இல்லத்தரசிகளின் தேவை என்ன…? சம்பளமா…?

-சாவித்திரி கண்ணன்

”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் சம்பளம் தருவோம்…’’ என கமலஹாசன் கூறிவருகிறார்.

எல்லாவற்றையும் விலைக்கு வாங்க முடியும்! ஆனால், தாய் பாசத்தை, மனைவியின் நேசத்தை, உண்மையான அன்பை ஒரு போதும் விலைவைக்க முடியாது… என்பது பொதுவாகவே அடிக்கடி வெளிப்படும் சொல்லாடல்களில் ஒன்று தான்!

இன்றைய மனைவி என்ற பெண்சமூகம், கணவன் எனப்படும் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறது…? என்ற அடிப்படை புரிதலாவது உண்டா..காலமெல்லாம் பிளேபாயாக வாழ்ந்த கமலஹாசனுக்கு…?

குடும்ப உறவுகளில் ஆண்,பெண்களுக்கு இடையே நிலவிடும் ஏற்றத் தாழ்வுகள் என்ன?

எப்படிப் பெண்ணை சுய மரியாதைக்குரியவளாக நடத்துவது?

அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவளை எப்படி கெளரவமாக நடத்துவது…

போன்றவை தொடர்பான புரிதலைத் தான் இன்றைய சமூகத்திற்கு நாம் தர வேண்டியுள்ளது!

இன்றைய தினம் வீட்டுவேலைகள், சமையல் பணிகள், குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் கணவனும்,மனைவியும் சமமாக வேலைகளை பகிர்ந்து கொள்ளத் தக்க சூழல் உருவாகியுள்ளது! பொருளீட்டாமல் மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் குடும்பங்களில் வீட்டு வேலைகளுக்கான அதிகபட்ச சுமையை ஆண்களே ஏற்றுச் செய்வதும் நடக்கின்றன!

அதே சமையம் இன்னும் மனைவியுடன் வேலைப்பகிர்வுக்கு சம்மதிக்காத ஆண்களை அதற்கு இணங்கச் செய்ய பக்குவமாக நிர்பந்தப்படுத்தவும் வேண்டியுள்ளது.

பல குடும்பங்களில் ஆணைப் போலவே பொருளீட்டும் பொறுப்பையும் பெண்கள் ஏற்று செயல்பட்டாலும், வீட்டு வேலைகளையும் கூட அவர்களே முழுவதுமாக செய்யும் நிலையுள்ளது. ஆக, இது போன்ற இடங்களில் தேவைப்படுவது ஆணின் மனமாற்றமே!

தாய் தன் வயிற்றில் பெருமிதத்துடன் பத்துமாதம் சுமக்கும் கற்பத்திற்கும், குழந்தைக்கு தரும் தாய்ப் பாலுக்கும், தன் கணவனிடம் ஆத்மார்த்தமாக வைக்கும் பாலியல் உறவுக்கும்  கூலி நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு தர எந்த குடும்ப அமைப்பும் ஏற்காது! அவரவர் குடும்பம் அவருக்கு அந்தரங்கமானது. வெளியாரின் பணம் – அது அரசாங்கமாயிருந்தாலுமே – குடும்பத்திற்குள் அதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது!

பல குடும்பங்களில் பொருளீட்டும் வேலைகளில் அது வியாபாரமாக இருக்கலாம், சிறு மளிகை கடையாக இருக்கலாம், அல்லது கூலி வேலையாக இருக்கலாம் கணவனும், மனைவியும் இணைந்தே செய்கின்றனர்! எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நான் போட்டோ ஜர்ணலிஸ்டாக இருந்த காலத்தில் என் மனைவி நான் எடுத்த போட்டோக்களை பிரிண்ட் செய்ய லேபிற்கு சென்று வருவார்! அதே போல சமையலை தொழிலாக எடுத்த காலத்தில் மளிகை,காய்கறி மற்றும் சாமான்கள் வாங்குவது ஆகியவற்றோடு,அதை பரிமாறும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.என்னைக் காட்டிலும் என் மனைவி தான் கடும் உழைப்பாளி! அந்த மரியாதை எப்போதும் அவளிடத்தில் எனக்குண்டு! சம்பாத்தியம் அனைத்தையும் அப்படியே அவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன்! காரணம்; அவங்களுக்கு துளியும் சுயநலம் இல்லை. குடும்பத்திற்காக தன்னை பரிபூரணமாக அர்பணித்துக் கொண்டவங்க என் மனைவி! எவ்வளவு பணத்தைக் கொண்டும் அதை ஈடு செய்யமுடியாது. நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு கணப்பொழுதும் அதற்கு நன்றியுள்ளவனாக இருந்து காட்டியே அந்த நன்றியை கழிக்க வேண்டும்! அரசாங்கம் யாரு? என் மனைவியின் அர்ப்பணிப்புக்கு விலை நிர்ணயிப்பது?

குடும்பம் என்பது பெண்களின் அதிகபட்ச அர்ப்பணிப்பால் கட்டி எழுப்பப்படுகிறது என்ற போதிலும், ஆணும் அங்கே தன் மனைவி,மற்றும் குழந்தைகளுக்காக சிலவற்றை தியாகம் செய்து உடன் பயணித்தால் தான் அது முழுமை பெறும்! குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்குமே ஒரு சில கடமைகள் உண்டு! சகோதரிகளின் கல்யாணங்களை நடத்தி வைத்த பிறகு தன்னுடைய திருமணத்தை யோசிக்கும் ஆண்களும் உண்டு! அப்படியானால் ஆணுக்கும் அரசாங்கம் சம்பளம் தருமா? என்ற கேள்விகள் எழும்! இப்படியான எதிர்பார்ப்புகள் உருவாக்கப்படுவது விபரீதத்தில் தான் முடியும்! பணம்,காசால் ஈடுகட்டக் கூடியதல்ல குடும்ப உறவும்,பிணைப்பும்!

அரசாங்கம் மனைவிக்கு சம்பளம் தருமென்றால், அதற்காகவே ஒருத்திக்கு தாலிகட்டி கூட்டி வந்து, அப்படி கிடைக்கும் பணத்தையும் அபகரித்து குடித்து அழிக்கும் கொடுமைக்கார ஆண்களால் ஏற்பட்டுள்ள சமூகபிரச்சினை குறித்த குறைந்தபட்ச புரிதலாவது கமலஹாசனுக்கு இருக்குமா? தெரியவில்லை? இல்லத்தரசிகள் சந்திக்கும் குடும்ப வன்முறைகள் பற்றிப் பேசும் தகுதி கமலஹாசனுக்கு உண்டா?

ஆண்,பெண் உறவை குறிப்பாக கணவன் – மனைவி உறவை அதிகபட்ச துஷ்பிரயோகம் செய்தவர்களில் ஒருவரே கமலஹாசன்!, குடும்ப அமைப்பு என்றால் என்ன என்ற அடிப்படை புரிதலே இல்லாதவர் கமலஹாசன்!

ஓட்டுவேட்டைக்காக குடும்பங்களில் குழப்பத்தை, நிம்மதியின்மையை கமலஹாசன் தோற்றுவிக்க முயல்கிறார் என்று தான் நான் சொல்வேன்! எல்லாவற்றுக்கும் விலைவைத்தால் நாளை, தாய்,தகப்பனை காப்பாற்றக் கூட அரசாங்கத்திடம் பணம் கேட்கும் மன நிலைக்கு சமூகம் தள்ளப்படும்! காலமெல்லாம் ‘பிளேபாயாக’ வாழ்ந்தவர் கமலஹாசன்! அவருடைய கருத்தை ஆதரித்து பேசும் காங்கிரஸ்  எம்.பி.,யான சசி தரூர் அவர்களும் அதே வகைப்பட்டவர் தான்! ஏனென்றால், கமலஹாசனும், சசிதரூரும் குடும்ப அமைப்பை ஏற்று அதன் தர்மங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களல்ல!

குடும்ப உழைப்பிற்கு பதிலீடாக ஒரு பெண் எதிர்பார்ப்பது வெறும் பணமல்ல, பரஸ்பர புரிதல்! அங்கீகாரம்! சம உரிமை! சரி மரியாதை! கடைசி வரை கைவிடாமல் வாழும் பாதுகாப்பு ஆகியவற்றையே!

கமல்ஹாசன், சசி தருர் இருவருமே எப்படிப்பட்ட குடும்ப உறவுகளைப் பேணியவர்கள் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! கமலை நம்பி வந்து கைவிடப்பட்ட வாணி கணபதி, சரிகா, கெளதமி போன்றோர் கமல் தொடர்பாக வெளிப்படுத்திய படுமோசமான கண்ணீர் அனுபவங்களை இங்கே நினைவுபடுத்த விரும்பவில்லை! ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன். அவர்களை வெறுங்கையோடு தான் வெளியேற்றினார். சசிதரூர் மனைவியின் கொடூரமான மர்மசாவு குறித்த தகவல்கள் இங்கு தேவையில்லை என்றும் கருதுகிறேன்!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் அரசியல்வாதிகள் இவ்வாறு போலியாக பேச முடியாது! அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு தலைவர் தன் மனைவியை எப்படி நடத்துகிறார்? என்பது முக்கிய அளவுகோலாகும்! அமெரிக்க அதிபர் தன் மனைவியோடு தான் பெரும்பாலும் பொது வெளிக்கும், வெளி நாடுகளுக்கும் பயணப்படுவார்! அப்படி வரும் போது இருவருக்குமே சமமரியாதை தரப்படும்! சொந்த வாழ்க்கையை மறைத்துக் கொண்டு, ஊருக்கு உபதேசிக்கும் தலைவர்களை வெளி நாடுகளில் மக்கள் வெளுத்து வாங்கிவிடுவார்கள்!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்துவிட்டு, லட்சோப லட்சம் இளைஞர்கள் வருடக்கணக்கில் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு,வேலையும், சம்பளமும் தருவது பற்றி பேசுவதல்ல, நடைமுறை ரீதியான திட்டம் தீட்டி எப்படி செயல்படுத்துவேன் என்று சொன்னால், அதன் மூலம் சமூக உற்பத்தி பெருகி, குடும்பங்களும் மகிழ்ச்சியடையும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time