பாஜகவின் அஸ்திரத்தால் தடுமாறும் தமிழக அரசியல்!

சாவித்திரி கண்ணன்

இன்றைய தினம் இந்தியாவில் ஒரே ஒரு கட்சி மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கின்றது!

மற்ற கட்சிகள் எல்லாம் அதன் அரசியல் அசைவுகளுக்கு ஏற்ப தங்கள் அரசியலை தற்காத்துக் கொண்டு வாழ்கின்றன என்பது தான் நிஜம்!

பாஜக என்ற ஒரு ஒற்றை அரசியல் இயக்கம் – ஏறத்தாழ 276 மக்கள் அமைப்புகளை மத ரீதியாக தன்னகத்தே கொண்டுள்ள – ஒரு சித்தாந்த பின்புல இயக்கம் ஒட்டு மொத்த இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் இயக்கம் இன்று தன் பலத்தில் சரிபாதிக்கும் கீழாக குறைந்துவிட்டதோடு, மேன்மேலும் சிறுத்துக் கொண்டு வருகிறது. அதன் தூண்களாய் இருந்த பலர் இன்று அற்ற குளத்து அரு நீர் பறவைகளைப் போல பாஜக பக்கம் தாவி வருவது பல மாநிலங்களில் நடந்து வருகின்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களே விதிவிலக்கு!

இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகத் திகழ்ந்தவை மேற்குவங்கமும்,திரிபுராவும்,கேரளாவும்! இன்றைய நிலைமை என்ன?

மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜுயை வளர்த்தது பாஜக தான்! முதலில் அவர் காங்கிரசை பிளந்து, அதன் பலத்தை குறைத்தார்! பிறகு கம்யூனிஸ்டுகளை கடுமையாக வேட்டையாடினார். பாஜகவின் தேவை முடிந்த நிலையில், தற்போது மம்தாவே பாஜகவின் வேட்டையாகிப் போனார்! அவரவர்களையும் அவரவர் போக்குகளில் ஆடவிட்டு அழிப்பது தான் பாஜகவின் ராஜதந்திரம்!

திரிபுராவில் பாஜகவிற்கு அடித்தளமே இல்லை! ஆனால்,அங்குள்ள பழங்குடியின கட்சி ஒன்றை வளர்த்து கம்யூனிஸ்டுகளை களபலியிட்டது. பிறகு தானே ஒரு வலுவான கட்சியாக தலையெடுத்து நிற்கிறது! கேரளாவிலும் பாஜக கணிசமாக காலூன்றிவிட்டது! ஆனால், இது அடுத்து வரும் தேர்தலுக்கு ஆட்சி அமைக்க உதவாதே தவிர அவர்கள் அங்கே வளர்வது சர்வ உண்மை!

மகாராஷ்டிராவில் ஒத்த கருத்துள்ள சிவசேனையைக் கூட அவர்கள் உயிர்த்திருக்க அனுமதிக்காமல் விழுங்க துடித்த பொழுது தான் சிவசேனை விழித்தது. ஆகா, இனி நம்மை தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து, பல காலம் ஜென்ம விரோதியாக பாவித்த காங்கிரஸிடம் கைகுலுக்கியது. சரத்பவாரிடம் சமரசமானது!

பீகாரில் இந்தியாவின் மாபெரும் ஆளுமையான நிதிஸ்குமாரை ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி எதிர்க்கமுடியாமல் ஆளவிட்டு, அழகுபார்த்து அரவணைத்தே அழித்து வருகிறது. நிதிசும் காலங்கடந்தே ஞானோதயம் பெற்று இன்று தன் கட்சியை தற்காக்க ஆட்சித் தலைமையைத் துறக்கவும் தயாராகி வருகிறார்!

இப்போது தமிழக அரசியலுக்கு வருகிறேன். தமிழகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்களின் கோட்டையாக திகழும் மாநிலம்! இங்கே ஜெயலலிதாவை அண்டி தங்களை வளர்க்க அவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின! திராவிட மண்ணில் பாஜகவிற்கு அனுசரணையான அரசியலை முன்னெடுப்பது தற்கொலைக்கு சமம் என்பதால் மட்டுமல்ல, கட்சியின் அடையாளத்தையே இழக்க நேரிடும்! அதன் பிறகு அது தமிழக அரசியலை பாஜக – திமுக வலுவாக மாற்றிவிடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் ஜெயலலிதா! ஆகவே தான் ’மோடியா? லேடியா?’ பார்த்துவிடலாம் என மோதினார்.ஆக,ஜெயலலிதாவை வீழ்த்த சமயம் பார்த்த பாஜக, நீண்ட காலமாக, ‘அண்ணன் எப்போ வீழ்வான், திண்ணை எப்போ காலியாகும்’ என காத்திருந்த சசிகலாவை அடையாளம் கண்டது!

ஜெயலலிதா நோயில் வீழ்ந்தார்! அவருக்கு என்ன? எப்படியுள்ளார்? என்பதை ஒரு மர்மமாக சசிகலா மெயிண்டைன் செய்ததற்கு பாஜக துணைபோனது! சாதரண குக்கிராமத்து கிழவிக்கு கூட சசிகலா மீது பொத்துக் கொண்டு கோபம் வந்தது. ஆனால், பாஜக அரவணைப்பில் சசிகலா நினைத்தை சாதித்தார்!

ஏன் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை? கவர்னர், பிரதமர் என யாருமே ஏன் இதை ஆட்சேபிக்கவில்லை? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கோட்டையில் உள்ள தலைமை செயலாளர் அறையையே அக்குவேறு,ஆணிவேறாக ரைடுவிட முடிந்த மத்திய அரசுக்கு அப்பல்லோவும்,சசிகலாவும் எம்மாத்திரம்? உண்மையை சொல்லப் போனால், மோடி, ’நான் பார்த்தே ஆக வேண்டும்’ என்று அப்பல்லோவுக்கு வந்திருப்பார் என்றால், அன்றைய தினம் அது தமிழக மக்களின் ஒருமித்த வரவேற்பை பெற்று இருக்கும்!

சசிகலாவை அது ஆடவிட்டு பார்த்தது. அதன் பிறகு சசிகலாவையும் அடக்கி, மூலையில் உட்கார வைத்துவிட்டது.

அதன் பிறகு ஒ.பி.எஸ்சை கையில் எடுத்தது. இ.பி.எஸ் தானாகவே சென்று, ”நானே உங்கள் விசுவாசி தான்’’ என மோடி காலில் விழுந்தார்! மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத மசோதாக்களையும் எந்த ஒரு பாஜக ஆளும் மாநில முதல்வர்களையும் விட விழுந்தடித்து ஆதரித்தார்! ஆனபோதிலும், நடத்த வேண்டிய ரைடுகள் அனைத்தையும் பாஜக கச்சிதமாக நடத்தி, அனைத்து தமிழக அமைச்சர்களின் பொது சொத்து சூறையாடல்களையும் கணக்கெடுத்துக் கொண்டது.

”சரி நம்மை ஆளவிட்டால் போதும்! பாஜகவிற்கு திமுக தான் எதிரி. அதை எதிர்க்க நம் தயவு அவர்களுக்கு தேவை. ஆகவே நம் மீது கைவைக்க மாட்டார்கள்! திமுகவை தலையெடுக்காமல் அரசியல் செய்வதற்கு துணை நின்றால் போதும், ஆகவே ஆடும் வரை ஆடிப்பார்ப்போம்…’’ என நினைத்தது இ.பி.எஸ் தலைமை! ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது பாஜக தலைமை!

ஆனால், அதே சமையம் அதிமுகவில் ஒத்துக்கப்பட்ட நிலையில் இருக்கும் அந்த கால முக்கிய தலைவர்களுக்கு தூண்டில் போட்டது பாஜக! ஏ.சி. சண்முகம், ஐசரி கணேஷ், சைதை துரைசாமி உள்ளிட்ட ஆற்றல்மிக்க சுமார் இருபது முதல் முப்பது பேரை ரஜினிக்கு ஆதரவாக தயாராக இருக்கும்படி வைத்திருந்தது! அதிலும் முக்கியமாக ஒ.பி.எஸ்சை – முதல்வர் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் – இ.பி.எஸ் கூட இருந்தே கண்காணிக்க கட்டளையிட்டு இருந்தது.

இ.பி.எஸ்சின் பலவீனம் அவருக்கு முதல்வர் பதவி மீதுள்ள தீரா மோகம்! அதிகார பகிர்வுக்கு தயாரற்ற மனநிலை! ஆகவே, பாஜகவின்  வேலை சுலபமானது! ஆகவே, அதிமுகவில் உள்ள அதிருப்தி கொண்ட பெரும் பட்டாளத்தை அது ரஜினியோடு இணைக்க கள வேலைகளை கச்சிதமாக முடித்திருந்தது. ஆனால், ரஜினி பின்வாங்கிவிட்டார். ஆனபோதிலும்,முயற்சி தளராத விக்கிரமாதித்தனாக பாஜக வெவ்வேறு அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறது.

ஜெயலலிதா இல்லாத அதிமுகவானது, ஒன்று கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க வேண்டும். பாஜகவோடு அதிகார பகிர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், விளைவுகளுக்கு தயாராகி கொள்ள வேண்டியது தான்!

இதை எதிர்பார்க்காத அதிமுக முரண்டு பிடிக்கிறது. கே.பி.முனுசாமியை வைத்து மேடைக்கு மேடை சவடால்விடுகிறது. ”பீகாரைப் போல இங்கு நடக்கவிடமாட்டோம்’’ என இபி.எஸ் வெளிப்படையாக சொல்லிவிட்டார். ஆக,பாஜகவின் அஸ்திரம் இனி எப்போது வேண்டுமானாலும் அதிமுகவின் மீது பாயும்! நேரடியாக அல்ல!

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சூத்திரப்படி விவஸ்த்தையற்ற அரசியல் அணுகுமுறைகள், பேச்சுவார்த்தைகள்.. தமிழகத்தில் நடந்து வருகின்றன!

இனி, அதிமுக தமிழகத்தில் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக செயல்பட பாஜக அனுமதிக்காது! ஆகவே, அதிமுக வீழும் போது அங்கே இயல்பாக அவ்விடத்திற்கு திமுக வருவதையும் தடுக்காது. அதே சமயம் திமுக தனி மெஜாரிட்டி பலத்துடன் வர நினைப்பதை அனுமதிக்காது! ஆட்சிக்கு வந்தால் திமுகவை எப்படி கையாள வேண்டும் என்பது பாஜகவிற்கு கைவந்த கலையாகும்! கணிசமான எம்.பிக்களைக் கொண்ட திமுகவையும், மத்திய ஆட்சியில் அதிகாரங்களை அனுபவித்து பழக்கப்பட்ட அதன் தலைவர்களையும் பாஜக சுலபத்தில் அலட்சியப்படுத்திவிடாது. ஆடத் தயாராக இருப்பவர்களை ஆடவிட்டு பார்ப்பது தான் பாஜகவின் வழக்கம்!

தமிழகத்தில் அதிகார பகிர்வுக்கு திமுக தயாரில்லை. தன் கூட்டணி கட்சிகள் தனி அடையாளத்துடன் திகழ்வதையும் விரும்பவில்லை! இந்தச் சூழல் திமுகவிடமிருந்து சில கட்சிகளை வெளியே எடுக்க பாஜகவிற்கு வலிந்து உதவியதாகவே முடியும்! இதைச் செய்யவே பிரசாந்த் கிஷோர் திமுகவிற்குள் இருந்து கொண்டு பாஜகவிற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்! ஒத்த சித்தாந்தவாதிகளான வைகோ,திருமாவளவன்,இஸ்லாமியக் கட்சிகள் ஆகியோரை அரவணைக்க திமுக தயங்கினாலோ, காங்கிரசை குறைத்து மதிப்பிட்டு அதிருப்திக்கு ஆளாக்கினாலோ அதனால் பலனடையப் போவது பாஜக தான்!

1996 ஆம் ஆண்டு மத்தியில் அதிகார பகிர்வுக்கு காங்கிரஸ் தயாராக இல்லாத மன நிலை காரணமாகவே பலமில்லாத எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்து அடுத்தடுத்து வீழ்ந்தன. பிறகு மத்தியில் அது பாஜக காலூன்ற வழிவகுத்துவிட்டது!

தமிழக அரசியலின் எந்த ஒரு அசைவையும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க திறந்த மன நிலையில் தான் உள்ளது. தங்கள் பலவீனம் காரணமாக அதற்கு தங்களை பலிகடாவாக்கிக் கொள்ளும் நிலையில் தான் திராவிடக் கட்சிகளும் உள்ளன! இந்தக் கண்ணோட்டத்துடன் இனி நடக்கவுள்ள அரசியலை கவனித்து வாருங்கள்!

ஆடும் வரை ஆட்டம் உங்களுக்கு!

அழிப்பதிலே நாட்டம் எங்களுக்கு!

இது தான் பாஜகவின் பார்முலா…!

விதியே, விதியே தமிழ்ச் சாதியை

என் செய்ய நினைத்தாயோ…!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time