங்களில், இதில் விவாதித்தப் பின்புதான் தொழிலாளர் சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மாநாட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசாங்கம் கூட்டவில்லை. கடைசியாக 2015 ல்தான் இந்தக் கூட்டம் நடந்தது. பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு விரோதமாக தொழிலாளர் சட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. தொழிலாளர்களிடம் விவாதித்த பின்புதான் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறை.

முத்தரப்பு குழுக்களை அரசு கூட்டுவதில்லை என்று தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) முறையிட்டன. எனவேதான் விவாதம் நடத்தினோம் என்று காட்டுவதற்காக அரசு டிசம்பர் 24 அன்று அரசு கூட்டிய   கூட்டத்தினை நாங்கள் புறக்கணித்தோம். அதில் சம்பளம், தொழில் உறவு தொடர்பான  இரண்டு சட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. சமூகப் பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு குறித்த சட்ட விதிகளை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 12 ம் நாள் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதையும் பத்து தொழிற்சங்கங்களும் புறக்கணிக்கும்”  என்றார் அமர்ஜித் கௌர்.

எளிதாக தொழில் செய்யத் தேவையான சூழலை உருவாக்குவது என்ற பெயரில் அரசு தொழிலாளர் நலன்களைக் காவு கொடுக்கிறது.கால ஓட்டத்திற்கு தகுந்தாற்போல சட்டங்களை திருத்துவது அவசியம்தான். ஆனால்,  அதில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களை புறக்கணித்து விட்டு, பல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்ற நிலைக்குழு கொடுத்த  ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, இந்தப் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் இருந்த  தொழிலாளர்களுக்கு ஆதரவான அம்சங்கள் கூட நீக்கப்பட்டுள்ளன. புதிய பொருளாதார கொள்கைகள் அமலான 1990 க்குப் பிறகு தொழிலாளர் நலனுக்காக எந்த புதிய சட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நாற்பதே விநாடிகளில்  நிறைவேற்றியுள்ளது. எந்த விதமான விவாதங்களும் பாராளுமன்றத்தில் நடைபெறவில்லை. ஊடகங்களும் இது குறித்து போதுமான அளவில் எழுதவில்லை.

பெரும்பான்மை என்கிற பெயரில் உரிமைகளை நசுக்க முடியாது. அப்படிச் செய்தால் சமூக கொந்தளிப்புதான் ஏற்படும். அதனால்தான் இப்போது புது தில்லியில்  விவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சட்டத்தில் பல வரையறைகள் மாற்றப்பட்டுள்ளன. அரசு நினைத்தால் சில ஆலைகளில், சில இடங்களில் தொழிற்சங்கம் வைக்க முடியாது என்று சொல்லிவிட முடியும். சம்பளம் என்றால் என்ன என்பதற்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெறும்  போனஸ், பணிக்கொடை(கிராஜீடி), மிகை நேர ஊதியம் (ஓவர்டைம்)  என்பது குறையும். சங்க நிர்வாகத்தின் உள் விவகாரங்களில் அரசு தலையிடுகிறது. சட்டம் அமலாகும்போது  தொழிலாளர்கள் நேரடியாக பாதிப்படைவார்கள். அப்போது கொந்தளிப்பு ஏற்படும். இதையெல்லாம் அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

புதிய சட்டங்களை அரசு அமலாக்கினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது “இந்தியாவின் பொருளாதாரம் 98 சதவீதம் முறையான பொருளாதாரம் (Formal Economy); இது  தொழிலாளர்களை நம்பித்தான் உள்ளது. அரசு எங்களை உதாசீனப்படுத்தினால்  நாங்களும் போராடுவோம்” என்றார் அமர்ஜித் கௌர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time